ஆவணங்களின் ஆதாரங்களின்படி, பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1871ஆம் ஆண்டு நடந்தது. பொதுச் சாலைகள், இருப்புப்பாதைகள் அமைக்கவும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தொடங்கவும், மக்களுக்குப் பிற வசதிகளைச் செய்து தரவும் இக்கணக்கெடுப்பின் தகவல்கள் உதவின.

உள்சாதி வாரியாக, ஆண், பெண் அனைவரையும் கணக்கெடுக்கும் விரிவான பணி 1881ஆம் ஆண்டு நடந்தது. சாலைகளும், போக்குவரத்து வாகன வசதிகளும் குறைவாக இருந்த போதிலும் பணியாற்றப் போதிய ஆட்கள் இல்லாநிலையிலும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செம்மையாக நடந்தது. இவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட உள்சாதி வாரிப் பட்டியலை நான் முழுமையாகப் படித்துள்ளேன். பத்துப் பேர்களைக் கொண்ட உள்சாதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகள் அனைத்தும் தேசிய நூலகங்களிலும் மண்டல மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்களின் அலுவலகங்களிலும் உள்ளன.

1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில்,  உள்சாதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்சாதியின் எழுத்தறிவு விழுக்காடும் இதில் இருக்கிறது. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் காலாண்டுப் பட்டியலில் ஒருவரின் பிறந்த நாள், கல்வித்தகுதி, பணியில் சேர்ந்த நாள், ஓய்வு பெறும் நாள், ஊதியவிகிதம், மற்றும் பிராமணன், அய்யர், அய்யங்கார், முதலியார், வன்னியர், ரெட்டியார், நாயுடு, இலப்பை, மரக்காயர், பறையர், மீனவர் முதலான உள்சாதிப்பெயர் விவரங்களும் இடம் பெற்றிருந்தன.

மாகாணங்களில் மற்றும் மய்ய அரசில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. இதில் மேற்குறித்துள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். 1950 வரையில் வெளியிடப்பட்ட இப்பட்டியலைப் பார்த்தால், பார்ப்பனர், தெலுங்கு நாயுடு, உருது பேசும் முசுலீம்கள், திருநெல்வேலி இந்து வேளாளர்கள்/ மேல்சாதிக் கிறித்துவர்கள் ஆகியோர் மட்டுமே சென்னை மாகாணத்தில் அனைத்துத் துறைகளிலும் உயர்நிலைப் பணிகளில் இருந்துள்ளனர் என்பதைக் காண முடியும். ஏவல் பணிகளில் மிகக் குறைந்த அளவே படித்த கீழ்ச்சாதிச் சூத்திரர்கள் இருந்தனர்.

1931 வரையில், எல்லா மாகாணங்களிலும் பெரும்பாலான கீழ்ச்சாதி மக்களின் எழுத்தறிவு 7%க்கும் கீழ் இருந்தது. 1947இல் இந்தியாவில் 16 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். அதே சமயம் அய்ரோப்பியர்கள் 60% முதல் 75% வரை எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். அதனால் 1950 வரையில் இந்தியர்களில் எல்லாப் பிரிவினர்களிடமும் சாதிகளிடமும் சனநாயகச் சிந்தனை வளராமல் இருந்தது.

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால், 1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கு முழுமையாக எடுக்கப்படவில்லை. 1951இல் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பார்ப்பனர்களாகவும் மேல் சாதியினராகவும் இருந்தனர். அதனால் அவர்கள் உள்நோக்கத்துடன் சாதி வாரிக் கணக்கெடுப்பைக் கைவிட்டனர். மய்ய அரசும் மாகாண அரசுகளும் வெளியிட்டு வந்த அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் காலாண்டுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த உள்சாதி என்ற பகுதியை நீக்கினர். கெட்ட எண்ணத்துடனேயே இவ்வாறு செய்தனர். எல்லாத்துறைகளிலும் உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்களும் மேல் சாதிக்காரர் களுமே இருக்கின்றனர் என்கிற உண்மையை மறைப்பதற்காகவே இவ்வாறு செய்தனர். இதனால் இப்பட்டியலில் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் என்று மட்டுமே குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அவர்களின் உள்சாதியின் பெயர் குறிக்கப்பட்டிருக்காது.

