இந்திய மருத்துவக் குழுவுக்குப் (Medical Council of India-MCIO) பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க நடுவணரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட முன்வரைவினை  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த 29-12-17 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். கடந்த 2-1-18 அன்று மக்களவையில் இந்தச் சட்ட முன்வரைவு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆணையத்தை அமைப்பதற்கு மக்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அன்றைய தினம் நாள் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சட்ட முன்வரைவு மீதான விவாதம் நடைபெறவில்லை. சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந் நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தொடர்பான முதல் கூட்டம் வரும் 24-1-18 அன்று  டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில்

1933 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய மருத்துவக் கவுன்சில் அமைக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின் 1956 ஆம் ஆண்டு பல திருத்தங்கள் செய்யப்பட்டு இதுவரை இயங்கி வருகிறது.

நடுவணரசில் பா.ச.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பல அமைப்புகளைக் கலைத்துவிட்டது. குறிப்பாக, திட்டக் குழுவினைக் கலைத்து விட்டு, நிதி ஆயோக்  என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. இந்த நிதி ஆயோக் பரிந்துரையின்படி இதுவரை இருந்த இந்திய மருத்துவக் குழுவைக் கலைத்து விட்டு, அதற்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு செய்யயப் பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. அதில் முதல் காரணமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இடம் பெறுகிறது.  இந்திய மருத்துவக் குழுவில், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் முறைமையில் பெரும் ஊழல் புரிகிறது; “தனியார் மருத்துவக் கல்லூரிகள்  பெரும் தொகை யை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாத மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுகின்றன; இதனை மருத்துவக் குழுவால் தடுக்க முடியவில்லை. இதனால் திறமை தகுதி இல்லாத மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர். மருத்துவக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையூட்டுப் பெறுகின்றனர். இதைத் தடுக்கவே தேசிய மருத்துவ ஆணையம்” என்கின்றனர்.

மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே. மருத்துவக் குழுவின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் செய்த பெரும் ஊழல் பேர்வழி. அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடிக்கணக்கான பணம், டன் கணக்கான தங்கம் எல்லாம் நாடறிந்த செய்தி.

இத்தகைய சூழலில் புதிதாக அமைய உள்ள ஆணையம் ஊழலைத் தடுக்குமா? என்றால் அதற்கான விடையே இல்லை. புதிதாகக் கொண்டு வரப்படும் விதிகள் ஊழலைத் தடுப்பதற்குப் பதில் ஊக்குவிக்கும் விதமாக உள்ளன.

புதிய விதியின் படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் 60 விழுக்காடு இடங்களை அரசிடம் அளித்து விட்டு, 40 விழுக்காடு இடங்களைத் தங்கள் விருப்பம் போல கட்டணம் நிர்ணயம் செய்து நிரப்பிக் கொள்ளலாம் என்கிறது. இது நாள் வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிருவாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம் என்பது, திருடன் கையில் சாவியைக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

இதற்கு முன் மருத்துவக் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் எதுவாக இருந்தாலும் இளநிலை எம்பிபிஎசு, முதுநிலை எம்டி, எம்.எசு, மற்றும் உயர் சிறப்பு டிஎம், எம்சிஎச் போன்ற எந்தவொரு படிப்பைத் தொடங்க வேண்டும் என்றாலும், எத்தனை மாணவர்களை அனுமதிப்பது என்பதற்கு இந்திய மருத்துவக் கவுன் சிலின் இசைவைப் பெற வேண்டும். ஆனால், தற்போது அமையவுள்ள ஆணையம் இத்தகைய அனுமதியை வழங்கத் தேவை இல்லை என்கிறது. தனியார் கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல் இடங்களை உயர்த்திக் கொள்ளலாம், புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கலாம் என்கிறது.இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்கிறது. மேலும் ஆய்வின் போது தேவையான வசதிகள் கல்லூரியில் இல்லை எனில் தண்டத்தொகை மட்டுமே விதிக்கப்படும் . அதுவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தண்டத்தொகை மட்டுமே விதிக்கப்படும். இதற்கு முன்பு தேவையான துறைசார் வசதிகள் இல்லை எனில், மேற்கொண்டு அப்பிரிவில் மாணவர்களைச் சேர்க்க இயலாது. தடை விதிக்கப்படும். ஆனால் தற்போது அப்படி இல்லை. இந்த விதி, முன்பு ஊழல் பூனைகள் சிறிய சந்து வழியே சென்றதற்குப் பதிலாக , ஊழல் யானைகள் செல்வதற்குக் கதவுகளைத் திறந்து விட்டதற்கு ஒப்பாகும்.

