கடந்த சூன் 25 நள்ளிரவு முதல் நடுவண் அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உருபா 3.50, டீசல் உருபா 2.00, மண்ணெண்ணெய் உருபா 3.00, சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு உருபா 35.00 என உயர்த்தப்பட்டது. கடந்த ஓராண்டுக் காலமாக உணவுப் பொருள்களும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மற்ற பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ள நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் பெட்ரோலியப் பொருள் களின் விலையை நடுவண் அரசு உயர்த்தி இருக்கிறது.

கிரித் பரிக் தலைமையிலான வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று, பெட்ரோல் விலையை உலகச் சந்தையின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விற்பனை செய்யும் நிறுவனங்களே நிர்ணயிக்கும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று டீசலின் விலையையும், விற்பனை செய்யும் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று நடுவண் அரசு கூறியுள்ளது. 2009இல் இரண்டாவது தடவையாக மன்மோகன்சிங் தலைமையில் தில்லியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு, தாராளமய, தனியார்மயக் கொள் கையை நடுவண் அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ளது.

அடக்கவிலையைவிடக் குறைவான விலைக்கு விற்பதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இத்தன்மையில் ஓராண்டில் 53,000 கோடி இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வைக் கைவிட்டால், இத் தொகை உருபா 70,000 கோடியாக அதிகரிக்கும். இத்தொகையை மக்களின் நலத் திட்டங்களுக்கு - நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் செலவிடாமல், மானியமாகத் தருவது சரியா என்று கேட்கிறார் மன்மோகன்சிங்.

இந்த விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்களைப் பாதிக்காதவாறு நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும். இம்மக்களின் நலன்கருதித்தான் அடக்க விலையைவிட மண்ணெண்ணெய் லிட்டருக்கு உருபா 17.92ம், சமையல் எரிவாயு ஒரு சிலிண்டர் உருபா 261.90ம் குறைவாக வழங்கப்படுகிறது என்றுகூறி விலை உயர்வை நியாயப்படுத்துகிறது நடுவண் அரசு. பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒரு நாளைக்கு 27 காசும், எரிவாயு விலை உயர்வால் 1.00 உருபாயும் ஒரு குடும்பத்துக்குக் கூடுதலாகச் செலவாகும்; இது ஒரு பெரிய விலை உயர்வா?’ என்று கேட்கிறார். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோ லியப் பொருள்களின் விலையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது என்று கூறி நடுவண் அரசு மக்களை ஏமாற்றுகிறது.

இப்போது இந்தியா வில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உருபா 53. ஆனால், பாக்கித்தானில் உருபா 26, வங்க தேசத்தில் உருபா 22, நேபாளத்தில் உருபா 34, இரத்தக்களறியாகக் கிடக்கும் ஆப்கானித் தானில் உருபா 33, மலேசியாவில் உருபா 20 என விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவை யில் இந்தியா 70 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. இதைப்போலவே இந்த நாடுகளும் இறக்குமதி செய்கின்றன. ஆனால் அந்த நாடு களில் மட்டும் விலை எப்படி மிகவும் குறைவாக இருக்கிறது? உற்பத்தி வரி, சுங்கவரி என்று நடுவண் அரசும், விற்பனை வரி என்று மாநில அரசு களும் அதிகஅளவில் வரி விதிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. ஒரு உருபாயில் 45 காசுகள் வரியாகச் செல்கிறது. நடுவண் அரசுக்கு உற்பத்திவரி, சுங்கவரிமூலம் வருவாய் கிடைப்பதுடன், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிலிருந்து உரிமைப் பங்கு (டிவிடெண்டு) கிடைக்கிறது.

பாகித்தான், வங்க தேசம் முதலான நாடுகளில் அரசு விதிக்கும் வரிகள் குறைவாக இருப்பதால், பெட்ரோல், டீசல் விலையும் குறைவாக இருக்கிறது. கொழுத்த வரிவருவாய் பெறும் நடுவண் அரசு, எப்போதும் நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகள் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகச் சந்தையின் விலை உயர்வை நடுவண் அரசு காரணமாகக் காட்டுவதே ஒரு ஏமாற்று! ஏனெனல், 2008 சூலையில் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலராக உயர்ந்தபோது, நடுவண் அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. ஆனால் அதன்பின் கச்சா எண்ணெய் விலை 50% க்கும் மேல் குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வில்லை. தற்போது ஒரு பீப்பாய் விலை 78 டாலராக உள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடக்க விலையைவிட மிகவும் குறைவான விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்கி வருவதால் ஏற்படும் இழப்பின் சுமையால் தள்ளாடிக்கொண்டிருக் கின்றன. இப்போக்கைத் தடுக்காவிடில் இந் நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்பதுபோல் நடுவண் அரசு பூச்சாண்டி காட்டுகிறது. பெட்ரோல், டீசல் தவிர மசகு எண்ணெய், இஞ்சின் ஆயில் போன்ற பிற பொருள்களை இந்நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இவற்றின் விலையை இந் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் இழப்பு ஏற்படவில்லை.

