உலகமயமாதல் கொள்கை 1991இல் நடைமுறைக்கு வந்த பிறகு, பன்னாட்டு முதலாளித்துவ பயங்கரத் தாக்குதல் தலைத்தூக்கத் தொடங்கியது. சாதாரண மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதை உலக அளவில் உள்ள பல அறிஞர்கள்  சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1999ஆம் ஆண்டு மானுட மேம்பாட்டு (Human Development Report) அறிக்கை உலக நாடுகள் சந்தித்து வரும் குற்றஇயல் நடவடிக்கைகளைப் பறைசாற்றியது. குற்றவாளிகள்தான் பொருளாதார பயன்களைப் பெருமளவில் பெற்று வருகின்றனர் என்றும் இவ்வறிக் கை சுட்டியது.  கட்டுப்படுத்தப்படாத மூலதனச் சந்தை யின் வழியாகவும் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தாலும் கறுப்புப் பணம் போதைப் பொருள் வணிகம், பெண்கள் பாலியல் தொழில், ஆயுதம் கடத்தல் ஆகிய சமூக விரோத-நாட்டு விரோத செயல்கள் பெருகி வருகின்றன என்று, 2003இல் கூடிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. சில நாடுகளைத் தவிர இந்தியா உட்பட பல நாடுகள் இதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு செயல்படவில்லை. பனாமா பாரடைஸ்  ஆவணங்களும் வெளி வந்த பிறகும் அதில் இடம் பெற்ற பொருளாதாரக் குற்றவாளிகளின் எண்ணிக் கையை அறிந்தும் இந்திய அரசு  அமைதி காக்கிறது. பெரும் பணக்காரர்களை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அறமற்ற அரசியல் உள்நாட்டில் பேராதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய ஆட்சியிலின் சக்தி வாய்ந்த மூன்று அமைப்புகளான அரசு நிர்வாகம், சட்டமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் அண்மைக்காலமாகச் செல்வாக்குமிக்க தனிநபர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனவா? என்ற ஐயம் பல ஆய்வாளர்களுக்கு எழுந்துள்ளது. இந்தத் தீய சக்திகள் அனைத்து மாநிலங்களின் அதிகாரங்களையும் தில்லியில் குவித்து விட்டால் எளிதாக இந்த அமைப்புகளில் இயங்கும் நபர்களைப் பெரும் விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் நம்புகின்றனர். இது கடும் குற்றச்சாட்டுப் போலத் தோன்றி னாலும் நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் இந்திய ஆட்சியியல் சிதைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திய ஆட்சியியலில் இயங்கி வருகிற தன்மைகளை அறிந்து கொள்வதற்கு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டமான 1947 தொடங்கி 1966 வரை; இக்காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் பிரதமர்களாக நேருவும் லால் பகதூர் சாஸ்திரியும் பணியாற்றினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் செய்த தியாகம் விடுதலைக்குப் பிறகு இவர்கள் நிர்வாகத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றிய பாங்கினையும் மீறி ஊழல்கள், அத்துமீறல்கள், மாநில அரசுகளின் உரிமை களைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவில் பெரும் போராட்டங்கள் வெடித்த போதெல்லாம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குறைகளைச் சுட்டிய போது ஆட்சியியலில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்கு இந்த இரு பிரதமர்களும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சான்றாக நேரு காலத்தில் இடஓதுக்கீடு கொள்கை சென்னை மாகாணத்தில் நீதிமன்றத்தாலும் ஆதிக்கச்சக்திகளின் சதியாலும் முறியடிக்கப்பட்ட போது தந்தை பெரியார் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடத்திய பெரும் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு நேரு மதிப்பளித்தார். 1951இல் வந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தமே இதற்குச் சான்றாகும். மேலும் தென்னக மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் நிர்வாக மொழியாக நீடிக்கும் என்ற  வாக்குறுதியையும் நிறைவேற்றினார். காஷ்மீர் பிரச்சினையிலும் நேரு இந்திய அரசோடு காஷ்மீர் இணைந்த போது அளிக்கப் பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்ற முற்பட்டார். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட் டம் நடைபெற்ற போது மாணவர்களின் எழுச்சியைக் கண்டு இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உறுதியை அளித்தார்.