உயர் அதிகாரவர்க்கத்தினரும் ஆளும் வர்க்கத்தினரும் சான்றிதழ்களிலும், பதிவேடுகளிலும், அரசிதழிலும், உள்சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவதனால் சாதி உணர்வும், சாதிய மனப்போக்கும் வளரும் என்று கூறினார்கள். இது ஒரு பொய்யான வாதம். சாதியும், சாதியமும் ஒரே உள்சாதிக்குள் அல்லது ஒரே சாதிக்குள் திருமணம் செய்வது என்பதால்தான் நீடித்திருக்கிறதே தவிர, பிறப்புச் சான்றிதழ்களிலோ, பள்ளி - கல்லூரி விண்ணப்பங்களிலோ, வேலைக்கான விண்ணப்பங்களிலோ உள்சாதிப் பெயரைக் குறிப்பதால் அல்ல. உள்சாதிப் பெயரை எழுதுவதால்தான் சாதி நீடித்திருக்கிறது என்பது பொய்யான வாதம். உயர்கல்வியிலும் நல்ல அரசு வேலைகளிலும் உரிய பங்கு மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குத் தொடர்ந்து அந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் செய்வதற்காகவே மேல்சாதியினர் இவ்வாறு கூறுகின்றனர்.

1928 முதல் பட்டியல் குலத்தினரும், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும் சென்னை மாகாண அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு பெற்று வந்தனர். இது, 1954 முதல் பட்டியல் குலத்தினருக்கு 16%; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25% எனத் தரப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதைப் பார்ப்பனர்களும் நாயர்களும் எதிர்த்தனர். வடஇந்திய மாநிலங்களில் பட்டியல் குலத்தினர் 1950ஆம் ஆண்டு முதற்கொண்டு தான் மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால் அவர்கள் இந்திய அளவில் மய்ய அரசு வேலைகளில் 11-8-1943 முதல் இடஒதுக்கீட்டை  அனுபவித்து வந்தனர்.

பீகார், உத்திரப்பிரதேசம், மற்றும் பிற இந்திய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1978இல் இடஒதுக்கீடு பெறுவதற்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பெருந்துணையாக விளங்கியது. மய்ய அரசு வேலைகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1978இல் இந்திய அரசிடம் மா.பெ.பொ.க. கோரிக்கை ஆவணம் அளித்தது. இக்கோரிக்கையை ஏற்குமாறு மய்ய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், 1978 மே முதல் 1982 மே வரையிலான காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மா.பெ.பொ.க. மேற்கொண்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 52% விகிதாசார இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரியது. இவற்றின் விளைவாக 1978 ஆம் ஆண்டு மண்டல் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1982 மே மாதம் வெளியிடப்பட்டது.

மண்டல் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை மய்ய அரசு 1990 வரை இழுத்தடித்தது. பிரதமர் வி.பி.சிங் தான் துணிவுடன் 1990ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மய்ய அரசு வேலைகளில் மட்டும் 27% இடஒதுக்கீடு அளித்தார். இது 1994இல் நடப்புக்கு வந்தது. அரசு வேலைகளில் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் இருந்து வந்த இடஒதுக்கீடு 2002ஆம் ஆண்டு மீண்டும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. மய்ய, மாநில அரசுகளில் எல்லா மட்டங்களிலும் வேலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; பட்டியல் குலத்தவர்க்கு 15%; பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பல குறைபாடுகள் உள்ளன.

2006 வரை எத்தகைய தடையுமின்றி உயர்கல்வியில்  உள்ள இடங்களில் 75 விழுக்காட்டை பார்ப்பனர்களும், பிற மேல் சாதிக்காரர்களும் கைப்பற்றி வந்தனர். அதனால் தான் நடுவண் அரசின் சட்ட அமைச்சர், உயர்நீதித்துறை, மேல் சாதியாரின் கையில் உள்ள செய்தி ஏடுகள், தேசிய அறிவுசார் ஆணையத்தினர் ஆகியோர் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட, பட்டியல்  வகுப்பினரின் உள்சாதிகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யக் கூடாது என்று கடுமையாக எதிர்க்கின்றனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி அரசுப் பணத்தைச் செலவிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இப்பணம் மக்களின் வரிப்  பணமாகும். ஆகவே, இதில் இவர்கள் உள்சாதி வாரியாகப் பெற்றுள்ள எழுத்தறிவு, வீடு, நலவாழ்வு முதலான துறைகளில் பெற்றுள்ள வசதிகள் கணக்கெடுக்கப்பட வேண்டும். முறையாக இத்தகைய விவரங்களை 2011 மக்கள் கணக்கெடுப்பில் திரட்டினால் தவிர, இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் வெகுமக்களாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு எல்லா நிலைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இத்தகைய புள்ளிவிவரங்கள் இல்லாமல், வெகுமக்களை மேம்படுத்துவதற்கெனத் தீட்டப்படும் எந்த வொரு திட்டமும் பயனற்றதாகவே இருக்கும்.

