மானமிகு தோழர் மா. நாராயணசாமி அவர்களுக்கு 30.11.2019 அன்று 91-ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூரில் 1929-இல் மாரிமுத்து-செல்லம்மாள் இணையருக்கு மா. நாராயணசாமி மூத்த மகனாகப் பிறந்தார்.

தனது 19ஆவது வயதில் 1948-இல் அரியலூரில் பெருமாள் கோவில் முன் நடந்த தி.க. கூட்டத்தில் பெரியாரை முதன் முதலாகப் பார்த்தார். பெரியார் பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போனார்.

அன்றுமுதல் சிவபக்தராய் இருந்த ஆத்திகர், நாத்திகர் ஆனார்.

1949-இல் தஞ்சையில் நடந்த தி.க. மாநாட்டுக்கும் போய் வந்தார். தன் கொள்கைக்கு உரம் ஏற்றிக் கொண்டார்.

1950-இல் பெரிய திருக்கோணம் மாமன் மகள் அலமேலுவை திருமணம் செய்தார். இவர்களுக்கு சித்தார்த்தன், மேகநாதன், காமராசு, அருமைக்கண்ணு (பெரியார் வைத்த பெயர்) ஆகியோர் மக்கள் செல்வங்களாவர்.

1952-இல் பெரம்பலூர் வட்ட தி.க. 2-நாள் கூட்டம் குன்னத்தில் நடந்தது. மாநாடு போல் நடந்த அக்கூட்டத்தில் வீரானந்தபுரம் ந. கணபதி ஆசிரியர், முருக்கன்குடி வே. ஆனைமுத்து, அந்தூர் கி. இராமசாமி, இலந்தங்குழி ஆ.செ. தங்கவேலு, அல்லிநகரம் மூ.ரெ. சீனிவாசன், கூடலூர் சுப்பையா முதலானவர்களோடு நட்பு ஏற்பட்டது.

26.11.1957-இல் சாதி ஒழிப்பு போராட்டத்தில் கைதாகி விடுதலையானார்.

1961-இல் வரகூரில் இருந்த 110 வீடுகள் தீயினால் எரிந்து போயிற்று. அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணாவை நேரில் சென்னைக் கோட்டையில் சந்தித்து உருவா 1,10,000/- தொகை பெற்று அத்தனை வீடுகளையும் கட்டித் தந்தார்.

வரகூரில் ஆதிதிராவிடர் தெருவில் கந்தன் என்பவருக்கு சுயமரியாதை திருமணம் செய்வித்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தார். அதனால் சாதிக் கட்டுப்பாடு செய்யப்பட்டார். எதற்கும் அஞ்சாத சிங்கம் நாராயணசாமி, நாணயமும் நேர்மையும் தியாகத் தழும்புகளும் பெற்ற இவரை ஊரார் ஏற்றுக் கொண்டனர்.

6.6.1966-இல் பெரியாரை வரகூருக்கு அழைத்துக் கூட்டம் நடத்தினார்.

எஸ்.டி. விவேகி, அணைக்கரை டேப் இசை தங்கராசு இவர்களைக் கொண்டு கொள்கைப் பரப்புரைக் கூட்டம் நடத்தினார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு அறிஞர் வே. ஆனைமுத்துவுடன் இணைந்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டு தொண்டாற்றி வருகிறார்.

200-க்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

மா.பெ.பொ.க. நடத்திய பகுத்தறிவுப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டார்.

சிந்தனையாளன் இதழுக்கும் பெரியார் நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கும் இலக்கக்கணக்கில் நிதி திரட்டி பெரும் பணி யாற்றியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்காகக் கூட்டம் நடத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னை யில் பொதுச் செயலாளருடன் கைதாகி விடுதலையானார்.

இப்படிக் களம் பல கண்ட தோழர் இந்நாள் வரையிலும் கொள்கையில் நடுக்கமில்லாமலும், துவண்டு போகாமலும் ஒரு இளைஞரைப் போல செயலாற்றி வருகிறார். தனிமனித இராணுவம் (One man Army) என்பது இவருக்குப் பொருந்தும்.

மூன்று முறை வரகூர் ஊ.ம. தலைவர் பதவி வகித்திருக்கிறார்.

30.11.2019-இல் 91-ஆம் பிறந்த நாள் கண்ட வீரம் செறிந்த நாராயணசாமி வாழ்க! கொள்கை குன்றம் நாராயணசாமி வாழ்க! நாத்தழும்பேற நாத்திகம் பேசும் நாராயணசாமி வாழ்க! மேலும் பல்லாண்டு நலமுடன் வாழ நெஞ்சார வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

- மாவட்ட மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, அரியலூர்