2017 அக்டோபர் 2ஆம் நாள் லால் பகதூர் சாஸ்திரி மறைவு தினத்தையொட்டி,, ஆங்கில இந்து நாளேட்டில் அவரது மகனான சுனில் சாஸ்திரி தனது தந்தையின்  நினைவுகளைப் போற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந் தார். அதில் ஒரு முதன்மையான கருத்துச் சுட்டப்பட் டுள்ளது. இந்திய நிர்வாகம் மக்களின் தேவைக்கேற்பவும் வளர்ச்சிக்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தனது தந்தை உறுதியாக நம்பினார். அவர் காலத்தில்தான் முதன்முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக 1966இல் மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார். ஒன்றிய-மாநில உறவுகளைத் தீவிரமான முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இதன் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட திறமையான நேர்மையான அரசு சேவையையும் அரசு நிர்வாகத்தையும் உருவாக்கி அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்பட மாநிலங்களுக்கிடை யேயான மன்றத்தைக் (Inter-State Council) கூட்டி ஒன்றிய-மாநிலங்கள் இடையே ஏற்படும் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்தியது. இந்த நிர்வாகச் சீர்த்திருத்த ஆணை யத்தின் பரிந்துரைகளை உரிய நேரத்தில் தக்க முறை யில் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் மாநிலங்களைச் சார்ந்து எழும் பல சமுதாய பொருளாதார நிதி பிரச்சினைகளைச் சரியான முறையில் தீர்த்திருக்க முடியும். ஆனால் லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு வந்த பிரதமர்கள் அனைவரும் ஒன்றிய அரசில் அதிகாரக் குவிப்பை மேம்படுத்துவதிலேயே பெரும் அக்கறை காட்டினார்கள். நோய் முற்றியப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில் மருந்து மாத்திரை கள் வழியாகத்  தீர்வு காண்பது போல, முதல் நிர்வாகச் சீர்த்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் ஒன்றிய அரசிற்குச் சார்பாகவே பின்பற்றப்பட்டன.

2005இல் இரண்டாம்  நிர்வாகச் சீர்த்திருத்த ஆணையம் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப் பட்டது. தமிழகத்தினுடைய மாநில உரிமை தொடர்பான கருத்துக்களை அறிய அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை ஆணையத்தின் தலைவர்  வீரப்ப மொய்லி நேரில் சந்தித்தார். இக்கட்டுரையாசிரியர்தான் புதுதில்லியில் இருநாட்கள் தங்கி  இந்த ஆணையத்தின் தலைவர் வீரப்ப மொய்லியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். குறிப்பாக பொடா என்னும் அடக்கு முறைச் சட்டம் நீக்குதல், 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய  அரசின் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தல் ஆகியன குறித்தும் தமிழக அரசின் சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆணையத்தின் ஒரே ஒரு வெற்றி 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றியதுதான்.

