கோபால் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னைத் தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பின ராகவும் இருக்கத் தகுதியற்றவன் என்று முடிவெடுப் பார்கள் என்பதை அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். அவனுடைய இருபத்து ஐந்து ஆண்டுகாலப் பணியில் தொழிற்சங்கத்தை வளர்க்க உழைத்தது பற்றியும், அவனால் தொழிற்சங்கம் மிக வலுவாக வளர்ந்ததுத பற்றியும் அச்சுற்று வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிவர். தொழிற்சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் என எந்தப் பதவிக்காகப் போட்டியிட்டாலும் அவன் வெல்வது உறுதி. ஒருவரே ஒரு பதவியில் தொடர்ந்து இருப்ப தைவிட மாறி மாறிப் பொறுப்பை ஏற்றால்தான் வழி காட்டுவோருக்கான வெற்றிடம் ஏற்படாது என்று கூறி, மிகப்பல தோழர்களைத் தொழிற்சங்க நிர்வாகத்தில் பங்குபெற வைத்த பெருமை அவனுக்கு உண்டு. தலைமைப் பதவியில் தொடர வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட பொழுதெல்லாம், தலைமைப் பதவியை ஏற்க ஆட்களே இல்லை என்ற நிலையோ, மிகச் சிக்கலான புரட்சிகரக் காலகட்டம் என்பதால் தொடர்ச்சி விட்டுவிடப்படக்கூடாது என்ற நிலையோ இல்லை என்றும், இந்நிலையில் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் அனைவரும் நிருவாக அனுபவம் பெறவேண்டும் என்றும் கூறி அனைவரும் அனைத்து வாய்ப்பும் பெறப் பாடுபட்ட தன்னைச் செய லாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வது மட்டுமல்லாமல் அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க முடியாதபடி விலக்கம் செய்த சூழலை எண்ணி அதிர்ச்சி அடைந்தான்.

கோபால் வேலை செய்துவந்த மய்ய அரசு அலு வலகத்தில் தொழிலாளர்கள், பொறியாளர்கள், நிர்வாக வேலை செய்பவர்கள் எனப் பலதரப்பட்ட பணியா ளர்கள் பணிபுரிகின்றனர். தொழிற்சங்கம் என வரும் பொழுது அதில் தொழிலாளர்கள் மட்டுமே உறுப்பின ராக முன்வருவார்கள். கோபால் கண்காணிப்பாளராக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் தொழிற் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தது மட்டுமல்லாமல், நிர்வாகப் பணி புரிகிறவர்கள் பலருக்கும் தொழிற்சங்க உணர்வு ஊட்டித் தொழிற்சங்கத்தில் இணைய வைத்திருக்கிறான். பல நேரங்களில் இது தொழிற்சங்க நடவடிக்கைகள் வலுப்பெறுவதற்கும், கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றது. இது கோபாலுக்குத் தொழிலாளர்களின் நடுவில் மிகுந்த மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

முனுசாமியும், பிரணதார்த்தியும் பத்து ஆண்டு களுக்கு முன் கீழ்நிலை எழுத்தர்களாகப் பணியில் சேர்ந்தார்கள். இருவரும் பட்ட வகுப்புப் படித்தவர்கள். இவ்வேலைக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் முனுசாமி சற்று அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால் பணியில் மூத்தவராகவும் (ளுநniடிச) பிரணதார்த்தி பணியில் இளையவராகவும் (துரniடிச) சேர்ந்திருந்தனர். இருந்தாலும் பதவி உயர்வுகள் வரும்பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் காலியாக இருந்ததால் இருவருக்கும் ஒரே நேரத்தில் பதவி உயர்வு கிடைத்து, அங்கே பணியில் தொடர்ந்து கொண்டு இருந்தனர். கடந்த பத்து ஆண்டு களில் இரண்டு பதவி உயர்வுகள் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்கள் இருவரும் வேலையில் சேர்ந்த உடனேயே கோபால் அவர்களிடம், பணியாளர்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், தொழிற்சங்கம் அதற்கு எவ்விதமெல்லாம் உதவும் என்பதைப் பற்றியும் விளக்கி அவர்களைத் தொழிற் சங்கத்தில் இணைத்தான்.

