அண்மைக்கால வரலாற்றில் ஆசியாக் கண்டத்தில் மிகப் பெரும் உயிர்ப்பலி நேர்ந்ததற்கு சிங்கள இன வெறியன் இராஜபக்சே தான் காரணம். இது, அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ (Permanent People’s Tribunal) பத்து நீதிபதிகள் தந்த தீர்ப்பு - (அ) இராஜபக்சே, ஒரு போர்க்குற்றவாளி, (ஆ) இராஜபக்சே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை - இந்த இரண்டு திருப்புமுனைத் தீர்ப்புகளை அமெரிக்கா, அர்ஜென்டினா, பெல்ஜியம், அயர்லாந்து, இத்தாலி, எகிப்து, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கி உள்ளனர்.

இது, பன்னாட்டு அளவில் இன்றியமையாத ஒரு தீர்ப்பாயம் தந்த தீர்ப்பு! மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு மாமன்றத்தின் தீர்ப்பு!

பன்னாட்டு மக்கள் உரிமைப் பிரகடனத்தால் உந்துதல் பெற்று, திபெத் - மேற்கு சகாரா - அர்ஜென்டீனா - எரித்திரியா - பிலிப்பைன்ஸ் - எல்சால்வடார் - ஆப்கானிஸ்தான் - கிழக்குத்திமோர் - கவுதமாலா - அர்மீனியா - நிகரகுவா முதலிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு உரிமை மீறல்களைத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இதற்கு இல்லாவிட்டாலும், அவை மிகுந்த நம்பகத்தன்மை உடையவையாக உலகமெங்கும் மதிக்கப்படுகின்றன. இத்தீர்ப்புகள் தன்மையான பன்னாட்டு அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தீர்ப்புகளில் பல ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவினால் விவாதிக்கப்படுகின்றன. அதன் விளைவாகப் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம், பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரி மார்கோசிற்கு எதிரான கண்டனம் போன்றவை இத் தீர்ப்பாயத்தின் முன்னால் வந்த சில அண்மைக்கால நிகழ்வுகளாகும். சிக்கலின் வேர்களைக் கண்டறிவதோடு நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதும், தனி ஒருவர் அல்லது குழுவினரது பொறுப்புகளை உணர்த்துவதும் அல்லாமல், சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளின் கட்டமைப்புக் காரணங்களையும் சுட்டிக் காட்டுவது இத்தீர்ப்பாயத்தின் தலையாய சிறப்பாகும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு, இத்தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் 2010ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, இத்தீர்ப்பாயம் விவாதிக்க வேண்டுமென, ‘இலங்கையின் அமைதிக்கான ஐரிஷ் கருத்து மன்றம்’ எனும் அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு 2007 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. மனித உரிமை மற்றும் அமைதிக்காகத் தொண்டாற்றி வரும் மனித உரிமைக் குழுவினர், கலைஞர்கள், அயர்லாந்திலிருக்கும் கல்வியாளர்கள் ஆகியோர் இலங்கையில் மனித உரிமைகள், சனநாயகம் குறித்துக் கலந்துரையாடலுக்கு உதவும் பொருட்டு இவ்வமைப்பை உருவாக்கினர்.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால், அத்தீர்மானத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கோரப்பட்டிருந்தது. பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

இன்றைய புவிசார் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மீது அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கேட்க, அரசாங்கங்களை நம்பிப் பயனில்லை. அவை தங்களது எதிர்கால இலாபத்தை முன்வைத்தே பன்னாட்டு நிலைப்பாடுகளை எடுக்கின்றன. ஆகவே, உலகெங்குமுள்ள புரட்சியாளர்கள், சனநாயக ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள், தேசிய இன விடுதலைப் போராளிகள், மனச்சான்றுள்ள மக்கள் சமூகத்தினர் ஆகியோரது ஆதரவைத் திரட்டுவதுதான் இன்றைய நிலையில் ஏற்புடையதாக இருக்கும்.

“மூலதனம் உலகமயமாவதால், புரட்சியும் உலகமயமாக வேண்டியது கட்டாயம்” எனச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். “செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உடையவர்களுக்கு, அதைச் சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது” என்றார் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்.

மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான உலகளாவிய “லெலியோபாசோ” அமைப்பினால், ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் “நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்”, இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் 1979ஆம் ஆண்டு சூன் மாதம் 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்ற 5 பேர் உட்பட, பிற பன்னாட்டு சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் இன்றுவரை, ஏறத்தாழ 40 விசாரணைகளை ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொண்டுள்ளது. இலங்கையில், “அமைதிப் பேச்சு வார்த்தைகள் முறிந்துபோன பிறகு நடைபெற்ற இறுதிக் கட்டப்போர், குறிப்பாக இறுதி மாதங்கள்” பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை - ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், 2009ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ விசாரணை, டிரினிடி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் 2009 ஏப்ரல் மாதம் வரை, அய்க்கிய நாடுகள் அவையில் உள்ள ஆவணங்களில் வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டதாக அந்த அய்ரிஷ் குழு கூறியது. இறுதி சில வாரங்களில் மட்டும் 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீறியதாகவும், குறிப்பாகப் போரின் இறுதி அய்ந்து மாதங்களான 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கொடுமையான போர்க் குற்றங்களையும் அவர்கள் புரிந்ததாகவும் பல குற்றச்சாற்றுகள் முன் வைக்கப்பட்டன.

மக்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், அரசு அறிவித்த ‘பாதுகாப்பு வளையங்கள்’, ‘பாதுகாப்புப் படையினர்’ அறிவித்த ‘தாக்குதல் அற்ற வளையங்கள்’, ஆகியவற்றின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும், அவற்றின் மூலம் பல மக்களும், மருத்துவர்களும், தொண்டு நிறுவன ஊழியர்களும், கொல்லப்பட்டதும் இந்தக் குற்றச்சாற்றுகளில் அடங்கும். போர்ப் பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாததும் இம்முறையீடுகளில் அடங்கும். இவற்றைத் தவிர, மானிடத்திற்கு எதிரான கொடிய குற்றங்களும் அதில் சேரும்.

போர் முடிந்த பின்னர், வன்னிப்பகுதித் தடுப்பு முகாம்களில் 2 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் திரும்பியது; முகாம்களில் நெருக்கமாக அடைக்கப்பட்டனர். பாதுகாப்பான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் நலவாழ்வு வசதிகள் இன்றி, அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

முகாம்களிலிருந்து பல நூறு எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதும், பாதுகாப்புப் படையினர் அல்லது அரசின் ஆதரவு பெற்ற குழுக்களால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டதும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உள்ளூர் மக்களிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணரும் வாய்ப்பினை அளிக்க, எந்தத் தேசிய அல்லது பன்னாட்டு ஊடகங்களுக்கோ, பிற செய்தி நிறுவனங்களுக்கோ, அய்.நா.அமைப்பினருக்கோ அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இக்குற்றங்களுக்காகக் கீழ்க்குறித்த வினாக்களுக்குப் பதில் கூறும்படி இலங்கை அரசு மீது வினா தொடுக்கப்பட்டது :-

1.     உலகளாவிய குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம்’ சட்டத்தில், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என விளக்கப்பட்டுள்ள முறையில், திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்றனவா?

2.     ‘ரோம்’ சட்டத்தின் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில், தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்வியல் நிலைகளில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டனவா?

3.     தாமாகவே முன் வந்து இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போர்க் கைதிகளைக் கொலை செய்ததன் மூலம், இலங்கை அரசு படைகள் உலகளாவிய போர்ச் சட்டங்களை மீறியிருக்கின்றனவா?

4.     பாலியல் வன் கொடுமைகளும், வன்புணர்வும் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டனவா?

5.     ‘வலுக்கட்டாயமாக ஆள்களைக் காணமல் அடிப்பது’ குறித்த ரோம் சட்டத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனரா? காணாமல் ஆக்கப் பட்டனரா?

6.     உலகளாவிய சட்டங்களுக்கு முரணாகத் தமிழ் மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனரா?

7.     மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் கனரக ஆய்தங்களையும் வானூர்தித் தாக்குதல்களையும் மேற் கொண்டதன் மூலம் - இலங்கை ஆய்தப்படையினர் போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனரா?

8.     உலகளாவிய சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ள ஆய்தங்களைக் கொத்துக் குண்டுகள், வேதியத் தன்மையுள்ள குண்டுகள் போன்ற வற்றை இலங்கைப் படையினர் பயன்படுத்தினரா?

9.     இறந்து போனவர்களின் உடல்களைச் சேதப்படுத்துவதன் மூலம், போர்க் குற்றங்களை இலங்கை அரசு படைகள் புரிந்தனவா?

