தமிழ்நாட்டுச் சட்டமன்றத்துக்கான தேர்தல் 2011 ஏப்பிரல் 13 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 13 அன்று அறிவிக்கப்பட்டன.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி ‘தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. மற்றும் சில அமைப்புகளும் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தின.

தமிழகத்தில் மட்டுமின்றி மாவோ இயக்கத்தினர் செல்வாக்கோடு இயங்குகிற அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா முதலான மாநிலங்களிலும் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், வாக்குச் சாவடிக்குச் சென்று “வாக் களிக்க விரும்பவில்லை” என்று பதிவு செய்வதற்கான 49-0 படிவத்தைப் பெற்று, 25000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் சென்ற தடவைகளில் பதிவான வாக்கு விழுக்காட்டைவிட, 2011 தேர்தலில் தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் அதிக விழுக்காடு வாக்குகளே பதிவாகி உள்ளன.

அது எதனால்?

எழுத்தறிவு வளர்ச்சியினாலா? மக்கள் நாயகக் கடமையை உணர்ந்து, தேர்தல் மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் புதிய தலைமுறையிடமும் மக்களிடமும் வளர்ந்திருப்ப தாலா? அல்லது தேர்தலில் பதவி பெற்றவர்கள் மேலும் மேலும் பதவி பெற்று, இருக்கிற அரசமைப்பில், கிடைக்கிற இலாபத்தை அவரவர் அடைய வேண்டும் என்று விரும்புவதைப் பார்த்து நாமும் அப்படி ஆகலாம் என மற்றவர்கள் விரும்புவதாலா என ஆர அமர மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படியானால், மா.பெ.பொ.க. ஏன் 1977 முதல் தேர்தலைப் புறக்கணிக்கிறது?

1.     இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே இருக்கிற சமூக அமைப்பை அப்படியே காப்பாற்றுவது;

2.     நான்கு வருணங்கள் இருக்கவும், பின்பற்றப் படவும் உரிமை அளிப்பது;

3.     மதச்சார்பான கல்வியை மட்டுமே அளிப்பது;

4.     பழைய பழக்க வழக்கங்கள் இன்றும் செல்லும் என்று கூறுவது;

5.     ‘சோசலிச மதச்சார்பற்ற அரசை அமைப்போம்’ என்று பொய்யாகச் சொல்லுவது; அப்படிச் சொல்லி விட்டுப் பெருநில உடைமைக்காரர் களையும், முதலாளிகளையும், பெருவணிகர் களையும், காப்பாற்றுவது;

இவற்றுடன்

1.     இந்திய அரசு பன்னாட்டுப் பெரு முதலாளிகளை இந்தியாவுக்குள் வரவேற்று இங்குள்ள இயற்கை வளங்களை அவர்களுக்கு விற்பது;

2.     உடலுழைப்புக்காரர்களையும் மூளை உழைப்புக் காரர்களையும் குறைந்த கூலிக்குப் பண்ணை அடிமைகள் போல் வேலை செய்யும் தொழில் முறைகளை வளர்த்துப் பாதுகாப்பது.

3.     இன்றுள்ள அரசு கல்வி, வைத்தியம், நல்ல குடிநீர், உழைப்புக்குத்தகுந்த ஊதியம் தரக்கூடிய மக்கள் நல நடவடிக்கைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, இவை எல்லாவற்றையும் வணிகப் பொருள்களாக மாற்றி, வெகுமக்களை வதைப்பது.

இவற்றைப் பற்றி வெகுமக்களுக்கு எடுத்துச் சொல் லும் வலிமையை-இந்தியாவிலுள்ள 4.200 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உணர்த்துகிற வலி மையை-790 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புரியவைக்கிற வலிமையை-இவற்றைச் செய்வதற் கான அமைப்பு அல்லது கட்சி வலிமையை-இவற்றைப் பரப்புரை செய்ய ஏற்ற ஊடக வலிமையைப் பெற்றி ராதவர்களாக இருந்து கொண்டு, “தேர்தலைப் புறக் கணியுங்கள்” என்று கூறுகிறோம். இது கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடுகிறது.

