பீகார் மாநிலம் ஆரா நகரில் மேல்சாதித் திமிரும் இரத்தவெறியும் கொண்ட ரண்வீர்சேனாவின் முன்னாள் தலைவர் பிரம்மேசுவர்சிங் 1.6.2012 அன்று காலை நடைப்பயிற்சியின் போது அடையாளம் தெரியாத ஆள்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆதிக்க மேல்சாதி யினராகவும் பெருநிலப் பண்ணையார்களாகவும் அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ள பூமிகார் சாதியின் முடிசூடா மன்னராக - ‘முக்கியாஜி’ யாகத் திகழ்ந்தவர் பிரம்மேசுவர்சிங்.

பிரம்மேசுவரின் இறுதிச் சடங்கு சூன் 2 அன்று நடந்தது. அந்நாளில், 5000க்கும் மேற்பட்ட வெறி பிடித்த பூமிகார் கும்பலினர் மாவட்டத் தலைநகரான ஆராவில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஊர்திகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். காவல்துறையினரையும், ஊடகவியலாளர்களையும், பொதுமக்களையும் தாக்கினர். பீகார் மாநிலத்தின் தலைமைக் காவல்துறை அதிகாரியைக்கூட பிரம்மேசுவரின் உடல் அருகில் செல்ல விடாமல் தடுத்தனர். பாரதிய சனதாக் கட்சியின் கூட்டணியுடன் ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் அரசு இந்த அட்டூழியங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 337 பேர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் பிரம்மேசுவர் மீது குற்றம் சாற்றப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முசுலீம் குடியிருப்புகள் மீது பிரம்மேசுவர் தலைமை யின்கீழ் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றுள் பதானி தோலா (தோலா என்றால் சேரி) இலட்சு மணபூர் பதே, சங்கர்பைகா, மியாப்பூர் படுகொலைகள் முதன்மையானவை.

நெடுங்காலமாக இந்தியாவில் நிலவுடைமை சார்ந்த மேல்சாதிகளின் ஆதிக்கமும், ஒடுக்குமுறை களும், சுரண்டலும் பீகார் மாநிலத்தில் அதிகமாக இருந்து வருகின்றன. இதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டு. 1. வற்றாத கங்கை ஆற்றுநீர் பெறும் வளமான நிலங்கள், 2. ஆயிரமாண்டுகளுக்கு மேலாக, பெரும் பகுதி நிலங்கள் பூமிகார், பார்ப்பனர், இரசபுத்திரர், காயஸ்தர் ஆகிய நான்கு மேல்சாதியினரிடமே இருந்து வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பீகார் மாநிலத்தில் சமீன்தாரி முறையே பெரும்பகுதியில் இருந்தது. தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறை - அதாவது விவசாயிகள் அரசுக்கு நேரடியாக நிலவரி செலுத்தும் முறையே அதிக அளவில் இருந்தது.

சமீன்தாரி முறை இருந்த இடங்களிலெல்லாம், நிலத்தில் உழைக்கும் உழவர்கள் மீதான கொடுமைகள் மிகுதியாக இருந்தன. பீகாரில் சமீன்தார்களாகவும், பெரிய நிலப்பண்ணையார்களாகவும் இருந்த பூமிகார், பார்ப்பனர், இரசபுத்திரர், காயஸ்தர் ஆகியோர் தங்கள் நிலங்களைத் தங்கள் சாதிகளைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த யாதவர், குர்மி, கொய்ரி ஆகியோர்க்கோ குத்தகைக்கு விட்டனர். குத்தகையாளர்கள் நான்கைந்து அடுக்குகள் வரையில் இருந்தனர். அதனால் சுரண்டலும் ஒடுக்குமுறையும் கடுமையாக இருந்தன. நிலத்தில் பாடுபட்டு உழைப்பவர் கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் உழைப்புச் சாதியினராகவும், ஏழை முசுலீம் களாகவும் இருந்தனர். இவர்களே எல்லா வகையான துன்பங்களுக்கும் ஆளாயினர்.