2009 - 10ஆம் ஆண்டில் பாரத் பெட்ரோலியம் உருபா 834 கோடி, இந்துத்தான் பெட்ரோலியம் உருபா 544 கோடி இலாபம் ஈட்டியுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் வரை உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் ஆகிய அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்களிடமே இருந்தன. இப்போது ரிலையன்சு, எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களும் இவற்றில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 70 விழுக்காட்டை ரிலையன்சு செய்கிறது. கோதாவரிப் படுகையின் எண்ணெய் வளங்களைப் பங்கு போட்டுக் கொள்வதில் சகோதரர்களான முகேஷ் அம்பானிக்கும் அனில் அம்பானிக்கும், நடந்த சண்டை இப்போது தான் ஓய்ந்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களுக்கு இழப்பு என்கிற நடுவண் அரசின் வாதத் துக்குள் ஒளிந்திருப்பது தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்கிற வஞ்சகமே ஆகும். எரிசக்தித் துறையில் தனியார் ஆதிக்கத் தையும் இலாபத்தையும் உறுதி செய்வதற்காகவே முதல் கட்டமாக பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை, விற்பனை செய்யும் நிறுவனங் களுக்கு மாற்றப்பட்டுள்ளது. டீசலுக்கும் இதே நடைமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பிறகு சமையல் எரிவாயுக்கும் மண்ணெண் ணெய்க்கும் விலை நிர்ணயம் செய்யும் உரிமை தனியார் நிறவனங்களின் ஆதிக்கத்தின்கீழ்ச் செல்லும். ஒருபுறம் பெட்ரோல், டீசல் மானியத்துக்காகப் பல ஆயிரம் கோடி உருபா ஆண்டுதோறும் செல வாகிறது என்று ஒப்பாரி வைக்கிறது நடுவண் அரசு. மறுபுறத்திலோ மகிழுந்துகள், இருசக்கர ஊர்திகள், பலதிறப்பட்ட சரக்கு ஊர்திகள் உற்பத்தி செய்து விற்பதற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தையும் பிற வசதிகளையும் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழைகளுக்காகவே தயாரிக்கப் படுவதாகக் கூறப்படும் டாடாவின் நானோ மகிழுந் துக்குக் குசராத் மாநில அரசு 1000 ஏக்கர் நிலமும் பெருந்தொகையைக் கடனாகவும் இரத்தன் டாடாவுக்குக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டு தோறும் பல இலட்சம் மகிழுந்துகளை, இருசக்கர ஊர்திகளைத் தயாரிக்கின்றன. இவற்றின் வடிவமைப்புகள் - மாடல்கள் - சொகுசு ஏந்துகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. முதலில் பெட்ரோ லால் மட்டுமே இயங்கிய மகிழுந்துகள், பிறகு டீசலுக்கு மாறி, இப்போது எரிவாயுக்கு வந்துள்ளன. இவற்றை வாங்குவதற்கு வங்கிகளில் 4% வட்டிக்குத் தாராளமாகக் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், வேளாண் கடனுக்கு 9% வட்டி வாங்கப்படு கிறது. அமெரிக்காவில் 100 பேருக்கு 60 மகிழுந் துகள் உள்ளன. இந்தியாவில் 100 பேருக்கு 6 மகிழுந்துகள் தான் இருக்கின்றன. எனவே, அமெரிக்காவைப்போல இந்தியாவை உயர்த்து வதற்காக அதிக அளவில் மகிழுந்து தயாரிக்கப் போகிறார்களாம்!

