சாதி என்பது வருணசாதி நான்கை மட்டுமே குறிக்கும்.

புத்தர் காலத்துக்கு முன்னரே - வள்ளுவர் காலத்துக்கு முன்னரே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற பிறவி காரணமான நான்கு சாதிகள் உண்டாக்கப் பட்டன.

இந்த அமைப்புக்கு வெளியே - வருண சாதிக்கு உட்படாத ஒரு சாதி உண்டு. அந்தச் சாதியே தீண்டப்படாத சாதி. இவர்கள், இன்றைய இந்தியாவிலுள்ள 122 கோடி மக்களில், சரியாக ஆறில் ஒரு பங்கினர். இவர்கள் மட்டுமே ஊரை விட்டுத் தள்ளியே குடிவைக்கப்பட்டார்கள். இவர்கள் சண்டாளர்கள் என்று இழிவாக அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குச் சொந்தமாக - ஒரு பெறுமான முள்ள எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது என்பது மனுநீதி விதித்த சட்டம்.

இந்தியா முழுவதிலும் இந்த நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில், குறைந்தது 1200 ஆண்டுகளாக இந்த நிலைமை இருக்கிறது. கேரளாவில் இந்தக் கொடுமை மிகவும் அதிகம். கேரளாவில் அய்யங்காளியும், தமிழகத்தில் பண்டித அயோத்திதாசரும் பத்தொன்ப தாம் நூற்றாண்டிலேயே தீண்டாமைக்கு எதிராகப் போராடினர்.

காந்தியார் 1915இல் தான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். அவருடைய நிர்மாணத் திட்டங்களை 1920இல் காங்கிரசுக் கட்சி ஏற்றுக்கொண்டது. தீண்டாமை ஒழிப்பு அதில் ஒன்று.

டாக்டர் அம்பேத்கர், சாதி - தீண்டாமை பற்றி 1916ஆம் ஆண்டு முதலே ஆய்ந்தார் - எழுதினார் - பேசினார்; 1927 முதல் போராடினார்.

பெரியார், திருப்பூர் காங்கிரசு மாநாட்டில், 1922இல், தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசு போராட வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு சென்றார்; அன்றைய மாநாட்டில் பங்கு கொண்ட எல்லாப் பார்ப்பனர்களும் ஒரு முகமாக அதை எதிர்த்தனர்; அன்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில், “மனுநீதியும், இராமாயணமும் வருணத்தை யும், தீண்டாமையையும் காப்பாற்றுகின்றன. எனவே இவற்றை எரிக்க வேண்டும்” என்று பேசினார். அதை இங்கு எவரும் நிறைவேற்றவில்லை. ஆனால் டாக்டர் அம்பேத்கர் 25.12.1927 அன்று மனுநீதியை எரித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக - மயிலை சிங்காரவேலு, “சுயராஜ்யம் எதற்காக? யாருக் காக?” என, 1922இல் அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டிலேயே வினா எழுப்பினார். காங்கிரசு அதற்கு விடை சொல்லவில்லை.

வெள்ளையர் காலத்திலேயே, 1927க்கு முன்னரே, வருணம் மாறித் திருமணம் செய்து கொள்ளலாம்-ஆணும் பெண்ணும் இந்துமதத்தைச் சார்ந்தவர்கள் என்று உறுதிமொழி கூறவேண்டும். அவ்வளவுதான். ஆனால் அத பெருகவே இல்லை.

1946இல் உள்சாதிகளிடையே திருமணம் செய்து கொள்வதற்கு இருந்த தடை சட்டப்படி நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அரிதாகத்தான் இது நடைபெறுகிறது. இவை பற்றி எல்லோரும சிந்திக்க வேண்டும்.

கோவில்களில், மடங்களில், வீடுதோறும் பார்ப்பனப் புரோகிதம் செய்வதில் மட்டுமே-இன்று வருண வேறுபாடு உண்டு. இதற்கு அசரமைப்புச் சட்டம் முழுப் பாதுகாப்பு அளிக்கிறது.