மாநில உரிமை பறிப்பு

இந்தப் புதிய ஏற்பாட்டின்படி ஏற்கெனவே இருந்த இந்திய மருத்துவக் குழுவில் மாநிலங்களின் நிதியைக் கொண்டு அதனால் அமைக்கப்பட்டவை என்ற தன்மை யில் உரிமைகளைப் பறித்துவிட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுக்கு இருந்த உரிமை வழி. இதுமட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு இசைவு தரும் தன் நிதி மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கு மாநில அரசுத் தேர்வு செய்து நிரப்புவதற் கான உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது. அதிகாரத்தையும் நீட் தேர்வின் வழியாகப் பறித்து விட்டது. புதிதாக அமைய உள்ள ஆணையம் மாநில அரசுகளுக்கு  மருத்துவக் கல்வியில் எந்தவொரு குறிப்பிட்ட அதிகாரத்தையும்  வழங்கவில்லை.

தற்போது அமைய உள்ள ஆணையத்தில் மாநிலங் களின் சார்பில் ஏதாவது ஐந்து மாநிலங்களின்  உறுப் பினர்கள் மட்டுமே இடம் பெறுவர். மீதமுள்ள மாநிலங்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை. அதுவும் சுழற்சி முறையில் தான் மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆணையத் தலைவர், உறுப்பினர்கள் அனை வரும் நடுவண் அரசால் நேரடியாக நியமனம் செய்யப் படுவர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், வழக்குரை ஞர்கள், கணக்காயர்கள், பொருளாதார வல்லுநர்கள், ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் என மருத்துவம் சாராத பலரையும் மருத்துவ ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட வழிவகைகளை பாசக அரசு செய்துள்ளது.

இதன் மூலம் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய ஆள்களைத் தேசிய மருத்துவ ஆணையத்திற்குள் நுழைத்து, ஆணையத்தைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து காவி ஆணையமாக்க முயற்சி செய்கிறது.

மருத்துவத்தில் பன்முகத்தன்மை

ஆயுஷ் எனப்படும் ஓமியோபதி மற்றும் சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற முறைகளில் பயின்றவர்களுக்கு நவீன மருத்துவத்தில் ஆறுமாதப் பயிற்சி அளித்து, அவர்களை நவீன அறிவியல் மருத்து வம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்கிறது ஒரு புதிய விதி. இதற்குப் பிரிட்ஜ் கோர்ஸ் (bridge course) எனப் பெயர். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் போலவே செயல்படலாம் என்கிறது. மேலும் எம்டி,  எம்எஸ் போன்ற பட்ட மேற்படிப்புகளிலும் சேரலாம் என அனுமதி அளிக்க முயல்கிறது. இதனை நவீன மருத்துவர்கள் கடுமை யாக எதிர்த்து வருகின்றனர். ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவ முறைகளைக் கையாள அனுமதி அளிப்பது பொது மக்கள் உயிருக்குக் கேடு விளைவிப்பதாகும். மேலும் மாற்று மருத்துவ முறைகள் இத்திட்டத் தால் அடியோடு அழிந்து போக வாய்ப்புள்ளது.

ஒருபுறம் மருத்துவக் கல்வியில் தரத்தை அதிகப் படுத்தப்படுகிறது என்ற பெயரில் ஏழை எளிய கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான  நீட் போன்ற தேர்வுகளைத்  திணிக்கிறது நடுவணரசு. அது மட்டுமின்றி, எம்பிபிஎசு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மருத்துவராகத் தொழில் செய்ய தேசிய அனுமதித் தேர்வு ஒன்றை நடத்துகிறது. இவ்வளவு ஆண்டுகளாகத் பல்கலைக்கழகத் தேர்வுகளில் வெற்றி பெற்று, பிறகு ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பயிற்சி பெற்று அதன்பின்தான் மருத்துவராக அனைவரும் பணிபுரிவர்.

