இந்தியாவில் செல்வம் பெருகியது; செல்வர்களின் எண்ணிக்கை வளர்ந்தது. எல்லோருக்கும் வயிறார உணவு கிடைத்ததா?

வெள்ளைக்காரன் உழவாரம் போட்டு இந்தியாவைச் சுரண்டிவிட்டான் என்பது மாபெரும் உண்மை.

வெள்ளையனை விரட்டிவிட்டால், இந்தியாவில் தெருவெல்லாம் தேன் ஓடும் - பால் பெருக்கெடுத்தோடும் என்று கூறி, தேசியத்தை விதந்து பாடும் மேடைப் பாடகர்கள் முழங்கினார்கள்.

வெள்ளையன் காலத்தில், 1946இல், 100க்கு 14 பேர்களே கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் - படித்தவர்கள் அல்ல. எனவே அன்று மக்கள் அப்பாவித் தனமாக தேசியவாதிகளை நம்பினார்கள்.

ஆனால் கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்தது என்ன?

அன்றும் இன்றும் வேளாண்மையைச் சார்ந்த மக்கள் பெரிய எண்ணிக்கையிலுள்ள இந்தியாவில், அடிப்படைத் தேவைகளான பாசன வசதி பெருக்கப்படவில்லை; விளக்கு எரிக்க - உணவு சமைக்க - வயலுக்கு நீர் இறைக்க - சிறுதொழில், பெருந் தொழில்களைச் செய்ய வேண்டப்படும் மின்சார உற்பத்தி பெருக்கப்படவில்லை; பாதுகாக்கப்பட்ட குடிநீர் தரப்படவில்லை; அடிப்படை மருத்துவ வசதி பெருக்கப்பட வில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோருக்கும் அடிப்படையான தேவையாக இருக்கிற 8ஆம் வகுப்பு 10ஆம் வகுப்புக் கல்வி கொடுக்கப்படவில்லை.

மூன்று வேளைகளிலும் ஒவ்வொரு குடிமகனும் உணவு பெற வழி செய்யப்படவில்லை. ஏன்?

இவையெல்லாம் வந்து சேர ஏற்ற அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இவையெல்லாம் 10, 20 ஆண்டுகளுக்குள் ஏன் தரப்படவில்லை என்று நாம் கூறவில்லை.

விடுதலை கிடைத்து 64 ஆண்டுகள் ஆன பிறகும், 11 அய்ந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் இவையெல்லாம் ஏன் வரவில்லை - தரப்படவில்லை என்றுதான் கேட்கிறோம். இப்படிச் சிந்திக்கிற திராணி உள்ளவர்களாக இந்திய மக்களுக்கு அறிவு கொளுத்தப்படவில்லை; விழிப்புணர்வு உண்டாக்கப்படவில்லை.

எனவே, ‘தூங்கினவன் தொடையில் கயிறு திரித்த வரையில் இலாபம்’ என்கிற தன்மையில் - இந்தியர்களில் சிலரும், பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்குப் பதிலாக உள் நாட்டுக் கொள்ளையர் சிலரும், அயல்நாட்டுக் கொள்ளையர்கள் சிலரும் செல்வந்தர் களாக ஆகிட இந்தியாவை ஆண்டவர்கள் துணைபோனார்கள்; இன்றும் துணை போகிறார்கள்.

இந்தியாவில் இன்று 121 கோடி மக்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் தனி ஒருவர் 49 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் பெற்றி ருந்தால் அவர்கள் பணக்காரர்கள் என்றும், அப்படிப்பட்டவர்கள் இங்கு 30 இலட்சம் பேர் உருவாகியிருக்கிறார்கள் என்றும் - “டி.என்.எஸ். இந்தியா” என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் ஒரு கணக்கை வெளியிட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் இவர்கள் 1.25 விழுக்காட்டினரே ஆவர்.

அமெரிக்காவில் இப்படிப்பட்ட செல்வந்தர்கள் 3.10 கோடிப் பேர் இருக்கிறார்கள்.

இதே ஆய்வு நிறுவனம் உலக அளவில் மேற்கொண்ட ஆய்வின்படி, இப்படிப்பட்ட பணம் வைத்துள்ள செல் வந்தர்களின் மொத்த எண்ணிக்கையில் 80 விழுக் காட்டுப் பேர் மேற்கத்திய நாடுகளிலேயே வாழ்கிறார் கள்.