1947 சூனிலேயே, இந்திய அரசாட்சியைக் காங்கிரசு ஏற்றது. 15.8.1947இல் வெள்ளையர் வெளியேறினர்.

அந்த 15.8.1947 முதல் 15.8.1979 முடிய 30 ஆண்டுக்காலத்தில், இந்தியா முழுவதிலும் - தமிழ்நாடு உட்பட - எல்லா மாநிலங்களிலும் பட்டியல் வகுப்பினர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் (Atrocites on Scheduled Castes) என்னும் பெயரிலான ஒரு தொகுப்பு என்.டி. காம்ப்ளே (N.D.Kamble) என்பவரால், தக்க தரவுகளுடன் தொகுக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள “சமூக-பொருளாதார மாற்றத்துக்கான நிறுவனத்தினரால்” வெளியிடப் பட்டது. அது 287 புல்ஸ்கேப் (Foolscap) பக்கங்களைக் கொண்டது. எனக்கு 1980இல் அது கிடைத்தது. 

அப்போது முதல், தீண்டப்படாதார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் - வன்முறைகள் - வீடு எரிப்புகள் பற்றித் தமிழக அளவில் பல ஊர்களுக்கு நானே - இரண்டொரு தோழர்களுடன் நேரில் சென்று, கள ஆய்வு செய்து, சிந்தனையாளன் ஏட்டில் எழுதினேன்.

1978       -              விழுப்புரம் நகரம்

1980       -              மண்டைக்காடு

1980-81                -              மீனாட்சிபுரம் (இரண்டு தடவைகள்)

                                புளியங்குடி

                                மின்னல் (அரக்கோணம்)

                                தொளார் (பெண்ணாடம்)

1982       -              கோலார் (தங்கவயல்)

                                தமிழர் மீதான தாக்குதல்

1991       -              பெங்களூர் - தமிழர் மீதான தாக்குதல்

இந்த ஒவ்வொரு இடத்திலும் - பிற்படுத்தப்பட்ட வகுப்பான முக்குலத்தோர், வன்னியர், செங்குந்தர் ஆகிய உள்சாதியினரே அழிப்பு வேலையில், பெரும் பங்கு பெற்றனர். விழுப்புரம், மண்டைக்காடு, மீனாட்சி புரம் ஆகிய ஊர்களில் மட்டும் தீண்டப்படாதார் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரும் பங்கேற்றனர்.

மண்டைக்காட்டில் நடந்தது இந்து - கிறித்துவர் மதக் கலவரம். கலவரம் நடத்தியவர்களையே நான் நேரில் பார்த்தேன்; உண்மையை உணர்ந்தேன்.

விழுப்புரம் - பேருந்து நிலையத்தை வைத்து ஆதித் திராவிட வகுப்பினர் செய்த பல தவறான செயல்களால், ஊரே ஒன்றுபட்டு, மிகப் பெரிய தாக்கு தலை நடத்திவிட்டனர்; சிலரைக் கொன்றனர். வீடு வீடாகச் சென்று ஆய்ந்தேன்.

மீனாட்சிபுரத்தில் நுட்பமான ஆய்வை - 2 தடவைகள் மேற்கொண்டேன். இஸ்லாம் - இந்து என்கிற வடி வத்தைக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். - ஜன சங்கம் எல்லாம் தலையிட்டு, இந்திய அளவில் ஒரு வெறுப்பைப் பரப்பி உண்மையை மறைத்துவிட்டனர். நான் உண் மையைக் கண்டுபிடித்து, அன்று அரசுச் செயலாளராக இருந்து கு.சொக்கலிங்கம் அவர்களிடம் நேரில் விளக்கிக் கூறினேன். கொஞ்சம் பயன் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட கலவரங்களுக்கும் வீடு எரிப்புகளுக் கும், கொலை-கொள்ளை நடப்புகளுக்கும் எப்போதும் ஒரே ஒரு காரணம் இருக்க முடியாது; பல காரணங்கள் இருக்கவே செய்யும்.

உடனடிக் காரணம் ஏதேனும் ஒன்று இருக்கும்.

