உலகின் வளமான தொன்மை மொழிகளில் தமிழ்மொழி தலையாய மொழியாகும்.

‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்’

என்ற பாரதியின் பாடல் அடிகளை நாம் பைந்தமிழின் பொன்றாத இளமைக் குரியதாகப் பொருத்திக் கொள்ளலாம்.

‘திங்களோடும் செழும் பரிதி
தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல்கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்’

என்கிற பாவேந்தரின் பாட்டைச் சொல்லி நாம் நெஞ்சு நிமிர்த்திக் கொள்ளலாம்.

ஒல்காப் பெரும் புகழுடை தொல்காப்பியமும் பழந்தமிழ் வளமெலாம் எடுத்துச் சொல்லும் பாட்டும் தொகையும், நம் முன்னோர் நமக்காக ஈட்டி வைத்துச் சென்ற இலக்கியச் செல்வங்களாகும்.

குன்றின் மேலிட்ட விளக்கு

கையளவு மட்டுமாய்ச் சுருங்கி இருந்த கடல் பரப்பைக் கூடப் பலரும் பார்த்தறியா ஓர் இனக்குழுச் சமூகத்தைச் சேர்ந்த எளிய கவிஞன் கணியன் பூங்குன்றன். ஆனால் தன் பட்டறிவெனும் பாட்டுக் குன்றத்தின் மீது அவன் ஏறிப்பாடிய இறவாத வரிகள் இன்றளவும் வையத்தார் செவிகளில் வண்ணச் சிந்து பாடுகின்றன.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா’

என்கிற பூங்குன்றனின் தொடக்க வரிகளைத்தான் நம்முள் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆயின் ஒருவரிடத்து உள்ள செல்வத்தின் அளவு கருதியோ அல்லது அறிவின் ஆழம் பார்த்தோ அவரின் மாண்பினைப் போற்றும் மடமை எம்பால் இல்லை. எளியரைச் சீ என இகழும் சிறுமைப் பண்பும் எம் சிந்தை அறியா ஒன்று எனச் செம்மாந்து பாடும் புலமைச் செருக்கை எத்தனை பேர் அறிவர்?

‘பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ (புறம் 192)

என மாந்த இனத்தின் நயத்தக்க நாகரிகம் உணர்ந்து பாடிய நம் முன்னோர்கள் பண்பு நலம் நம்மை வியக்க வைக்கிறதல்லவா?

எச்சரிக்கை மணி

‘அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்’ (குறள் 333)

உடைமைச் சமூகத்தின் பிரிக்க முடியாத உறுப்பியமாக வாழ்ந்த பேராசான் திரு வள்ளுவரின் கூற்று இது.

நிலையில்லா இயல்புடையது செல்வம். அச்செல்வத்தைப் பெற நேர்ந்தால் நிலைத்த புகழுடைய செயல்களை அப்போதே செய்து விட வேண்டும் என்று ஆணையிடுகிறார் வள்ளுவர்.

பொருளாசை கொண்ட புன்மை உலகில் இன்று திரும்பும் திசையெங்கும் வன்மச் செயல்கள், தம் வாழ்நாள் முழுவதிலும் பொருளைச் சேர்த்துச் சேர்த்து வைத்தே வீணில் செத்துப் போகிறார்கள் பலரும். வயிறார உண்ணவோ, உளமார உடுத்தவோ நேரமின்றித் திடுமென உயிரை விட்டு விடும் இந்தச் சோற்றுத் துருத்திகளைப் பார்த்து சங்கப் புலவன் ஒருவன் அன்றே பாடினான்.

‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’ (நக்கீரனார் புறம் 189)

‘நாடாளும் அரசனுக்கும் காடாளும் ஆண்டிக்கும் உண்ணத் தேவை நாழிகைப் பொழுதுதான். உடுக்க வேண்டியவை இரண்டு மட்டுமே! சேர்த்த செல்வம் அனைத்தையும் நானே துய்ப்பேன் என்று தப்புக் கணக்குப் போடாதே! நிலையற்ற உலகில் நிலைத்த புகழைச் சேர்க்கும் வழியினை நாடு!’ எனும் எச்சரிக்கை மணியோசை எல்லோர் காதுகளிலும் படும் நாள் எந்நாளோ?