இவர்களுள்ளும் முதலிடத்தில் அமெரிக்கரும், இரண்டாவது இடத்தில் சப்பானியரும், மூன்றாவது இடத்தில் செர்மானியரும் உள்ளனர்.

இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்தியா வில் சிற்றூரில் உள்ள 5 பேர் கொண்ட ஒரு குடும்ப மும், நகர்ப்புறத்திலுள்ள 5 பேர் கொண்ட ஒரு குடும்ப மும் குறைந்த அளவு வசதிகளோடு வாழ்க்கை நடத்திட ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் என்பது பற்றி இன்று இந்தியா முழுவதிலும் - எல்லாத் தரப்பின ராலும், எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் பேசப்படு கிறது.

1948இலேயே, உலகந் தழுவிய மானிட உரிமைக் காப்புக் கொள்கை அறிவிக்கப்பட்ட போதே, உணவு பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அய்.நா. பொது அவை 1966இல், உலகந் தழுவிய பொருளாதார-சமூக-பண்பாட்டுக் காப்புக்கான அறிவிக் கையைச் செய்த போதே, உணவு பெறுவது ஒவ் வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பது ஏற்கப்பட்டது.

இந்த அறிவிப்பை ஏற்று, 85 நாடுகள் 1985இல் கையொப்பமிட்டன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று.

இவ்வளவும் இருந்தும், இப்போது, ஓர் இந்தியக் குடிமகன் - “ஆம் ஆத்மி” - நகரத்தில் வாழ ஒரு நாளைக்கு 32 உருபாவும், சிற்றூர்ப்புறத்தில் வாழ ஒரு நாளைக்கு 26 உருபாவும் வருமானம் கிடைத்தால் போதும் - அதாவது நகர்ப்புறத்தில் தனி ஓர் ஆளுக்கு மாதம் 965 உருபாவும், சிற்றூர்ப்புறத்தில் தனி ஓர் ஆளுக்கு 781 உருபாவும் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று முடிவு செய்து, அந்த முடிவை, இந்திய அரசின் திட்டக்குழு, அண்மையில் உச்சநீதிமன்றத்தில் ஓர் அறிக்கையாக அளித்துள்ளது.

திட்டக்குழுவின் தலைவர் இந்தியத் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங்; அதன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா.

இவர்கள் யார்?

1991-1996இல் தலைமை அமைச்சர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் மன்மோகன்சிங் நிதி அமைச்சர்; ப. சிதம்பரம் துணை நிதி அமைச்சர். இவர்களின் துறை யில் அப்போது செயலாளர் என்கிற அரசு அலுவலராக இருந்தவர் அலுவாலியா.

உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு உரிய அடிப்படை களை அமைத்து, இந்தியப் பெருமுதலாளிகளும், எல்லா அயல்நாட்டுப் பெருந் தொழிலதிபர்களும், இந்திய இயற்கை வளங்களான கனிமங்கள், நிலத்தடி நீர், எண்ணெய், எரிவளி, பருத்தி, இவற்றைக் கொள்ளை கொண்டு செல்ல வழி வகுத்தவர்கள் இவர்கள். இதனால் ஏற்படப்போகும் வளர்ச்சி 8ரூ, 9ரூ, 10% என்று இலக்கு வைத்து, வளர்த்திட முயன்று, 8% வளர்ச்சி மட்டுமே உண்டாக்கி, வேளாண்மையை அறவே புறக்கணித்து, அதன்மூலம் ஏற்கெனவே தேச உற்பத்தியில் கிடைத்த 40% வருமானத்தை 14% அளவுக்குத் தாழும்படி வேளாண்மையைப் பாழடித்த வர்கள் இவர்கள்.

இவர்களுக்கு வறுமைக்கோடு பற்றிப் புள்ளிவிவரம் தந்தவர்கள் - பரிந்துரைத்தவர்கள் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான நிபுணர் குழுவினர் ஆவர்.