1950ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. பீகாரில் 1955ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. பல ஓட்டைகள் கொண்ட இச்சட்டம் பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பிறகு 1961ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மேல்சாதி நிலப்பண்ணையார்கள் நில உச்சவரம்புச் சட்டத்திற்குள் சிக்காத வகையில் தங்கள் நிலங்களைப் பல்வேறு வழிகளில் பாதுகாத்துக் கொண்டனர். இந்தி யாவிலேயே மிக மோசமான முறையில் நில உச்ச வரம்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது பீகாரில் தான். அந்த அளவுக்கு நிலவுடைமை ஆதிக்கம் சமூகத்திலும், அரசியலிலும், அரசு நிருவாகத்திலும் கோலோச்சுகிறது.

சமீன்தாரி முறை ஒழிப்பும், உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையும் பிற்படுத்தப்பட்ட யாதவர், குர்மி, கொய்ரி ஆகிய சாதிகளில் ஒரு பகுதியினர் பெருநிலவுடைமையாளர்களாக உயர்வதற்கு வழிய மைத்தது. இவர்களும் மேல்சாதியினரைப் போலவே தாழ்த்தப்பட்ட நிலமற்ற உழவர்களை ஒடுக்கினர்.

சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகளானபின்னும் தங்கள் கொடிய வாழ்வில் விடியல் ஏற்படவில்லையே என்று தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்வு பெற்று, தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினர். 1970களுக்குப்பின் பண்ணையார் களுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்-லெனினிஸ்ட்)யினரும் இணைந்தனர். இதே போன்று மாவோயிஸ்டுகள் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகவும் போராடினர்.

அதனால் மேல்சாதிப் பண்ணையார்கள் தங்களது ஆதிக்கத்திற்கு அறைகூவலாக எழுந்துள்ள எதிர்ப்பை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்தனர். 1971இல் பூர்ணியா மாவட்டத்தில் ருபஸ்பூரில் 16 சாந்தால் பழங்குடியினரைப் படுகொலை செய்தனர். அதன்பின் தலித்துகள் மீதும் பழங்குடியினர் மீதும் சிறியதும் பெரியதுமான தாக்குதல்களை மேல்சாதிப் பண்ணையார்கள் நடத்தி வந்தனர். வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் மாவோயிஸ்டுகளும் பண்ணையார் களைத் தாக்கினர். பலரைப் படுகொலை செய்தனர்.

எனவே மேல்சாதியினர் குன்வர்சேனா, வைரசேனா, பிரம்மரிஷி சேனா, சவர்ணா விடுதலை முன்னணி, பாண்டவ சேனா முதலான ஆயுதந்தாங்கிய சிறுபடை களை உருவாக்கினர். அதேபோன்று பிற்படுத்தப்பட்ட யாதவர்களும் குர்மிகளும் பூமிசேனா, கிசான் கிரந்தி சேனா, லோரிக் சேனா என்பவற்றை ஏற்படுத்தினர். இதனால் சாதி அடிப்படையிலான வர்க்க மோதல்கள் வெடித்தன.

1995ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு நடை பெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிய-லெனினிய) விடுதலைக் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் பூமிகார்களும் இரசபுத்திரர்களும் சினங்கொண்டனர். எனவே பிரம்மேசுவர் சிங், பல பெயர்களில் இயங்கி வந்த பூமிகார், இரசபுத்திர சேனைகள் அனைத்தையும் ரண்வீர் சேனா என்ற ஒரே படையாக நிறுவினார். ரண்வீர் என்பவர் 19ஆம் நூற்றாண்டில் பூமிகார்களின் மேல்சாதிப் பெருமையை நிலைநாட்டிட வாளேந்திப் போரிட்டவர்.

