கோவையில் பழைய கீதா விடுதியில், அறை எண்.னு-15 என்பதில் நானும் தமிழேந்தியும் 21.02.2011 காலை முதல் தங்கியிருந்தோம்.

நாங்கள் இருவரும் நாள்தோறும் காலை 11 மணிமுதல் மாலை 4.30 மணிவரை தலைக்கு 12,000 முதல் 15,000 பக்கங்கள் வரையில் அரசு ஆவணங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும். ஈரோடு வெங்கட்ட நாயக்கர், ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. ராமசாமி இவர்களைப் பற்றிய செய்திகள் இருக்கின்றனவா என்று தேட வேண்டும். எல்லா ஆவணங்களும் நூறு ஆண்டுக்கு முந்தியவை; பழுப்பு ஏறியவை; புரட்டும் போது ஒடியக் கூடியவை. தூசி பறக்கும் நிலையில் இருப்பவை.

வெறித்தனமாக - 21, 22, 23, 24 நான்கு நாள்களும் படித்தோம். 24 மாலை திரும்பும் போது, பசியைத் தணிப் பதற்காக, இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிட்டேன்; மாலை 6 மணிக்குக் காப்பி அருந்தினேன். உடல் கணகணப்பாக இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல், இரவு 8.30 மணிக்கு 2 இட்டலியும் பாலும் சாப்பிட்டேன். காய்ச்சலுக்காக ஒரு குரோசின் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கிவிட்டேன்.

25 காலை 6 மணிக்குத் தமிழேந்தி வேலூருக்குத் தொடர் வண்டி ஏற வேண்டும். காலை 4.30 மணிக்கு அவரை எழுப்பிவிட்டு, நான் தூங்கிவிட்டேன். இல்லை இல்லை காலை 5 மணிக்கு நான் நினைவிழந்துவிட்டேன். தமிழேந்தி குரல் கொடுத்தும் நான் பேசவில்லை. அச்சத்துக்கு ஆட்பட்ட அவர், உடனேயே சூலூர் ந. கவுதமன், க. தேவராசு, ம. சரவணகுமார் மூவருக்கும் தொலைபேசி செய்துவிட்டு காலை 6 மணிக்கு நிலையத்துக்குச் சென்றார். அவரைத் தேடி நிலையத்துக்குச் சென்ற சரவணகுமார், 6.30 மணக்கு எங்கள் அறைக்கு வந்தார்; என்னை எழுப்பினார்; நான் எழவோ, பேசவோ இல்லை. காலை 7 மணிக்கு க. தேவராசுவும் வந்துவிட்டார்.

நான் படுக்கையிலேயே சிறுநீரும் மலமும் கழித்துவிட்டேன். இருவரும் குளியல் அறைக்கு என்னைத் தூக்கிப் போய், பிணத்தைக் கழுவுவது போல் கழுவினர். அறையையும் படுக்கையையும் கழுவ துப்புரவு ஆள்களைத் தேடினர். விடுதியிலிருந்த யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. இவர்களே படுக்கை அறை, குளியலறை எல்லாவற்றையும் கழுவிவிட்டு, என்னை இருவர் மட்டுமே கட்டிப்பிடித்துத் தூக்கிக் கொண்டு, மேல் தளத்திலிருந்து, 17 படிகள் இறங்கி வந்து, ஒரு தானியைப் பிடித்து என்னைத் தூக்கி வைத்து, அடுத்த இரண்டாவது சாலை யில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். “இன்னும் அரை மணிநேரம் கழித்து வந்திருந் தால் காப்பாற்றவே முடியாது; வந்துவிட்டீர்கள்” என மருத்துவர் கூறி யுள்ளார்.

“நிறைய செலவாகும்; நீங்கள் எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என மருத்துவர் கேட்க - “இவர் மிக முக்கியமானவர்; எவ்வளவு செலவானாலும் ஆகட்டும்; உடனே உதவி செய்யுங்கள்” என இருவரும் கூறிவிட்டனர்.

“நீங்கள் இவருக்கு என்ன உறவு?” என மருத்துவர் கேட்க, “நான் இவருடைய மூத்த மகன்” என தேவராசு கூறினார். “நான் இளைய மகன்” என சரவணகுமார் கூறினார்.