அப்படி உடனடிக் காரணம் இருப்பதற்குப் பின்னால் - உரசிப் போட்டவுடன் தீப்பிடிப்பதற்கான சூழல்கள் ஏற்கெனவே கட்டாயம் உருவாக்கப்பட்டிருக்கும். தாக்கு தல் தொடுக்கப் போகிறவர்களுக்கும் - தாக்கப்படுகிறவர் களுக்கும்; இதில் நாட்டமுள்ள எல்லாச் சாதிக்காரர்களுக் கும்; அரசியல் கட்சிக்காரர்களுக்கும்; எல்லாவற்றுக்கும் மேலாகக் காவல்துறையின் கீழ்நிலை அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் தெரியும்.

தருமபுரி மாவட்டம், நத்தம் ஆதித்திராவிடர் குடி யிருப்பு, இளங்கோ என்கிற ஆதித்திராவிடர் மகன் இளவரசன்; செல்லன்கொட்டாய் நாகராசன் என்கிற வன்னியரின் மகள் - 20 வயதுள்ள திவ்யாவைக் காதலித்ததும் 8.10.2012இல் திருமணம் செய்து கொண்டதும் - (1) இரண்டு தரப்பாருக்கும் நன்றாகத் தெரியும்; (2) காவல் துறையின் கீழ்நிலை அதிகாரி களுக்கு உடனே தெரியும்; (3) மண்டல காவல்துறைத் தலைவருக்கு (DIG) இளவரசன்-திவ்யா முறையீட்டின் மூலம் 15.10.2012 அன்றே மிக நன்றாகத் தெரியும் 7.11.2012இல் பெண்ணின் தந்தை நாகராசன் தற்கொலை செய்து கொண்டார்.

நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று ஆதித்திராவிடர் குடியிருப்புகளிலும் 268 வீடுகளை அடித்து நொறுக்கியதற்கு; எரித்தும்; கார்கள், இருசக்கர வண்டிகளை எரித்தும்; நகை, பணம் எல்லா வற்றையும் மாலை 4.30 முதல் 4 மணிநேரம் கொள்ளை அடித்ததற்கும் காவல்துறையினர் கொஞ்சமும் கவலை எடுத்துக் கொள்ளாததே முதலாவது காரணம்.

காவல்துறை அதிகாரியோ அல்லது கட்டைப் பஞ்சாயத்துப் பேசிப் பணம் பறிக்க முயன்றவர்களோ, பெண்ணின் தந்தை நாகராசனைப் பார்த்து, “மானம் போவுதுண்ணா, போய் தூக்குப் போட்டுச் சாவேன்” என்று சொன்னதும்; அதனால் அவர் தூக்கில் தொங்கிட இவர்களே காரணம் ஆனதும் உடனடிக் காரணம்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், வேலூர் சா. குப்பன் மற்றும் சில தோழர்கள் 15-11-2012இல் நேரில் சென்று, பல தரப்பு மக்களையும் கண்டு பேசினர். அவர்கள் உணர்ந்த விவரங்களை அப்படியே சா. குப்பன் ஓர் அறிக்கையாக வடித்துள்ளார். (இவ்விதழில் தனிக்கட்டுரையாக இடம் பெற்றுள்ளது).

அந்த ஆய்வின் போது, சென்ற 4 தோழர்கள் தத் ரூபமாக எடுத்த நிழற்படங்களையெல்லாம், 23.11.2012 இரவு நான் வேலூரில் பார்த்தேன். விழுப்புரம், புளியங்குடி, தொளார் கலவரங்களை நேரில் 30 ஆண்டுகளுக்குமுன் ஆய்வு செய்த எனக்கு, மிக அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த ஊர்களிலுள்ள ஆதித்திராவிடருள் பலருக்கு, 2012இலும் சொந்தமாக வேளாண் நிலம் இல்லை. பக்கத்து ஊர்களில் உள்ள வன்னியர், நாயுடு, கவுண்டர் ஆகியோரின் நிலங்களிலேயே பல தலைமுறைகளாக இவர்கள் உடலுழைப்புக் கூலிகளாக இருந்தனர். ஆதித் திராவிட இளைஞர்கள் பலர் ஓசூர், பெங்களூர் முதலான நகரங்களுக்குச் சென்று சம்பாதித்து இப்போது தான் வெள்ளையும் சள்ளையுமாக வாழ்கிறார்கள்.

