அரசின் கருவூலத்தில் இருக்க வேண்டிய இன்றியமையாப் பொருள் தங்கம். அந்நியச் செலாவணியாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் பயன்படும் தங்கத்தின் கையிருப்பே, ஒருநாட்டின் பொருளாதார நிலையை உலகுக்கு உணர்த்தும் கண்ணாடி ஆகும். தங்கம் என்பது இந்த அளவில் தான் அயல்நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஞானபூமியான(!) நம் பாரதத்திருநாட்டில், தங்ககிரீடம், தங்கச்செருப்பு, தங்கப்பூணுhல், தங்கப்பல்லக்கு, தங்கக்கவசம், தங்கக் கூரை என கடவுளர்களின் அலங்காரப் பொருளாக தங்கம் முடக்கப்படுகிறது. விரல், கை, கழுத்து, காது, மூக்கு, நெற்றி, இடை என நம்குலப்பெண்களின் அங்கங்கள் முழுவதும் அணியச்செய்து, ‘நகைமாட்டும் ஸ்டாண்டுகளாக’ ஆசைகாட்டி பெண்ணடிமைச் சேற்றில் அவர்களைப் புதைத்து வைக்கவும் தங்கம் இங்கே ஒரு கருவியாகப்பயன்படுகிறது. உரலுடன் இருக்கும் கலவடையில், தங்க முலாம் பூசித்தந்தால் கூட, அதனையும் பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் மாட்டிக்கொண்டு திரிய நம் நாட்டுப்பெண்கள் தயங்கமாட்டார்கள் என்று பெண்களின் நகை மோகத்தினைத் தந்தை பெரியார் அவர்கள் படம் பிடித்துக்காட்டினார்.

இத்தகைய தங்கத்தினை விற்பனை செய்யும் வணிகர்கள். தம் வணிகத்தைக் கொழுக்கச் செய்ய ‘அட்சயதிருதியை’ என்ற கட்டுக்கதையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மே 16ஆம் தேதியை இதற்கான நாளாக முடிவு செய்து அந்த நாளில் சின்னஞ்சிறு தங்கக்காசை வாங்கினால் கூட, அது ஆண்டு முழுவதும் ‘மனமளவென’ வளர்ந்து ‘அய்ஸ்வர்யம்’ பெருகும் என்ற புரளியைத் திட்டமிட்டு இவர்கள் கிளப்பி விட்டார்கள். பச்சை வண்ணப்புடவையை சகோதரிகளுக்கு வாங்கித்தந்தால், கேடு நீங்கும், வளம் பெருகும் என்று துணிக்கடை வணிகர்கள் சிறிது காலத்திற் முன் பிரச்சாரம் செய்தார்கள்; ‘பாசமலர்’ சகோதரர்கள் பறந்து போய் துணிக்கடையில் முற்றுகையிட, பச்சைப்புடவைகள் எல்லாம் ஒரே நாளில் பரபரப்புடன் விற்றுத்தீர்த்தன. இதே பாணியில் அணிவணிகர்கள் செய்யும் “பக்திமுலாம்” பூசப்பட்ட சூழ்ச்சி வணிகத்தின் பெயர் தான் அட்சய திருதியை!

‘அட்சய’ என்றால் அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் என்பதை இவர்கள் பஞ்சத்தில் கிடக்கும் நம் மக்களிடம் எடுத்துரைத்து, அவர்கள் நாவில் எச்சில் ஊறச் செய்கிறார்கள். இந்த நாளில் தான் முதல்யுகமான கிருதயுதம், தோன்றியது, அந்தயுகத்திற்குரிய ஆண்டுகள் 17,28,000. இந்தக் காலத்தில் ஒருவன் ஒருஇலட்சம் ஆண்டுகள் உயிருடன் வாழ்வான், அந்த மனிதர்கள், அய்ந்து பனைமர உயரம் இருப்பார்கள் என்று அபிதான சிந்தாமணி என்னும் நூல் அடித்துச் சொல்கிறது. ‘கேழ்வரகில் நெய்வடிகிறது. பிடித்துச் செல்ல குவளை கொண்டு வா’ எனக் கூவி அழைப்பதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

