இந்துமத சாத்திரங்களின் பேரால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்தது.பார்ப்பன நயவஞ்சகர்கள் கல்வியைத் தங்கள் முற்றுரிமை யாக்கிக் கொண்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் பொதுக்கல்வி முறை புகுத்தப்பட்டது.எல்லாச் சாதியினரும் பள்ளியில்-கல்லூரியில் படிப்பதற்கான உரிமையும் வாய்ப்பும் கிடைத்தன.ஆனால் நெடுங்காலமாகக் கல்விகற்கும் உரிமையைப் பெற்றிருந்த காரணத்தால்,பார்ப்பனர்கள், ஆங்கிலேயர் ஆட்சியிலும் கல்வியில் முந்திக்கொண்டு,அரசுப் பணிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.ஆட்சி அதிகாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக,‘தகுதி-திறமை’என்ற பூச்சாண்டி காட்டி,ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அரசுப் பணிகளில் தமக்குரிய பங்கைப் பெறவிடாமல் தடுத்து வந்தனர்.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி 1921இல் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தது.1927இல் இது நடப்புக்கு வந்தது.இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சென்னை மாகாணத்தில் தான் முதன் முதலாக அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தரப்பட்டது.அண்ணல் அம்பேத்கரின் அரிய முயற்சியால் 1943இல் இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு நடுவண் அரசு வேலைகளில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனவகுப்பினர்க்கு மேதை அம்பேத்கரின் விடாப்பிடியான சமூகநீதிக் கோட்பாட்டால் விதி 16(4)இன் மூலம் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. தந்தை பெரியாரின் பெரும் போராட்டத்தால் கல்வியிலும் பிற்படுத்தப்ப்டட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பினர் இடஒதுக்கீடு பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் - விதி 15(4) மூலம் உறுதி செய்யப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமையைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெறவிடாமல் நேரு தடுத்துவிட்டார்.தோழர் வே.ஆனைமுத்துவின் தலைமையில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி,வடபுலத்தில் இராம்அவதேஷ்சிங் போன்ற தலைவர்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக,மண்டல் குழு அமைக்கப்பட்டது.1990இல் வி.பி.சிங் அரசால் மக்கள் தொகையில் 57 விழுக்காட்டினராக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடுவண் அரசு வேலையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆயினும் நடுவண் அரசின் முதல்நிலைப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 விழுக்காடு இடங்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

பார்ப்பன-பனியா மேல்சாதி ஆளும்வர்க்கத்தினர்‘இந்து-இந்தி-இந்தியா’என்கிற ஓர்மை-ஒருமைப்பாடு என்ற பெயரால் இந்தியாவின் ஏகாதிபத்தியவாதிகளாக இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பணிகளிலும் உயர் கல்வியிலும் பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பினர் தமக்குரிய பங்கைப் பெறவிடாமல் தடுப்பதற்காகப் புதிய புதிய சூழ்ச்சித் திட்டங்களை உருவாக்குகின்றனர்.இத்தன்மையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள்,இந்திய ஆட்சிப்பணி (அய்.ஏ.எஸ்.),இந்தியக் காவல் பணி (அய்.பி.எஸ்.),இந்திய வருவாய்ப் பணி (அய்.ஆர்.எஸ்.), இந்திய வனப்பணி (அய்.எப்.எஸ்.) போன்ற உயர் அதிகாரம் வாய்ந்த பதவிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் 5.3.13அன்று நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அகில இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வை நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்துகிறது. இந்தி, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழிகள் என்பதால்,இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் மட்டுமே இத்தேர்வை எழுதும் நிலை இருந்தது

இந்தி அல்லாத பிறமொழிகள் பேசும் மக்கள் தொடர்ந்து அளித்த அழுத்தத்தின் காரணமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதன்படி, அசாமி, வங்காளி, போடோ, டோக்ரி, குசராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேப்பாளி, ஒடிசா, பஞ்சாபி, சமற்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வை எழுதி வந்தனர். இந்தி தவிர்த்த, இந்த 21 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் இத்தேர்வை எழுதவிடாமல் தடுக்கிறது நடுவண் தேர்வாணையத்தின் மேலே குறிப்பிட்ட அறிக்கை.