சான்றோரால் ஆன்ற உலகம்

‘பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்’ (குறள் 996)

சுரண்டல் பெருத்துப் போன இந்தத் துப்புக் கெட்ட உலகம் மாந்தர் வாழவே தகுதியற்றதாகி விட்டது. நொடியில் இந்த உலகம் மண்ணுக்குள் மறைந்து அழிவதுதான் நியதி. ஆனால் ஏன் இன்னும் அழியாமல் உள்ளது?

வள்ளுவர்முன் இந்த வினா எழுப்பப்பட்ட போது அவர் அழகாகச் சொன்னார். ‘பண்புடைய நல்லவர்கள் இந்த மண்ணில் வாழ்வதால் இது இன்றும் அழியாமல் உள்ளது’ என்றார். வள்ளுவரின் இக்குறள் மொழியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மன்னனே கூறிப் போந்தான் என்பது மலைக்க வைக்கும் வியப்பல்லவா?

‘ஏன் இந்த உலகம் இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளது? இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் தனித்து உண்ணார். யாரையும் வெறுக்க மாட்டார். மற்றவர் அஞ்சுதற்கு அஞ்சுவர். சோம்பல் கொள்ளார் புகழ் எனில் உயிரும் கொடுப்பர். பழிவருவதாயின் உலகே கிடைப்பதாயினும் கொள்ள மாட்டார். கவலையற்றிருப்பர். தமக்கென எதையும் நாடும் தன்னல நோக்கின்றிப் பிறர்க்காகவே வாழும் பெற்றியாளர்கள் உள்ளமையால் இவ்வுலகம் இன்றும் நின்று நிலவுகிறது’ என்னும் பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியின் பாடல் வரிகள் இவரின் உயரிய நோக்கங்களை நமக்கு நிரல்படுத்திச் சொல்கிறது.

‘உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகி
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!’ (புறம் 182)

புத்தரும், வள்ளுவரும், காரல்மார்க்சும் மனித குலத்தின் விடுதலைக்காகச் சிந்தித்த மாபெரும் அறிஞர்கள் ஆவர். வாழ்வின் துன்பங்கள் தீர வழி சொன்ன தூய சிந்தனையாளர்கள் அவர்கள். நம் சங்கப் புலவர்கள் பலபேர் இத்தகைய தூய அறச் சிந்தனையாளர்களாக வாழ்ந்துள்ளனர்.

பல்லாண்டுகள் ஆகியும் தன் தலைமயிர் நரைக்காமைக்கான காரணத்தைச் சொன்ன பிசிராந்தைப் புலவனின் பாடல் மக்கள் மேம்பாட்டுச் சிந்தனையின் மணிமுடியாக ஒளிர்கிறது.

‘ஆண்டுபல ஆகியும் உங்கள் தலையில் நரை தோன்றாமை எப்படி?’ என வினவுகிறீர்! என் மனைவியும், என் மக்களும் அறிவு, ஒழுக்கம், பண்பு, அன்பு நிரம்பப் பெற்றவர். என் பணியாளரும் என் எண்ணம் அறிந்து செயல் முடிப்பர். எம் நாட்டு வேந்தனும் அறம் அல்லன செய்யான் - நல்லன செய்து நாட்டைக் காப்பான். நற்பண்புகள் பல கொண்ட உயர்ந்த சான்றோர் பெருமக்கள் என் ஊரில் உறைகின்றனர். இவையே என் முதுமையுறா நிலைக்குக் காரணங்கள் என்னும் புலவனின் கூற்றில் அந்நாளில் நிலவிய பெண்கல்வியின் பெற்றி, நல்லாட்சி புரிந்த நாடாள் வேந்தனின் மாண்பு, கொள்கைச் சான்றோரின் உளப் பண்பு உள்ளிட்டவை தெற்றென விளங்குகின்றன.