பிரம்மேசுவர் சிங் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். பற்றாளர். அதனால் ரண்வீர்சேனாவின் இளைஞர் களுக்கு ஆர்.எஸ்.எஸ்.இல் அளிப்பது போன்ற இந்துத்துவத் தத்துவப் பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் அளித்தார். மாத ஊதியம் பெறும் களப்பணியாளர்கள் செயல்பட்டனர்.

ரண்வீர்சேனா, பிரம்மேசுவர் தலைமையின்கீழ் முதலாவது பெரும் தாக்குதலை 1996 சூலை 11 அன்று போஜ்பூர் மாவட்டம் பதானி தோலாவில் பகல் 2 மணிக்கு நடத்தியது. பதானி தோலா என்பது மேல் சாதியினர் வாழும் பார்கி கரோன் எனும் ஊரின் - 100 மீட்டர் தொலைவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சேரியாகும். இரண்டு மணிநேரம் நீடித்த இத்தாக்குதலில் 12 பெண்கள், 8 குழந்தைகள், ஒரு ஆண் உட்பட மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர். ரண்வீர் சேனாவினர் வாளால் வெட்டியும் துப்பாக்கி யால் சுட்டும் படுகொலை செய்தனர். 18 அகவை யினரான ஒரு பெண்ணை கும்பலாகக் கற்பழித்தனர். 25 அகவை பெண்ணின் ஒரு மார்பகத்தை வாளால் அறுத்தெறிந்தனர். ஒன்பது மாதக் குழந்தையை மேலே தூக்கி எறிந்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டினர். இத்தாக்குதலை முன்னோடியாகக் கொண்டு தான் 2002இல் குசராத்தில் முசுலீம்களை இந்து வெறி யர்கள் தாக்கினர். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு காவல்நிலையமும், இரண்டு காவல் சோதனைச் சாவடிகளும் இருந்தன. இத்தாக்குதல் நடந்து நான்கு மணிநேரம் கழித்து வந்த காவல் துறையினர் இறந்த வர்களின் உடல்களைக் கால்களால் உதைத்தனர். அதிர்ச்சியில் உறைந்து நின்ற தலித் மக்களை இழிவுபடுத்தினர். (ஃபிரண்ட்லைன், சூன் 29, 2012).

பதானி படுகொலை நடந்தபோது, சமூகநீதி முழக் கத்தை முன்வைத்து அரசியலில் முதன்மைபெற்ற லாலுபிரசாத் முதலமைச்சராக இருந்தார். பதினைந் தாண்டுகள் லாலுவும் அவரது மனைவியும் ஆட்சியில் இருந்தார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ உருப்படியாக எந்த நன்மையையும் இவர்கள் செய்யவில்லை.

1977இல் பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற - பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான - லோகியாவாதி யான கர்ப்பூரி தாக்கூர் நில உச்சவரம்புச் சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க முயன்றார். மேல்சாதி ஆட்சி நிருவாகம் அதைத் தடுத்துவிட்டது. 1977இல் மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அவ் அரசு குத்தகைதாரர்களுக்குப் பாதுகாப்பு அளிக் கும்படியான ஒரு சிறந்த சட்டத்தை இயற்றியது. அதைச் செம்மையாகச் செயல்படுத்தியது. ஆனால் பீகாரில் இன்றுவரை முறையான குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் கூட இல்லை.

பதானி தேஸா படுகொலைக்குப்பின், லாலு ஆட்சி, தோவா ரண்வீர் சேனாவைத் தடைசெய்தது. ஆனாலும் 1996 திசம்பரில் ஜகானாபாத் மாவட்டத்தில் இலட்சு மணபூர் பதேவில் ரண்வீர் சேனா 63 தலித்துகளைப் படுகொலை செய்தது. 1996 முதல் 2000ஆம் ஆண்டிற் குள் ரண்வீர் சேனா இதுபோன்ற 20 பெரிய தாக்கு தல்களை நடத்தியது. பசுவின் பாலைக் கறப்பது போல் ஊடகங்களில் படங்கள் வெளிவருவதில் காட்டிய அக் கறையைத், தலித்துகள் படுகொலை செய்யப்படுவ தைத் தடுப்பதில் முதலமைச்சர் லாலு காட்டவில்லை.

