தோழர் இராகுலன் எழுதும் தொடர் கட்டுரை

ஆங்கிலர் ஆட்சி இந்தியத் துணைக்கண்டத்து மக்களை அடிமைப்படுத்தி ஆளத் தொடங்கிய போது, மக்களிடையே அடிமை வாழ்வுக்கு எதிரான உரிமை வேட்கை வீறுகொண்டெழுந்தது. அதுவரை இந்தியத் துணைக்கண்டத்தின் மேல்வகுப்பினரால் அடக்கியும் ஒடுக்கியும் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டும் வந்த ஏழை உழைக்கும் மக்கள், தங்கள்மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து அடக்குமுறை, ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராகச் சிந்திக்கவும் பேசவும் போராடவும் களமிறங்கினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசிய மண்ணில் ஏற்பட்ட பொதுவுடை மைப் புரட்சி, இந்தியாவிலும் இடிமுழக்கங்களை எழுப் பியது; ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட தேசங்கள் அனைத்திலும் புதுப்புது வெளிச்சங்களைப் பாய்ச்சியது. இதன் தாக்கமாக, மக்களின் அனைத்து விடுதலைக்கு மான இயக்கமாய் இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் எழுச்சி பெற்றது. தொடக்கத்தில், இந்திய தேசியப் பேராயம் (காங்கிரஸ்) என்னும் அரசியல் விடுதலை அமைப்பின் பக்கக் கன்றாகவே அது முளைத்திருந்தாலும், விரைவில் தனிப் பேரியக்கமாய் வளர்ச்சி பெற்றது; அரிய பெரிய ஈகங்களோடு வளர்ந்து பரவியது.

ஆனால், அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் களும், இயக்க முன்னோடிகளும் இந்தியச் சமூக வாழ்வில் மேல்சாதியினராகவே இருந்ததால், மக்கள் அடிமை வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை அவர் கள் கண்டுணரத் தவறினர். உருசியாவையோ, சீனாவை யோ பார்த்துப் “போலச் செய்பவர்களாக” அவர்கள் இயங்கினர். பொருளியல், பண்பாடு, கலை, சமூக நடைமுறைகள் எனப் பலநிலைகளில் பின்னிக்கிடந்த அடிமைத்தனங்கள் அவர்களின் கண்களுக்குப் புலப்பட வில்லை. எனவே, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய உழைக் கும் மக்களின் பரந்துபட்ட ஆதரவைப் பொதுவுடைமை இயக்கம் பெறமுடியாமல் போனது.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் தோற்ற மும், அது வளர்ந்து இயங்கிய களங்களும் பற்றி இங்கே விரிவாக இயம்பும் தோழர் இராகுலன் அவர்கள், கல்லூரிப் பருவம் முதலே பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, தொடர் வண்டித்துறையில் பணி அமர்த்தம் பெற்றிருந்த நிலையில், 1960 சூலையில் நடுவண் அரசு ஊழியர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் தம்மை முழு மையாக ஈடுபடுத்திக் கொண்டதால், பணி இடைநீக்கம் செய்யப் பெற்றார். தொடர்வண்டித் துறையிலிருந்து விலகி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். மதுரை, திருச்சி, தஞ்சை, கரூர் என இவர் பணியாற்றிய பகுதிகளில், பொதுவுடைமைக் கருத்துக ளைப் பரப்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட் டார். 1970இல் நடைபெற்ற கரூர் கைத்தறி நெசவாளர் களின் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு தளைப்படுத்தப்பட்டார். 20 நாட்கள் சிறையில் அடைக் கப்பட்டார். அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பில் (All India Youth Federation) செயற்குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டுள்ளார். அனைத்துக் காப்பீட்டுக் கழகங்களின் பணியாளர் கழகத்தில் (All Insurance Employees Association) பொதுக்குழு உறுப்பினராக இருமுறை இருந்து செயலாற்றியுள்ளார். கல்கத்தா, வாரணாசி, சென்னை, தில்லி, அலகாபாத் ஆகிய இடங் களில் நடைபெற்ற இதன் ஆய்வரங்குகளில் உறுப்பின ராகவும் பார்வையாளராகவும் பங்கேற்றுள்ளார். தஞ்சை மண்டல ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவராக நான்கு முறையும், கரூர்க் கிளை ஊழியர் சங்கத்தின் செயலராக நான்கு முறையும் பணியாற்றியுள்ளார். கரூர் வணிக ஒன்றியக் குழுவின் (Trade Union Council) இணைச் செயலராக இருந்து செயல்பட்ட பட்டறிவு உடையவர். திருவொற்றியூர் புதுமைக் கலைமன்றத்தின் செயலாளராகவும் பணி யாற்றியவர். 

பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்ட போது, மார்க் சியப் பொதுவுடைமை இயக்கத்துடன் தம்மை இணைத் துக் கொண்டவர். பின்னர், மார்க்சிய இலெனினிய அமைப்புகளையும் ஊன்றிக் கவனித்து வந்தவர். அம்பேத்கரிய, பெரியாரிய ஆய்வுகளை உள்வாங்கிய போது, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்கு மிகவும் அணுக்கமானவர். தோழர் ஆனைமுத்து அவர்களின் மீது கடந்த முப்பது ஆண்டுகளாகப் பெருநம்பிக்கை கொண்டிருக்கும் சிந்தனையாளர். அகவை எண்பதுகளில் பயணம் செய்துகொண்டிருப் பவர். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் கடந்து வந்த பயணங்களின் பதிவுகளை இங்கே கட்டுரை களாக்குகிறார். தோழர் ஒருவரது இயக்க வாழ்வின் பதிவுகள் இவை. மக்களுக்கான இயக்கங்களைப் பல கோணங்களில் நோக்க வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவை. தோழரது பார்வையில் பட்டவற்றுள், நினை வில் நிறுத்த வேண்டிய செய்திகள் நிரம்ப உள்ளன.

தோழர் இராகுலன் அவர்களின் மேலே கண்ட தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, 2013 நவம்பர் இதழில் தொடங்கித் தொடர் கட்டுரையாக வெளியிடப் பெறும். கண்ணையும் கருத்தையும் அகல விரித்துக் கொண்டு படியுங்கள் என வேண்டுகிறோம்.

- ஆசிரியர் குழு, சிந்தனையாளன்