தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் படையின் வரவேற்பின்போது சென்னை கடற்கரையில் 11.9.1938இல் இரண்டு இலட்சம் மக்கள் முன்பு தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார்.

நீதிக்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சென்னையில் 29, 30, 31 திசம்பர் 1938இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டின் தலைமையுரையில் (பெரியார் பெல்லாரி சிறையில் இருந்ததால் அவருடைய தலைமையுரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்) இறுதியில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கூறி இருந்தார்.

1939இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆந்திரர்களும், மலையாளிகளும் “நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால், நாங்கள் எங்கே போவது” என்று கேள்வி எழுப்பினர். அப்போது மொழிவழி மாநிலம் பிரியவில்லை. காங்கிரசுக் கட்சியைப் போல மொழிவழி மாநில அமைப்பும் நீதிக்கட்சியில் இல்லை. நான்கு மாநில மொழி பேசும் மக்களுக்கு ஒரே அமைப்பாகத்தான் நீதிக்கட்சி செயல்பட்டு வந்தது.

எனவேதான், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என முழக்கம் மாற்றி அமைக்கப்பட்டது.

பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வு சென்னை மாகாண ஜ°டி° கட்சியின் 15ஆவது மாநாடு ஆகும். இது ஆகத்து 24, 25, 1940இல் திருவாரூரில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் திராவிட நாடு பிரிவினையைத் தீவிரப்படுத்தக் குழு அமைக்கப்பட்டு, அதுதொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவாரூரில் நடைபெற்ற 15ஆம் ஜ°டி° மாநாட்டில் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை

அன்பார்ந்த வரவேற்புத் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!!

தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகிய ஜ°டி° கட்சியின் 15ஆம் மகாநாட்டின் தலைமைப் பதவியை எனக் களித்து என்னைப் பெருமைப்படுத்தியதற்காக நான் எனது உளம் நிறைந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற வருட மகாநாட்டுக்கும் தலைமைப் பதவி வகிக்க என்னையே தேர்ந்தெடுத்தீர்கள். இவ்வருடமும் என்னைத் தேர்ந்தெடுத்தது என்னிடத்தில் தங்களுக்கிருக்கும் அன்பும் நம்பிக்கையுமே என்று கருதி நான் பெருமை அடைகிறேன்.

நம் கட்சி விஷயமாகவும் மற்றும் பல விஷயங்களைக் குறித்தும் சென்ற வருடத்திய மகாநாட்டின் போது எனது தலைமை உரையில் பல எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆகையால் இவ்வருடம் அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் நமது முக்கியமான தேவைகளைக் குறித்தும் நமது முன்னணி வேலை களைக் குறித்தும் இச்சமயத்தில் பேசுவது அவசியமெனக் கருதுகிறேன்.

செல்வம்

சென்ற வருடத்திய மகாநாட்டின் போது நான் நேரிலிருந்து தலைமை வகிக்க முடியாமல் ஆரியக் காங்கிர° ஆட்சியின் அடக்குமுறையின் பயனாய் சிறையிலிருக்க வேண்டியதாகிவிட்டதால் எனக்குப் பதிலாக மகாநாட்டின் தலைமைப் பதவியிலிருந்து காரியாதிகளைச் சிறப்பாக நடத்தினவரும், நமது கட்சிக்கு ஆரம்பித்த காலமுதல் ஒரே கொள்கையுடனிருந்து அருந்தொண்டாற்றி வந்து முக்கிய தூண் போலிருந்தவருமான நமதருமைத் தோழர் ஸர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் எதிர்பாராத முடிவடைந்து இன்று நம்மத்தியில் இங்கில்லாதிருப்பது நமக்கு சகிக்க முடியாததும், பரிகரிக்க முடியாததுமான பெரும் துக்கமும், நஷ்டமுமான காரியமாகும் என்பதோடு அவரது குடும்பத்தாருக்கு எனது தனிப்பட்ட ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள்

மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு முன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வரிந்து கட்டி முன்னணியில் நின்று காங்கிர° அடக்குமுறை ஆட்சியில் பலியாகி சிறைப்பட்டு கஷ்ட நஷ்டமடைந்த தோழர்களுக்கும், தாய்மார்களுக்கும் மற்றும் உயிரை விட்ட வீரர்களுக்கும் நமது பாராட்டுதலும் நன்றியறிதலும் அனுதாபமும் உரியதாகும். உயிர் விட்ட வீரர்களின் மனைவி மக்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் தனிப்பட்ட அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

யுத்தம்

அடுத்தாற்போல் நாம் மிகுதியும், கவலையும், பயமும் கொள்ளத்தக்கதான சம்பவம் ஒன்று ஏற்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. அது என்னவெனில் இப்போது ஐரோப்பாவிலும், மற்றும் சில இடங்களிலும் செர்மனியின் கொடுமையான முறைகளின்கீழ் நடத்திவரும் அகோர யுத்தமேயாகும்.

இந்த யுத்தம் செர்மனிக்கும் ஐரோப்பிய மற்ற நாடு களுக்குமோ அல்லது செர்மனிக்கும், ஏதோ சில நாடுகளுக்கு மாத்திரமோ நடக்கும் யுத்தமாகக் கருதக்கூடியதல்ல. இது உலகச் சுதந்தரத்திற்கும் நாகரிகத்திற்கும் அழிவு ஏற்படக் கூடியதான ஒரு மாபெரும் கேடான காரியமென்றுதான் சொல்ல வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டாவது செர்மனி இந்த யுத்தத்தில் (வெற்றி பெறாது என்றாலும்) ஒரு சமயம் வெற்றி பெற்றுவிட்டால் மற்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் நம் நாட்டுக்கும் பெரியதொரு கேடாக முடியுமென்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டிய தில்லை. ஆகவே இன்று கிரேட் பிரிட்டனானது செர்மனியை எதிர்த்து போராடுவது பிரிட்டனுடைய நன்மைக்கு மாத்திர மல்லாது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் சுதந்தரத்திற்கும் போராடுகிறதென்பதை ஒவ்வொருவருடைய மனதிலிருத்த வேண்டியதும் அதற்காக வேண்டி நம்மாலான எல்லா உதவிகளையும் பிரிட்டனுக்குச் செய்ய வேண்டியதும் நம் முடைய கடமையாகும்.

நம் கட்சி

நம்முடைய கட்சியாகிய இந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது 25 வருடத்திற்கு முன்பாகவே முக்கியமாய் தென்னாட்டுத் திராவிட மக்கள் அரசியல், சமுதாயம், கல்வி, பொருளாதாரம் முதலிய துறைகளில் தலையெடுக்க முடியாமல் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் நிலையிலிருந்து மீட்கப்படச் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அதற்காகவே அக்கட்சியினுடைய முக்கியமான கொள்கைகள் எல்லாம் அரசியல் சமுதாய விடுதலையும். அரசியல் தனித்தொகுதிப் பிரதிநிதித்துவ உரி மையும், அரசாட்சி, உத்தியோகம், பதவி ஆகியவைகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஆகும். இவைகளுக்காக இந்த இருபத்தைந்து வருட காலமாய் நம் கட்சி °தாபனம் எவ்வளவோ உழைத்து வந்தும் எந்தக் குறிப்பிடத்தகுந்த அளவிற்கும் முன்னேற்றமடைந்ததாகவோ விடுதலை அடைந்ததாகவோ சொல்வதற்கில்லை.

மற்றும் நம் முக்கியக் கொள்கைகளில் தனித் தொகுதி தேர்தல் உரிமையை நாம் சரிவர வலியுறுத்தாமல் அலட்சிய மாயிருந்து நழுவ விட்டுக் கொண்டே வந்துவிட்டோம் என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். அந்தக் காரணமே நம்முடைய மக்கள் மேலும், மேலும் கட்டுக் குலைந்து போகவும், எதிரிகளுக்குக் கையாளாக இருந்து நமது சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கவும் ஏற்பட்டு விட்டது. மேலும் இந்தத் தனித்தொகுதி முறையை நம் மற்றெல்லாக் கொள்கைகளையும் விட முக்கியமானதெனக் கருதி நாம் சரியானபடி வலியுறுத்தாமல் விட்டுவிட்டதானது நம் கட்சியில் நிகழ்ந்த ஒரு தப்பிதமாகவும் கருதக்கூடியதாகி விட்டது.