முனுசாமியும், பிரணதார்த்தியும் நண்பர்களாகவே இருந்தனர். முனுசாமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பிரணதார்த்தி பார்ப்பனராகவும் இருந்தாலும் சாதி வேறுபாடு பாராமல் பழகி வந்தனர். அவர்களுள் முனுசாமிக்கு முதலில் திருமணம் நடந்தது. அதற்கு ஓராண்டு கழித்து, பிரணதார்த்திக்குத் திருமணம் நடந்தது. நிரந்தர வேலையும், சீரான வருமானமும் உள்ளவர்கள் இரண்டு குழந்தைகளுக்குமேல் பொது வாகப் பெறுவதில்லை. முனுசாமியும் பிரணதார்த்தியும் அப்படியே செய்தார்கள்.

ஒருநாள் அலுவலக நண்பர்கள் தங்கள் குடும்பத்தி னருடன் மாமல்லபுரத்திற்குச் சிற்றுலா (ஞiஉniஉ) சென் றார்கள். பகற்பொழுதெல்லாம் சிற்பக்கலை அழகை ரசித்துப் பார்த்த அவர்கள் மாலையில் கடற்கரையில் அமர்ந்து கடல் அலைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண் டிருக்கிறார்கள். அப்பொழுது சிலர் கடலில் குளிக்கச் சென்றார்கள். மனம் மகிழ்ந்து குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது பெரிதாக வந்த ஒரு அலை சிலரை கடலுக்குள் வெகுதூரம் கொண்டு போய்விட்டது. அதைக்கண்டு அனைவரும் திடுக்கிட்டனர். சிலர் பக் கத்தில் இருந்த மீனவர் குடியிருப்பிற்குச் சென்று விவரத்தைக் கூறி, கடலுக்குள் சென்றவர்களைக் காப் பாற்றி மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டார்கள். மீனவர் களும் கட்டுமரங்களையும் படகுகளையும் எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றவர்களை மீட்கச் சென் றார்கள். அவர்களால் சிலரை மீட்க முடிந்தது. முனு சாமியும், பிரணதார்த்தியும் மீட்கப்பட்டவர்களுள் இல்லை என்பதை அறிய அவர்களுடைய மனைவி மார்கள் அழ ஆரம்பித்துவிட்டனர். மீனவர்கள் மறு படியும் கடலுக்குள் சென்று அவ்விருவரைத் தேடினர். ஆனால் பயனேதும் இல்லை. அன்று இரவு முழுவதும் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். காலையில் சூரியன் உதயமான பின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. சிறிது நேரத்தில் முனுசாமி, பிரணதார்த்தி ஆகியோரின் உயிரற்ற உடல்கள் வெவ்வேறு இடங் களில் கடற்கரையில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது. பிழைத்துவரக்கூடும் என்ற நம்பிக்கையில் இருந்த இருவருடைய மனைவிமார்களும் கதறி அழுதனர். நண்பர்கள் ஆறுதல் கூறி மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்தனர்.

இளவயதில் மரணடைந்த தன் நண்பர்களின் குடும்பத்தை நினைத்து கோபால் மிகவும் வருந்தினான். அவர்களுடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிடக் கூடாது என்றும், ஏதாவது உதவி செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தீவிரமாக நினைத்தான். அவ்வலுவலகத்தில், இவ்வாறு அகால மரணமடையும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கருணை அடிப்படையில் வேலை அளிக்கும் விதிமுறைகள் இருப்பது அவனுக்குத் தெரியும். இவ்விதியின்கீழ் வேலை யளிக்கும்படி மனு அளிக்குமாறு இருவருடைய மனைவி மார்களையும் கேட்டுக் கொண்டான். இருவரும் +2 வரை படித்திருந்தார்கள்; அவற்றின் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வேலை கோரி விண்ணப்பித் தார்கள்.