பொடா சட்டத்தைப் பெயரளவிற்கு நீக்கினாலும் அதைவிட மோசமான பல சட்டங்கள் இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றன என்பதையும் இக்கட்டு ரையாசிரியர் வீரப்ப மொய்லியிடம் சுட்டிக்காட்டினார். சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அன்றைய அரசு  தமிழ்நாடு அரசின்  சில கோரிக்கைகளை ஏற்றது. அவற்றில் உள்ளாட்சித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றிப் பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் செய்த சதியும் முயற்சியும் முறியடிக்கப்பட்டன. அதே போன்று சரக்கு சேவை வரி  விதிப்பினால் மாநிலங்கள் அதிகாரம் பறிக்கப்படும் என்ற கருத்தும் அப்போது ஏற்கப்பட்டது. இதில் ஒரு வியப்பு என்னவென்றால் அன்றைய முதல்வர் கலைஞர் ஒன்றிய அரசிற்கு மாநில உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு அனுப்பிய கடிதம் மற்ற மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டது. அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழ்நாடு எழுப்பிய இந்த இரு கருத்துக்களையும் ஏற்று ஒன்றிய அரசிற்கு எதிராகக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்வாக ரீதியாக லால் பகதூர் சாஸ்திரி நினைத்தது போன்று ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், தில்லியில் குவிந்துள்ள அதிகாரக் குவிப்பைத் தகர்க்க வேண்டும் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாநில உரிமைகளைப் பறிக்கும் தொடர் செயல்கள் இரண்டாம் காலகட்டமான 1966-2016இல் இந்திய ஆட்சியியலில் வலிமை பெற்று வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். நிர்வாகம் நேர்மையாகவும் தரம் மேம்பட்டதாகவும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அமையாத காரணத்தினால்தான் ஒன்றிய அரசின் சட்டங்களை, நிர்வாக முடிவுகளை எதிர்த்துப் பல பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்தன. சான்றாக தமிழ்நாடு அரசே காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டப்படிச் செல்லாது என்றும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா அரசு தமிழகத் திற்குத் தர வேண்டிய உரிய நீரை வழங்கவில்லை. ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடுநிலையோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் ஒன்றிய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. இது ஆட்சியியலில் எற்பட்ட மாபெரும் சறுக்கலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகக் கூட்டாட்சி யியலை எதிரொலிக்கவில்லை என்றாலும் ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று அதிகார வரையறைகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக் கான கடமைகளை மாநிலங்கள் நிறைவேற்றுவதற்கான சட்டமியற்றும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றங்களுக்கு உரிமை இருப்பினும் இதை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை. சான்றாக 2006ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளும் என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி அந்தச் சட்டத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்ற பின்னர் 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் இனிமேல் மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்குள் நடத்தும் மாணவர் சேர்க்கைத் தேர்வு களை ஒன்றுபடுத்தி ஒன்றிய அரசே நடத்தும் என்று அண்மையில் அறிவித்திருப்பதும் அப்பட்டமான மக்கள் விரோத-சட்டவிரோத செயல்களாகும். இதுபோன்று எண்ணற்ற முரண்பாடுகளை ஆட்சியியலில் ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு மேம்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு அடித்தளமாகும். இந்த அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில் பண உயர்மதிப்பு நீக்கலும் சரக்கு சேவை வரிகளை உயர் வீதங்களில் அறிவித்து தற்போது குஜராத் தேர்தலுக்காக 177 பொருட்களின் மீதான வரி வீதங்களைக் குறைத்ததும் சான்று பகர்கின்றது. குறிப்பாக பல அரசமைப்புச் சட்ட வல்லுநர் கள் அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் புகுந்து ஒன்றிய அரசின் நிதியமைச்சரும் மாநில அரசின் நிதியமைச்சர்களும் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிடுகின்றனர்.

ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிப் பதற்கு முன்பும் ஒவ்வொரு மாநில அரசும் தனதும் வரி வருவாயை உறுதி செய்த பிறகுதான் நலத்திட்டங் களுக்கான செலவுகளை முடிவு செய்ய முடியும். இது பொது நிதியியலின் முதன்மையான  அறமாகும். இந்த அறநெறியைச் சரக்கு, சேவை வரிக் குழு (GST Council) அறவே நசுக்கிவிட்டது. பா.ஜ.க.வின் வெற்றிக்காக 29 மாநிலங்களின் கோரிக்கைகளை உரிய முறையில் ஆராயாமல் அரசியல் அழுத்தத்தின் காரணமாக செய்யப்பட்ட இந்த வரி மாற்றங்கள் கூட்டாட்சியியலுக்கும் மக்களாட்சிக்கும் செய்த பெரும் துரோகங்களாகும்.

