கண்டனத்துக்குரிய தீர்ப்பு

சதீஷ்கர் மாநிலத்தின் இராய்ப்பூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.பி. வர்மா மனித உரிமைப் போராளி மருத்துவர் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டின் மீதான வழக்கில் 24.12.2010 அன்று வாழ்நாள் தண்டனை வழங்கினார். பினாயக் சென் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்; சதீஷ்கர் மாநிலத்தில் பழங்குடியினரின் நல்வாழ்வுக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொண்டு செய்து வருபவர்.

இதற்கு முன்பே பினாயக் சென், மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் வெளிவருவதற்கு உச்சநீதி மன்றம் தடையாக இருந்தது. இந்திய அளவில் பினாயக் சென்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் காவல்துறை பொய்யான ஆதாரங்களைப் புனைந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக அம்பலப்பட்டுள்ளது. பினாய் சென் சதீஷ்கர் மாநில மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர். இந்திய அளவில் அக்கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டவர். மாவோயிஸ்டு தலைவர் நாராயண் சன்யால் 2006 முதல் சிறையில் இருந்துவருகிறார். மருத்துவர் என்ற முறையிலும், மக்கள் உரிமைப் பொறுப்பாளர் என்ற நிலையிலும் சிறையில் சன்யாலை, பினாயக் சென் அடிக்கடி சந்தித்தார்.

இந்தச் சந்திப்புகள் சிறைத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றன. ஆனால் சன்யால் இச்சந்திப்புகளின்போது, பினாயக் சென் மாவோயிஸ்டுத் தலைவர்களுக்குக் கமுக்கமான செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு சாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்நீதித்துறை மருத்துவர் பினாயக் சென்னை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இராய்ப்பூர் மாவட்ட நீதிபதி வர்மா, தன்னுடைய தீர்ப்பில், ‘மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரையும் பொது மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று வருகின்றனர். அதனால் மாவோயிஸ்டுகள் தொடர்பான குற்றவாளிகளுக்கும் இரக்கம் காட்டாமல் அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்’ என்று ஒரு பேட்டை ரவுடிபோல் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.