anaimuthu 400இந்தியாவுக்கு 1947 ஆகத்து 15இல் விடுதலை வந்ததாக எல்லோரும் கதைத்தனர்.காந்தியவாதிகளும் காங்கிரசுக்காரர் களும், இங்கிலாந்து அரசு 1947 சூலையில் இயற்றிய இந்திய விடுதலைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதற்கு முன்னரே, 9.12.1946 இலேயே, இந்திய நாடாளுமன்றத்தை, இந்திய அரசமைப்பு அவை என்று அறி வித்துச் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.

1946இல் 32 கோடி இந்தியரில் 100க்கு 16 பேரே எழுத்தறிவு பெற்றிருந் தனர்; 100க்கு 14 பேரே மாகாணச் சட்டசபைகளுக்கு வாக்குப்போட உரிமை பெற்றிருந்தனர்; 100க்கு 4 பேரே இந்தியச் சட்டமன்றத்துக்கு வாக்குப்போட உரிமை பெற்றிருந்தனர்.

1947இல் விடுதலை பெற்ற இந்தியாவுக்கு, அப்போது 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைதான் அரசமைப்புச் சட்டத்தை எழுதி நிறைவேற்றியது. அரசமைப்புச் சட்டத்தை எழுத 13 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த 13இல் ஒரு குழு அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு. அந்தக் குழுவின் தலைவராக மேதை பி.ஆர்.அம்பேத்கர் 29-8-1947இல் பொறுப்பேற்றார்; அவர் அக்குழுவின் முதலாவது கூட்டத்தை 30-8-1947இல் தலைமையேற்று நடத்தினார்.

ஆனால், அதற்கு முன்னரே, நேருவின் தலைமையிலான ஒரு குழுவினர், பெனிகல் நரசிங்கராவ் (B.N. Rau) என்பவரை அரசமைப்புச் சட்ட ஆலோசராக வைத்து, இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்ட முதலாவது வரைவை (First Draft of the Constitution) எழுதி முடித்து, அதை 18-10-1947இல் டாக்டர் அம்பேத்கரிடம் அளித்தனர்.

அந்தச் சட்டம் என்ன கூறியது?

1. இந்தியா ஒரே நாடு.

2. இங்கு வாழும் எல்லோரும் இந்தியாவின் குடிமக்கள்.

3. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடாது.

4. இந்தியாவில் காலங்காலமாக உள்ள பழக்கச் சட்டங்களும், வழக்கச் சட்டங்களும் எப்போதும் செல்லும்.

5. இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இடம்பெறும்.

இவையே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறுகள்.

இவை அனைத்தையும் 1946இல் முழுமையாக எதிர்த்தவர், பெரியார் ஈ.வெ.ரா. அவர் 30-09-1945 இலேயே, தம் தனிநாடு கோரிக்கையைத் துலாம்பர மாக அறிவித்ததன் மூலம், இவற்றை ஒப்ப மறுத்தார்.

மேதை அம்பேத்கர், “காலங்காலமாக உள்ள இந்துப் பழக்கச் சட்டங்கள், வழக்கச் சட்டங்கள் இனி செல்லும் படி ஆகமாட்டா” என, 1948இலேயே தனி ஒரு மசோ தாவை அரசமைப்பு அவையில் முன்மொழிந்தார். அதை 1951இலேயே நேரு அரசு நிராகரித்துவிட்டது.

எனவே, உண்மையான இந்தியாவின் நிலை என்ன?

1. பல மதங்கள், பல இனங்கள், பல நூறு மொழிகள் பேசப்படும். இந்தியா ஒரு பெரிய துணைக் கண்டம். அதில் பல நாடுகள்-பல மொழிவழி நாடுகள் உள்ளன. இந்தியா, ஒரே நாடாக இல்லை.

2. ஒவ்வொரு மொழிவழி நாட்டுக்கும் வெவ்வேறு எல்லைகள் இருக்கும்; எனவே என்றென்றைக்கும் ஒரே எல்லை இருக்க முடியாது.