‘யாண்டுபல வாக நரையில் ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினைவுதிர் ஆயின்
மாண்டஎன் மனையொடுமக்களும் நிரம்பினர்
யான்கண்டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான். காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!’ (பிசிராந்தையார், புறம் 191)

போர்வெறி கடந்த புலமை

நாம் வாழும் இன்றைய உலகைப் போர் அச்சம் சூழ்ந்துள்ளது. ஒரு நொடியில் உலகையே சாம்பல் மேடாக்கும் அணுக் கருவிகளை ஒவ்வொரு நாடும் அடுக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றன. போரையும் காதலையும் போற்றிய பண்பாடு தமிழ்ப் பண்பாடு. வேட்டைச் சமூகத்தின் விரைந்த வளர்ச்சியும், மண்ணாசை கொண்ட மன்னர்களின் பேராசையும் போர்த் தொழிலைப் போற்றச் செய்தன. ஆனாலும் இலக்கியங்களில் ஆங்கங்கே வெளிப்படும் போர் எதிர்ப்புக் குரல்கள் நாகரிகச் சமுதாயத்தின் நல்வேட்கையைப் புலப்படுத்துகின்றன.

சோழ மன்னர்கள் நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் போர்மூள இருந்த நேரம் புலவர் கோவூர்கிழார் எதிர்ப்படுகிறார். இருவர்தம் போர் வெறியைக் கடிகிறார்.

‘உங்கள் இருவரில் ஒருவனும் பனம்பூ மாலை அணிந்த சேரன் அல்லன். வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். நெடுங்கிள்ளியே! உன் மாலை சோழர்க்குரிய ஆத்திமாலையே. உன்னோடு போர் செய்வோன் மாலையும் அதுவே. நீயும் அவனும் சோழ மன்னரே! உம்முள் எவர் ஒருவர் தோற்பினும் தோற்பது உம் சோழர் குடியே! நீவிர் இரண்டு பேருமே வெற்றி பெறுதல் இயற்கையில் இயலாத ஒன்று. இஃது உம் குடிக்குப் பெருமை அன்று. மேலும் உம் பகைவர்க்கே இச்செயல் மகிழ்ச்சி தரும். எனவே போரைத் தவிர்மின்’ என நயம்பட உரைத்த பாங்கு பண்பட்ட சிந்தனையின் மனப் பிழிவாகும்.

‘இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே!
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்றுநும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!’ (புறம் 45)

அதியமானுடன் போரிடத் திட்டமிட்டிருந்த தொண்டைமானிடம் அவ்வையார் தூது சென்ற புறப்பாடலையும் ஒரு வகையில் போர் எதிர்ப்புப் பாடலாகக் கொள்ள இடமுண்டு. மேலும் ஆணுக்கு நிகராகப் பெண்களும் கல்வியிற் சிறந்திருந்தனர் என்பதற்குச் சான்றாகப் பல சங்கப் பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளது கொண்டும் நாம் அறியலாம்.

மேலும் ஆண், பெண் சமத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ள அதியன் - அவ்வை நட்பின் செழுமையை அப்பாடலை ஈடுபாட்டுடன் படிக்கும் போது உணர முடிகிறது.

வென்றவனை விடத் தோற்றவன் நல்லோன். அதுமட்டுமன்று, போரில் வென்றவனைக் காட்டிலும் முதுகுப்புறத்தில் புண் ஏற்பட்டதற்காக நாணி வடக்கிருந்து உயிர் துறந்த வேந்தனின் வீரம் மெச்சப்படுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கரிகால் பெருவளத்தானுக்கும் சேட் சென்னிக்கும் இடையே நடந்த போரில் சென்னிக்கு முதுகுப்புறத்தில் புண் ஏற்பட்டு விடுகிறது. இஃது தன் வீரத்துக்கு நேர்ந்த இழுக்கு என்றெண்ணி அம்மாவீரன் வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இதுபற்றி வெண்ணிக் குயத்தியார் என்னும் பெண்பாற் புலவர் பாடும் பாடலொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