தனித்தொகுதி

ஏனெனில், நம் நாட்டைப் போல் உள்ள அதாவது கொள்கைகளிலும் இலட்சியங்களிலும் சமுதாயத் துறையிலும் பல மாறுதல்கள் கொண்ட மக்களையுடைய ஒரு நாட்டில் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதி ஒவ்வொருவரும், அந்தந்த கொள்கைக்கும் இலட்சியங்களுக்கும் ஏற்ற வகுப்பு வர்க்க மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் அத்தேர்தல்களில் பிரவேசிக்க இடம் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் உண்மையான பிரதிநிதி கள் வரமுடியும். சட்டசபையில் இருக்கும் போதும் பதவி பெறும் போதும் தனது வகுப்பு மக்களால் தெரிந்தெடுத்தனுப்பப்பட்ட பிரதிநிதி என்பதும் ஞாபகத்திலிருக்க வேண்டும். எப்படியெ னில் வியாபார வகுப்புக்கு வியாபாரப் பிரதிநிதியும், கற்றோ ருக்கு கற்றோர் பிரதிநிதியும் ஐரோப்பியருக்கு ஐரோப்பிய பிரதிநிதியும், முசுலீமுக்கு முசுலீம் பிரதிநிதியும், கிறித்தவர் களுக்கு கிறித்தவ பிரதிநிதியும், ஆதிதிராவிடருக்கு ஆதிதிராவிட பிரதிநிதியும் இருக்க வேண்டும். அதுபோலவே ஆரியருக்கும் இருப்பதை நாம் ஆட்சேபிப்பதில்லை. இந்த இருவருக்கும் சமய சமுதாயக் கொள்கையில் பேதமில்லையா - முசுலீமுக் கும் கிறித்தவருக்கும் என்ன பேதமோ அதைவிடக் குறை வாகவோ ஆதிதிராவிடருக்கும் மற்ற ஆரியர், திராவிடர் ஆகி யோருக்கும் என்ன பேதமோ அதைவிடக் குறைவாகவோ இருக்கிறதா?

எப்பொழுது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், ஆதிதிராவிடர், கிறித்தவர், முசுலீம்கள், ஐரோப்பியர் முதலிய வகுப்பு, வர்க்கம், சமயம் ஆகியவைகளாக இந்நாட்டு மக்கள் பிரிக் கப்பட்டு உத்தியோகப் பதவி எண்ணிக்கையும் பிரிக்கப்பட்டு விட்டதோ சில வகுப்பார்களுக்குத் தனித்தொகுதித் தேர்தல் முறையும் கொடுக்கப்பட்டு விட்டதோ அப்போதே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் தேர்தல் தொகுதியும் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படித் தொகுதி பிரிக்கப்படவில்லையானால், பிரதிநிதித்துவம் கொடுத்தது என்பது எப்படி பூரணமானதாகும்.

இந்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கலுக்கே முக்கிய காரணம் புலி போலவும், ஆடு போலவும் உள்ள பல வகுப்பு மக்களையும் ஒரு பட்டியில் சேர்த்து கையில் வலுத்த எந்த வகுப்புக்காரையும் விட்டு வேட்டை ஆடச்செய்துவிட்ட கொடுமையே ஆகும். அதனாலேயே பலமற்ற ஒவ்வொரு வகுப்பு மக்களும் அவர்கள் எவ்வளவு பெரும்பான்மை யோராக இருந்தும் பொதுப்பட்டியில் இருந்து தப்பித்து ஓடி தனி பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அடைக்கலம் புக வேண்டியதாயும் ஆயிற்று. ஆதலால் இப்படிப்பட்ட வகுப்புக் கூட்டங்களில் இருந்து சிறு பான்மை, பெரும்பான்மை பார்ப்பது என்பது விஷயமறியாத காரியமேயாகும்.