முதலிய குற்றஞ்சார் வினாக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தக் கூடிய எந்த நேர்மையான முன்னேற்றத்தையும் தடுக்கத், தீவிரச் சிங்களத் தேசியவாதிகள் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த உள்நாட்டுப் போர் ‘சான்றுகளற்ற போர்’ என்பது ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ முன் வைக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்கள் சார்பாளர்கள், வல்லுநர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவிய லாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்கு மூலங்களைத் தீர்ப்பாயம் கேட்டறிந்தது.

இலங்கை அரசு எந்தவொரு தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் செல்ல இசையவில்லை. உண்மையில் தொடக்கக் காலத்தில் இறந்தவர்கள் ஊடகவியலாளர்களே! இது உள் நாட்டுப் போர் அல்ல: இன அழிப்பைச் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை: இனப் படுகொலை! போர் வானூர்திகள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாகச் சான்றுகள் உள்ளன. ‘நாபாம்’ குண்டுகள் போடப்பட்டன. வேறு பல எரியும் தன்மையுள்ள பொருட்களும் போரில் பயன்படுத்தப்பட்டன. பொது நலன் சார்ந்த பொதுக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனைகள், பள்ளிகள் முதலிய பொதுக் கட்டமைப்பு உட்படப் பொதுமக்கள்வாழ்விடங்களில் அவற்றுள் இலங்கை இராணுவம் தொடர்ந்து எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. குடிநீர் வழங்காமை, மருத்துவஉதவி அளிக்காமை, தொடர்ந்து கல்வி பெற வசதி கிடைக்காத தன்மை முதலியவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன. சட்டமுரணான ஆய்தங்களைப் பயன்படுத்தியோ, பயன்படுத்தாமலோ, தமிழ்மக்களை அழித்தொழிக்க முயல்வது போர்க்குற்றமாகும். இலங்கைஅரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை, தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல் நலன் பாதிக்கப்பட்டு, தோல் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் கக்கல் கழிச்சலாலும் சத்துக் குறைவினாலும் இறந்தனர். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் அனைத்துத் தேவைகளுக்கும் 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது.

அடிப்படை நலவாழ்வாகிய கழிப்பறைப் பயன்பாட்டுக்கும் துணி துவைப்பதற்கும் தேவையான நீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்களுக்கு உடுத்தி

யிருந்த உடை மட்டுமே இருந்தது. மாற்றுத் துணிகள் கூட வழங்கப்படவில்லை. கழிவு நீர் அகற்றப்

படாமல் தேங்கி நின்றது. அதில் குழந்தைகள் தவறி விழுந்து மூழ்கி இறந்த கொடுமையும் நிகழ்ந்தது.

தமிழ் மக்களுக்கு உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. அதன் மூலம் தமிழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க முயன்றது இலங்கை அரசு. அழிக்கப்பட்ட கிராமங்களிலும், முகாம்களிலும் அரசும் இராணுவமும் தமிழ்ப் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் தொடர்ந்து அரங்கேறிய கொடுமைகளாகும். மேலும், இது கருக்கலைப்பு, குடும்பப் பெருமைக்கு இழுக்கு. அவமானம் மற்றும் மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்ட கொடுமைகளும் நிகழ்ந்தன.

தமிழ்த் தலைவர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்தது மற்றும் ஒரு கொடுமையாகும். இலங்கை இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் ராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி.மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆய்தப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8-கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ‘போர்க்குற்றங்கள்’ புரிந்துள்ளதைத் தெளிவாக்குகின்றன.

‘ரோம்’ சட்டத்தின் பிரிவு 8-கீழ் வருமாறு கூறுகிறது :-

நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையிலான போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும்.

1.     பொதுமக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடு படாத தனி மாந்தர் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்.

2.     இராணுவ இலக்கல்லாத பொதுக் கட்டமைப்புகள்மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது.

3.     தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய இராணுவ இலாபத்தைவிட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொதுமக்களுக்குக் காயம் ஏற்படுத்துவது, பொதுக் கட்டமைப்புகள், பொதுமக்கள் உடைமைகள் ஆகியவற்றைப் பரவலாகச் சேதப்படுத்துவது, இயற்கைச் சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரியப் பாதிப்பினை ஏற்படுத்துவது ஆகியவை.

4.     ஆய்தங்களைக் கைவிட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல்லது தாமாக முன் வந்து சரணடைந்த ஒருவரைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது.

