தமிழர்க்கு உரிய இலக்கியங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளன. அதனால்தான் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் என்னும் இலக்கணம் தோன்றியது. 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் தோன்றியது. 1800 ஆண்டுகளுக்கு முன் சங்க இலக்கிய நூல்கள் தோன்றின. இவ்விலக்கியங்களில் உழவு, உழவர் பற்றி நிறையப் பேசப்படுகின்றன. உழவர்களின் உழைப்பின் பெருமையைக் காட்டும் நாளே பொங்கல் விழா நாள். பொங்கல் விழாவை ஒட்டி இம்மலரை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினராகிய நாம் தமிழ்ப் பெருமக்களின் துணையுடன் இந்திய அளவில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையைச் செய்திருக்கிறோம்.

இந்தியப் பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல்குழு, நம் இடையறா முயற்சியினால்தான் அமைக்கப்பட்டது.

17.09.1978 முதல் 18.10.1978 முடிய நம் தோழர்களும், பீகார் இராம் அவதேஷ் சிங்கின் தோழர்களும் பீகாரின் 31 மாவட்டங்களிலும் பரப்புரை செய்தோம். 31.10.1978 முடிய, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினோம்.

நம் போராட்டத்தை அடக்கிட வேண்டி, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பீகாரில் பயணம் மேற்கொண்டார். அவர் பொதுக்கூட்ட மேடையில் ஏறியவுடன், எல்லா ஊர்களிலும் மக்கள் சினங்கொண்டு கல்லையும் செருப்பையும் அவர் மீது வீசினர்.

அதில் அவர் பாடம் கற்றார். அதன் விளைவாகத்தான் 20.12.1978-இல் மக்கள் அவையில், “இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் குழுவை அமைப்போம்” என அறிவித்தார். 1.1.1979-இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அக்குழுவை அமைப்பதாக அறிவித்தார்.

இந்திய அரசியல், 1982 முதல். “மண்டலுக்கு முந்திய இந்தியா-மண்டலுக்குப் பிந்திய இந்தியா” என வடிவம் பெற்றது. கடந்த 29 ஆண்டுகளாக அந்த உணர்ச்சி இந்தியா முழுவதிலும் ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நம் முதலா வது சாதனை ஆகும்.

1978 பாட்னா போராட்டத்தை அடுத்துத்தான், 10.11.1978-இல் பீகார் மாநிலப் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன் முதலாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு, பீகார் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் அவர்களால் அளிக்கப்பட்டது. இது நம் இரண்டாவது சாதனை.

1979-க்கும் 1986-க்கும் இடையில் இரண்டாவது, மூன்றாவது தடவையாக பீகாரிலும் மற்றும் உத்தரப்பிரதேசம், இராசஸ்தான், அரியானா மாநிலங்களிலும், 1986-1987-இல் மேற்கு வங்காளத்திலும், அசாமிலும், பஞ்சாபிலும் இடஒதுக்கீட்டுப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டோம். 1990இல் புதுதில்லியிலிருந்து “இராசரதம்” தொடங்கி அரியானாவில் முடித்தோம்.

நாம் தமிழ்ப் பெருமக்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் மட்டுமே இப்பணிகளைச் செய்திருந்தோமானால் - மய்ய அரசில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு ஒருபோதும் வந்திருக்காது.

அத்துடன், 31.12.1979 முடிய தமிழ் நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டாருக்கு 31 விழுக்காடு மட்டுமே தரப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டு அளவை 60 விழுக்காடு உயர்த் தித்தர வேண்டும் என்று நாம் மட்டுமே 19.8.1979-இல் தமிழ்நாட்டு முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கான தெளிவான விளக்கங்களையும் முன்வைத்தோம்.

அதன் விளைவாகத்தான் 1.2.1980 முதல் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப் பெற்றனர். இது நம் மூன்றாவது சாதனை.

ஆயினும்கூட ஒதுக்கீட்டுக் கோரிக்கை இன்னமும் முழுமை பெறவில்லை. எப்படி?

  1. நடுவண் மய்ய அரசு தொழிற்கல்வியில், 2008-இல் நடப்புக்கு வந்திருக்க வேண்டிய 27 விழுக்காடு இடஒதுக்கீடு இன்றளவும் வரவில்லை.
  2. மேற்கு வங்காள மாநில அரசு, கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 2011-12 கல்வி ஆண்டில்தான் 17 விழுக்காடு இடஒதுக்கீடு தரமுன்வந்தது.

இவையெல்லாம் பிற்படுத்தப்பட்டோரை அவமானப்படுத்துவதாகும்.

  1. பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடி யினருக்கும் எந்த வேலையிலும் I, II வகுப்புப் பணிகளில் விகிதாசார இட ஒதுக்கீடு தரப்படவில்லை.
  2. இந்த மூன்று வகுப்பாருக்கும் தேங்கிப் போன காலி இடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படவே இல்லை.

இந்தியாவில் பெரிய எண்ணிக்கை யில் உள்ள இந்த மூன்று வகுப்பாருக்கும் விகிதாசாரப் பங்கீடு தரப்படுகிற வரையில், நாம் ஓய்வாக இருக்கக் கூடாது.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 1921-1922-இல் அளிக்கப்பட்டது போல, மொத்தம் உள்ள 100 விழுக்காட்டு இடங்களையும் எல்லா மத வகுப்புகளுக்கும், எல்லாச் சாதி வகுப்புகளுக்கும் அந்தந்த வகுப்பின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பிரித்துத் தருகிற வரையில் நாம் ஓயக்கூடாது.