இச்சூழலில் வெறும் நினைவாற்றல் திறனை மட்டுமே கணக்கிற் கொள்ளும் தேர்வு முறையை எதற்காக இளம் மருத்துவர்கள் மீது திணிக்க வேண்டும்? எம்பிபிஎசு படிப்பில் நுழையவும் பிறகு வெளியே வந்து மருத்துவராகத் தொழில் செய்யவும் கடுமையான தேர்வுகளைப் புகுத்தும் அதே வேளையில், ஆயுஷ் மருத்துவர்களை ஆறே மாதங்களில் நவீன மருத்துவராக மாற்றுவது பெரிய முரண்பாடு ஆகும். இதனால் முதலில் பாதிக்கப்படப் போவது பொது மக்களே. பொது மக்களின் உயிரை, உடல்நலத்தைப் பணையம் வைக்கும் முயற்சியில் அரசே ஈடுபடுவது கொடுமையல்லவா?

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளும் இடங்களும் மிக அதிகம். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கின் அடிப்படையில் நாட்டிலேயே அதிக அளவாக 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் இது போன்று வட மாநிலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனை களும், தொடக்க நல வாழ்வு நிலையங்களும், சிறப்பு மருத்துவ வல்லுநர்களும் உருவாக்கப்படவில்லை. இது பற்றிய அக்கறை அம்மாநில அரசுகளுக்கு இல்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்நிலையில் பெருகிவரும் மருத்துவர்கள் தேவை, பொது மக்கள்: மருத்துவர் விகிதம் இவற்றை நிறைவேற்ற நடுவணரசிடம் உருப்படியான திட்டம் ஏதுமில்லை. மாநிலங்களுக்கும் உரிமைகள் இல்லை. அதனால் மருத்துவக் கல்வியை வழங்குவதில் 100 தனியாரை ஈடுபடுத்த ஏதுவாக புதிய தேசிய மருத்துவ ஆணையமும் அதன் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, மருத்துவச் சேவை இந்தியாவில் 70ரூ முதல் 80ரூ வரை தனியார் மயமாகியுள்ளது. மக்கள் தமக்கான மருத்துவச் சேவைகளைப் பெறத் தமது வருமானத்தை, சேமிப்பைப் பெருமளவு செலவிடு கின்றனர். மருத்துவச் சிகிச்சை என்பது 100ரூ தனியார் மயமாகிப் போயுள்ளது. அரசு பொது நலவாழ்வுத்  துறை  குற்றுயிரும் குலை உயிருமாய் ஆக்கப்பட்டுவிட்டது.

இந்த சூழலில் 50ரூ தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் கல்வியை  100ரூ தனியார் மயமாக்குவதற்கான கதவைத் திறந்து விட்டுள்ளது பா.ச.க அரசு. மக்களுக்கு மருத்துவச் சேவை அளிக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பெரிதும் மாநில அரசின் பொறுப்பில் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளும் மாநில அரசால் நிறுவப்பட்டு நடத்தப்படுகின்றன. ஆனால், மருத்துவக் கல்வியினை அடிமுதல் நுனி வரை நடுவணரசு முன்பு மருத்துவக் கவுன்சில் மூலமும் தற்போது மருத்துவ ஆணையம் மூலமும் கட்டுப்படுத்தி வருகின்றது.

இதனால், உள்ளூர் தேவைக்கேற்ப உடனுக்குடன் முடிவுகளை எடுப்பது செயல்படுத்துவது என்பது தடைப்படுகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்த அனைத்து நிதி அதிகாரங்களையும் கொண்ட நடுவண் அரசு மாநிலங்களுக்கு உதவுவதில்லை.  மாறாக பல தடைகளைப் போடுகிறது. நீட் போன்ற தேர்வுகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள ஏழை கிராமப்புற மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் உயர் பொருளாதார பின்னணி உடைய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் மட்டுமே இனி மருத்துவராக ஆக முடியும் என்ற சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. இப்பின்னணியில் இருந்து வரும் இளம் மருத்துவர்கள் ஊர்ப்புற மருத்துவ மனைகளில் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.  இதனால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது மேலும் கடினமாகும்.

மருத்துவச் சிகிச்சையில் பெரு நிறுவன மயம்  மற்றும் காப்பீடு நிறுவன மயம், இது உலக வங்கி, பன்னாட்டு நிதியம் , உலக வணிகக் கழகம் வரையறுத்த கொள்கை.

இதுவே இந்திய நடுவண் அரசின் கொள்கை

இது இந்நாட்டின்  நூறு கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது. ஏழைப் பொது மக்கள் மருத்துவச் சேவை பெறுவதில் உள்ள சிக்கல்களைப் போக்க, புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணை யத்தில் எதுவுமே இல்லை. அது புதிய மொந்தையில் பழைய கள். அவ்வளவே!