பெரியார் ஈ.வெ.ரா. 1922இல் சொன்னது என்ன? 1957இல் செய்தது என்ன? 1973இல் தீர்மானித்தது எப்படி?

பெரியார் ஈ.வெ.ரா. இந்திய தேசிய காங்கிரசிலிருந்த போது, திருப்பூர் மாநாட்டில், “காங்கிரசுக் கட்சி தீண்டாமை ஒழிப்புக்குப் போராட வேண்டும்” என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவர் வாசுதேவ அய்யர் எதிர்த்தார்; சி. இராசகோபாலாச்சாரியார் உள்ளிட்ட பார்ப் பனர்கள் எதிர்த்தனர். ஈ.வெ.ரா. சினங்கொண்டார். அன்றைய மாலைப் பொதுக் கூட்டத்தில், “மனுநீதியும், இராமாயணமும் தீண்டாமையையும் வருணாசிரமத்தையும் காப்பாற்றுகின் றன; இவற்றை எரிக்க வேண்டும்” என்று பேசினார். இதன் உண்மையைப் புரிந்து கொண்டவர், ஈ.வெ.ரா.வின் ‘அன்பான எதிரி’ ஆச்சாரியார்தான். அதனால்தான், அவர், 1939இல் முதலமைச்சர் பதவியை விட நேர்ந்த போதும், 1954இல் பதவி விலக நேர்ந்தபோதும் ஆத்மா திருப்தி அடைய வேண்டி, இராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் “சக்கரவர்த்தித் திருமகன்”, “வியாசர் விருந்து” எனத் தொடர் கட்டுரைகளைத் தமிழில் எழுதினார்.

காங்கிரசை விட்டு 22.11.1925இல் ஈ.வெ.ரா. வெளியேறினார். இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என 1929இல் காங்கிரசு பேசியது; 1931ல் தீர்மானம் நிறைவேற்றியது.

சுதந்தரம் வந்தவுடன், “வயதுவந்த எல்லோருக்கும் வாக்குக் கொடுப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து இந்தியாவுக்கான அரசமைப்பை எழுதுவோம்” என 1934இலும், 1936இலும், 1946இலும் காங்கிரசு உறுதி கூறியது.

ஆனால் 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வைத்து, சுதந்தர நாட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தை - சுதந்தரம் வருவதற்கு முன்னரே, 9.12.1946இலேயே எழுதத் தொடங்கினர். அன்று முதலே, “அந்த அரசமைப்புச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது” என ஈ.வெ.ரா. எழுதினார்; பேசினார்.

அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது வடிவத்தை 1948இல் மே மாதத்தில் அரசமைப்பு அவையிடம் டாக்டர் அம்பேத்கர் ஒப்படைத்தார்; இறுதி வடிவத்தை 26.11.1949இல் நிறை வேற்றினார்.

அச்சட்டத்தின் விதிகளைத் தமிழில் “சுதேசமித்திரன்” ஏடு சுருக்கமாக வெளியிட்டது.

அச்சட்டத்தில், வருணாசிரமப் பாதுகாப்புக்கு முழுமையான இடமிருந்தது. அதுகண்டு ஈ.வெ.ரா. கொதித்தார். அந்தச் சட்டம் “மனுநீதியின் மறுபதிப்பு” என்பதை விளக்கினார். மெத்தப் படித்தவர்கள்கூட, அன்று அது பற்றிக் கவலைப்பட வில்லை. அந்தச் சட்டம் 26.01.1950இல் நடப்புக்கு வந்தது.

அதில் எத்தனை இடங்களில், எந்தெந்த விதிகளில், வருணா சிரமத்துக்கும், பழக்கவழக்கச் சட்டத்துக்கும் கெட்டியான பாது காப்பு இருக்கிறது என்பதைத் துலாம்பரமாக விளக்கினார்.

1.     விதி 13இல் உள்பிரிவு 3அ, 3ஆ என்பவற்றில் முறையே “சட்டம்” (டுயற) என்றால் அதன் பொருள் என்ன?

       “நடப்பில் உள்ள சட்டம்” என்றால் அதன் பொருள் என்ன? எனத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

2.     விதி 19இல் உள்ள உள்பிரிவுகளும் “நடப்பில் உள்ள சட்டம்” பற்றி விவரமாகக் கூறுகின்றன.

3.     விதி 25(2) என்பதிலும், “இப்போது நடப்பிலுள்ள சட்டத்தை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது” என்று கூறி, வருணாசிரமத்துக்கும், பழக்கவழக்கச் சட்டத் துக்கும் பாதுகாப்பு அளித்துள்ளது. இத்துடன் மட்டுமா?