இந்தத் தன்மையில் வயிற்றுப்பாட்டுக்காக வேறு ஒரு சாதியினரைச் சார்ந்திருப்பதுதான் - காலங்காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் தலையெடுக்கும் போது, சிறு, பெரு உடைமைக்காரர்கள் ஒன்றுசேர்ந்து இவர்களை அடக்கி ஒடுக்கிட முயலுவதற்குக் காரணம்.

இதை மட்டும் வைத்து, “பிற்படுத்தப்பட்டவர்கள் தான் ஆதித்திராவிடரின் முதலாவது எதிரிகள்” என்று குற்றஞ்சாட்டும் சமூகநல அறிவாளிகள் ஒன்றைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தச் சிற்றூரிலிருக்கிற பார்ப்பனரும், வெள்ளாளரும், தொண்டை மண்டல முதலியாரும், ரெட்டியாரும் அந் தந்த ஊரில் உள்ள தேநீர்க் கடையில் தேநீர் அருந்த வரு வதில்லை; பொதுக் குளத்தில் குளிக்க வருவதில்லை; ஏர் உழ வருவதில்லை; களை வெட்ட-பறிக்க, கதிர் அறுக்க வருவதில்லை. அவர்களே பெரிய நிலஉடமைக்காரர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஆதித்திராவிடருமே நேற்றும், இன்றும் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடு கிறார்கள், இது நடப்பது தவிர்க்கப்பட நாம் வழி காண வேண்டும்.

வேலை முடிந்து குளித்த பிறகு, அவரவர் தெருவுக் குள் போகிறார்கள்.

இவர்களின் கல்வி நிலை, பண்பாட்டு நிலை, வாழ்க்கை நிலை, உணவு வசதி, குடியிருப்பு வீடு எல்லாம் ஏறக் குறைய ஒரே தரத்தில் உள்ளன. என்றாலும் பொய்யான சாதி உயர்வு ஆணவ உணர்ச்சிக்கு ஆட்பட்ட பிற்படுத் தப்பட்டவர்களும் - தாழ்வு மனப்பான்மையினால் காலங் காலமாக அடங்கிக் கிடந்து, இப்போது அடங்க மறுக்கும் ஆதித்திராவிடர் களும் மோதிக் கொள்ளுகிறார்கள்.

நகரங்களில், பட்டணங்களில் குடிசைவாசிகளாகத் தனியே ஆதித்திராவிடர் இருந்தாலும், அவர் அந்த சாதிதான் என்று அங்குள்ள எவருக்கும் தெரியாது. தனியார் விடுதியில் ஆதித்திராவிடர் சாப்பிட்ட அதே தட்டில் பார்ப்பனர், வன்னியர், நாடார், இஸ்லாமியர் எல்லோரும் சாப்பிடுவர்.

தொடர் வண்டியில், பேருந்துகளில் திரைக்கொட்ட கைகளில் எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் சமம்.

இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை பெற்று எல்லோரும் சமமாக அமர - பழக - புழுங்க இடமும் வாய்ப்பும் இருக்கிறது. இது வேற்றுமை பாராட்டப்படாத இடம்.

ஆனால் ஆதித்திராவிடர் சேரி என்பதற்கு, ‘ஆதித் திராவிடர் காலனி” என்று பெயர் வைத்து - அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி ஊருக்கு வெளியே குடிவைத்திருப்பது உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாதது. ஒவ்வொரு ஆணையும், பெண் ணையும் - சிற்றூரில் மட்டும் தெளிவாக - இளம் பருவம் முதலே இவர்களை அடையாளம் அறிந்திடவும்; கோவில்களில், குளங்களில், ஏரிகளில், சுடுகாடு - இடுகாடுகளில் இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொருவருக்கும் புகுத்தவும் காரணமாக இருப்பது இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்பே ஆகும்.

