எந்த ஊரிலே பிறந்தா லென்ன
என்தமிழ் நாட்டின் பிள்ளை வேண்டும்
எந்தத் தாய்தான் ஈன்றா லென்ன
என்தமிழ்த் தாயின் மகனாய் வேண்டும்
எந்தக் குலத்துள் வந்தா லென்ன
என்தமிழ்க் குலத்தான் என்றால் போதும்
எந்தப் பள்ளியில் படித்தா லென்ன
என்தமிழ்த் தேர்ந்தவன் ஆதல் வேண்டும்
எந்தத் தொழிலைச் செய்தா லென்ன
என்தமிழ் மீதவன் காதல் வேண்டும்
எந்த நாளில் பிறந்தா லென்ன
எல்லாம் எனக்குத் தமிழ்நா ளாகும்
எந்த இனத்தான் என்றா கேட்டீர்?
என்தமிழ் இனத்தான் ஒன்றே வேண்டும்
என்துணை தேடும் மடமைத் தாயே
என்கருத் தறிய ஏன்மறந் தாயே
எத்தகு வாழ்க்கை வேண்டும் எனக்கு
எத்தகு துணைநலம் வேண்டும் என்றால்
எந்த மதமும் வேண்டாம் வாழ
செந்தமிழ்க் குறளே போதும் என்னும்
சிந்தனை உடைய தமிழன் அவனும்
ஆசை பணமே என்றில் லாமல்
பாயும் பழந்தமிழ் வீரன் போல
மீசை வைத்தவன் எவனோ
அவனே எந்தன் அருந்துணை அறியே!