இடஒதுக்கீட்டுப் போராட்டம் என்பது அரசமைப்பில் உறுதி அளிக்கப்பட்ட உரிமைகள் நமக்கு வந்து சேர வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

இதற்கே, 1978-இல் நாம் தொடங்கிய போராட்டம் - இந்தியா முழுவதற்கும் எடுத்துச் செல்லப்பட்ட பிறகும், இன்னமும் இது முற்றுப் பெறவில்லை.

அப்படியானால் - அரசமைப்புச் சட் டத்தில் இல்லாத ஒரு கூட்டாட்சி அரசை நாம் இந்தியாவில் அமைக்க எத்தனிக்கி றோமே - அது எப்படிக் கைகூடும்?

இதற்கும் தமிழ்நாட்டு மக்களின் துணையுடன், 1991-இலேயே முதன்முதலாகப் புதுதில்லியில் நாம் களம் அமைத்தோம்.

பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி அஜீத்சிங் பெயின்ஸ் தலைமையில், புதுதில்லியில், மவ்லங்கர் மன்றத்தில், “அனைத்திந்தியக் கூட்டாட்சி மாநாட்டை” 18.10.1991-இல் நடத்தினோம்.

  1. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது. அந்தந்த மாநிலத்தில் உள்ள எல்லா நடுவண் அரசு அலுவலகங்களிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழிதான் அலுவல் மொழியாக-ஆட்சி மொழி யாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப அரசமைப்பு விதிகளைத் திருத்த வேண்டும்.
  1. இந்திய ஆட்சிப்பணி (I.A.S.), இந்திய காவல் பணி (I.P.S.), இந்திய அயலுறவுப் பணி (I.F.S.) என்பவையும், இவற்றுக்கான அனைத்திந்தியப் பணித் (U.P.S.C.) தேர்வுக் கழகமும் ஒழிக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளுக்கு உரியவர்களை அந்தந்த மாநில அரசு பணிக்குழு வினரே தேர்வு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக இப்போது உள்ள அரசமைப்பு விதிகளை அடியோடு நீக்க வேண்டும்.
  1. அரசமைப்பு விதிகள் 13, 25, 372 இவற்றில் பழைய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பிறவி வருண சாதி அமைப்புக்கு உள்ள பாதுகாப்பு முதலானவை மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1947-இல் முன்மொழிந்த தன்மையில் - தந்தை பெரியார் 1946 முதல் கோரிய தன்மையில் அடியோடு அகற்றப்பட வேண்டும்.

இவ்வளவு கடினமான பணிகளைத் தமிழகத்திலிருந்து கொண்டே நாம் செய்ய முடியாது. நம் போன்ற - நம்மைவிட வலிமை யுடைய எந்த அமைப்பும் அல்லது கட்சியும் இங்கிருந்து கொண்டே இவற்றைச் செய்ய முடியாது. ஏன்?

இவையெல்லாம் முதலில் பார்ப்பனருக்கும் மேல்சாதிக்காரருக்கும் எதிரானவை.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் எதிரானவை.

மூன்றாவதாக, “இந்தியா ஒற்றை ஆட்சியாகவே - ஒரே பெரிய சந்தைக்களமாகவே இந்துத்துவப் பண்பாட்டுக்களமாகவே இருக்க வேண்டும்” என்று நம்புகிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவை புதியவை - செரித்துக் கொள்ள முடியாதவை.

நான்காவதாக, ‘இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு’ என்று மனமார நம்புகிற அறிவாளிகள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், செய்தி இதழாளர்கள் - ஏன் பகுத்தறிவாளர்கள் என்போர் உள்ளிட்டவர்கள் கூடப் பெரிய அளவில் அடங்கியுள்ள சமூகம் இது.

இவ்வளவையும் நெஞ்சில் கொண்டு, இந்தியா என்பதைச் செயல்படுகளமாக ஆக்கி, நாமும் - இதில் கவலையும் அக்கறையும் கொண்ட தமிழர் அமைப்புகளும், தமிழர்களும் செயல்படத் துணிய வேண்டும்.

நாம் நம் இயக்க இதழ்களையும், நூல் வெளியீட்டுப் பணிகளையும், கட்சி அமைப்பையும் முதலில் மிகவும் செம்மைப்படுத்த வேண்டும். இளைஞர் களுக்கும் மாணவர்களுக்கும் இவை பற்றி நல்ல புரிதலை எப்பாடுபட் டேனும் உண்டாக்கித்தர வேண்டும்.

இவ்வளவு பணிகளுக்கும் தமிழ் மக்களிடமிருந்து கோடிக்கணக்கான அளவில் பணம் திரட்டப்பட வேண்டும்.

பலதுறை அறிவுள்ள களப்பணியை விரும்பி ஏற்கிற படித்த இளைஞர்களை நாம் உருவாக்கிட வேண்டும்.

2011-ஆம் ஆண்டுக்கான ‘சிந்தனையாளன்’ சிறப்பு மலர் வெளியீட்டையும், “தேசிய இனங்களின் தன்னுரிமை மாநாட்டை”யும் மிக வெற்றியாக இன்று நடத்துகிற நாம் - தமிழ் மக்களின் பேராதரவுடன் நம் அரசியல் குறிக்கோளை வென்றெடுக்க முனைவோம்.

2011-ஆம் ஆண்டில் இப்பணிகளுக்கு அடித்தளம் இட நாம் எல்லாமும் செய்ய வேண்டும்.

நாம் திட்டமிட்டுச் செயலாற்றினால் - தமிழ்ப் பெருமக்களை உரியவாறு நாம் அணுகினால் இவை முடிக்கப்படக் கூடியவையே!

முயலுவோம், முடிப்போம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

(நன்றி : ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர்-2011)