தமிழ்நாட்டில் 79,394 சிற்றூர்கள் உள்ளன; ஆனால் 30,000 ஆதித் திராவிடர் குடியிருப்புகளே உள்ளன. பெரும்பாலான சிற்றூர்களில் பிற்படுத்தப் பட்ட ஏதோ ஒரு சாதியினரே அதிகம் பேர்; சில சிற்றூர்களில் ஆதித் திராவிடர் அதிகம் பேர். பிற் படுத்தப்பட்டோரில் இந்துக்கள் மட்டும் 60 விழுக்காடு பேர்; ஆதித் திராவிடர் 20 விழுக்காடு பேர்.

இந்த நிலையில், வாழ்நிலையில், பொருளாதாரத்தில்-அன்றாட வேலை இடங்களில், பிற்படுத்தப்பட்டோரைச் சார்ந்திருக்கிற ஆதித்திராவிடரே அதிகம் பேர்.

சமூக சமத்துவம் வந்து சேர, இந்த இரு பிரிவின ரையும் இணைக்கவே எல்லோரும் முயல வேண்டும். சாதி மாறிய திருமணம் ஆயிரத்தில் ஒன்று - எப் போதோ - எங்கோ நடக்கிறது.

பள்ளிகளில் இருப்பது போல் ஊர்ப் பொது இடங் களான கோவில்களில், குளங்களில், திருவிழாக்களில், சடுகாட்டில் சமத்துவம் வர, சட்டத்தில் தடை எதுவும் இல்லை. பொய்யான சாதி ஆணவமே தடையாக நிற்கிறது. ஒவ்வோர் ஊராட்சிக்கும் இதை நடைமுறைப் படுத்திட அதிகாரம் வேண்டும். மக்கன் மனம் மாற வேண்டும்.

தமிழ்நாட்டு அரசு காவல்துறை, வருவாய்த் துறை, ஊராட்சித்துறைகளைச் சார்ந்த கீழ்நிலை அதிகாரி களுக்கு - இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நல்ல சமூக அறிவை ஊட்ட வேண்டும்; தனிப்பயிற்சி அளிக்க வேண்டும்.

பெரியார் பெயரை - அம்பேத்கர் பெயரைச் சொல்லும் எல்லாக் கட்சிகளும் இந்த இருப்பு நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் செய்யப்படாமல் - “உண்டால் தின்றால்தான் உறவு; கொண்டால் கொடுத்தால் தான் உறவு” என்கிற மனித சமத்துவ உரி மைகள் வந்து சேர, சில சாதி மறுப்புத் திருமணங்கள் மட்டும் உதவிவிட முடியாது. “சாதி மறுப்புத் திருமணத்தை மறுக்கிறவர்கள் சாதி வெறியர்கள்” என்று தூற்றி விடுவதால், நாம் அடைய நினைக்கிற மனித சமத்துவ உரிமை வராது; அதை அடைந்திட நாம் - ஒடுக்கப்பட் டோர், ஒன்றுகூட வேண்டும் என்பதே முதன்மையாகும். பிரித்து வைக்கிற செயல்களைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டு அரசு, ஆதித்திராவிட மாணவர் விடுதி 1200; பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி 1200 என நடத்துகிறது.

இதை மாற்ற வேண்டுமென, சத்தியவாணி முத்து அம்மையார் அமைச்சராக இருந்த காலந்தொட்டு, விசயசாரதி அமைச்சராக இருந்த காலந்தொட்டு நான் எழுதி வருகிறேன். இவர்களிடம் நேரில் சொன்னேன் ஏன்?