இதை நம்பித்தான் திட்டக்குழுவின் சார்பில், உச்சநீதிமன்றத்தில், அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதிலும் ஓரளவு விவரம் தெரிந்தவர்களாலும், படித்தவர்களாலும், பொருளாதார அறிஞர்களாலும், இது மிகவும் தவறானது - பொய்யானது - உண்மையை மூடி மறைப்பது என்று கடுமையாகவும் உரத்தும் பேசப்படவும், எழுதப்படவும், இடித்தும் இழித்தும் கூறப்படவும் இலக்காகிவிட்டது.

இது கண்டு திக்குமுக்காடித் திணறிப்போன திட்டக் குழுத் துணைத் தலைவர் என்கிற பொருளாதார மேதை அலுவாலியா - நாலா பக்கங்களிலிருந்தும் கடுங்கண்டனம் பாய்ந்தவுடன் - ஒரு செய்தி ஊட கத்துக்கு அண்மையில் அளித்த நேருரையில் - “ஆம்! சிற்றூர்ப்புறத்தில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு 28 உருபா செலவில் வாழ முடியும். அவர்களுக்கு இலவச மாக மருந்தும், பங்கீட்டுக் கடைப் பொருள்களும் தரப் பட்டால் - அவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி தரப்பட்டால், அந்தச் சூழலில் அவர்கள் குடும்பம் நடத்துவது முடியும்” என்று உளறிக் கொட்டியிருக்கிறார். இவற்றுள் எதுவும் இலவசமாகத் தரப்படவில்லை என்பது அலுவாலியாவுக்குத் தெரியாதா?

அரசு மருத்துவமனைகளில் தலை வலிக்கும் காய்ச்சலுக்குமே இலவசமாக மருந்து கிடைக்கும். மற்ற நோய்களுக்குக் கடைகளில் தான் மருந்து வாங்க வேண்டும்; தனியார் மருத்துவரிடம் போனால் அவருக்குக் கட்டணம் ரூ.25, 50, 100 என்று தரவேண்டும்.

அரசுத் தொடக்கப் பள்ளியில் இலவசமாக நூல் களும் படிப்பும் கிடைக்கும். இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டு கொத்து சீருடைகள் வாங்க உருபா 1,000 வேண்டும். தனியார் பள்ளியில் பாலர் வகுப்பில் சேரவே கைக்கூலி தரவேண்டும்.

பங்கீட்டுக் கடைகள் இந்தியா முழுவதிலும் எல்லா ஊர்களிலும் இல்லை. தமிழ்நாட்டில் அரிசி மட்டும் இலவசம். ஒரு வேளைக்கான நாளைக்கு 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு குழம்பு வைக்க உருபா 30க்கு பருப்பு, புளி, மிளகாய், எண்ணெய் வாங்க வேண்டும். ஒரு காய் வாங்கிச் சமைத்திட, கூடுதலாக ஒரு நாளைக்கு 25 உருபா செலவாகும். வாரம் ஒரு நாள் புலால் உண்ண உருபா 100 வேண்டும். அடுப்பு எரிக்க மண்ணெண்ணெய் அல்லது விறகு வாங்க வேண்டும்.

ஓர் எளிய குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்கே இவ்வளவு செலவாகும். அய்ந்து பேர்களுக்கும் உடை கள் வாங்க வேண்டும்; சொந்த வீட்டிலும், உறவினர் கள் வீட்டிலும் நடக்கும் நன்மை தீமைகளுக்கும் மதப்பண்டிகைகளுக்கும் செலவு செய்ய வேண்டும்.

இவையெல்லாவற்றையும் மாண்டேக் அலுவாலியா கூறுவது போல, இலவசமாகப் பெற்றிட்டால்கூட, நகர்ப்புறத்தில் ஒற்றையறை வீட்டு வாடகையாக மாதம் ரூ.1000, 1500 கொடுத்துக் கொண்டு, மாதம் ரூ.4824 செலவில் குடும்பம் நடத்த இயலாது; சிற்றூர்ப் புறத்தில் ரூ.3905இல் குடும்பம் நடத்த முடியாது. மெத்தப் படித்த அவருக்கு, “ஏழ்மையை மதிப்பீடு செய்யும் வல்லமை இல்லை” என, அதே நேருரையில், அவரே வெட்கமில் லாமல் கூறியுள்ளார்.