கையெழுத்துக் கூடப் போடத் தெரியாத பதினாயிரம் பேர்களுக்கும் கையெழுத்து தெரிந்தும் கற்றறிந்தவராயும் உள்ள பத்துப் பேருக்கும் கல்வி போட்டி ஏற்பாட்டால் யார் வெற்றி பெறுவார்கள்? ஆகையால், திராவிட நாட்டில் உள்ள பழம்பெரும் குடிகள் நூற்றுக்குத் தொண்ணூற்று மூன்று பேர்கள் தற்குறி. இது அரசியல் புள்ளிவிபரமாகும். மற்றும் அவர்கள் சமுதாயத்துறையில் பல உயர்வு தாழ்வுகளாகப் பிரிக்கப்பட்டு பலவகையிலும், ஒற்றுமையற்று பிரிந்து தங்களிலே வேற்றுமையும் பொறாமையும் கொண்டு பேதப்பட்டு நிற்பவர்களாகும். இப்படிப்பட்ட இவர்களோடு ஞுநூற்றுக்கு நூறு பேர் படித்தவர்களும் சமுதாயத் துறையில் எவ்வித பேதம் இல்லாதவர்களும் இமயம் முதல் குமரி வரையிலும் மிகவும் கட்டுப்பாடாகவும், சூழ்ச்சித்திறனாகவும் உள்ள மக்களை விட்டு அரசியல் போட்டியில் கலக்கினால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நான் எடுத்துச் சொல்ல வேண்டுமா? இதனாலேயே திராவிடர்களாகிய நாம் (பார்ப் பனரல்லாதார்கள்) வெகுகாலமாக நஷ்டப்பட்டு வந்திருக்கி றோம். அதிலும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து ஐந்தாம் வருஷத்துச் சீர்திருத்தம் வந்த பிறகு நசுக்கப்பட்டே போய் விட வேண்டியவர்களாக ஆகிவிட்டோம். ஏனெனில், அச்சீர்திருத்தத்தில் நமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டதுடன் முன் இருந்த சிறிது பாதுகாப்பும் எடுக்கப் பட்டுவிட்டது. ஆதலால் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் பார்ப்பனரல்லாதாருக்குத் தனித்தொகுதி கொடுக்காத எந்த சீர்திருத்தத்தையும் நமது கட்சியார் பூரணமாய் நிராகரித்து விடத் துணியாத வரை இனி வரப்போகும் சீர்திருத்தங்கள் என்பவற்றில் நமக்கு விடுதலை ஏற்படப்போவதே இல்லை.

இதற்கு மாறுபாடான அபிப்பிராயம் கொண்டவர்கள் “ஒரு நாட்டு மக்கள் இப்படி பிரிக்கப்படுவதால் நாட்டின் பொது வாழ்வும் ஒற்றுமையும் கெட்டுவிடும்” என்று சொல்ல வரலாம். அப்படிச் சொல்லுவது வாதத்திற்கு நிற்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஒரு நாட்டின் பொது வாழ்வும் ஒற்றுமையும் அந்நாட்டு மக்களின் ஒவ்வொரு வகுப்பின் முன்னேற்றத்திலும் திருப்தியிலும் இருக்கிறதே ஒழிய, ஏதோ ஒரு வகுப்பு எல்லாத் துறையிலும் மேம்பட்டு சுகவாழ்வு வாழவும் மற்ற எல்லா வகுப்புகளும் கீழ்துறையில் இழிமக்களாகக் கருதப்பட்டு அடிமை வாழ்வு வாழவும் இருக்கும் நிலைமையிலும் இருப்பதைக் கொண்டல்ல.