தேர்தலில் வாக்குப் பெறுகிற கட்சிகள், இவற்றை மக்களின் பார்வையிலிருந்து மறைத்து விடுகிறார்கள். வானளாவிய வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்; பணமும் தருகிறார்கள்; சாராயமும் தருகிறார்கள்; எப்போதும் போல் சாதியையும் சொல்லிக் காட்டு கிறார்கள்.

அதாவது-தேர்தலில் நிற்பவர்கள் மனம் அறிந்தே பொய்யான வாக்குறுதிகளைத் தருகிறார்கள்; பெரும் பாலான மக்கள் அவற்றை நம்புகிறார்கள். ஆட்சிக்கு வருகிறவர்கள் செய்கிற இரண்டொரு திட்டங்களை- இலவசமாக அரிசி தருவது, வேறு சில பண்டங் களைத் தருவது இவற்றை மக்கள் நல்லவை என்று வியந்து போற்றுகிறார்கள்.

இந்த நச்சு வட்டம் இப்படியே சுழன்று வருகிறது. எனவே நேற்றுவரை தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் கூட, இன்று “தேர்தலில் ஈடுபடுவது ஒன்று தான் மக்களுக்குத் தொண்டு செய்ய ஒரே வழி” என்று கூரை மேல் நின்று கூவுகிறார்கள்.

இன்றைய இந்திய அரசமைப்பில் உள்ளபடி :

1.     அரசு தருகிற கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோ ருக்கு இடஒதுக்கீடு தருகிறார்கள்.

2.     அரசு தருகிற வேலையில் மேலே கண்ட மூன்று வகுப்பினருக்கம் இடஒதுக்கிடு தருகிறார்கள்.

3.     நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ தீண்டப் படாத மக்களுக்கும் பழங்குடிகளுக்கும் வாக்குப் போடுகிற கடமையை உணராத பழமைவாதிகள் இருப்பதால்-தேர்தலில் போட்டியிடுவதற்காக இவ்இரண்டு வகுப்பு மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் இடஒதுக்கீடு செய்து தருகிறார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் இந்த மூன்று கூறுகள் மட்டுமே வெகுமக்களுக்குப் பயன் தருபவை.

தமிழ்நாட்டில்தான், உயர்தொழில்கல்வி, ஏறக் குறைய முற்றிலுமாகத் தனியாரிடம் விலைக்கு வாங்க வேண்டிய பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இந்திய அரசே இதற்கு மூலகாரணம். தமிழ்நாட்டில் 1967 வரை ஆட்சியிலிருந்த காங்கிரசுக் கட்சி; 1967க்குப் பிறகு மாறி மாறி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையில், மற்ற மாநிலங் களைக் காட்டிலும் திறமையாகவும் உண்மையாகவும் செயல் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் 1 முதல் 10வது வகுப்பு வரையிலும், மற்றும் 12 வது வகுப்புவரையிலும் தமிழ் வழியில்தான் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்கிற கொள்கையை எந்தக்கட்சி அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை; நடைமுறைப்படுத்த வில்லை.

இது தமிழ்மொழிக் காப்புக்கும், தமிழரின் உண்மையான அறிவு முன்னேற்துக்கும் வேண்டப் பட்ட உயிரனைய உரிமை ஆகும். இந்த இழிநிலையைத் தமிழக அரச மட்டுமே காப்பாற்றுகிறது.

இன்று மாண்புமிகு செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் தமிழ்வழியில் எல்லாக் கல்வியையும் அளிக்க ஏற்ற கொள்கையை வகுத்து, தமிழ்வழிக் கல்வியை வரும் 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம்.

இது இன்றியமையாததான உடனடித் தேவை யாகும்.