2010ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வில் 980 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.இதில் தமிழ்நாட்டிலிருந்து 122பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 600பேர் இத்தேர்வைத் தமிழில் எழுதுகின்றனர்.குசராத் மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 90விழுக்காட்டினர் குசராத்தி மொழியில் தேர்வு எழுதியவர்களாவர் (தி இந்து 18.3.13).இதுபோன்று இந்தி அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் தாய்மொழியிலே இத்தேர்வை எழுதுகின்றனர்.

முதற்கட்டத் தேர்வு, முதன்மைத்  தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாக இந்தியக் குடிமைப் பணித்தேர்வு நடைபெறுகிறது.தற்போது நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பா ணையில், முதன்மைத் தேர்வில் முதல்தாளில்  பிரிவு இரண்டில்,ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியை,தன் சொந்த நடையில் சுருக்கி ஆங்கிலத்தில் எழுதுதல்  (English Comprehension and English Precis) என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு 100 மதிப்பெண்.

முதல் தாளில் உள்ள கட்டுரைப் பகுதிக்கு 200மதிப்பெண்.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுத வேண்டும்.இதை ஆங்கிலம் அல்லது இந்தியில் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள 21 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.

ஆனால் இதற்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.ஒருவர் பட்டப்படிப்பை எந்த மொழி வழியில் படித்திருக்கிறாரோ அந்த மொழியில்தான் இத்தேர்வு எழுதமுடியும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை முதலான தொழிற்படிப்புகள் ஆங்கில வழியில்தான் உள்ளன.எனவே இப்படிப்புகளைப் படித்தவர்கள் இனி தமிழில் அல்லது அவரவர் தாய் மொழியில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வை எழுத முடியாது.

அதுமட்டுமின்றி, கலைஅறிவியல் கல்லூரிகளில் ஆங்கில வழியில் பட்டம் பெற்றவர்களும் தமிழில் இத்தேர்வை எழுத முடியாது. இவர்களில் 80 விழுக்காட்டினர் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள்.இவர்களால், நகரங்களில் மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்புவரை ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்குச் சமமாக ஆங்கில மொழியில் பேசவும் எழுதவும் இயலாது.தமிழ்வழியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.கிராமப்புற மற்றும் சிறுநகரப் பள்ளிகளில் படிப்பவர்கள். மேலும் இம்மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புக் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்.

கலைஅறிவியல் கல்லூரிகளில் பெயரளவில் ஆங்கிலவழி மொழி வழியில் படித்தாலும், பெரும்பாலும் தமிழிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன.அதுமட்டுமின்றி தேர்வுகளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்.பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் தமிழில் நடத்தப்படுகின்றன. எனவே இவ்வாறு படித்த இளைஞர்கள் - பெயரளவில் ஆங்கில வழியில் பட்டம் பெற்றிருப்பதாலேயே, இந்தியக் குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வில் உள்ள ஏழு தாள்களையும்  ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற நிலைக்கு இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத இளைஞர்களைத் தள்ளுவது மாபெரும் கொடு மையல்லவா?இது,உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி உள்ளிட்ட மற்ற தேசிய மொழிகளையும் அவற்றைப் பேசும் மக்களையும் இழிவுபடுத்தித் தண்டிப்பதல்லவா!

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகள் வரையில், ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பகுதியைத் தன் சொந்த நடையில் சுருக்கி எழுதுதல் (English Comprehension and English Precis) என்பது தேர்வின் ஒரு பகுதியாக இருந்தது.ஆனால்,தகுதியை மதிப்பீடு செய்வதில் இதனுடைய மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இப்போது மதிப்பீட்டுக்குரியதாக ஏன் மாற்றப்பட்டது?