குசேலன் தனது 27 பிள்ளைகளையும் கும்பலாகக் கூட்டிச் சென்று தன் நண்பன் கண்ணனிடம் பிச்சைக்குச் சென்றானாம்;  தோழனுக்காக எடுத்துச் சென்ற எளிய உணவான ‘அவலை’ வாயில்போட்டுக் கொண்டு, ‘அட்சய’ எனச்சொல்லி குசேலனை கண்ணன் வாழ்த்தினானாம். உடனே குசேலன் குபேரனாகி, பெரும் செல்வத்திற்கு அதிபதியாக உயர்ந்து விட்டானாம். உண்ண உணவுக்கும், உடுக்க உடைக்கும், வசிக்க வீட்டிற்கும், வழியற்று வறுமைக் கோட்டிற்குக்கீழே நொந்து மடியும் பட்டினிப் பட்டாளங்

களிடம் ‘இப்படிக்கதை’ சொல்லி ஏய்த்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? தலையை அடகு வைத்தாவது, மீட்டர் வட்டிக்கு மார்வாடியிடம் கடன் வாங்கிக் கொண்டு, அட்சயதிருதியை அன்று குரேன் ஆகும் ஆசையில் விடியற்காலையிலேயே நகைக்கடைகள் முன் அவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்!மகாபாரதக்கதையில், அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி(?) என்று ஆராதிக்கப்படும் பாஞ்சாலி, கௌரவர்களின் அரண்மனையில், சூதுப்பொருளாக நிறுத்தப்பட்டு ஆடையை அவிழ்த்து, அவமானப்படுத்தப்பட்டபோது, பகவான் கண்ணனை அவள் நினைத்துக் கதறினாளாம், ஆயர்பாடியில் சேலைதிருடி அங்கிருந்த பெண்களிடம் ஆட்டம் போட்ட அதே கண்ணன், துரோபதையின் துயரம் போக்க நேரில் வந்து ஆடை தந்து மானம்காத்தானாம்! இந்தக் கூத்து அரங்கேறியதும் அட்சய திருதியை அன்று தானாம்! தமிழ் ஈழமண்ணில் நம் குல சகோதரிகள் நிர்வாணமாக்கப்பட்டுக் கசக்கி எறியப்பட்டார்களே, நம் தாய்த்திருநாட்டில் நாள்தோறும் ‘பாஞ்சாலிகள்’ பங்கத்திற்கு ஆளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்களே அந்ததுஷ்டர்களை சம்ஹாரம் செய்ய பரந்தாமன் ஏன் வரவில்லை? என்ற எண்ணம் சிறு துளியும் இல்லாமல், அட்சய நாளில், அலை அலையாய் அரிவையர் கூட்டம் நகைக்கடைகளில் குவிந்து கிடக்கின்றது.

ஆண்டுதோறும் ஆட்டுமந்தைகளைப்போல ‘பாமரர்களின் அணிவகுப்பு’ இந்நாளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. “ஒரு சேலை வாங்கினாலும்கூடச் சாயம் நிற்குமா, அதன் விலை சரியா? இதற்குமுன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைகாரர் ஒழுங்கானவர் தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லரைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். அதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதான் - பகுத்றிவின் அவசியத்தை, வலியுறுத்துவது தான் எனது முதலாவது கடமை என்ற தந்தை பெரியாரின் பகுத்தறிவு முழக்கம். (குடிஅரசு 1.5.1948) நம் மக்களின் செவிகளில் ஒலிக்க வேண்டும். முந்நூறு %பாய் சேலை வாங்கும்போது புரட்டிப்புரட்டிப் பார்த்து ஆராய்ச்சி செய்யும் நம்மக்கள், 14 ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு சவரன் பவுன் வாங்கும்போது அட்சய திருதியையில் ஏமாந்து போகிறார்களே. அந்த ஏமாளித் தமிழர்களின் காதுகளில் கட்டாயம் அறிவு முழக்கம் கேட்கச் செய்யவேண்டும்!