‘காற்று இயங்கு திசையறிந்து நாவாய் ஓட்டக் கற்றவனே! மதங்கொண்ட யானையை யொத்த வலிமையுடைய கரிகால் வளவனே! வெண்ணிப் பறந்தலை என்னும் ஊரில் உன்னோடு நடந்த போரில் ஏற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர் துறந்தானே சேட்சென்னி! அவன் நின்னைக் காட்டிலும் நல்லன் அல்லவா?’

என்று வென்ற வீரனின் பெருமையைவிட மானமே பெரிதென மடிந்த மறவனின் மாண்பைப் போற்றும் மரபு இலக்கிய உலகில் அரிதாகக் காணக் கிடக்கும் ஒன்றாகும்.

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே!’ (புறம் 66)

மேலும் இப்பாடலின்வழி உரிய திசையில் காற்று வீசாத போதும் மரக்கலத்தைத் தம் மனத்தின் திசைக்கேற்ப மாற்றி இயக்கும் பேராற்றல் கொண்டவராயும், கடல் ஆளுமை மிக்கோராயும் தமிழர் விளங்கினர் என்பதை அறிய முடிகிறது.

உழவுத்திறம், நீர் மேலாண்மை, மருத்துவ அறிவு, போர்க்கலை ஆற்றல் போன்ற பல துறைகளிலும் சிறந்த அறிவு மிக்கவர்களாகத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைக் கொண்டு நாம் உய்த்துணர்கிறோம்.

திணைப் பகுப்பு

தமிழர்களின் திணைப் பகுப்பு முறை அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வை நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது. அதுமட்டுமன்று புராணப் பொய்க் கதைகள், கடவுளின் அருட் கடாட்சங்கள் கொஞ்சமும் தலைகாட்டாத தூய அறிவு நெறி சான்ற தொல்குடிமக்களாக அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

வாழ்வியலை அகம், புறம் என்று பகுத்த பண்டைத் தமிழர்கள் முழுமுதற் பொருளாக வைத்துப் போற்றியது தாம் வாழ்ந்த நிலத்தை மட்டுந்தான்.

‘மலையும் மலைசார்ந்த இடமும் - குறிஞ்சி
காடும் காடுசார்ந்த இடமும் - முல்லை
வயலும் வயல்சார்ந்த இடமும் - மருதம்
கடலும் கடல்சார்ந்த இடமும் - நெய்தல்
மணலும் மணல்சார்ந்த இடமும் - பாலை’

தெய்வம், மக்கள், விலங்கு, பறவை, தொழில், உணவு என வரும் பிறவற்றை யெல்லாம் அவர்கள் இரண்டாம் இடத்தில் தான் வைத்தனர். அவற்றைக் கருப்பொருள்கள் என வரையறுத்தனர். கடவுளை பத்தோடு பதினொன்றாகத்தான் சேர்த்தனர்.

‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயத்தீம்புனல் உலகமும்
வருணன் மேயப்பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் செல்லவும் படுமே!’ (தொல்காப்பியம்)

என்கிற பாட்டில் சொல்லப்படும் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை முதலான கடவுட் பெயர்கள் எல்லாம் இன்று நம்மால் கைக்கொள்ளப்படும் ஆரியக் கடவுள்களோடு முற்றிலும் பொருத்தமற்றவை ஆகும். சங்கத் தொகை நூல்களின் திணைக் கோட்பாடு விரிவாக ஆராயத் தக்கது.

முப்பால் தந்த முதல்வன்

‘தெள்ளு தமிழ்நடை
சின்னஞ்சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுதொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம் பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்றதாற்
பெற்றதே புகழ் வையகமே!’

