தமிழ்நாட்டு அரசின், மதிப்பீடு மற்றும் களநிலை ஆய்வுத் துறை, 2011-12 முதல் 2013-14 வரையிலான காலத்திற்கான தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது (The Hindu 11-10-2014). இந்த அறிக்கை யின்படி, தமிழ்நாட்டில் ஒரு உழவர் பெற்றுள்ள சராசரி நிலம் 1970-71இல் 1.45 எக்டராக இருந்தது; இப்போது 0.80 எக்டராகக் குறைந்துள்ளது. நிலம் வைத்திருப்பவர்களில் 92 விழுக்காட்டினர் இரண்டு எக்டருக்கும் (1 எக்டர் என்பது 2.5 ஏக்கர் நிலம்) குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு உழவர்களே ஆவர்.

92 விழுக்காடாக உள்ள சிறு, குறு உழவர்களிடம் உள்ள நிலத்தின் அளவு, மொத்த நிலப்பரப்பில் 61 விழுக்கா டேயாகும். மீதி 8 விழுக்காடாகவுள்ள நடுத்தர (2-10 எக்டர் வைத்திருப்போர்) உழவர்கள், பெரிய நிலவுடைமையாளர்கள் (10 எக்டருக்குமேல் உடையவர்கள்) ஆகியோரிடம் 39 விழுக்காடு நிலம் இருக்கிறது. குறு உழவரிடம் உள்ள சராசரி நிலம் 0.37 எக்டர். பெரிய நிலவுடைமையாளரின் சராசரி நில அளவு 20.59 எக்டர். இப்பெருநிலவுடைமையாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் மேல்சாதியினராகவே இருப்பார்கள் என்பது உறுதி. அதேபோன்று 92 விழுக் காட்டினராக உள்ள சிறுகுறு உழவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பார்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் பயிரிடப்படும் நிலப்பரப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. 1970இல் சாகுபடிப் பரப்பு 70 இலட்சம் எக்டராக இருந்தது. இப்போது 45 இலட்சம் எக்டரில் மட்டுமே பயிரிடப்படுகிறது. கடந்த பத்தாண்டில் மட்டும் 20 இலட்சம் எக்டர் விளைநிலம் வேளாண்மை அல்லாத பயன்பாட்டுக்கென மாற்றப்பட்டுவிட்டது. இந்தியா வில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் நகரமயமாதல் என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் நகரப் பகுதிகளில் 35 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாட்டிலோ 49 விழுக்காட்டினர் நகரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

தொழில்வளர்ச்சி என்ற பெயரால் பெருமுதலாளிகளுக்கு அரசால் ஆயிரக்கணக்கில் நிலம் வாரி வழங்கப்பட்டமை, நிலம்-மனை வணிகம், பிற அடிப்படைக் கட்டுமானங்களுக் காக நிலம் ஒதுக்கப்பட்டமை ஆகியவற்றால் பயிரிடும் நிலப்பரப்பு குறைந்துவிட்டது. மேலும் வேளாண்மை உறுதிப் பாடான வருவாயும் இலாபமும் தரும் தொழிலாக இல்லாத தால், சிறுகுறு உழவர்களில் ஒரு பிரிவினர் பெரும் இழப்புகளுக்குள்ளாகி, தங்கள் நிலங்களை விற்றுவிட்டு நகர்ப்பகுதியில் கூலி வேலைக்குச் செல்கின்றனர். சிறுகுறு உழவர்களில் மற்றோர் பகுதியினர் தங்கள் நிலத்தை நிலையாகத் தரிசாகப் போட்டுவிட்டு, நகரங்களில் கூலி வேலைக்குச் செல்கின்றனர். மேலும் ஒரு பிரிவினர் தம் நிலங்களில் பயிர் செய்துகொண்டே நகரங்களில் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

பயிரிடும் நிலப்பரப்புக் குறைந்ததாலும், ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் பயிரிடப்படாமல், நிலையான தரிசாக விடப் பட்டதாலும் வேளாண் கூலித் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் நகரப் பகுதியில் குறைந்த கூலிக்குப் பல்வேறு வகையாக உதிரித் தொழில்களில் கூலியாட்களாக உள்ளனர். இதனால் சிற்றூர்களில் வேலை செய்யும் அகவையினராக உள்ள ஆண்கள்-பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொழுது புலர்வதற்குள் வீட்டை விட்டுப் புறப்பட்டு தொலை வில் உள்ள நகரங்களில் கூலி வேலைக்குச் சென்று, இரவு வீடு திரும்புகின்றனர்.

ஆயினும் தமிழ்நாட்டில் வேளாண்மை விளைச்சல் குறையவில்லை என்று கூறுகிறது இந்த அறிக்கை. 2011-12-இல் 101 இலட்சம் டன்னாக இருந்த வேளாண் உற்பத்தி 2013-14ஆம் ஆண்டில் 110 இலட்சம் டன்னாக உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது. பயிரிடப்படும் பரப்பளவும், வேளாண் மைத் தொழில் செய்வோர் எண்ணிக்கையும் குறைந்து வந்தாலும் உயர் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதால் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் இக்கூற்று உண்மையல்ல; வேளாண்மை வளர்ச்சி பெறுவதற்கு மாறாகத் தேய்ந்து வருகிறது என்பதை இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரம் திட்டவட்ட மாக உணர்த்துகிறது. தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross State Domestic Product - GSDP) 40 ஆண்டுகளுக்கு முன் 34.79 விழுக்காடாக இருந்த வேளாண் மையின் பங்கு இப்போது 8.81 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆனால் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு முதலான தொழில்களை நம்பி 45 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். இதைக் கொண்டே உழவர்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு அவலமான துயர நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்திய அளவில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 13 விழுக்காடாகும். ஆனால் வேளாண் மையை நம்பி 65 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.

அதேசமயம், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் மொத்த உற்பத்தி மதிப்பில் சேவைப் பிரிவுகளின் (Service sector) பங்கு 60 விழுக்காடாக உள்ளது. சேவைப் பிரிவின் பெரும்பகுதி 20 விழுக்காடாக உள்ள நடுத்தர, மேல்தட்டு உயர் வருவாய் பிரிவினரின் தேவைகளையும், நுகர்விய மோகத்தையும் நிறைவு செய்வதாகவே அமைந்துள்ளது.

நீர்ப்பாசன வசதியும், பத்து ஏக்கருக்குமேல் நிலமும் உள்ள பெரிய உழவர்கள் தவிர, மற்ற உழவர்களின் மற்றும் வேளாண் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை பெரும் அவலநிலையில் கிடக்கிறது.

- செங்கதிர்