ஆயிரத்துத் தொளாயிரத்து   

      ஆண்டுநாற் பத்திரண்டில்

ஆய்ந்தறிந்த எம்பெரியார்

      அற்புதமாய் வரும்உலகில்

பாய்ந்துவரும் மாற்றங்கள்

      பற்பலவும் நடக்குமென

வாய்த்தமொழி அத்தனையும்

      வரலாற்றில் உண்மையன்றோ!

பொலிகாளை ஆண்மகனின்   

      புத்தம்புது வீரியத்தைப்

பொலிமிகுபெண் கருப்பையில்

      பொறுப்புடனே ஊசிவழி

வலியின்றித் தான்செலுத்தி

      வாரிசுகள் குழந்தையினை

எளிதாகப் பெற்றெடுப்பார்

      என்றுரைத்தார் பெரியார்தான்!

கருப்பாதை சாத்திவிட  

      கதவொன்று வேண்டுமென

தெருமுழக்கம் பாவேந்தன்

      தெரிவிக்கும் முன்னரேதான்

கருக்கலைப்பைத் தான்நிறுத்திக்

      குடும்பக்கட் டுப்பாட்டை

வருமென்று தொலைநோக்கில்

      வகுத்தவரும் பெரியார்தான்.

கணிப்பொறி வளர்ச்சிவரும்    

      கம்பியில்லாத் தந்திவரும்

இனிதாக எளிதாக

      இளைஞர்தம் சட்டைக்குள்

தனியாகத் தான்வைத்து

      தன்உருவம் தான்செலுத்தி

மணிக்கணக்கில் பேசுகின்ற

      மாற்றங்கள் வந்துவிடும்.

துணிமணிகள் துவைத்திடவும் 

      துர்க்கழிவு அகற்றிடவும்

மனிதர்களை இழுக்கின்ற

      மாக்கொடுமை நீங்கிடவும்

பணிமனையில் பலநாள்கள்

      பணியினையே மணித்துளியில்

இனிதாகச் செய்துவிட

      இயந்திரங்கள் வந்துவிடும்.

மன்னராட்சி நீங்கிவிடும் 

      மக்களாட்சி வந்துவிடும்

தன்னலங்கள் பெருகிவிடும்

      தனிவறுமை பஞ்சமெல்லாம்

மண்ணில்தான் தலைவிரிக்கும்

      மாக்கொலைகள் கொள்ளையெனும்

கன்னக்கோல் பெருகிவிடும்

      காலந்தான் வந்துவிடும்.

சித்திரத்தின் கைவண்ணம்    

      சிற்பிகளின் கைவண்ணம்

புத்தம்புது மாற்றத்தைப்

      படைக்கின்ற காலம் வரும்

கத்துங்கடல் சூழ்உலகில்

      காணுமாயுள் றூறாண்டு

பத்துப்பத் தறிவியலால்

      பெரும்ஆயுள் நீண்டுவிடும்.

ஒருவார உணவுதனை 

      ஒருகுப்பித் தானடக்கித்

தருகின்ற காலம்வரும்

      தக்கதோரு மாற்றம் வரும்

மெருகூட்டும் இன்பத்தை

      மின்சாரம் தந்துவிட

உருவாகும் இயந்திரங்கள்

      உருவாகி வந்துவிடும்.

ஒருஇடத்தில் தானிருந்து      

      உலகில்மறு இடமெல்லாம்

தருகின்ற கல்விதனைத்

      தான்கேட்க கணிப்பொறியில்

பெருமாற்றம் வந்துவிடும்

      பெரும்புரட்சி வெடித்துவிடும்

அருவறுக்கும் மடமையெலாம்

      அடியோடு நீங்கிவிடும்.

மிதிவண்டி தான்குறைந்து     

      மின்சார வண்டிவரும்

அதிவேக விமானம் வரும்

      அளப்பரிய மகிழ்வந்து

புதிதாக ஊர்திகளும்

      புறப்பட்டு வந்துவிடும்

எதிலும்எடை குறைவான

      இயந்திரங்கள் பெருகிவிடும்.

இனிவரும் உலகத்தில்  

      இப்படித்தான் மாற்றம்வரும்

இனிதாக நம் பெரியார்

      எடுத்துரைத்த தொலைநோக்கின்

கனிந்தநல் சிந்தனைதான்

      காலத்தின் வரலாறு

துணிந்தஎம் பெரியாரின்

      தொலைநோக்கு வரலாறு.

இப்படித்தான் நடக்குமென    

      எழுபத்தேழ் ஆண்டின்முன்

எப்படித்தான் சொன்னாரோ

      எம்தந்தை பெரியார்தான்

அப்படியே அவர் செயலை

      அறிவார்ந்தோர் தான்புகழ

ஒப்பில்லா அவர்புகழை

      உலகெங்கும் பரப்பிடுவோம்.