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தன்னிகரற்ற நிலையில் விளங்கிய தமிழினம் சனாதனப் பள்ளத்தில் குடை சாய்ந்த போது, அதனைத் தூக்கி நிறுத்தத் தோள் கொடுத்த வல்லாளனே வள்ளுவப் பேராசான்.

கல்வி மறுக்கப்பட்ட இனத்தின் முன் கல்வியின் முதன்மையைப் பேசிய பெருமகன் அவர்.

‘கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்’ (குறள் 393)

விதிவிதி என்று சொல்லி வீணில் சோம்பி இராதே. ஆள்வினையோடு நீ எழுந்தால் உலகையே ஆளும் வல்லமை பெறலாம் என்று நரம்புகளின் வேரில் நம்பிக்கை விசையை ஊட்டியவர் அவர்.

‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’ (குறள் 679)

‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்’ (குறள் 620)

முன்னோர்கள் சொன்னவை, பல்லாண்டுகளாய்ப் பின்பற்றப்பட்டு வருபவை என்பதற்காக மட்டும் எந்த ஒன்றையும் கண்மூடித் தனமாக ஏற்காதே! அறிவு கொண்டு சிந்தித்துப் பார் என அறைகூவல் விடுத்தவர் அவர்.

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (குறள் 423)

வருணாசிரம வெறிபிடித்த வன்னெஞ்சு ஆரியப் பார்ப்பனர் உழைப்பைக் கொச்சைப் படுத்தினர். உழுதொழிலை இழிதொழில் என்றனர். ஆனால் வள்ளுவரோ உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி என்றார். யாவினுக்கும் மூத்த தாய்த்தொழில் உழவுத் தொழில் என்றார்.

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)

அவருடைய குறள் நூலில் கோனாட்சிக் கருத்துகள் பேசப்பட்டாலும் குட்டியாட்சியின் மாண்பினை முதன்மைப்படுத்திய மூலவர் வள்ளுவர் ஆவார். பெண்மையையும் காதலை யும் உயர்வுபடுத்திய பேரிலக்கியமான திருக்குறளில் பெண்வழிச் சேறல் உள்ளிட்ட சில அதிகாரங்களில் வேறுபட்ட குரல் ஒலித்தாலும் பெண்களைப் போல் ஆண்களும் கற்புநெறியோடு வாழ வேண்டும் என வலியுறுத்தியவர் வள்ளுவர் ஆவார்.

‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டாழுகின் உண்டு’ (குறள் 974)

பெரியார் சில இடங்களில் திருக்குறளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டினாலும், நிறையையும் போற்றிக் கொண்டாடிய ஒரே நூல் அஃதொன்றே ஆகும்.

சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள்பால் பெரியார் கடுமையான கருத்து மாறுபாடு கொண்டிருந்தார். அறிவின் விடுதலையை அவாவிய அவரின் தூய நெஞ்சம் பகுத்தறிவுக்குப் புறம்பான முறையில் பழமையைத் தூக்கி நிறுத்திய அத்தகைய இலக்கியங்களைச் சாடியது. இதற்கு முத்தமிழ்க் காப்பியமாகிய சிலம்பும் தப்பவில்லை. பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் பகுத்தறிவுப் பிரம்பு கொண்டு விளாசிப் பின்னி எடுத்தார்.

“இயற்பகை நாயனார் கதையைப் படித்தால் அதில் இயற்பகை நாயனார் ஒரு பார்ப்பானுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தார் என்றும், அதனால் அவருக்கு மோட்சம் கிடைத்தது என்றும் சொல்லப்படுகிறது. மற்றும் பரிக்குப் பதிலாக நரியைக் கொண்டு வந்து அரசனின் இலாயத்தில் இருந்த மற்ற குதிரைகளையும் கொன்று விட்டார் ஒரு நாயனார். ஒரு கோவிலை இடித்து மற்றொரு கோவிலைக் கட்டினார் மற்றொருவர். இந்தப் படியாக வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகிறார்கள் - நாயன்மார்களைப் பற்றியும் ஆழ்வார்களைப் பற்றியும்! இவைகளெல்லாம் ஒழுக்கத்திற்கு ஏற்றவையா?”