மகிழுந்து தயாரிப்புத் தொழிற் சாலைகளில் பல இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று புதுக்கரடி விடுகிறார்கள். தொடர்வண்டி, பேருந்து ஆகிய பொதுப் போக்குவரத்து ஏந்துகளைப் பெருக்கி, நடுத்தர, ஏழை மக்கள் நியாயமான செலவில் பயணம் செய்வதற்கான திட்டங்களை அரசுகள் செயல் படுத்துவதில் முனைப்புக் காட்டாமல், நாட்டில் 25 விழுக்காட்டினராக உள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் வசதியாகப் பயணம் செய்வதற்காக மகிழுந்து உற்பத்திக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகின்றன. அதே சமயம் இந்த அரசுகள் ஏழை எளிய மக்களுக்கான (ஆம் ஆத்மி) அரசு என்று வெட்கமில்லாமல், பீற்றிக் கொள்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வு வசதி படைத்த பிரிவினரால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றாகும் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. இந்தியாவில் தற்போது 60 கோடி கைப்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதந்தோறும் 1.5 கோடி கைப்பேசிகள் விற்பனையாகின்றன. கைப்பேசி வைத்திருப்போரெல்லாம் வசதிபடைத்தவர்களா? இல்லை! உயர் தகவல் தொழில் நுட்பத்தை முதன்மைப்படுத்தும் முதலாளிய உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் கைப்பேசி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிட்டது. இதைப்போல முன்பு மிதிவண்டி பெற்றிருந்த இடத்தை இப்போது டி.வி.எஸ். 50 போன்ற இருசக்கர வாகனங்கள் பிடித்துக் கொண்டன. சிற்றூர்களிலிருந்து காய்கறிகள், மலர்கள் முதலான விளைபொருள்களை உரிய நேரத் திற்குள் நகரங்களுக்குக் கொண்டு செல்வதற்கு சிறிய இருசக்கர வாகனங்கள் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளன. மிதி வண்டியில் வந்த பால்காரர் இப்போது இரு சக்கர வாகனத்தில் வருகிறார். கிராமப் பொருளாதாரத்துடன் இருசக்கர வாகனம் பின்னிப் பிணைந்ததாகிவிட்டது. நகரங்களை ஒட்டியுள்ள சிற்றூர்களுக்கு ஆட்டோக் களில் பயணம் செய்வது பெருவழக்காகி விட்டது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு கிராமப்புறப் பொருளாதாரத்தையும், அம்மக்களின் வாழ்க்கை யையும் பாதிக்கிறது.

டீசல் விலை உயர்வு சரக்குப் போக்குவரத்தின் கட்டணத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என உண்μம் பொருள் களின் விலை உயர்கிறது. இரும்பு, சிமெண்ட், மணல், சல்லி போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை ஏறுகிறது. வேளாண்மையில் டிராக்டர், பவர் டில்லர், அறுவடை எந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கிணறு களிலிருந்து நீர் இறைப்பதில் 60% டீசல் எஞ்சின் களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, டீசல் விலை உயர்வு உழவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் கிராமப்புறங்களில் 60% வீடு களில் மின் இணைப்பு இல்லை. இவர்கள் இரவில் மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்து கின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் பலர் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்துகின்றார். இதேபோன்று கிராமங்களிலும் சமையல் எரி வாயுவைப் பயன்படுத்தும் நிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

தமிழக அரசு சமையல் எரிவாயு அடுப்பை இலவசமாகக் கொடுத்து வருகிறது. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து, பா.ச.க., இடதுசாரிக் கட்சிகள் இந்திய அளவில் 5-7-2010 அன்று வேலை நிறுத்தம் செய்தன. 2002 மார்ச்சு மாதம் பா.ச.க. ஆட்சியில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் உருவா 2.52 என்பதிலிருந்து 9.00 உருபாவாக உயர்த்தப்பட்டது. பா.ச.க. ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை அரசு நிர்ணயிக்கும் அதிகாரம் கைவிடப்பட்டது. இந்த உரிமை எண்ணெயைச் சந்தைப்படுத்தும் நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்டது. எனவே, பா.ச.க.வுக்கு பெட்ரோலியப் பொருள் களின் விலை உயர்வையும், விலை நிர்ணய அதிகாரம் நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதையும் கண்டிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று காங்கிரசுக் கட்சி கூறுகிறது. கொள்கையில் எதிரும் புதிருமான பா.ச.க-வும், கம்யூனிஸ்டு கட்சிகளும் சூலை 5 பொது வேலை நிறுத்தத்திற்காக இணைந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்று காங்கிரசு பிரச்சினையைத் திசை திருப்புகிறது.

அனைத்துப் பிரிவு மக்களையும் கடுமையாகப் பாதிக்கின்ற விலை உயர்வு பிரச்சினை யிலும், மக்களைப் பற்றிக் கவலைப் படாத வெறும் பழிதூற்றும் அரசியல் போட்டாப் போட்டி மட்டுமே நடக்கிறது. காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் அவை, நாட்டின் வளர்ச்சி என்ற போர்வை யில் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் அரணாகவே செயல்படுகின்றன. இந்த அரசியல் கட்சிகளை நம்பாமல், வலிமை யான மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டி யமைத்துப் போராடுவதன் வாயிலாகவே உழைக்கும் வெகுமக்களின் இன்னல்களை, துன்பங்களை நீக்க முடியும்.