திறன் மிக்க அரசியல் தலைவர்கள் ஒன்றிய-மாநில அரசுகளில் இடம் பெறாததால் இன்றைக்கு இந்திய ஜனநாயகம் திறனற்ற எதேச்சதிகார அதிகார வர்க்கத்தின் ((Bureaucratic and Autocratic system) பிடியில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாகத்தான் பல நேரங்களில் நீதிமன்றங்களில் மாநில, ஒன்றிய அரசுகள் இயற்றும் சட்டங்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்படுகின்றன.  நீதித் துறையிலும் மேலாதிக்க சக்திகள் கோலோச்சுவதாலும் முன்னுக்குப்பின் முரணாக தீர்ப்புகள் அடிக்கடி வழங்கப்படுவதாலும் பெரும்பான்மையான ஏழை மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

2017 நவம்பர் 20ம் நாள் ஊழலும் இத்துறையில் உட்புகுந்து விட்டது. “அவுட்லுக்” என்ற ஆங்கில ஏடு “ஒரு கோடி ரூபாயைக் கொடு; உன்னை நீதிபதியாக ஆக்குகிறேன்” என்ற கொட்டை எழுத்தோடு ஏட்டின் முன்அட்டையிலேயே தலைப்பு வெளியிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நீதிபதி தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள், ஊழல்கள் ஆதாரத்துடன் வெளியிடப் பட்டுள்ளன. இதற்குத் தீர்வாக அகில இந்திய அளவில் நீட்  தேர்வு போன்ற ஒன்று நீதித்துறைக்கும் நடத்தப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார். நீதிநாயகம் சந்துரு மாநில உரிமை, சமூக நீதி கூட்டாட்சியியல் ஆகியவை இத்தேர்வால் பாதிக்கப்படலாம் என்று இதே ஏட்டில் கருத்துத் தெரிவித்துள்ளார். “ஆளுக்கொரு நீதி; சாதிக் கொரு நீதி; ஊழலுக்கும் ஒரு நீதி என்ற அடிப்படையில் நீதித்துறை இயங்குகிறதோ என்ற அச்சத்தைப் பல மூத்த வழக்கறிஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் ஒன்றியப் புலனாய்வுத் துறை ஒரிசா மாநிலத்தில் பிரசாத் அறக்கட்டளை நடத்தும்  மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் தேர்வில் பெருமளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. செப்டம்பர் 19 2017இல் ஒன்றியப் புலனாய்வுத் துறை ஒரிசா உயர் நீதிமன்ற  ஓய்வு பெற்ற நீதிபதி குடிசி மீதும், பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள் மீதும் முதல் தகவல் அறிக் கையை அளித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செலமேசுவர் வழக்கை விசாரிப்பதற்கு ஓர் அமர்வை நியமித்தார். இதில் கோபமுற்ற தலைமை நீதிபதி மிஸ்ரா, ஒரு நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் போட முடியுமா? இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று உரத்தக் குரலில் கருத்துத் தெரிவித்தார். அமர்வை அமைக்கும் அதிகாரம் சட்டப்படித் தனக்கே உள்ளது என்று அறிவித்து, நீதிபதி செலமேசுவரர் அமைத்த அமர்வை நீக்கியுள்ளார். ஆனால் பல சட்ட ஆய்வாளர்களும் அறிஞர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்திற்கு எதிராகத் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

மேற்கூறிய கூற்றுகளில் இருந்து பணமும் ஊழலும் நீதித் துறையின் படிகட்டுகளில் ஏறத் தொடங்கியுள்ளன என்பதை யார் மறுக்க முடியும்? தமிழில் ஒரு முதுமொழி உண்டு. நான் பள்ளி மாணவனாக இருந்த போது, எனது ஆசிரியர் தமிழில் சிறிய பிழை செய்தால்கூட அந்த முதுமொழியைக் கூறிக் கடுமையான முறையில் சாடுவார். இரண்டு பேர் வகுப்பில் பேசினால் உடனே அழைத்து ஒருவர் காதை இன்னொருவர் பிடித்துக் கொண்டு “உன்னால்” நான் கெட்டேன். “என்னால் நீ கெட்டாய்” எனக் கூறிக்கொண்டே தோப்புக்கரணம் போடச் சொல்வார். நிர்வாகத்துறையால் சட்டமன்றத் துறை கெட்டதா? சட்டமன்றத் துறையாலும் நிர்வாகத் துறையாலும் நீதித்துறை கெட்டுப் போய்விட்டதா? தோப்புக்கரணம் போடும் நிலைக்கு இந்திய ஆட்சியியல் சீரழிகிறதா?