மருத்துவ ஆய்வுகள் நடந்தன; சிறப்பு அறையில் சத்து மருந்து ஏற்றினர்; 25 பகல் 2 மணிக்குக்கூட, படுக்கையிலேயே நான் மலங்கழித்து விட்டேன்.

ந. கவுதமன், க. தேவராசு, ம. சரவணகுமார், பொறிஞர் பன்னீர்செல்வம்; சேலம் செ. ஆனையப்பன், மா. கிருஷ்ண குமார், ஜோதிபாசு ஆகியோர் என் படுக்கையைச் சூழ்ந்து நின்றனர். நான் அவர்களை அடையாளம் கண்டேன்; ஆனால் அதிகம் பேச முடியவில்லை.

25 பிற்பகல் 3.30 மணிக்கு பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருஷ்ணன் வந்து நலம் உசாவினார். அவரை நன்றாக அடையாளம் கண்டு, சில சொற்கள் பேசினேன். 26, 27 முழுவதும் நீருணவே அளித்தனர்; மருந்துகள் தந்தனர். ஏன் அப்படி ஆயிற்று?

“சர்க்கரை அதிகமாகிவிட்டது; உணவில் ஏதோ ஒவ்வாத பொருள் சேர்ந்துவிட்டது; பொது பலவீனம் இருக்கிறது” என்பதே மருத்துவரின் கருத்து.

26 மாலை முதல் சூலூர் தோழர்கள் பலரும்; பெ.தி.க. தோழர்கள் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோரும் கவலையோடு வந்து பார்த்து நலம் உசாவினர்.

28.2.2011 மாலை 4.30 மணிக்கு விடுதிக்கு அழைத்து வந்தனர். எப்போதும் போல் - சூலூர் தோழர்கள் அறை எண்.னு-5இல் குழுவினராகவே வந்திருந்து எல்லா உதவி களையும் செய்தனர்.

இரவில் என்னோடு தங்கியிருக்கவும், சென்னைப் பயணத் துக்கு எனக்குத் துணையாக வரவும் வேண்டி, என் தோழர் திருச்சி இரா. கலியபெருமாளின் இளைய மகன் இராவண னை வரச்சொல்லி, ந. கவுதமன் ஏற்பாடு செய்தார். க. இராவணன் 28.2.2011 முதல் 13.3.2011 முடிய எனக்குப் பெருந் துணை புரிந்தார்.

நானும் க. இராவணன், க. தேவராசு ஆகியோரும் 3.3.2011, 4.3.2011 இருநாள்களிலும் படிக்க வேண்டிய மீதி ஏடுகளைப் படித்தோம். கோவை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்-மா.பெ.பொ.க. மாணவர் அணித் துணைச் செயலாளர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் மேற்கண்ட இரு நாள்களிலும் அவரே வீட்டில் சமைத்த அறுசுவை உணவை எங்கள் மூவருக்கும் பணியிடத்துக்கே கொண்டு வந்து கொடுத்தார். வயிறு ஓரளவு சரியாயிற்று.

25.2.2011 காலை 5 மணிக்கு சாவூரை நோக்கிப் பயணித்த என்னை, சூலூர்த் தோழர்கள் ஓடோடி வந்து, எல்லாச் செலவுகளையும் உடனே ஏற்றுக்கொண்டு, முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு மீட்டெடுத்தனர்.

5.3.2011 இரவு கோவையில், தொடர் வண்டியில் நான் நலமாக அமர்ந்து புறப்படுகிற வரையில் - புலவர் ந. கவுதமன், புலவர் இரணியன், க. தேவராசு, ம. சரவணகுமார், பெரியவர் சிவ. சண்முகம், கார்த்தி ஆகியோர் உடனிருந்து வழியனுப்பி வைத்து மகிழ்ந்தனர். நானும், இராவணனும் 6.3.2011 காலை நலமாக சென்னை அடைந்தோம்.

இப்போது, பையப் பைய நான் நலம் பெற்று வருகிறேன்.

என் பணியை எப்போதும் போல் தொடருவேன்.

- வே.ஆனைமுத்து