உதாரணமாக இந்நாட்டுக்குச் சுமார் அரை நூற்றாண்டுக்குள் பல அரசியல் சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அச்சீர்திருத்தங்களில் 1910ஆம் வருடத்திலேயே தனித்தொகுதி உரிமை வழங்கப் பெற்ற முசுலீம்களும் கிறித்தவர்களும் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருக்க நேர்ந்ததோடு அவர்களுக்கு உண்மையான பிரதிநிதிகளும் வரமுடிந்தது. அரசியல் பதவி, உத்தியோகம் முதலானவைகளில் அவர்களுடைய பங்கும் கிடைத்து அதை அனுபவிக்கத் தகுந்த யோக்கியதையும் பெறமுடிந்தது. கண்விழிப்போடுஇருந்து மற்ற வகுப்பார் தங்களைச் சூறையாட முடியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் தக்கபடி முன்னேற்றமடையவும் முடிகிறது. அவர்கள்போல் இந்நாட்டுப் பழம்பெருங்குடி மக்களாகிய நாமும் அக்காலத் தில் கிளர்ச்சி செய்து தனித்தொகுதி உரிமை பெற்றிருந்திருப் போமேயானால் நமது நிலைமை இன்று உலகிலேயே மதிக்கத் தகுந்த ஒரு முக்கியமான சமுதாயமாக இருந்திருப் போம் என்றாலும் 1920ஆம் வருடச் சீர்திருத்தத்தின் போதாவது நம் தலைவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு நம் சமுதா யத்தைப் பார்ப்பனரிலிருந்து வேறாகப் பிரித்துத் தனிப்பட்ட சமுதாயமாகச் செய்து அதை அரசாங்கத்தாரும் மற்ற மக்களும் ஒப்புக்கொள்ளச் செய்து ஆதாரங்களில் பதிய வைத் தார்கள். இதற்காக நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டவர் களாக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பின் உள்ள தலைவர்கள் சிலர் தங்கள் தங்கள் நிலைமையைப் பார்த்து சமுதாயத்தைக் கணித்தார்களே ஒழிய எதிரிகளின் கட்டுப் பாட்டையும் சூழ்ச்சித்திறத்தையும் சரியானபடி கணித்துக் கொள்ளவில்லை. அதனாலேயே 1935ஆம் வருடத்து சீர் திருத்தத்தில் நம் சமூகத்திற்கு எவ்வித பாதுகாப்பும் செய்து கொள்ளத் தவறிவிட நேர்ந்தது.

ஆதலால், இனிவரும் சீர்திருத்தத்தில் நமது அரசியல் கோரிக்கையானது முதலாவதாக முசுலீம்கள், கிறித்தவர்கள் ஆகியவர்களைப் போலவே மற்ற திராவிடச் சமுதாயத்திற்கும் (பார்ப்பனரல்லாதாருக்கு) தனித்தொகுதி தேர்தல் முறை இருந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்த வேண்டும். அதில்லாத சீர்திருத்தம் எப்படிப்பட்டதாயினும் அதை அடியோடு விலக்கம் செய்து தீரவேண்டும் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுமாத்திரமல்லாமல், இம்முடிவை காரியத்தில் கொண்டுவர நாம் எல்லாவித கஷ்ட நஷ்டங் களை ஏற்கவும் கடைசிவரை போராடவும் நாம் உறுதி கொள்ள வேண்டும். இதிலே தான் நமது பிற்கால வாழ்வின் நிலை இருக்கிறது என்பதை நான் இந்தச் சமயத்தில் வலி யுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இதுபோலவே எனது ஆதிதிராவிட வகுப்பாரும் நம் எல்லோருடைய கூட்டுறவு முயற்சியாலும் அடைந்த தனித் தொகுதி உரிமையைப் பூனா ஒப்பந்தத்தின் பேரால் இழந்து விட்டு முன்னிருந்த நிலையை விட மிக மோசமான நிலை மைக்குப் போக நேர்ந்த தவறுதலை உணர்ந்து இனி மேலாவது கட்டுப்பாடாய் எச்சரிக்கையாய் இருந்து பூரண பரிசுத்த தனித்தொகுதி முறையை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கு ஆக நாமும் நம்மாலான எல்லாவித ஒத்துழைப்பும் அளிக்கத் தயாராய் இருக்கிறோ மென்றும் தெரிவித்துக் கொள்ளுவதோடு நமது முயற்சிக்கு அவர்களது ஒத்துழைப்பும் இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

- ‘குடிஅரசு’ 25.08.1940

(தொடரும்)