இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பதில் வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்டமக்களுக்கு இடஒதுக்கீடு என்ற கொள்கை உருவாவதற்கு முன்னால் உயர்நிலைப் பணிகளில் உயர்சாதிக் கும்பலினர் மட்டுமே முழுமையாக ஆக்கிரமித் இருந்தனர். இடஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு உயர்நிலைப் பணிகளில் ஒடுக்கப்பட்டோர் வாய்ப்புப் பெற்ற  பிறகு, அவர்கள் உயர்சாதிச் கும்பலினரைவிடப் பன்மடங்கு திறமை சாலிகள் என்று மெய்ப்பித்தனர். இதைக் கண்டு அரண்டு போன உயர்சாதிக் கும்பலினர் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைக்கு வரும்பொழுது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாள ஆரம்பித்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைப் பணிகளில் நுழைந்த உடன் உயர்சாதிக் கும்பலினரைவிடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்தானது இது வரைக்கும் திறமையற்றவர்கள் தான் உயர்நிலைப் பணிகளில் இருந்திருக்கிறார்கள் என்று தெளிவாகிறது. ஆகவே உயர்நிலைகளில் உயர்சாதிக் கும்பலின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்றும் உயர்சாதிக் கும்பலினர் கீழ்நிலைப் பணிகளில் ஈடுபடாமல் தப்பித்து விடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்வதே சரியான நிர்வாகிகளின் கடமையாக இருக்க முடியும். ஆனால் நம் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் என்ன செய்தனவென்று தெரியுமா?

மண்டல்குழு வழக்கிலும் 1963இலும், பிறகு, உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு 50%க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இது என்ன நியாயம்? உயர்நிலைகளில் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினர் ஆக்கிரமித்து உள்ளனர். மனச்சாட்சி உள்ள யாருமே நியாயமாக என்ன முடிவு செய்ய வேண்டும்? ஏற்கனவே உயர்நிலைகளில் உள்ள திறமையற்ற உயர்சாதி கும்பலினரை அப்பணிகளில் இருந்து விரட்டி, திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்களை  அங்கே பணியமர்த்துவது தானே திறமைக்கு மதிப்பளிக்கும் சரியான முதலாக இருக்க முடியும்? அப்படியென்றால் இடஒதுக்கீடு என்பது 100% இருந்தால் கூட போதாது; 100%க்கும் அதிகமாக இருந்தால் தான் திறமையான நிர்வாகத்திற்கு வழி வகுக்கும் என்றல்லவோ தீர்ப்பு அளித்திருக்க வேண்டும்?

ஆனால் இடஒதுக்கீடு 50%க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று கூறிய உச்சநீதிமன்றம், ஏற்கனவே 1980 முதல் 69% இடஒதுக்கீடு இருந்த தமிழ்நாட்டிலும் அதைக் குறைக்கும்படி ஆணையிட்டது. கூடவே மக்கள் விழிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக, வெளியே 69% இருப்பதாக அறிவித்து விட்டு உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் விதமாக 19% அதிகமான இடங்களை உருவாக்கி விட்டு, அதை அப்படியே உயர்சாதிக் கும்பலுக்கு அளிப்பதன் மூலம், திறமையற்று உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலைகளில், நிலைநிறுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதை உணராமல் தடுக்கவும் அறிவுரை கூறியது. 1994ஆம் ஆண்டு கூறப்பட்ட இவ்வறிவுரையை யாராவது மறந்து போயிருப்பார்களோ என்ற அச்சத்தில் 3.5.2010 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இது மட்டுமா? திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலையில் வைத்துக் கொள்வதற்காக இன்னும் பல சூழ்ச்சிகளை இந்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் உயர்சாதிக் கும்பலினரைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறிய ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், தங்களைப் பொதுப் போட்டியில் வென்றதாகக் கருதாமல், இட ஒதுக்கீட்டின் மூலம் வென்றதாக ஒப்புக் கொண்டால் அவர்கள் விரும்பிய மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று 7.5.2010 அன்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது பொதுப் போட்டியில் வென்ற ஒடுக்கப்பட்ட மக்கள், ஒதுக்கீட பட்டியலில் அதிகமாகாதபடி பார்த்துச் கொண்டால், திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர் நிலைகளில் நிலைநிறுத்துவது எளிதாக இருக்கும். அதற்கான சலுகையாக அவர்கள் விரும்பும் மாநிலத்தில் பணிபுரிய வாய்ப்புக் கொடுப்பதாக ஆசை காட்டுகின்றனர்.

உச்சநீதிமன்றம் கூறியுள்ள இந்த ஏற்பாடு திறமைசாலிகளை மேல்நிலைக்கு வரத்தடுக்கும் ஒரு கொடூரமான ஆயுதம். திறமை இல்லாவிட்டாலும் மேல்நிலையிலேயே இருப்போம் என்று அடம் பிடிக்கும் உயர்சாதிக் கும்பலினரின் கொடூரமான சதிவேலை. நாட்டுப்பற்றும் நல்ல நிர்வாகத்திறனும் இருப்பவர்கள் திறமைசாலிகள் உயர்நிலையில் இருக்க வேண்டும் என்பதிலும், திறமை குறைந்தவர்கள் கீழ் நிலையில் இருக்க வேண்டும் என்பதிலும், அவர்கள் உயர்நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பொதுப்போட்டியில் வென்றவர்களை ஒதுக்கீடுப்பட்டியலில் தள்ளிவிட்டு, அப்படிக் காலியாகும் இடத்தில் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை வைத்து நிரப்ப முயல்வதை எப்படி விவரிப்பது?

உலகம் முழுவதிலும் திறமையானவர்களை உயர்நிலையில் வைப்பதை நல்ல நிர்வாகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலைகளிலேயே நிலை நிறுத்தப்பாடுபடுவது தான் நல்ல நிர்வாகம் என்று இந்திய அரசு கருதுகிறது. அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவர்களைத் தான் முக்கியமான இடங்களில் அமர்த்துகிறது.

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு தான்!