இந்த நிலைமைகள் ஊரும் நாடும் சிரிக்கும்படி ஆனவுடன், அய்க்கிய முற்போக்கு அணியின் தலைவரான திருமதி. சோனியாகாந்தியும், அவருக்குத் தொண்டு செய்வதே பிறவிப்பயன் என்று கருதும் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங்கும் எதை எதை இலவசமாகத் தந்து வறுமையைப் போக்க - ஏழ்மையைப் போக்கத் திட்டம் தீட்டலாம் என்று ஒரு முன்மொழிவைச் செய்துள்ளனர்.

அது என்ன?

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்மொழியப்பட இருக்கிற, தேசிய உணவு உத்தரவாதம் தரும் மசோதாவில் சிற்றூர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களில் 75%க்கும்; நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களில் 50%க்கும் - மாதந்தோறும் ஒவ்வொரு தலைக்கும் ஒரு கிலோ 3 உருபா விலையில் அரிசி யும், ஒரு கிலோ 2 உருபா விலையில் கோதுமையும், ஒரு கிலோ 1 உருபா விலையில் மற்ற தானியங்களும் என மொத்தம் 7 கிலோ தானியம் வழங்க உத்தர வாதம் அளிக்கும் திட்டத்தைச் சேர்த்திடத் திட்டமிட் டார்கள்.

இந்தத் திட்டத்தை ஏற்று ஒப்புதல் அளிக்கும்படி கோரி, எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் - மசோதாவின் வரைவை இந்திய உணவுத் துறை அமைச்சகம் அனுப்பிவைத்தது. மொத்தம் உள்ள மாநிலங்களில் பாதி எண்ணிக்கை மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டுமே இவ் வரைவு குறித்து விடை மடல் விடுத்துள்ளனர்.

இந்திய அரசு இப்படித் தடுமாறித் தத்தளிப்பதற்கு என்ன காரணம்?

இதுபற்றிய குட்டு என்ன?

“உலக உணவு நாள்” 16-10-2011இல் வருவதை ஒட்டி, “உலக உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம்”, அமெரிக்காவிலிருந்து, 11-10-2011இல் வெளியிட்ட உலக நாடுகளின் வறுமை அளவு பற்றிய அறிக்கையில் இந்தியாவைப் பற்றிய எந்தக் குறிப்புமே இல்லை. ஏன்?

“இந்தியா கடந்த ஆறு ஆண்டுகளாக - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சராசரி எடைக்குக் குறை வானவர்களின் விழுக்காடு எத்தனை? சத்துக்குறை வானவர்களின் விழுக்காடு எத்தனை? என்கிற புள்ளிவிவரங்களைத் திரட்டவே முயற்சிக்கவில்லை” என அவ்வறிக்கையில் கூறியுள்ளதோடு,

தெற்கு ஆசியாவைப் பற்றிய அந்நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் - வறுமை மிதமிஞ்சி உள்ள நாடுகளில் இந்தியாவிலும், பங்களாதேசிலும், திமோர் - லெஸ்டேயிலும் வறுமை அதிகமாக இருப்பதாகவும்; அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 40% பேர் சராசரி எடைக்குக் குறைவானவர்களாக மேலே கண்ட மூன்று நாடுகளிலும் உள்ளனர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

“வளரும் நாடென அறியப்பட்ட இந்தியா - வறுமை நிலை, சத்துக்குறைவான குழந்தைகளின் விகிதம் இவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் திரட்டுவதில் - பங்களாதேசைவிடவும், பாக்கிஸ்தானைவிடவும் பின்தங்கிவிட்டது” என்றும் சுட்டிக்காட்டி இடித்துக் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்திய மக்கள் நாயகத்தின் - இந்திய உயர் ஆளும் அதிகாரக் கும்பலின் - இந்திய நாடாளு மன்றத்தின் - இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர் களின் - சமூகப் பற்றற்ற கடமை உணர்ச்சியற்ற கழிப்பிணித்தனம் நிறைந்த தன்மைகளே, எல்லா இயற்கை வளமும் நிறைந்த இந்தியா 64 ஆண்டைய விடுதலைக் காலத்துக்குப் பிறகும் வறுமையிலும், நோயிலும், கல்வியின்மையிலும், வேலை இன்மை யிலும் சிக்கிச் சீரழிவதற்குக் காரணங்கள் ஆகும்.