3. ஒவ்வொரு மொழிவழி நாட்டுக்கும் தமிழ்நாடு, தெலுங்கு நாடு, கன்னட நாடு, மலையாள நாடு, வங்காள நாடு, பஞ்சாபி நாடு என வெவ்வேறு பெயர் இருக்கும். எனவே, ‘இந்தியா’ என்ற பெயர் பொருந்தாது.

4. பழைய இந்துப் பழக்கவழக்கச் சட்டங்கள் 2014இல் செல்லுபடி ஆகக்கூடாது. ஆனால், இன்று, வெள்ளை யன் வெளியேறி 67 ஆண்டுகள் ஆன பிறகும் அவை செல்லும் என்றே இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கிறது; அதைப் பாதுகாக்கிறது.

முன்னர் சொல்லப்பட்ட 5 கூறுகளையும் அப் படியே ஏற்றுக்கொண்டு, அவற்றை நிலைக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டதுதான் இந்திய தேசிய காங்கிரஸ்.

காங்கிரசை விடவும் ஒருபடி மேலே போய், முன் சொல்லப்பட்ட 5 கூறுகளைக் கொண்ட இந்தியாவை அப்படியே நிலைக்க வைத்திடத் தன்னை 1948 முதலே ஆயத்தப்படுத்திக் கொண்டு வருவதுதான் சனசங்கம் என்கிற வாக்குக் கட்சியாக முளைத்து, சனதாவாக 1977இல் வடிவெடுத்து, பின்னர் பாரதிய சனதாவாக வடிவெடுத்துவிட்ட இந்து சனாதனக் கட்சி.

இவற்றில் எந்த நிலைப்பாட்டை - பாரம்பரிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் (Conventional Communist Parties) ஏற்றுக்கொண்டுள்ளன?

எந்த நிலைப்பாட்டை தேர்தலில் போட்டியிடும்-தி,மு.க.,அ.இ.அ.தி.மு.க.,ம.தி.மு.க., தே.மு.தி.க. முதலான திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன?

எந்த நிலைப்பாட்டை அம்பேத்கரிய, லோகியா வாதக் கட்சிகள் ஏற்கின்றன?

எந்த நிலைப்பாட்டை மதச்சார்பற்ற ஒன்றுபட்ட சன தாக்கட்சி மற்றும் உள்ள மதச் சார்பற்ற பிராந்தியக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன?

அக்கட்சிகள் எந்தக் குறிக்கோளுக்காகக் காங்கிர சோடும், பாரதிய சனதாவோடும் கூட்டுச்சேர்ந்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுகின்றன?

நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளும், இயக்கங்களும் எந்த அடிப்படையில், இந்த அணி களுக்கு ஆதரவு நிலையை அல்லது எதிர்ப்பு நிலையை மேற்கொள்ளுகின்றன?-என்பவை பற்றி, நாம் ஒவ்வொரு வரும் நடுநிலையில் நின்று சிந்திக்க வேண்டும்.

இன்று, 2014இல் நடப்பில் உள்ள இந்திய அரசமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படாமல் அப்படியே இருக்கிற வரையில்,

1. இந்துக்கோயில் கருவறைகளிலும், இந்து மத மடங்களிலும்-பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்தி என்கிற பிறவி வருண வேறுபாடு அப்படியே இருக்கும்; உள்சாதி வேறுபாடும் இருக்கும். திருமண உறவு கொள்ள பிறவிநால்வருண வேறுபாடு இல்லை; உள்சாதி வேறுபாடும் இல்லை.