இராமாயணம் குறித்துப் பெரியார் பேசியவற்றையும் எழுதியவற்றையும் சொல்லப் போனால் இக்கட்டுரையில் இடங்காணாது.

ஆயினும் புராண இலக்கியமாயினும், பக்தி இலக்கியமாயினும் எதனையும் வரலாற்றுக் கண்கொண்டு ஆய்ந்து கொள்ளுவன கொள்ளலாம். தள்ளுவன தள்ளலாம். இலக்கியங்களில் பக்தியும் மூடநம்பிக்கையும் பேசப்பட்டாலும் தமிழனின் வரலாற்றுத் தடங்கள் அவற்றில் இணைந்தே உள்ளன.

தமிழர்க்கான இலக்கியங்களின் தலைமை இடம் சங்கப் பாடல்களுக்கு உண்டு.

சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும் மனிதநேயம் மிக்கதும் அறிவியல் கோட்பாடு நிறைந்ததும், மனித வாழ்வின் இன்பநுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும் அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்.

“எந்தெந்தக் காரணங்களுக்காகச் சமய வாதிகளால் சங்க இலக்கியங்கள் புறக்கணிக்கப் பட்டனவோ அந்தந்தக் காரணங்களுக்காகவே தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களாலும் தொண்டர்களாலும் சங்க இலக்கியங்கள் போற்றிப் புகழப்பட்டன. புரட்சிக் கவிஞரின் நூலைப்படி பாடல் அதற்குச் சிறந்த சான்றாகும்.”

முனைவர் க. நெடுஞ்செழியன், சிறந்த தமிழிலக்கியவாதியும் மார்க்சியச் சிந்தனையாளரும் ஆகிய கோவை ஞானி ஆகியவர்களின் கீழ்க்காணும் கருத்துக்களும் மனங்கொள்ளத் தக்கனவாகும்.

சங்க காலத்தில் தமிழன் மீது சாதி யோ, மதமோ, கடவுளோ வந்து அமர்ந்து கொள்ளவில்லை. சங்க காலத்திலேயே இவை நுழைந்து விட்டன. எனினும், தமிழ் மக்களின் வாழ்வியலை இவை தீர்மானிப்பவையாக இல்லை.

வரலாற்றுப் போக்கில் தமிழ்ச் சமு தாயத்துக்குள் மட்டுமல்லாமல் எல்லாச் சமூகத்தினுள்ளும் மதமும் கடவுளும் சங்கமும் ஆதிக்கம் பெற்றன. வரலாற்றில் வர்க்கங்களின் தோற்றத்தையொட்டி நாம் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். எனவே மார்க்சியப் பெரியாரியல்வாதிகளாகிய நாம், இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்கிற சமூக அறிவியல் நோக்கில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.

ஆரிய இராமனைக் கடவுளாக்கி, தமிழ் வீரனாகிய இராவணனை அவனுக்கு அடிபணிய வைத்த கதைதான் இராமாயணம் என்பதைப் பெரியார் உணர்ந்தே இருந்தார். ஆனால் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் வெளிவந்த இராமாயணக் கதைகளைத் துறைபோகக் கற்ற அறிஞர் அவரன்றி வேறு யார்?

தமிழுக்கான இலக்கியங்களை மட்டுமல்ல, தமிழில் இடம்பெற்றுள்ள அத்தனை இலக்கியங்களையும் படிப்போம். சாதிகள் ஒழிந்த, மதப் பொய்மைகள் மறைந்த, தமிழ்த்தேச விடுதலைக்கான போருக்கு அத்தனை இலக்கியங்களையும் கூர்தீட்டி ஆயுதங்களாக்குவோம்!

- தமிழேந்தி

(நன்றி : சிந்தனையாளன் பொங்கல் மலர் - 2011)