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) முன்னாள் தலைவர் அருண் நிகவேகர் என்பவர் தலைமையிலான குழுதான் இப்புதிய மாற்றங்களைப் பரிந்துரை செய்தது.இன்று உலகமயச்சூழலில்ஆங்கிலஅறிவுபெற்றிருக்க வேண்டியது இன்றியமையாததாகும்; அதனால் ஆங்கிலத்தில் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று அருண்நிகவேகர் கூறுகிறார் (தி இந்து 17.3.13). பல்வேறு தேசிய மொழிகளைப் பேசும் இளைஞர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் நடுவண் அரசும் கண் மூடித்தனமாக இந்த அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.

மேலும் இத்தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப் பப்பாடமாக எடுக்க வேண்டுமானால், தமிழ் வழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால்,தமிழ்வழியில் படிக்காத மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமோ, புலமையோ இருக்கக்கூடாதா?இதற்கு முன்இரண்டு பாடங்களை விருப்பப்பாடமாக எடுக்கலாம் என்று இருந்தது.இப்போது அது ஒன்றாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதற்குப் பதிலாகப் பொது அறிவுக்கான தேர்வு கூடுதலாக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் பெரும் பகுதி ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள இளைஞர்களை வடிகட்டு வதற்கான ஒரு குறுக்கு வழி இது!

இந்தியா முழுவதிலும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 70விழுக்காட்டினர் தாய்மொழி வழியில்,அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப் பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இவர்களை இந்தியக் குடிமைப் பணிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியே இப்புதிய மாற்ற அறிவிப்பு.இந்தியைப் பயிற்று மொழியாகக் கொண்ட இளைஞர்கள்கூட ஆங்கிலத்தில் அந்த ஒரு தேர்வை எழுத வேண்டும்.ஆனால் இவர்கள் மற்ற தேர்வுகளை இந்தியில் எழுதலாம்.இதன்மூலம் மற்ற மொழிக்காரர்களைவிட இந்தி மொழியினர்க்கு முதன்மையான வாய்ப்பு வழங்கப்படுகிறது.அதன்மூலமாக தமிழ் உள்ளிட்ட இந்தி அல்லாத பிறமொழி யினர் இரண்டாம் நிலைக் குடிமக்களாக ஆக்கப்படுகின்றனர்.இந்திக்காரர்களே உயர் அதிகாரப் பதவிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள்.

நாடாளுமன்றத்தில் இப்புதிய மாற்றம் பற்றிய அறிவிப்பா ணையை பா.ச.க.உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்ததால் இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தி-இந்திய-ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்திட,இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் முழுமையான தன்னுரிமை கொண்ட நாடுகளாக அமைக்கப்படுவதே சரியான தீர்வாக அமையும்.முதற்கட்டமாக மாநிலங்களில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அம் மாநிலத்தின் தேசிய மொழியாக விளங்கும் தாய்மொழி வழி யிலேயே இயங்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் தேசிய மொழியே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகவும்,ஆட்சிமொழியாகவும்,நீதிமன்ற மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும்.இதற்கு இந்தியத் தேசியம் எனும் மாயையை -இந்திய ஒற்றையாட்சியின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும்.பல்வேறு தேசிய இனங்களும்,அவர்களின் மொழியும் மக்களும் விடுதலை அடைவதற்கான ஒரே வழி இதுவேயாகும்.

(குறிப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் 2ஆம் நிலை (குரூப்-2) 4ஆம் நிலைப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழுக்கான முதன்மையைக் குறைத்து ஆணை பிறப்பித்தது. இதன்படி, நிலை-2 தேர்வில் தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பான 100 வினாக்கள் நீக்கப்பட்டன. நிலை-4 தேர்வில் தமிழ் வினாக்களின் எண்ணிக்கை 100 என்பது 50 ஆகக் குறைக்கப்பட்டது.இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால்,இப்புதிய மாற்றம் கைவிடப்படுவதாகத் தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது.)