நீலமலை முகட்டில்
நீந்தும் முகிலின் கூட்டம்
வளைந்து நெளிந்து ஓடும்
வளம் கொழிக்கும் ஆறு

வளர்ந்து அடர்ந்த மரங்கள்
வானம் தொட்டுப் பார்க்கும்
மரத்தைச் சுற்றி கொடிகள்
மண்டி பின்னிக் கிடக்கும்

சல சலத்து ஓடும்
சரிவின் கீழே ஓடை
பளிங்கு நீரின் அடியில்
பரவிக் கிடக்கும் கற்கள்
தாழ்ந்து அகன்ற பூமி
தரையில் பச்சைப் புற்கள்

ஆனைக் கூட்டம் ஆங்கே
அரச நடை நடக்கும்
தனித்துப் பிரிந்த யானை
தனிப்பனையை முறிக்கும்
எருமைக் கன்று கூட்டம்
எதிரில் வழி மறிக்கும்
மான்கள் போல அழகாய்
மனதைக் கொள்ளை கொள்ளும்

ஆனை மலை அழகு
அழகைக் கொஞ்சம் பருகு!