மாண்புமிகு பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற நிதிபதியாக 1974-1984ஆம் ஆண்டுகளில் விளங்கி ஓய்வு பெற்றவர் அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்கள். அவருடைய பிறந்தநாள் 1922 மே 14. இவ்வாண்டு மே திங்கள் 91ஆம் அகவையில் நுழைகிறார்.

உண்மையான கூட்டாட்சி அரசமைப்புக்கான விவாதக்குழுவின் தலைவராக, 20.10.1991 இல் பொறுப்பேற்ற அவர்,அக்குழுவின் ஒருங்கிணைப் பாளராக விளங்கிய பேராசிரியர் ஈரோடு மு.க.சுப்பிர மணியம், உறுப்பினர் வே.ஆனைமுத்து ஆகியோரிடம் பேரன்பு கொண்டவர்.

2012 ஆம் ஆண்டில், ஏப்பிரலில், வே.ஆனைமுத்து, கவிஞர் காவிரிநாடன், ச.தமிழரசு, புதேரி தானப்பன் ஆகியோர் சண்டிக்கருக்குச் சென்று, உண்மையான கூட்டாட்சிக்குரிய அவருடைய ஒத்துழைப்புடன் இப் பொருள் குறித்த ஓர் ஆவணத்தைத் தயாரித்தோம்.

அந்த ஆவணத்தின் படிகளைத் தமிழ்நாட்டிலுள்ள தேசிய இனவிடுதலை குறித்துக் கவலையுள்ள எல்லோருக்கும் 8-4-2012இல் விடுத்து வைத்தோம்

தொடர்ந்து 2013 ஏப்பிரல் 4, 5 நாள்களில் வே.ஆனைமுத்து, புதேரி தானப்பன், சா.சீனிவாசன் குழுவினர் சண்டிகருக்குச் சென்று அவருடன் களந்து பேசி,கூட்டாட்சி ஆவணத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்பை உருவாக்கினோம்.

இந்தியக்குடி அரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், இந்திய உள்துறை அமைச்சர். இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு-அவரும் நானும் கையொப்பமிட்ட வேண்டுகோள் மடல்களை முதன் முதலாக, 8.4.2013 இல் விடுத்து வைத்தோம்.

அவர் வெளியூருக்குப் பயணம் செய்ய முடியாத தால், அவர் சார்பாக, நான், ஜம்மு-காஹ்மீர் முதல மைச்சரிடம் நேர்காணல் கோரி மடல் எழுதிவிட்டு,தோழர்களுடன் 15.4.2013இல், ஜம்முவுக்குச் சென் றேன். 16.4.2013 அன்று வரும்படிக் கூறினர். அன்று முதல்வரைப் பார்க்க இயலவில்லை. திரும்பிவிட்டோம்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி, முதன்முதலாக, புதுதில்லியில், மவ்லங்கர் மண்டபத்தில், 19.10.1991 இல் இந்தியக்கூட்டாட்சிக்கான மாநாட்டை நடத்தி அம்மாநாட்டுக்கு அஜீத்சிங் பெயில்சிங் தலைமை தாங்கினார்.

அடுத்தநாள் 20.10.1993அன்றுதான், புதுதில்லி நார்த் அவின்யூ 93ஆம் எண் இல்லத்தில் அவரு டைய தலைமையில் கூடி,இந்தியாவை ஓர் உண்மையான கூட்டாட்சியாக அமைப்பதற்கான ஒரு விதாதக் குழுவை அமைத்தோம்.அக்குழுவின் ஒருங் கிணைப்பாளராக பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் செயல்பட்டு வந்தார்.

சென்னையில் 26.12.1993 இல் நடைபெற்ற வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டிலும்; 27.12.1993 இல் நடைபெற்ற கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாட்டிலும் அஜித் சிங் பெய்ன்ஸ் பங்கேற்றுச் சிறப்பு ரையாற்றினார்.பேராசிரியர் மு.க.சு. 21.2.2005இல் திடுமென மறைவுற்றார். கூட்டாட்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பணியை நான் ஏற்றேன்.

2012 சனவரி 8இல் பல்லாவரத்தில் கூட்டாட்சி மாநாட்டை நடத்தினோம். பேராசிரியர் முனைவர் ஜி.திம்மையா,முனைவர் மு.நாகநாதன் உரையாற்றினர். அதன் தொடர்ச்சியாகவே, 8.4.2013இல் முதலாவது ஆவணம் உருவாக்கப்பட்டுத் தமிழகத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டது.

2013 சனவரி 6 இல் வேலூரில் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. வே.ஆனைமுத்து, இரா.பச்சமலை, க.முகிலன் உரையாற்றினர்

அங்கு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை முன் வைத்து, 2013 ஏப்பிரல் 4இல் சண்டிகரில் கலந்து பேசி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் -அஜித் சிங் பெய்ன்ஸ்,வே.ஆனைமுத்து இருவரும் கையொப்ப மிட்டுக் குடிஅரசுத் தலைவர்,பிரதமர் உள்ளிட்டோருக்கு,அதிகார முறைப்படி, 8.4.2013இல் விடுத்து வைத்தோம்.

அஜித் சிங் பெயின்ஸ்1958இல் பஞ்சாப் மானுட உரிமைக்காப்பு அமைப்பை நிறுவினார். இன்னும் அதன் தலைவராக விளங்குகிறார்.

தடா (TADA)சட்டத்தைக் கண்டனம் செய்து உரையாற்றியதற்காக, 1992 இல் அவர் கைது செய்யப்பட்டார். 1996 இல் அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், இழப்பீடாக ரூபா 50 ஆயிரம் அளிக்கப்பெற்றார். இன்றும் மானுட உரிமைக் காவலராக விளங்கும் அஜித் சிங் பெயின்ஸ் அவர்கள் 2013 மே 14 இல் 91 ஆம் அகவையை எட்டுகிறார்.அவர் நெடிது வாழ்வது மானிட உரிமைக்காப்பு, கூட்டாட்சி அமைப்புக்கு உரம் சேர்ப்பதாகும்.