4.     விதி 372 என்பது, ‘இப்போது நடப்பில் உள்ள சட்டங்கள் இனிமேலும் தொடர்ந்து செல்லுபடியாகும்... எனத் தெளிவாகப் பேசுகிறது.

5.     இந்த விதியின்கீழ் உள்ள விளக்கம் I என்பது, மிகத் தெளிவாகப் பின்வருமாறு கூறுகிறது.

அது என்ன?

விளக்கம் ஐ : “இந்த விதியில் இப்போது நடப்பில் உள்ள சட்டம் என்பது எதைக் குறிக்கிறது என்றால் - இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர், அதிகாரம் வாய்ந்த ஒரு சட்டமன்றத்தாலோ, வேறு அமைப்பினாலோ நிறைவேற்றப் பட்டிருந்து, அப்படிப்பட்ட சட்டம் ஏற்கெனவே நீக்கப்படாமல் இருந்தால், அது இன்றும் செல்லும்” எனத் தெளிவாகக் கூறுகிறது.

நாம் ஒவ்வொருவரும் அரசமைப்பு விதிகள் 13, 19, 25, 372 இவற்றில் சொல்லப்பட்டுள்ள “இப்போது நடப்பில் உள்ள சட்டம்” என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈ.வெ.ரா. இவற்றை நன்றாகப் புரிந்து கொண்டார். அதனால் தான் அவர் வெகுண்டெழுந்தார். 1952இலேயே, ‘வருணாசிரமத்தைப் பாதுகாக்கும் இந்தச் சட்டத்தை எரிப்பேன்’ என முழங்கினார்.

இந்தச் சட்டம் இப்படிப்பட்டது என்பதை - அதை உருவாக் குவதில் பெரும்பங்காற்றிய மேதை டாக்டர் அம்பேத்கர், நன்றாகப் புரிந்திருந்தார்.

இது நீக்கப்பட வேண்டும் என எண்ணி, 1948இலேயே, இந்துச் சட்டத்திருத்த மசோதாவை அவரே முன்மொழிந்தார். அதில், “இப்போது நடப்பில் உள்ள எல்லாச் சட்டங்களும், இந்தச் சட்டம் நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாக மாட்டா” என்ற ஒரு தனிவிதியை முன்மொழிந்தார். ஆனால் இராசேந்திரப்பிரசாதும், பண்டித நேருவும், மற்ற பார்ப்பனர் களும், பழமை வாதிகளும் அவர் முன்மொழிந்த அந்த விதியை நிறைவேறவிடாமல் தடுத்துவிட்டனர்.

ஆயினும், 1953இல் மாநிலங்கள் அவையில், ஆந்திர மாநிலப் பிரிவினை மசோதாவைப் பற்றிய விவாதம் நடந்த போது - அரசமைப்புச் சட்டம் பற்றிக் குத்தலாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கடுஞ்சினத்துடன் விடை கூறினார்.

என்ன கூறினார்?

“இந்த அரசமைப்புச் சட்டத்தை நான் எழுதினேன் என நண்பர்கள் கூறினார்கள். இதை எரித்துச் சாம்பலாக்கிடவும் நான் முதலாவது ஆளாக இருப்பேன்...” என 2.9.1953 காலை 11 மணிக்குத் துணிவுடன் கூறினார்.

1957இல் பெரியார் செய்தது என்ன?

அதே தன்மையில் தான், பெரியார் ஈ.வெ.ரா. அரசமைப்பு விதிகள் 13, 19, 25, 372 இவற்றைத் தமிழாக்கம் செய்து, அச்சுப்போட்டு, காலணா (3 பைசா) விலை வைத்து, ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்து, அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 3.11.1957இல் தமிழக மக்களைக் கூட்டி, தஞ்சையில் அறிவித்தார்.

அவருடைய கோரிக்கை என்ன?

‘மேலே சொல்லப்பட்ட விதிகள் 13, 19, 25, 372 இவற்றில் வருணாசிரமத்துக்கு உள்ள பாதுகாப்பை இந்திய நாடாளு மன்றம் அடியோடு நீக்க வேண்டும்’ என்பது மட்டுமே.

அவருடைய கட்டளையை ஏற்று 26.11.1957இல் 10,000 பேர் அரசமைப்புச் சட்டத்தை எரித்தனர்; 3000 பேர் தண்டிக் கப்பட்டனர்; சிறையிலேயே இருவரும், வெளியே வந்தபின், இருபது பேரும் மாண்டனர்.

அரசமைப்புச் சட்டம் எரிக்கப்பட்டு இன்று 54 ஆண்டு முடியப்போகிறது.

சட்ட எரிப்பில் சிறைசென்றவர்களுள் 1000 பேருக்கு மேல் இன்று உயிருடன் உள்ளனர்.