எனவே, நடுவண் அரசை - குறிப்பாக பிரதமர், சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரை உள்சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கு எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இது, உண்மையான சனநாயகக் குடியரசு செய்ய வேண்டிய முதன்மையான கடமையாகும்.

இந்தியா குடியரசு நாடு என்று ஆன பிறகு இப்படிப்பட்ட ஒரு கணக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் வாயிலாக  ஒவ்வொரு உள்சாதியும் பெற்றுள்ள ஒவ்வொரு துறை வளர்ச்சி பற்றியும் இந்திய அரசு தெரிந்து கொண்டு, சமநிலையில் வளர்ச்சி பெற்றுள்ள பல உள்சாதிகளை, ஒரு தொகுப்பாக அல்லது ஒரு வகுப்பாகக் கருதி அந்தந்த வகுப்புக்கு அவரவர் எண்ணிக்கை விகிதாச்சாரம் இட ஒதுக்கீடு தருவதை 1956இலேயே இந்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். சிறுபான்மை மதத்தினருக்கும் அவ்வாறு செய்யப்பட்டிருக்க வேண்டும். தீண்டப்படாத உள் சாதிக்காரர்கள் அனைவரும், ஒரு வகுப்பாகவும் அல்லது தொகுப்பாகவும் கருதப்பட்டு, அவர்களுக்கு மக்கள் தொகை விகிதாசாரப்படி, கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை, இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னாலேயே மேதை அம்பேத்கர் நிருவாக ஆணை மூலம் பெற்றுத் தந்தார். மேலும் விதி 16 (4)இல் பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடி மக்களின் முன்னேற்றம் கருதி இடஒதுக்கீட்டுக்கான எந்த வகை ஏற்பாட்டையும் (யலே யீசடிஎளைiடிn) செய்யலாம் என்று தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 1970 முதல் பட்டியல் வகுப்பு மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அவரவரின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு தர முடிகிறது. இது நியாயப்படியும் சட்டப்படியும் மிகவும் சரியானது.

இதே நடைமுறையைத்தான் இவர்களைப் போன்ற மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். குறைந்த அளவு, 1956இலேயே இப்படிப்பட்ட தன்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தால், எவ்வளவு நாளைக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது என்கிற கேள்விக்கு இன்று இடமிருந்திருக்காது.

எனவே, ஏதாவது ஒரு கட்டத்தில் சரியான புள்ளி விவரங்களைத் திரட்டி, விகிதாசார இடஒதுக்கீடு கொடுத்தாலன்றி, சாதி அடிப்படையில் அந்தந்த வகுப்புக்கு விகிதாசார இடஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு காலத்திலும் கைவிடப்பட முடியாது. இப்போதேனும் இந்திய அரசினர் இதை உணர வேண்டும். இந்தவொரு கட்டத்திலேனும் சரியான புள்ளி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். தக்க புள்ளி விவர அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விகிதாசார இடஒதுக்கீடு தரப்படுகின்ற வகையில் தெளிவான விளக்கங்களுடன் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4), 16 (4-க்ஷ), 29(2), 338(10) முதலானவற்றை உடனடியாகத் திருத்தியமைக்க இந்திய நாடாளுமன்றம் முன் வர வேண்டும்.

இதற்கான முயற்சிகளில் அனைத்திந்தியத் தேர்தல் கட்சிகளும், மாநிலங்களில் உள்ள தேர்தல் கட்சிகளும் தெளிவான முடிவுடன், உடனடியாக ஈடுபட வேண்டும் என வேண்டுகின்றோம். இப்படிப்பட்ட விகிதாசார ஒதுக்கீட்டை மண்டல் பரிந்துரையின் அடிப்படையில், எல்லாத் துறைகளிலும் அமல்படுத்த ஏற்ற நடைமுறை வழிகளைச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் செய்த பிறகு தான், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற நிலை தோன்றக் கூடும். ஏனெனில் இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள எல்லா வகுப்பு மக்களும் ஒவ்வொரு துறையிலும் ஏறக்குறைய சமமான வளர்ச்சியை அப்போது அடைந்திருப்பார்கள். மக்கள் நாயகம் என்பதன் மாண்பை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். இதுவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நீக்கப்படுவதற்கான சரியான காலக் கட்டமாகும்.

வே. ஆனைமுத்து