ரண்வீர் சேனா தலைவர் பிரம்மேசுவர் பதானி தோலா படுகொலை தொடர்பாக 1998, 1999ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார். ஆனால் சரியான ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார். இறுதியாக 2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பதானி தோலா படு கொலையில் 63 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக் குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த ஆரா மாவட்ட நீதிமன்றம், பதானி தோலாவில் 21 தலித்துகளைப் படுகொலை செய்த குற்றத்திற்காக 2010ஆம் ஆண்டு 3 பேருக்கு மரணதண்டனையும் 18 பேருக்கு வாழ்நாள் தண்ட னையும் வழங்கித் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

பிரம்மேசுவர் சிறையில் அடைக்கப்பட்டபின், ரண்வீர் சேனாவின் தலைவராக வேறொருவரை அவரே நியமித்தார். ரண்வீர் சேனாவின் வலிமை குன்றிய போதிலும் தொடர்ந்து சில தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது. ஆனால் பிரம்மேசுவர் சிறையிலும் சாதி ஆதிக்க ஆணவத்துடனேயே இருந்தார். ஊடக வியலாளர்கள் பலர் அவரைச் சிறையில் சந்தித்தனர். அவர்களிடம் தலித் பெண்களையும் குழந்தைகளையும் தான் கொன்றது சரியே என்று கூறினார். இல்லாவிடில், அக்குழந்தைகள் வளர்ந்தபின் நக்சலைட்டுகளாக மாறி இருப்பார்கள்; அப்பெண்கள் மேலும் வருங்கால நக்சலைட் குழந்தைகளைப் பெற்றிருப்பார்கள் என்று கூறினார்.

பிரம்மேசுவர் 1995-2002 காலத்தில் ரண்வீர் சேனாவின் தலைவராக இருந்தபோது, “மகாபாரதத்தில் பரசுராமன் என்ன செய்தாரோ அதையே நானும் செய்கிறேன். சமூகத்தில் ஓர் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு வன்முறையிலான வழி முறைகள் தேவைப்படுகின்றன. இல்லாவிடில் சமூகத்தில் அநீதி மேலோங்கிவிடும்” என்று கூறுவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். 2004ஆம் ஆண்டு, ஆரா மாவட்டச் சிறையிலிருந்த-ரண்வீர் சேனா ஆதரவா ளர்களான மேல்சாதியினர் 97 சிறையாளிகளுடன், மேல்சாதியினருக்கென்று சிறையில் தனியாகச் சமையல் செய்ய வேண்டும் என்று போராடினார். இந்நிகழ்வுகள் பிரம்மேசுவர் என்கிற ஒரு தனி ஆளின் மனநிலையை மட்டுமல்லாது, பீகாரில் நிலவும் சமூக, அரசியல், நிர்வாகப் போக்குகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

2011ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரம்மேசுவர் பிணையில் விடுதலையானார். அய்க்கிய சனதாதள - பா.ச.க. கூட்டணி ஆட்சி பீகாரில் ஏழு ஆண்டுகளாக உள்ளது. துணை முதலமைச்சர் பதவியில் பா.ச.க. இருக்கிறது. பூமிகார்கள் பா.ச.க. மூலம் நிதிஷ்குமா ருக்கு அழுத்தம் தந்து பிரம்மேசுவரைப் பிணையில் வெளிவருமாறு செய்தனர் என்று கருதப்படுகிறது.