5.     மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடங்கள் - வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த கட்டடங்கள் - மருத்துவமனைகள் - இராணுவ இலக்காக அல்லாததும் - காயம்பட்டவர்களோ, நோய்வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக்கூடியதுமான இடங்கள் ஆகியவை மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

6.     சுயமரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்துவது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது.

7.     வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (F) ல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாயக் கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் முதலியவைகளும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.

மேலும், ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடர் உதவிப் பொருள்களை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வது உட்பட, பொது மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வதும் குற்றமாகும். பணயக் கைதிகளைப் பிடித்து வைத்தல் - நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அளிக்கப்பட்ட ஒரு முன்னோடித் தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள் - கொலை - படுகொலை செய்தல், மக்களைக் கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல், மக்களைத் துன்புறுத்துதல் - வலுக்கட்டாயமாகக் காணாமல் அடித்தல் - ஒரு தேசிய இனம் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை அழித்தல் ஆகியனவும் போர்க்குற்றங்களாகப் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கே, பன்னாட்டுச் சமூகம், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் களைத் தடுக்க, எவ்விதமான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வில்லை. இலங்கை அரசின் தொடர்ச்சியான போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அது புறந்தள்ளி விட்டது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாமல் விட்ட அய்க்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளுக்கு, ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ அந்தப் பொறுப்பினை உணர்த்துகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோசமான, கொடுமையான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக அய்.நா.மனித உரிமைகள் ஆணையமும், அய்.நா.பாதுகாப்பு ஆணையமும் இலங்கைத் தமிழர்கள் மீதான அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கும் போர் நடவடிக்கைகளுக்கும் அரசியல் ஏற்பு அளிக்கப்பட்டது மாபெரும் தவறு. இதற்கான முழுப் பொறுப்பும், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை’ நடத்துவதாகக் கூறும் அமெரிக்காவையும் அதன் தலைமையிலான நாடுகளையுமே சாரும் என ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தீர்ப்பாயம்’ சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் பல நாடுகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதையும் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சில நாடுகள், போர் நிறுத்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவப் படையினருக்குப் பயிற்சியும் அளித்துள்ள. இவ்வாறான, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகள் ஏற்கப்படுமானால் ஈழத்தின் போர்க் குற்றவாளி இராஜபக்சே தான் எனத் தெளிவாகும்!

மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் விசாரணை செய்திட சுதந்திரமான அதிகாரமுடைய ‘உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்’ ஒன்றை அமைத்து, அக்குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இலங்கை அரசு உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்ள வேண்டும். 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை சுதந்தரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும், கௌரவத்தையும் உறுதி செய்து, உலக நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும், சட்டப் பூர்வமாகத் தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அனைத்துத் துணை இராணுவக் குழுக்களையும் உடனடியாகக் கலைத்திட வேண்டும். தமிழர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்.

தமிழர்கள் சுதந்தரமாகச் செயல்பட சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்கிட வேண்டும்.

இலங்கை அரசு ‘ரோம்’ ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முகாம்களில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரைப் பொறுத்த அளவில் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ கீழ்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.

(அ) அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைக் காப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், மனிதநேய அமைப்புகள் - சுதந்தரமாகவும், தடையின்றியும் முகாம்களுக்குச் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

(ஆ) முகாம்களை இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடனும், பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிர்வாகத்தில் தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

(இ) அய்.நா.வின் “உள்நாட்டில் இடம் பெயர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்” போன்றவற்றில் கூறப்பட்டுள்ள தரத்தில் - பாதுகாப்பாகத் திரும்பவும், திரும்புகிறவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறு கட்டமைப்புச் செயல்களைச் சுதந்தரமான பன்னாட்டுக் கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.

(ஈ) பாதிப்புக் குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்துச் சரியான மதிப்பீட்டிற்குப்பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.

(உ) பெண்கள், குழந்தைகள், பிரிந்து விட்ட குடும்பங்கள், அடிப்படைச் சேவைகள் சென்றடைதல், போருக்குப்பின்னான புனர் மருத்துவம் மற்றும் மன அழுத்தம் மனப்பிறழ்வுக்கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் முதலியவற்றைக் கவனிக்க வேண்டும்.

(ஊ) போர்க்குற்றங்கள், மனித உரிமைச்சட்ட மீறல்கள் குறித்து விசாரித்து அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்திட அய்.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

(எ) தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்தரம் மற்றும் சட்டம் ஒழுங்கு முதலியவற்றை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திரமாகக் கண்காணிக்க அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இவையே, அவசரமாகவும், அவசியமாகவும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும்!