எவ்வளவுதான் நாகரிகமும் முன் னேற்றமும் அடைந்துவிட்டதாகப் பெரு மிதத்துடன் நாம் கூறிக் கொண்டாலும், “பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்” என்று பழிவாங்கும் காட்டுமிராண்டிக் காலச்சிந்த னைப் போக்கிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பதன் ஓர் அடையாளம்தான் சட்டப்படி முகம்மது அஜ்மல் அமீர் கசாப் 21-11-2012 அன்று காலை எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்ட நிகழ்வாகும்.

1980இல் உச்சநீதிமன்றம், ‘அரிதினும் அரிதான’ குற்ற நிகழ்வுகளில் மட்டுமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை வகுத்தது. அந்த அளவு கோலின்படி கசாப்புக்குத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று கடல் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்த பத்து பாக்கிஸ்தானிய இளைஞர்கள், நகரின் முதன்மையான நான்கைந்து பகுதிகளில் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். கசாப்பும் அவன் கூட்டாளியும் சத்திரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்தில் சுட்டதில் மட்டும் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பத்துப் பாக்கிஸ்தானியரில் 9 பேர் காவல்துறையினரால் இத்தாக்குதலின்போது கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான். தன் சாவைப்பற்றிக் கவலைப்படாமல் இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கசாப், நான்கு ஆண்டுகளுக்குப்பின் தூக்கிலிடப்பட்டான்.

ஒருவன் கொடிய குற்றவாளியாக உருவாவதற்கு சமூகமும் ஒரு காரணமாக இருக்கிறது. பாக்கிஸ்தானில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த கசாப் படிக்க முடியாததாலும், வறுமையாலும், போக்கிலித்தனத்தாலும் லஷ்கர்-இ-தொய்பா எனும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் வலையில் சிக்கினான் அதனால் மும்பைத் தாக்குதலின் அம்பாகச் செயல்பட்ட கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. ஆனால் அவனுக்குப் பயிற்சி அளித்து ஏவியவர்கள் காதுகாப்பாகப் பாக்கிஸ்தானில் அரசின் ஆதரவுடன் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

கசாப்புக்கு முன் 2005 ஆம் ஆண்டு தனஞ்செய் சட்டர்ஜி என்பவர் தூக்கிலிடப்பட்டான். அதற்கு முன் 1995இல் ஆட்டோ சங்கர் சேலம் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அதிரினும் அரிதான நிலைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் 400 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேரின் கருணை விண்ணப்பம் குடியரசுத் தலைவரின் கருணைக் காக காத்துக்கிடக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பொது அவையில் மரணதண்டனை ஒழிப்புத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இத்தகைய தீர்மானம் 19-11-2012 அன்று கொண்டு வரப்பட்டது. 110 நாடுகள் மரண தண்டனை ஒழிப்பை ஆதரித்தன. இந்தியா உள் ளிட்ட 39 நாடுகள் இத்தீர் மானத்தை எதிர்த்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகள், அரசியல் மற்றும் மதக்காரணங்களால் செய்யப்படுகின் றன. இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினையின்போது நடந்த படுகொலைகள் இத்தன்மையானவை. இந்திராகாந்தி ‘புளு ஸ்டார்’ நடவடிக்கை என்ற பெயரில் பொற்கோயிலில் படையை ஏவி நூற்றுக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றார். இதன் எதிர்விளைவாக இந்திராகாந்தி கொல்லப்பட்டார். இதன் விளைவாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக எவரும் தூக்கிலிடப்படவில்லை.

மரணதண்டனைக்கு அஞ்சி எவரும் குற்றங்கள் செய்யாமல் இருப்பதில்லை என்று பல ஆய்வுகள் எண்பித் துள்ளன. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பிறகு, அவர்களில் பலர் குற்றமற்ற அப்பாவிகள் என்பது அம்பலமாகியிருக்கிறது. நீதிபதிகளும் தவறு செய்யக்கூடிய மனிதர்களே! அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளில் பொதிந்துள்ளன. 2012 சூலை 14 அன்று இந்தியாவில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கும் நடைமுறையில் தங்களை அறியாமல் தவறுகள் நேர்ந்துவிடுகின்றன என்றும் எனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத்தண்டனையை நிலையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு மடல் எழுதி னார்கள்.

அகிம்சையே உயர்ந்த அறநெறி எனப்போற்றிய காந்தியடிகள் வாழ்ந்த மண்ணில் எந்தநிலையிலும் எவருக்கும் மரணதண்டனை விதிக்கக்கூடாது. மரண தண்டனையை ஒழிப்போம், மனித உயிரின் மாண்பைக் காப்போம். நாகரிகச் சமூகத்தைப் படைப்போம்.