பிணையில் வெளிவந்தபின், பிரம்மேசுவர், பாட் னாவைத் தலைமையிடமாகக் கொண்டு அகில பாரதிய இராஷ்ட்ரிய கிசான் சங்கம் என்பதைத் தொடங் கினார். சோசலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் சங்கம் போன்றில்லாமல், இதுவே உண்மையான தேசிய விவசாயிகள் சங்கம் என்று கூறினார். பிரம்மேசுவருக்கு 60 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் விவசாய சங்கம் தொடங்கியதன் நோக்கம் அரசியலில் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும். சிறையில் இருந்தவாறே 2004ஆம் ஆண்டு ஆரா நாடாளுமன்றத் தொகுதியில் மாவோயிஸ்டு தலைவர் இராம் நரேஷ் சிங்கிற்கு எதிராகப் போட்டியிட்டார். இராம் நரேஷ் வெற்றி பெற்றார். லாலு கட்சி வேட்பாளர் இரண்டாம் இடம் பெற்றார். அடுத்ததாக பிரம்மேசுவர் 1,48,951 வாக்குகள் பெற்றுத் தோற்றார்.

2012 ஏப்பிரல் 16 அன்று பாட்னா உயர்நீதிமன்றம் பதானி தோலா வழக்கில் ஆரா மாவட்ட நீதிமன்றத் தால் தண்டனை வழங்கப்பட்ட 23 பேரையும் போதிய சான்றுகள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது. இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் உண்டாக்கியது.

“காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை எந்த நாளில் பதிவு செய்யப்பட்டது என்பதில் குழப்பம் உள்ளது. ரண்வீர் சேனாவினர் பல சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளபோதிலும், அந்த இடத்திலிருந்து ஒரு இரவைக்குண்டுகூட காவல்துறையால் கண்டெடுக்கப் படவில்லை. மேலும் கொலையாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கிகூட பறிமுதல் செய்யப்படவில்லை” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையினர் திட்டமிட்டு பூமிகார்களுக்கு ஆதரவான முறையில் ஆவணங்களைத் தயாரித்ததற்காகக் கொலையாளிகளை விடுதலை செய்வது என்ன நியாயம்?

ரண்வீர் சேனா நடத்திய படுகொலையை நேரில் பார்த்ததாக ஆறு பேர் நீதிமன்றத்தில் சாட்சியமளித் தனர். இவர்களுள் கிஷன் சவுத்திரி, நயிமுதின் என்ற இருவரின் சாட்சியங்கள் வலுவானவை. கிஷன் சவுத்திரி குடும்பத்தில் இருவரும், நயிமுதின் குடும்பத்தில் ஆறு பேரும் கொல்லப்படுவதை அவர்கள் தொலைவில் உயிருக்கஞ்சி ஒளிந்திருந்து கண்டனர் (தி இந்து, 19.4.2012). ஆனால் உயர்நீதிமன்றம், “படுகொலை நடந்தபோது இருவரும் புதருக்குள் மறைந்து கொண்டு மிக அருகில் இருந்து பார்த்ததாகக் கூறுகிறார்கள்; அவ்வளவு அருகில் இவர்கள் இருந்திருந்தால் ரண்வீர் சேனா ஆட்கள் இவர்களை எளிதில் கண்டுபிடித்து விட்டிருப்பார்கள். ஏனெனில் இப்படுகொலை பட்டப் பகலில் நடந்துள்ளது. எனவே இவர்களின் சாட்சியங் களை ஏற்க முடியாது” என்று கூறியது. சாட்சியங்கள் கூறுவது பொய், கட்டுக்கதை, நம்ப முடியாதது என்றெல்லாம் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பதானி தோலாவில் 21 தலித்துகளும் முசுலீம் களும் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகுகூட ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என் பதுடன், இவர்கள்தான் கொலையாளிகள் என்பது அப்பட்டமாகத் தெரிந்த பின்னும் அவர்கள் நிரபராதி கள் என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழை களும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதாகக் கூறும் அரசு நிருவாகத்தையும், நீதித் துறையும் எப்படி நம்ப முடியும்?

நிதிஷ்குமார் ஆட்சி பா.ச.க.வுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டது என்றே நம்ப வேண்டியுள்ளது. ஏனெனில் 1996 திசம்பரில் இலட்சுமண்பூர் பதேவில் 63 தலித்துகளை ரண்வீர் சேனா படுகொலை செய்தது குறித்து ஆராய 1997 திசம்பரில் லாலு ஆட்சியில் நீதிபதி அமிர்தாசு தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. குறிப்பாக ரண்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயு மாறு அந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நிதிஷ்குமார் தலைமையிலான சனதாதளம் - பா.ச.க. கூட்டணி ஆட்சி 2005 இறுதியில் ஏற்பட்டது. நீதிபதி அமிர்தாசு ஆணையம் அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே 2006ஆம் ஆண்டு நிதிஷ்குமார் ஆட்சி அதைக் கலைத்தது. அதேபோன்று 2006ஆம் ஆண்டு நிதிஷ்குமார் நிலச்சீர்திருத்த ஆணையம் என்பதை அமைத்தார். அதன் அறிக்கை 2008ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அரசிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக் கையில் குத்தகைதாரர்களின் பயிரிடும் உரிமை பாது காக்கப்பட வேண்டும். நில உச்சவரம்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி உபரி நிலத்தை நிலமற்ற உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து நிதிஷ்குமார் அரசு இதுவரை வாய்திறக்கவில்லை.

ஒரு பயங்கரவாதி என்று கூறத்தக்க அளவில் பல ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்கி அவர்களின் உயிர்களைப் பறித்து, உடைமைகளை அழித்து, வாழ்வைச் சிதைத்த பிரம்மேசுவர் சிங், இந்நாட்டின் காவல்துறை, அரசு நிருவாகம், நீதித்துறை ஆகியவற்றின் அரவணைப்பால் தண்டனை பெறாமல் விடுதலை யாகி, நிலவுடைமை ஆதிக்கச் செருக்குடனும் மேல் சாதித் திமிருடனும் வீதிகளில் உலா வந்தார். இக் கொடியவன் இனி உயிருடன் உலவக் கூடாது என்று கருதியவர்களால் கொல்லப்பட்டார்.

இதைப்போலவே 1967 திசம்பரில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில், கூலி உயர்வு கேட்ட, தாழ்த்தப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் 42 பேரை ஒரு குடிசைக்குள் அடைத்து உயிருடன் கொளுத்தப்பட்டனர். இப்படு கொலையில் முதன்மையான குற்றவாளியான - பண்ணையார் கோபாலகிருஷ்ணநாயுடு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். “பெரும் பண்ணை யாரான கோபாலகிருஷ்ணநாயுடு தலித் மக்கள் வாழும் சேரிக்கு நடந்து சென்று அக்குடிசைக்குத் தீ வைத்திருப்பார் என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை” என்று நீதிமன்றம் கூறியது. விடுதலையான கோபாலகிருஷ்ணநாயுடுவும், பிரம்மேசுவரைப் போலவே கொலை செய்யப்பட்டார்.

ஆகவே இந்திய நாட்டின் சனநாயகம், சட்டமன்றங் கள், நாடாளுமன்றம், நிருவாகத்துறை, காவல்துறை, நீதித்துறை முதலானவை மேல்சாதிக்காரர்களாகவும், பெருநிலவுடைமையாளர்களாகவும், பெரு முதலாளிகளாகவும், பெரும் பணக்காரர்களாகவும் உள்ள ஆளும் வர்க்கத்தின் நலன்களைக் காப்பதற்காகவே உள்ளன. எனவே சாதியமைப்பின் முதுகெலும்பை உடைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் மக்களை அணிதிரட்டிப் போராடுவது ஒன்றே கோபாலகிருஷ்ணநாயுடுக்களும், பிரம்மேசுவர் சிங்களும் உருவாகாமல் தடுப்பதற்கான வழிகளாகும்.