தண்ணீர்த் தொட்டிக்குள் யாகம்

தமிழ்நாட்டில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். தாய்மார்கள் நகரப் பகுதிகளில் தண்ணீர் லாரிக்காக மணிக்கணக்கில் கால்கடுக்கக் காத்திருக்கிறார்கள். ஊர்ப்புறங்களில் ஒரு சொட்டுக் குடிநீருக்காக நடையாய் நடக்கிறார்கள். மாதம் மும்மாரிப் பொழிந்த மண்ணில் காலநிலை மாறியது எதனால்? காடுகளை அழித்தோம். கழனிகளையே மனை போட்டு விற்றுக் காசாக்கினோம். வாய்க்கால் வரப்புகளைத் தூர்த்துத் தொலைத்தோம்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இனி ஏரி குளம் என்றால் என்னவென்றே தெரியாமல் போகலாம். இவற்றை மாற்ற எந்தத் திட்டமும் நம்மிடம் இல்லை. மாறாக திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபத்தில் பாரதிய சிஷா சங்கத்தைச் சேர்ந்த சில பார்ப்பனர்கள் உலக மக்கள் நன்மைக்காகவும் மழை வேண்டியும் தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்து யாகம் செய்ததாகச் செய்தி. ஏரியில் நின்றுகொண்டு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்திய நாதன் குலமரபார். மக்களைக் குருடர்களாக்க எதையும் செய்வர்.

திருப்பதி ஏழுமலையான் முதுகு தப்பியது

திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் தங்கத் தகடுகள் பதிக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகத் திடீர் அறிவிப்பு. ‘ஆனந்த நிலையம் அனந்த சுவர்ணமயம்’ என்ற திட்டத்தின் கீழ் பக்தர்களிடம் நன்கொடை பெற்று 192 கிலோ தங்கத்தில் 16 கோடி ரூபாய்ச் செலவில் கருவறை முழுவதும் தங்க ஓடுகள் பதிக்கும் திட்டம் எதனால் கைவிடப்பட்டது தெரியுமா? அப்படி ஓடுகள் பதித்தால் கருவறையில் 1000 ஆணிகளும், 10,000 ஓட்டைகளும் போட வேண்டி இருக்குமாம். அப்படித் திருப்பணி நடக்கும்போது, ஒருவேளை திருப்பதி ஏழுமலை யானின் முதுகில் ஆணி இசகுபிசகாக இறங்கிவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சம் காரணமாகப் பக்தர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் தங்கத்தகடு பதிப்பதற்காக நன்கொடையாகப் பெறப்பட்ட பணம் திருப்பித் தரப்படாதாம்! வேறொரு திட்டத்திற்காக திருப்பப்படுமாம். அறங்காவலர் தலைவர் ஆதிகேசவநாயுடு அறிவித்துவிட்டார். இந்தத் திட்டத்திற்காகவே நன்கொடை அளித்தவர்கள் என்ன ஆவது? திருப்பதி ஏழுமலையானின் பெரிய நெற்றி நாமத்தை நினைந்து நிறைவடைந்துகொள்ள வேண்டியதுதான்!

கொசுறு செய்தி

திருப்பதி லட்டுக்கு வயது 75 ஆகிறது. பாலாஜி பக்தர்கள் நினைத்தால் திருப்பதி லட்டுக்குப் பவழ விழா கொண்டாடி மகிழலாம். ஆம், 1960 ஆண்டு முதல் தான் அங்கு லட்டு தயாரிக்கப்படுகிறது. 5100 லட்டுகள் செய்ய 165 கிலோ பசுநெய், 180 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 4 கிலோ ஏலம் என மொத்தம் 803 கிலோ மூலப்பொருள்கள் இதில் அடக்கம். அன்றாடம் 3 இலட்சம் லட்டு விற்பனை (போலி லட்டு விற்பனை தனிக்கணக்கு).

புண்ணியம் தேடிப்போனவர்களுக்குத் தண்ணியில கண்டம்

ஆந்திர மாநிலம் இராசமுந்திரி அருகே புண்ணியம் தேடி கோதாவரி ஆற்றில் புனித நீராடப் போனவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்றனர் என்ற செய்தி நெஞ்சைப் பிழிகிறது. இயல்பாக மக்களைக் குளிக்கவிட்டிருந்தால் இவ்வளவு பெரிய அவலம் நேர்ந்திருக்காது. ஆந்திராவின் ‘ஐடெக் முதல்வர்’ சந்திரபாபு நாயுடுவும் தன் குடும்பத்தோடு அங்கே குளிக்க வந்துவிட்டதால் அவர் பாதுகாப்பு கருதி ஏற்படுத்தப்பட்ட காவல் தடுப்பே இவ்வளவு உயிர்களையும் ‘காவு’ வாங்கிவிட்டது. இதேபோன்றதொரு அவலம் 1992ஆம் ஆண்டும் தமிழ்நாட்டில் நடந்தது. முதன்முதலாக முதல்வர் பொறுப் பேற்ற செயலலிதா தன் தோழி சசிகலாவுடன் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளிக்க வந்ததால் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் சிக்கி அப்போது முப்பது அப்பாவிகள் உயிரிழந் தார்கள்.

இதேபோல் கடந்த ஆக°டு 11இல் ஜார்க்கண்டு மாநிலம் ‘தியோகர்’ மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் சிலையைக் கங்கை நீரில் கழுவுவதைக் காணச் சென்ற கூட்ட நெரிசலில் சிக்கிப் பதினோரு பேர் பலியானார்கள். பக்தி என்ற பெயரில் எல்லா அரசுகளுமே மக்களைப் பாதுகாக்காமல் இப்படிப் பச்சைப் படுகொலைகள் நிகழ்த்தலாமா?

சிவப்புச் சாய உதட்டுடன் ஒரு சினிமாக் கவர்ச்சி ராதேமா

ராதே மாவுக்கு வயது 46. திரைநடிகை போல் எப்போதும் ஒப்பனையில் உள்ள இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். 18 வயதில் திருமணமாகிப் பின் இரு குழந்தைகளையும் பெற்ற பிறகு தன் கணவன் மோகன் சிங்கிடமிருந்து மண விலக்கு பெற்றார். அதன்பிறகு ராம்தீன் தாய் என்கிற சாமியாரைச் சந்தித்தார். இவரும் தன்னைப் பெண் சாமியார் என்று சொல்லிக் கொண்டார். அன்றாடம் கடவுளிடம் நேரடியாகப் பேசுவதாகவும் கூறுகிறார். இணையதளங்களில் இவருடைய ஆபாச நடனம் இடம்பெற்றதாகவும் தகவல்.

எப்போதும் ஒரு கையில் ரோசாப்பூவோடும், மற்றொரு கையில் திரிசூலத்தோடும் காட்சிதரும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட பெரும்புள்ளிகளைத் தன் சீடர்களாகக் கொண்டுள்ளார். தன்னை வணங்க இவருடைய சீடர்கள் படியேறி வருகிறார்கள். இவரோட வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குற்றவழக்குகளில் சிக்கி அன்றாடம் காவல் நிலையப் படிகளை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

கழுத்தில் உடைகளில் பொன் நகைகள் மின்னுகின்றன. காதல் திருமணங்களைத் தான் எதிர்ப்பதாகவும், எப்போதும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களையே ஏற்பதாகவும் சொல்லும் இந்தப் பெண் சாமியார், தமிழ்நாட்டில் உள்ள காதல் திருமண எதிர்ப்பாளர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தகுதியானவரே!