எவர் வேண்டுமானாலும் எத்தனை ஆயிரம் கோடிப் பணம் வேண்டுமானாலும் சேர்க்கலாம் - எவ்வளவு பரப்பு வேளாண் நிலமும் தோட்டமும் வீட்டு மனையும் வைத்திருக்கலாம்; எத்தனை வீடுகள் வேண்டுமா னாலும் ஒரே குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கலாம் என்கிற பொருளாதாரக் கட்டுமானமும் அமைப்பு முறை யும் திட்டங்களும் - இவற்றை அப்படியே காக்கும் அரசமைப்புச் சட்டமும், நாடாளுமன்றமும் - அதற்கான தேர்தல் முறைகளும் அப்படியே நீடிக்கிற வரையில் - ஆட்சியும், ஆளும் அதிகாரிகள் வகுப்பும் - உயர்சாதி ஆதிக்க நீதிமன்றங்களும் - வலிவான தனியார் செய்தி மற்றும் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களும், பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் பழமையைப் பாதுகாக்கும் கல்வியே கற்பிக்கப்படுகிற வரையில் - அமெரிக்க, அய்ரோப்பிய வெள்ளையர் களுக்கும்; இந்தியப் பார்ப்பன - பனியா கொள்ளைக் கூட்டத்துக்கும், சாராய மன்னர்களுக்கும் இந்தியாவும், இந்தியரும் பலி ஆகியே தீரவேண்டும்.

இன்று அமெரிக்கரின் ஆதிக்கம் ஆட்டங்காணத் தொடங்கிவிட்டது.

ஆண்டுக்கு 2.5 இலட்சம் டாலர் வருமானம் பெறுகிற அமெரிக்கன், இப்போது செலுத்துகிற 35% வருமான வரியை 39% ஆக உயர்த்தி விதிக்க முடியாமல் பாரக் ஒபாமா தடுமாறுகிறார். 1950களில் அமெரிக்க அதிபர் அய்சனோவர் ஆட்சியில், தனிநபர் வருமானத்தின் மீது 91% வருமானவரியாக விதிக்கப்பட்டது; 1970களில் ரிச்சர்டு நிக்சன் அதிபராக இருந்த காலத்தில் தனிநபர் வருமானத்தின் மீது 70% வருமானவரியாக விதிக்கப்பட்டது.

ஆனால் 2011ஆம் ஆண்டைய - கடன்கார அமெரிக்காவில் பெரிய பணக்காரர்களுக்கு அப்படி வரி விதிக்க முடியவில்லை.

இந்தியாவில் உள்நாட்டுக் கறுப்புப் பணம், ஸ்விஸ் மற்றும் பிற அயல்நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் - தங்க, வைர நகைகளில் இந்தியாவில் தனிநபர்கள் முடக்கியுள்ள செத்துப்போன மூலதனம் இவையெல்லாம் வெகுமக்களின் உழைப்பாலும், நாட்டின் வளத்தைச் சுரண்டியதாலும் தேக்கப்பட்டவை. இவை நாட்டின் பொதுச் சொத்துக்கள்.

இங்கு தனிநபர் வருமானத்தின் பேரில் 50% அளவுக்கு வருமான வரி உடனே உயர்த்தப்பட்டாலே அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வெகு மக்களுக்குக் கல்வி, மருத்துவம் இவற்றை இலவச மாகத் தரமுடியும்; வயது வந்த எல்லோருக்கும் குறைந்த அளவு மாத வருமானம் தரும் தொழிலோ, வேலையோ தரமுடியும்.

நாடு, மக்கள், மொழி, கடவுள், மதம், சமயம், இனம் இவற்றுள் எதில் பற்றுள்ளவர்களாக ஒருவர் இருந்தாலும் - மனிதன் மனிதனாக வாழ்ந்திட வழி காண விரும்பாத மனிதர்கள் நிரம்பிய சமுதாயம் கடைத்தேற வேறு வழி ஏது?

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

- வே.ஆனைமுத்து