ஆதித்திராவிடர் விடுதியில் ஆதித்திராவிடர் 75 விழுக்காடு; பிற்படுத்தப்பட்டோர் 15 விழுக்காடு; முற்பட்டோர் 10 விழுக்காடு உள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் 75 விழுக்காடு; ஆதித்திராவிடர் 15 விழுக்காடு; முற்பட்டோர் 10 விழுக்காடு உள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோரும், ஆதித்திராவிடரும் கீழ்த்தர மான சாதி உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள, இவை நாற்றங்கால்களாக உள்ளன. இதுபற்றி எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

“தமிழ்நாட்டு அரசினர் மாணவர் விடுதி / மாணவி கள் விடுதி” என்று மட்டுமே பெயர்களை வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில், ஆண்டுதோறும் சேர்க் கப்பட வேண்டிய மாணவர்களின் வகுப்புவாரி எண் ணிக்கையை முடிவு செய்து, விடுதிகளிடையே சமமான எண்ணிக்கையில் பிரித்து இடம் அளிக்க வேண்டும்.

இவையெல்லாம் தமிழகத்துக்கும், இந்தியா முழு வதற்கும் உரிய நீண்டகால - மனித சமத்துவ உரிமை வருவதற்கான திட்டங்கள் ஆகும்.

இப்போது, மேலே கண்ட ஊர்களில் இழப்புக்கு உள்ளான ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் முழு இழப் பீட்டுத் தொகை வழங்கப்படத் தக்க ஏற்பாடுகளைத் தமிழக அரசினரும், இந்திய அரசினரும் உடனடியாகச் செய்துதர வேண்டும்.

2.            மூன்று ஆதித்திராவிடர் குடியிருப்புகளையும் சூறையாடிய அத்துணைக் குற்றவாளிகளையும் அடை யாளம் கண்டு, கைது செய்து, வழக்குத் தொடுத்து, நடமாடும் நீதிமன்றம் வழியாக உடனே தண்டனை வழங்க வேண்டும்.

3. காவல்துறையிலும், வருவாய்த்துறையிலும் கொஞ்சமும் பொறுப்பில்லாமலும், சொந்தச் சாதி உணர்ச்சி யோடும் செயல்பட்ட அதிகாரிகளை அடையாளங் கண்டு, அவரவர்களுக்குத் தொடர்புடைய துறை மூலம், கடுமை யான தண்டனை அளிக்க வேண்டும்; தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெறச் செய்ய வேண்டும்.

3. “கட்டைப் பஞ்சாயத்துக்காரர்” என்கிற காட்டாண்டிக் கொள்ளைக்காரர்களை அடையாளங்கண்டு, காவல் துறைக்கும் - அவர்களுக்கும்; அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுக்கும் இருக்கிற தொடர்புகளை நாம் தான் அறுக்க வேண்டும்.

5. எந்த ஓர் அரசியல் வாக்குக்கோருகிற கட்சியும் - கட்சி வளர்ச்சி, கட்சி நலன் கருதி, அவரவர் சார்ந்துள்ள சாதி உணர்ச்சிக்குக் கூர் சீவி விடுவதைக் கைவிட வேண்டும்.

இப்போது மணம்புரிந்து கொண்ட திவ்யா-இளவரசன் குடும்பம் அமைதியாக வாழ எல்லோரும் வழிவிட வேண்டும்.

ஏற்கெனவே, பழைய தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த வன்னியர் வகுப்பைச் சார்ந்த அக்காள் - தங்கைகள் இருவரும் - நத்தம் ஆதித்திராவிட அண்ணன் தம்பிகளை 23 ஆண்டுகளுக்கு முன் - நக்சல்பாரி தோழர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டனர்; இன்றும் இவர்கள் நலமாக வாழ்கின்றனர். 15 மாதங்களுக்கு முன்னர், அதே ஊரில், ஓர் ஆதித்திராவிடர் - வன்னியர் பெண்ணை மணந்து கொண்டு, அவர்கள் வெளியூரில் வாழ்கிறார்கள். இதுகண்டு எவரும் அருவருப்போ, ஆத்திரமோ கொள்ளுவது இன்றும் வேண்டுமா? மோதி அழிவது சரியா? எல்லோரும் சிந்தியுங்கள்.

- வே.ஆனைமுத்து