2. இந்து, இஸ்லாம், கிறித்துவ, சீக்கிய, பவுத்த, சமணக் கோவில்களும், மசூதிகளும், மாதாக்கோவில்களும், குருத்துவராக்களும், மடங்களும்; அவற்றுக்கு உரி மையாக உள்ள இலட்சக்கணக்கான கோடி ரூபா பெறுமான சொத்துக்களும்; ஆண்டு வருமானங் களும் உள்ள மத ஆதிக்கம், மதச்சார்பு கொஞ்சமும் கட்டுக்குலையாமல் இருக்கும்.

3. “இந்தியர்களுக்கான, இந்தியாவுக்கு ஆன ஒரே ஆட்சி மொழி” இந்தி என்பதாக இருக்கும். எல்லா மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆகமாட்டா.

4. அமெரிக்க பில்கேட்சுக்குச் சமமான உலகப் பெரும் பணக்காரர்களாக - இந்தியாவில் அம்பானிகள், ரிலையன்ஸ்கள், மித்தல்கள், டி.வி.எஸ். அய்யங்கார்கள், கலாநிதிமாறன்கள், டாட்டாக்கள், பஜாஜ்கள் உருவாவார்கள்.

5. மெத்தப்படித்த மேதைகள் 15 விழுக்காட்டினராகவும்; வயிற்றுப்பாட்டுக்குப் படித்தவர்கள் 85 விழுக்காட்டின ராகவும் 122 கோடி மக்களும் உருவாக்கப்படுவார்கள்.

6. ஒரு லிட்டர் பால் விலை ரூபா 45; ஒரு லிட்டர் தண்ணீர் விலை ரூ.35 என, 2025இல் பாய்ச்சல் வேகத்தில் விலைவாசி வளர்ச்சி வரும்.

7. ஒரு கிலோ உயர்வகை அரிசி விலை ரூபா 75; மோட்டா வகை அரிசி 45 ரூபா என விலைகள் உயரும்.

8. எல்லோரும் மழலை வகுப்பில் சேர ஒரு குழந் தைக்கு ரூபா ஒரு இலட்சம்; மருத்துவம் படிக்க ரூபா ஒரு கோடி நன்கொடை தரும் நிலைவரும்.

9. படிப்பில்லாதவர்களும், படித்த வேலை இல்லாதவர் களுமாக உள்ள 85 விழுக்காடு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், அயல் நாடுகளிலும் இந்தியாவிலும் கூலிக்கு மாரடிக்கும் உடலுழைப்புக்காரர்களாகவும், நாள் தோறும் 18 மணிநேரம் பண்ணையடிக்கும் மூளை உழைப்புக் கூலிக்காரர்களாகவும் உருவாவார்கள்.

ஏன்? ஏன்?

மாவுக்குத் தகுந்தபடிதான் பணியாரம் இருக்கும். இந்த நாட்டின் அரசமைப்புக்கு ஏற்றபடி மட்டுமே நம் அனைவரின் வாழ்க்கை முறைகள் அமையும்.

10. இன்றைய அரசமைப்பு, மொழிவழித் தேசிய நாடுகள் தன்னுரிமையும், மதச்சார்பற்ற - சமதர்மக் கொள்கையும் கொண்டவையாகவும்; இந்தியக் கூட் டாட்சி பண அச்சடிப்பு, தொலைத்தொடர்பு, அயலுறவு அதிகாரங்கள் மட்டுமே உள்ளதாகவும் மாற்றப்படாத வரையில் - ஆங்கிலமும், இந்தியும் தவிர்த்த எல்லா மொழிகளும் இந்தியாவில் பேச்சு வழக்கொழிந்த மொழிகளாக 2027இல் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஈன நிலையைத் தவிர்க்க முடியாது.

இன்றைய இளைய தலைமுறையினர் - எந்த மதம் - எந்த வருணம்-எந்த உள்சாதி-எந்த மொழி - எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் - அன்புகூர்ந்து, இந்தக் காட்சிகள் நம் கண் முன்னர் நிற்பதைக் காணுங்கள்! இந்த ஈனத்தனமான நிலை வரப்போவதை மாற்றிட முன்வாருங்கள்!