நிர்வாகமும் அவர்களுடைய விண்ணப்பத்தைப் பரிசீலித்து, முனுசாமியின் மனைவிக்கு, துப்புரவுத் தொழிலாளியாக அமர்த்தி வேலை உத்தரவை முதலில் வழங்கியது. அந்த அம்மையார் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குப்பின் பிரணதார்த்தியின் மனைவிக்கு, பணிபுரிந்து கொண்டே பட்ட வகுப்புப் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கீழ்நிலை எழுத்தர் பணிக்கான வேலை நியமன உத்தரவை வழங்கியது. இவருடைய கல்வித் தகுதியும் +2 என்ற போதிலும் ஒருத்திக்குத் துப்புரவுப் பணியாளராகவும் இன்னொருத்திக்கு எழுத்தராகவும் வேலை உத்தரவு வழங்கப்பட்டடதை அறிந்த கோபாலுக்கு ஏதோ நெருடியது. ஒருவேளை முனுசாமியின் மனைவி எடுத்த மதிப்பெண்கள் குறைவாகவும் பிரணதார்த்தி யின் மனைவி எடுத்த மதிப்பெண்கள் அதிகமாகவும் இருக்குமோ என்று இரண்டையும் வாங்கிச் சரி பார்த்தான். ஆனால் அவனுடைய நினைப்புக்கு மாறாக முனுசாமியின் மனைவிதான் பிரணதார்த்தியின் மனைவியை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந் தாள். அப்படியென்றால்.... கோபாலின் மனநெருடல் மேலும் அதிகமானது.

அவன் நேராக மேலாண்மை இயக்குநரைச் சந்தித்து, தன் மன நெருடலைத் தெரிவித்தான். மேலாண்மை இயக்குநரும் எழுத்தர் பணி என்றால் பட்டப் படிப்பு இருக்க வேண்டும் என்றும், பிரணதர்த் தியின் மனைவி மேற்கொண்டு படிப்பாள் என எதிர்பார்த்ததால் அவ்வேலையை அளித்ததாகவும், வேலை நியமன உத்தரவில், பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருப்பதையும் சுட்டிக்காட்டி விளக்கம் கூறினார். கோபாலும் முனு சாமியின் மனைவிக்கும் இதே நிபந்தனையுடன் எழுத்தர் வேலையை அளித்து இருக்கலாமே என்றும், +2வில் பிரணதர்த்தியின் மனைவியைவிட முனுசாமியின் மனைவியே அதிக மதிப்பெண் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிக் கேட்டதும் மேலாண்மை இயக்குநருக் குக் கோபம் வந்துவிட்டது. ஒருவர் திறமையானவரா, மேற்கொண்டு படிக்கக் கூடியவரா என்பதை மதிப் பெண்களின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது என்று உரத்தக் குரலில் கூறினார். கோபாலும் விட வில்லை. மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துத் தானே எல்லா வேலைகளுக்கும் தேர்ந்தெடுப்பது முடிவு செய்யப்படுகிறது என்று கேட்க, மேலாண்மை இயக்குநர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். “கீழ்சாதி நாய்கள் எல்லாம் சட்டம், நியாயம் பேச ஆரம்பித்துவிட்டன. எல்லாம் அம்பேத்கரும் நாயக் கரும் ஏத்திய கொழுப்புதான்” என்று ஆத்திரத்தில் சொல்லிவிட்டார்.