சட்டம் எரிக்கப்பட்ட போது காங்கிரசு இந்தியாவை ஆண்டது; தமிழகத்தையும் ஆண்டது. காங்கிரசு தமிழகத்தில் 1967இல் ஒழிந்தது.

ஆனால், இந்திய ஆட்சியைக் கடந்த 64 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் காங்கிரசுதான் ஆண்டது; இன்றும் காங்கிரசு ஆளுகிறது.

பெரியார் ஈ.வெ.ரா. விரும்பியபடி, வருணாசிரம அமைப்புக்கு உள்ள பாதுகாப்பு இன்று வரை நீக்கப்படவில்லை.

இந்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரசு, சனதா, பாரதிய சனதா கட்சிகளும்; எதிர்க்கட்சிகளான பொதுவுடை மைக் கட்சிகளும், சோசலிஸ்டுக் கட்சிகளும் சிறிதும் இது பற்றிக் கவலைப்படவில்லை.

1967 முதல் 44 ஆண்டுகளாக மாறி, மாறித் தமிழகத்தை ஆண்டு வருகிற - காங்கிரசு, சனதா, பாரதிய சனதாக் கட்சிக ளுடன் இந்திய ஆட்சியில் பங்கேற்ற தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலான திராவிடக் கட்சிகளும் இதுபற்றி நாடாளு மன்றத்தில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

1968இல் தி.மு.க. அரசு நிறைவேற்றிய “சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம்” என்பது வருணப் பாதுகாப்பை ஒழிக்காது.

1969இல் பெரியார் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.க. ஆட்சி நிறைவேற்றிய, “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற முற்போக்கான சட்டமும் வருணா சிரமப் பாதுகாப்பை ஒழிக்காது.

1973இல் பெரியார் தீர்மானித்தது எப்படி?

அரசமைப்பு விதி 17இல் உள்ள - “தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது” என மாற்றுவத னாலும், வருணாசிரமப் பாதுகாப்பு ஒழிக்கப்பட முடியாது.

பெரியார் தொண்டர்கள் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில், வருணாசிரம அமைப்பு எப்படிப் பாதுகாக்கப் படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வருணாசிரம ஒழிப்பின் நிலை யாது?

இந்து மதத்தில் தான் வருணாசிரமம் உண்டு.

அதற்கு இந்துச் சட்டம்தான் அரணாக உள்ளது.

இந்துச் சட்டம், இன்றும், என்ன கூறுகிறது :

“இந்துக்கள் நான்கு பெரும் பிரிவினராகப் பிரிக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு பிரிவினராவர். இவர்கள் மேலும் 3000 உள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெளிவாகக் கூறுகிறது.

இது எப்போதும் நீக்கப்படவே இல்லை. இதை நீக்குவதற் கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. ஆனால் நாடாளுமன்றத்தில் இன்று வரையில் இது பற்றிய பேச்சே எழவில்லை.

இதிலும் தென்னாட்டாருக்கு - திராவிடருக்கு உள்ள நிலை மிகவும் இழிவானது. அது என்ன?

பார்ப்பனரின் சாத்திரப்படி இது கலியுகம்.

கலியுகத்தில் திராவிடம் என்கிற சென்னை மாகாணத்தில் பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. ஆனால் வடநாட்டில் நான்கு வருணங்களும் உண்டு.

தென்னாட்டு இந்துக்களுள் 100க்கு 3 பேர் “பிராமணர்”; மீதி 97 பேர் “சூத்திரர்”.

இதற்கு அரண் செய்பவை பராசர ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலானவை. இவை உயர் அதிகாரம் படைத்தவை.

எனவே, இவற்றுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கிற அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 372 இவற்றை இன்றைய நாடாளு மன்றம் அடியோடு திருத்த வேண்டும்.

அத்துடன், “நீக்கங்கள்” பற்றிய விதியான - கடைசி விதியான 395 என்பது, மேதை அம்பேத்கர் 1948 இல் இந்துச் சட்டத்திருத்த மசோதாவில் வடிவமைத்த தன்மை யில் மாற்றப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இவை நிறைவேறாத வரையில், இங்குள்ள மெத்தப் படித்தவர்களும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும்- அமைச்சர்களும், முதலமைச்சர்களும்; பெருநில உடைமைக் காரரும், பெருந் தொழிலதிபர்களும், சைவ-வைணவக் கொள்கையினரும், கடவுள் பற்றாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் ஆன பிராமணரல்லாத - பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் அனைவரும் நாலாஞ்சாதி, இழிசாதி, கீழ்ச் சாதிச் சூத்திரர்களே ஆவர்; பிறவி காரணமாக நாலாஞ்சாதி மக்களே ஆவர்.

01.04.2011   வே. ஆனைமுத்து