இதுவரையிலும் சாதியைப் பற்றிய நினைவே இல்லாமல் இருந்த கோபாலுக்கு மேலாண்மை இயக்குநரின் பேச்சு சுரீர் எனத் தைத்தது. இருந் தாலும் சமாளித்துக்கொண்டு தான் சாதியைப் பற்றி எங்கும் எப்பொழுதும் பேசியதில்லை என்றும், முனு சாமியின் மனைவி அதிக மதிப்பெண் பெற்றிருப்ப தால், பிரணதார்த்தியின் மனைவியைவிட மேல்நிலை iயில் வைக்க வேண்டும் என்று கேட்பதாகவும் கூறிய உடன், அவனை வெளியே போகும்படி உத்தரவிட் டார். தொழிற்சங்கத்தில் அவனுக்குள்ள செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி அவன் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார்.

தான் தனியாக வந்து கேட்டதால் தானே இவ்வாறு மிரட்ட முடிகிறது என்று நினைத்த கோபால், தொழிற் சங்கத்தின் மூலமாகவே முறையாக அணுகலாம் என நினைத்து வெளியே வந்துவிட்டான். உடனடியாக மற்ற தோழர்களுடன் பேசி செயற்குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினான். கூட்டத்தில் முனுசாமியின் மனைவிக்கும் பிரணதார்த்தியின் மனைவிக்கும் கருணை அடிப்படையில் வேலை அளித்ததில் கொடுமை நிகழ்ந்து இருப்பதை விளக்கிப் பேசினான். ஆனால் அவனுடைய மற்ற நண்பர்கள் இப்பிரச்சி னையைத் தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம் என்று கூறுவதைக் கேட்க, அவனுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது. தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் சாதிப் பிரிவினைகள் பற்றிப் பேசி, அவற்றிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று அவன் சார்ந்துள்ள அரசியல் கட்சியினர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு சாதிவேறு பாட்டை முற்றிலும் மறந்து இதுவரை செயல்பட்டு இருக்கிறான். தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவனையும், மற்ற தோழர்களையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிராகத் திருப்பி, தொழிற்சங்கத்தின் முக்கியப் பதவி களை எல்லாம் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களை ஏற்றுக்கொள்பவர்களும், பெருவாரியாகக் கைப்பற்றும் போது சாதிக் கொடுமைகளுக்குத் தோழர்கள் துணை போவதாக அவன் நினைக்கவே இல்லை.

இப்பொழுதும், அவன் சாதியைப் பற்றிப் பேசவே இல்லை. முனுசாமியின் மனைவி எல்லா விதத்திலும் பிரணதார்த்தியின் மனைவியைவிட அதிகத் தகுதி பெற்றிருந்தும் அவளுக்குத் துப்புரவுப் பணியாளர் வேலையும், குறைந்த மதிப்பெண் பெற்ற பிரணதார்த் தியின் மனைவிக்கு எழுத்தர் வேலையும் கொடுத்து இருப்பது நியாயம் அல்ல என்றுதான் பேசினானே ஒழிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பாதிக் கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு வார்த்தைகூட அவன் பேசவில்லை. அவனுடைய சக தோழர்கள் இப்பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று சொன்னதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அடங்கிப் போக வேண்டும் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டான். உடனே சில பார்ப்பனர்கள், சாதி வேறுபாடு பார்க்காமல் நல்லவித மாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கத்தைச் சாதிய ரீதியாகப் பிளவுபடுத்த முயல்வதாகக் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டனர். இது கோபாலை மேலும் ஆத்திரமூட்டியது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தன்னையும், மற்ற தோழர்களையும், இதே தொழிற் சங்கத்தின் உறுபினர்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தோழர்களுக்கு எதிராக இயங்க வைத்த பல பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அப்பொழுதெல் லாம் வராத சாதி ரீதியான பிளவு இப்பொழுது எப்படி வந்தது என்று வினவினான். மேலும், தான் பிரண தார்த்தியின் மனைவிக்கு அவ்வேலை அளிக்கப்பட்ட தைப் பற்றி எதுவும் குறை சொல்லவில்லை என்றும், முனுசாமியின் மனைவி அவளைவிட அதிகத் தகுதி பெற்றிருப்பதால் அவளைவிட உயர்நிலையில் (ளுநniடிச ளுவயவரள) வைக்க வேண்டும் என்று தான் கோருவ தாகவும், இதில் சாதி எந்தவிதத்திலும் சம்பந்தப்பட வில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

இவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்கத் தலைவர் இப்பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுமாறும், இதைப் பெரிதுபடுத்தி னால் சங்கத்தில் உள்ள உடலுழைப்பைச் சாராத உறுப்பினர்கள் பலர் சங்கத்திலிருந்து விலகும் அபாயம் உள்ளது என்றும், தங்கள் தொழிற்சங்கம் வைக்கும் ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்ற கோரிக் கைகள் வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய ஒத்து ழைப்புத் தான் முக்கிய காரணமாக உள்ளது என்றும் கூறினார். அவர்கள் சங்கத்தில் இருந்து வெளியேறி விட்டால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் வெற்றி அடையாது என்றும், ஒரே ஒரு பெண் பாதிக் கப்பட்டதை நிவர்த்தி செய்வதாக நினைத்துக் கொண்டு, தொழிற்சங்கம் முழுவதையும் பாதித்துவிடக் கூடாது என்றும் கூறினார். மேலும், கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்ட வேலைக்காக நிர்வாகத்தை உரசுவது தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்ப்பது போல் ஆகிவிடும் என்றும், ஆகவே இப்பிரச்சினையில் தொழிற்சங்கம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் தீர்ப்புக் கூறிவிட்டார்.

தலைவரின் பேச்சு கோபாலை அத்திரத்தின் உச்சியில் கொண்டு போய்விட்டது. இதுவரைக்கும் சாதிக் கொடுமை என்றால் என்னவென்று சரியாகப் புரியாமல் இருந்ததாகவும், இப்பொழுதுதான் பார்ப்பன ஆதிக்கம் தான் சாதிக் கொடுமைகளுக்கு எல்லாம் வேர் என்று புரிவதாகவும் கூறினான். இதன் தொடர்ச்சி யாகத்தான் கோபால் முன்பு போல் இல்லை என்றும், சாதிவெறியன் ஆகிவிட்டான் என்றும் ஆகவே அவனைத் தொழிற்சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே விலக்குவதாகவும் செயற்குழு முடிவு செய்து விட்டது.

கோபால் மற்ற தொழிலாளர்களிடம் முறையிட்டுப் பார்த்தான். ஆனால் அவனால் எல்லோரையும் அணுகிப் புரிய வைக்க முடியவில்லை. ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு ஆகியவற்றைத் தவிர, வேறு அரசியல் உணர்வே இல்லாமல் வைக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களிடம், அவர்களுடைய கோரிக்கை களைத் தொழிற்சங்கம் நன்கு கவனிக்கிறது என்று கூறி, தொழிற்சங்கத்தினர் நிலைகொண்டனர்.

இப்பொழுதுதான் கோபாலுக்கு இரண்டு விஷ யங்கள் புரிந்தன. முதலில் இந்தியாவில் உள்ள தொழிற் சங்கவாதிகள் பார்ப்பன ஆதிக்கத்தைக் காப்பாற்றுவதற் குத்தான் கூலி உயர்வு வட்டத்தைவிட்டு வெளியே வருவதில்லை என்பதையும், அடுத்ததாகப் பார்ப் பனர்களின் வெற்றிக்கு மற்றவர்களின் கோழைத் தனமும், சாதி ரீதியிலான பிரிவினையும் பேராசையும், அறியாமைதான் காணமே தவிர, பார்ப்பனர்களு டைய அறிவுத்திறன் அல்ல என்றும் புரிந்துகொண்டான். தன் வாழ்வின் பெரும்பகுதியை இதை உணராமல் வீணாக்கிவிட்டோமே என்று வருந்தினான்.

(இச்சிறுகதை, 1980களின் பிற்பகுதியில் சென்னை யில் உள்ள மய்ய அரசு அலுவலகம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது).