தமிழகத்தின் தென்பகுதி, தொழுதூருக்குத் தெற்கே உள்ள பகுதி 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தது. பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் குடிகாட்டில் கிடக்கும் கல்மரம் (FOSSIL TREE) அதை உறுதி செய்வதுதான். அப்போது இமயமலை இல்லை.

இமயமலைக்கும் தென்குமரிக்கும் இடையே உள்ள-இந்துமாக் கடலுக்கும் அரபிக்கடலுக்கும் இடையே உள்ள பரந்த-அகன்ற-நீண்ட பரப்பில் “இந்தியா” என்று ஒருநாடு எப்போதும் இருந்தது இல்லை. “இந்திய அரசு” என, எதுவும் இருந்ததுமில்லை.

1757 வரையில்-ஆங்கிலேய வெள்ளைக்காரன் பிளாசியில் வெல்கிற வரையில் ஏது இந்தியா? தென்னிந்தியா உட்பட்ட பகுதிகளைப் பிடித்து, 1801 இல், அவன் உருவாக்கியதுதான் “இந்தியா”. அந்த இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி “சுதேச இந்தியா”. அதில் வெள்ளைக்காரனுக்குக் கப்பம் கட்டும். 565 அடிமைகள் அரசர்களாக இருந்தார்கள்; எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கில் அமைந்தது “பிரிட்டிஷ் இந்தியா”.

இவை அன்னியில் “பிரெஞ்சு இந்தியா”, “போர்ச்சுகீசு இந்தியா” என்று இரண்டு குட்டி இந்தியாக்கள் இருந்தன. இவை அலுங்காமல்-நலுங்காமல் இருந்ததை நானும் என் வயதுள்ளவர்களும் 1947, 1954 வரையில் பார்த்தோம். இப்போது அந்த “இந்தியா”அப்படி இல்லை. அந்த இந்தியா எங்கே?

இந்தியாவிலிருந்து ஆஃப்கனிஸ்தான் 1919இல் பிரிந்தது. அதற்குப் பிறகும் “இந்தியா”வை அப்படி அழைத்தோம். 1935 ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து பர்மா 1937ல் பிரிந்தது. அப்புறமும் “இந்தியா”வை அப்படிக் குறிப்பிட்டோம்.

18-7-1947இல் பிரிட்டிஷ் மக்கள் அவையில் ((British House of Commons)  இந்தி யாவை- “இந்தியா”, “பாக்கித்தான்” என இரண்டு துண்டுகளாகப் பிரித்து, இரண்டுக் கும் ‘சுதந்தரம்’ தருவது என்று வெள்ளைக்காரன் சட்டம் நிறைவேற்றினான்.

சுதேச அரசர்கள் இந்தியாவோடு அல்லது பாக்கித்தானோடு சேர்ந்து கொள்ளலாம் அல்லது தனித்தும் இருக்கலாம் எனவும் ஆங்கிலேயன் அறிவித்தான்.

அதன்படி, 15-8-1947 நள்ளிரவு 12.05 மணிக்கு “சுதந்தர இந்தியா” அமைந்தது. அந்த மூளியான பெரும் பரப்பையும் நாம் “இந்தியா” என்று ஒத்துக் கொண்டோம்.

அந்தப் பெரும்பரப்பில் வடக்கே, அரிசிங் என்கிற அரசனின் கீழ் இருந்தது, “காஷ்மீர்”. காஷ்மீரில் வாழ்ந்த-வாழும் மக்களில் 80ரூ பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களுக்குத் தனிச் சுதந்தர நாடு-பாக்கித்தான் அமைந்துவிட்டது.

அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள காஷ் மீருக்குள், பாக்கித்தான் மலைவாழ் பழங்குடி முரடர்கள் படை படையாகப் புகுந்தனர். தூங்குவதிலும், பெண் களை வேட்டையாடுவதிலும் விருப்பங் கொண்ட-அரிசிங் அலறித் துடித்தான்.

“இந்தியா”வோடு இணைத்திட ஒப்பந்தம் போட் டான்; குடும்பத்துடன் தில்லிக்கு அழைத்து வரப்பட்டான்.

பாக்கித்தானியரால் அனுப்பப்பட்ட பழங்குடிகள் முரட்டுப்படை, வடபகுதியிலுள்ள மூன்றில் ஒரு பங்கு காஷ்மீரைப் பிடித்துக் கொண்டது. “ஆசாத் காஷ்மீர்”-“விடுதலை பெற்ற காஷ்மீர்” என்கிற அந்தப் பகுதி, இன்றைய பாக்கித்தானின் முற்றாளுகையில் உள்ளது.

15-8-1947இல் அமைந்த சுதந்தர இந்தியாவுக்கு, 1946இல் வெள்ளையன் காலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட மத்திய சட்டப்பேரவை (Central Legislative Assembly) மற்றும் மாகாணங்களில் 1946ல் அமைந்த சட்டப் பேரவைகளின் (Provincial Legislative Councils) பிரதிநிதி கள்-ஆகிய இவர்களை வைத்து, 9-12-1946 இலேயே -சுதந்தரம் வருவதற்கு 8 மாதங்களுக்கு முன்னாலேயே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரையத் தொடங்கி விட்டார், மெத்தப் படித்த பண்டித ஜவகர்லால் நேரு.

இதை 1946லேயே கண்டனம் செய்த ஒரே மனிதர், 24 கோடி இந்தியரில், பெரியார் ஈ.வெ.ரா மட்டுமே.

பண்டித நேரு காஷ்மீரி பண்டிட் பார்ப்பனர்.

ஒரு பார்ப்பனர் பிரதமராக வர வாய்ப்பு வந்ததைக் கொண்டாடிட, காசிக்கு நேருவை வரச்சொல்லி, அங்கே யாகம் நடத்தினார்கள் பார்ப்பனர்கள். நேரு அதில் பங்கேற்றார்.

அந்த நேரு, அரசமைப்புச் சட்டம் எழுத, தன் இச்சைப்படி, “இந்திய அரசமைப்புச் சட்ட முதலாவது வரைவை” எழுதுகிற வேலையை பி.என்.ராவ் என்கிற பார்ப்பனரைக் கொண்டு செய்து முடித்து, அதை அச் சிட்டு, 18-10-1947இல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரிடம் கொடுத்தார். இது முதலாவது அரசமைப்புச் சட்ட மோசடி.

காந்தியாரின் ஆலோசனைப்படி, 29-8-1947இல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் “இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக” அமர்த்தப்பட்டார். அவர், வரைவுக்குழுவின் முதலாவது கூட்டத்தை 30.8.1947இல் நடத்தினார். அது வரைந்த அரச மைப்புச் சட்டவரைவு, அரசமைப்புச் சட்ட அவையி னரிடம் 1948 பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டது.

அந்தச் சட்டத்துக்கு 8,000 திருத்தங்கள் வந்தன. அவ்வளவையும் விவாதத்துக்கு உட்படுத்திய பிறகு, 26.11.1949இல், இறுதியான அரசமைப்புச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது.

அப்போது இந்தியாவிலிருந்த மாகாணங்களில் பாதி எண்ணிக்கைக்கு மேற்பட்டவை அச்சட்ட வரைவை ஏற்றுக்கொண்டு, மாகாண சட்டப்பேரவையில் தீர் மானம் போட்டு, பிரதமருக்கு அனுப்பவேண்டும். அது நடத்தப் பெறப் போதிய நேரமில்லை என்று கூறி விட்டு, 26.11.1949இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, 26.1.1950இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தார், நேரு.

இது இரண்டாவது அரசமைப்புச்சட்ட மோசடி.

இந்நிலையில், காஷ்மீரை தனி சுதந்தர நாடாக ஆக்க வேண்டும் என எண்ணிய ஷேக் அப்துல்லா வை காங்கிரசுக் கட்சி நம்பவில்லை.

ஷேக் அப்துல்லா, “காங்கிரசுக் கட்சிக்குள்ளும் மத வாதப் போக்கு அதிகரித்துவிட்டது; இந்தியாவில் மதவாத அரசியல் தவிர்க்கப்பட முடியாதது” என்று குறை கூறினார்.

அத்துடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீருக்கு உள்ள ‘சிறப்புநிலையை’ இந்திய அரசமைப்புச் சட்டத் தில் உறுதி செய்யவேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதனால் இந்திய அரசமைப்பில், 306 (அ) என்ற புதிய விதி, 309 ஆம் விதியாக (Article) மாற்றப்பட்டது.

அப்போது நேருவுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. ஷேக் அப்துல்லா மேலும் அதிக சலுகைகள் கேட்டு நெருக்கினார்; இந்துமதவாதிகள் நேருவின் போக்கை விரும்பாமல் எதிர்த்தனர். மற்றொரு பக்கம் அய்க்கிய நாட்டு அவை, காஷ்மீரைப் பற்றி வாக்கெடுப்பு நடத்து வதை வற்புறுத்தியது.

இந்தக் கடுமையான நெருக்கடிகளின் காரண மாக, ஷேக் அப்துல்லா கோரியபடி, ஜம்மு-காஷ் மீருக்கு மேலும் பல உரிமைகளை அளிக்க நேரு ஒப்புக்கொண்டு, அதற்காக, இந்திய அரசமைப் புச் சட்டத்தில் 370ஆம் விதி, பழைய 309ஆம் விதியைத் திருத்தி, அமைக்கப்பட்டது. அதற்கான சட்டம் 17.10.1949இல் இந்திய அரசமைப்பு அவையில் நிறைவேற்றப்பட்டது. அது இன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது.

ஆனால் அச்சட்டத்தின்படி, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமைகள் அப்படியே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்றனவா? இல்லை; இல்லை; இல்லை.

அதனால்தான் தொடர்ந்து சிக்கல்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இன்னமும் அங்கு நடக்கின்றன.

ஆனால், “ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்” என்கிற தனி அரசமைப்புச் சட்டத்தில் சிறப்புவிதி கள் அனைத்தும் தெளிவாக உள்ளன.

அவற்றை நாம் ஒவ்வொருவரும் அறிவது முதன்மை.

ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம், 17.11.1956இல் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்ட அவையால் நிறை வேற்றப்பட்டது; அது 26.1.1957இல் நடப்புக்கு வந்தது.

ஜம்மு-காஷ்மீர் அசரமைப்புச் சட்ட முகவுரை என்ன கூறுகிறது?

முகவுரை

“ஜம்மு-காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள், இந்த எங்கள் மாநிலம் 26.10.1947இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும், அதன் பிரிக்க முடியாத பகுதியாக ஆனதையும் தொடர்ந்து, இந்தியாவுடன் ஆன எங்கள் உறவை வரையறுக்கும் தன்மையிலும் உறுதி பூண்டு இச்சட்டதை இயற்றிக் கொண்டோம்.

விதி (Article) 6 : இந்தியக் குடிமகனாக உள்ள ஒவ் வொருவரும், இந்த மாநிலத்தில் 14.5.1954 அன்று:

அ. இந்த மாநிலத்தின் முதல்நிலை, அல்லது இரண் டாம் நிலை குடிமகனாக இருந்திருக்க வேண்டும்;

ஆ. இம்மாநிலத்தில் சட்டப்படிப் பெற்ற அசையாச் சொத்தைப் பெற்றவராகவும், இம்மாநிலத்தில் 14.5.1954 இல் 10 ஆண்டுகள் வசித்தவராகவும் இருக்க வேண்டும்.

விதி 27: ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் குடிஅரசுத் தலைவர் (President of Jammu-Kashmir-Sardar-i-Riyasat) என்று அழைக்கப்பட்டவர், ஜம்மு-காஷ்மீர் அரசமைப் பின் 1965 ஆண்டைய 6வது திருத்தத்தின் படி, இனி, ஆளுநர் (Governor) என அழைக்கப்படுவார்.

விதி 36: இதுவரையில் “பிரதமர்” – “Prime Minister” என்று அழைக்கப்பட்டவர், ஜம்மு-காஷ்மீர் அரசமைப் பின் 1965 ஆம் ஆண்டைய 6வது திருத்தத்தின்படி, இனி, “முதலமைச்சர்”- “Chief Minister” என அழைக் கப்படுவார்.

இவை, 26.1.1957 நடப்புக்கு வந்த ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பின்படி, அவர்கள் பெற்றிருந்த சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டதைக் காட்ட வில்லையா?

இந்த உரிமைப் பறிப்பை 1959இல் தொடங்கினார், நேரு. அது தொடர்ந்து 1960, 1961, 1963, 1965, 1967, 1968, 1970 எனப் பல கட்டங்களில் நடைபெற்றது.

பண்டித நேரு என்கிற தந்தையைத் தொடர்ந்து, அவர் மகள் இந்திரா காந்தி கால ஆட்சிக்குள் எண் ணற்ற உரிமைகள் பறிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கான தனிக்கொடி பற்றிய விதி தப்பியது.

விதி 144 : இம்மாநிலத்தின் கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கும். சமஇடைவெளியில், சமதூரத்தில், சம அகலத்தில் குத்துவாக்கில் மூன்று வெள்ளைக்கோடுகள் கம்பத்தை ஒட்டி இருக்கும். கம்பத்தை நோக்கி நடுவில் ஏர் இருக்கும்.

அப்படிப்பட்ட கொடி, தேசியக் கொடியுடன் பறப்பதை 2013 ஏப்ரலில், நானும், தில்லி தானப்பனும், செந்துறை சீனுவாசனும் ஜம்முவில், குளிர்காலத் தலைமைச் செயலகத்தின் கட்டடத்தில் பார்த்தோம்.

இப்படிப்பட்ட இருப்பு நிலைமைகளை மார்க்சிய-லெனினியக் கொள்கையினரும், திராவிட-தமிழ்த் தேசியக் கொள்கையினரும், பெரியாரிய அம்பேத்கரியவாதி களும் இப்போதாவது நல்ல எண்ணத்துடன் படிப்பதும், தெரிந்து கொள்ளுவதும் மிகவும் நல்லது.

இப்படிப்பட்ட இந்திய அரசின் உரிமைப் பறிப்பை நன்றாக அறிந்த 70-75 அகவையினர் - இந்துக்களும், இஸ்லாமியர்களும், மற்ற மதத்தினரும் இந்தியாவி லும், ஜம்மு-காஷ்மீரிலும், ஆசாத் காஷ்மீரிலும், பாக்கித் தானிலும் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

இந்துத்துவக் கொள்கையின் கர்த்தாக்களுள் ஒரு வரான தீனதயாள் உபாத்யாயா, கோல்வால்கர் தொடங்கி, இன்று உள்ள பிரதமர் மோடி வரையில்-மொத்த காஷ் மீரும் இந்தியாவுடன் இரண்டறக் கலந்து இணைந்து விட வேண்டுமெனக் கூவுகிறார்கள்.

இதை, பாக்கித்தானியரும், அமெரிக்கரும், ஜம்மு-காஷ்மீர் மக்களும் எப்போதும் அனுமதிக்கமாட்டார்கள்.

அதேபோல, ஜம்மு-காஷ்மீரை பாக்கித்தானோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என, லியாகத் அலிகான் முதல்-புட்டோ, முஷ்ராஃப், இப்போதைய பிரதமர் ஷரீஃப் வரையில் மனதார இச்சிக்கிறார்கள்.

அதற்கு வழிகோலத்தான் அவ்வப்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டைத் தாண்டியும், மலைமுகடு பகுதியிலும் பாக்கித்தானில் முறையாகப் பயிற்சி அளிக் கப்பட்ட பயங்கரவாதிகளையும், பட்டாளத்தையும் பாக்கித் தானியர் அனுப்புகின்றனர். இந்துமத  வெறியர்களின் கோரிக்கையும், இஸ்லாமிய ஜிகாத்துகளின் கோரிக் கையும் ஒருபோதும் நிறைவேறாது,

மொத்த காஷ்மீரில் மூன்றில், ஒரு பகுதி-வடக்குப் பகுதி, ‘ஆசாத் காஷ்மீர்’-அதாவது ‘விடுதலை பெற்ற காஷ்மீர்’ என உள்ளது. இது பாக்கித்தானின் ஒரு பகுதியாக-பாக்கித்தானின் நேரடி ஆளுகையின் கீழ் உள்ளது. மீதிப்பட்ட மூன்றில் இரண்டுபகுதி, ‘ஜம்மு-காஷ்மீர், என, இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த காஷ்மீருக்கும்-ஆசாத் காஷ்மீருக்கும் இடையே “கட்டுப்பாட்டு எல்லைக்கோடு” (LoC), சர்வதேச எல் லைக்கோடு (IB)) என இரண்டு எல்லைகள் உள்ளன. இவற்றைத்தாண்டி, லஷ்கர்-இ-தைபா (Lashkere-e-Thaiba) வைச் சார்ந்த 8 பேர், ஊரி (Uri) பகுதியில் ஊடு ருவதற்காக வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற செய்தியை முன் கூட்டி, 15.9.2016 வியாழன் அன்றே, இந்திய அரசு உளவுத்துறையினர், இந்திய அரசின் உள்துறைக்கும்,  இராணுவத்துறையினர்க்கும் அறிவித்துவிட்டனர்.

ஊரியிலுள்ள இராணுவ தளத்தை, பக்கத்திலுள்ள மலைமுகட்டில் இருந்து, 2016 ஆகத்து 28 முதல் கூர்ந்து நோக்கி அறிந்திருக்கிறார்கள் பயரங்கவாதிகள். எனவே தக்க புலனாய்வின் பேரில், “ஊரி படைமுகாம்” என் பதில் நுழைய இருக்கிறார்கள்” என்பதையும் இராணுவ அதிகாரிகளுக்கு உளவுத்துறையினர் 15.9.2016 அன்றே தெரிவித்திருக்கிறார்கள்.

ஊரி படைமுகாம் எங்கே அமைந்திருக்கிறது என்பது பற்றிய நில வரைபடத்தையும் பயங்கரவாதிகள் வைத் திருந்தனர்.

அத்துடன் ஆர்.டி.எக்ஸ், டி.என்.டி. வெடி மருந்து களை வைத்த கையெறி குண்டுகள், AK-47 துப்பாக்கி கள் 4, 12வது படைக்குழுவினர் தங்கியிருக்கும் இடம், பற்றிய விவரங்களையெல்லாம் பஷ்டு மொழியில் விவரமாக எழுதி வைத்திருந்தார்கள், பயரங்கவாதிகள். 4 பயங்கரவாதிகள் ஊரி படைத்தளத்தில், 18.9.2016 ஞாயிறு காலை 5.30 மணிக்கு, படைவீரர்கள் டீசல் மாற்றி நிரப்பிக் கொண்டிருந்த பொழுது நுழைந்து, கையெறி குண்டுகளை வீசினார்கள். ஒரு குண்டு டீசல் சேமிப்புக் கிடங்கின் மீது விழுந்தவுடன் கூடாரத்தில் தீப்பிடித்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த 13 வீரர்கள் தீயில் கருகிச் செத்தார்கள். உடனே பயங்கரவாதிகளுக் கும் படை வீரர்களுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 படை வீரர்கள்-ஒரு படைத்தலைவர் உட்பட மாண்டனர். தற்கொலைப் படை பயங்கர வாதிகள் நால்வரும் 18.9.2016 ஞாயிறு காலை 8.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத் திருந்த ஆயுதங்கள் பாக்கித்தான் முத்திரையுடன் இருந்தன.

2002 மே முதல் இப்படி எல்லைதாண்டி நடக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடக்கிறது.

14.5.2002ல் கலுசாக் பகுதியில் மூன்று பயங்கர வாதிகள் நுழைந்து 3 படை வீரர்களையும், படை வீரர்களின் குடும்பத்தினர் 18 பேரையும், பொதுமக்கள் 10 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

அதனால், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பேயி, இந்திய எல்லையில் படைகளைக் குவித்துப் போரிட ஆயத்தமானார்; பாக்கித்தானும் அங்கு படையைக் குவித்தது. ஆனால் போர் மூளவில்லை.

2.1.2016 சனி, அதிகாலை 3.30 மணிக்கு, பஞ்சாபில், பத்தான்கோட்டிலுள்ள இராணுவ வானூர்தி நிலையத் துக்குள் 6 பயங்கரவாதிகள் புகுந்து, கண்மண் தெரி யாமல் சுட்டு, 7 வான்படை வீரர்களைக் கொன்றனர்.

ஊரி படைத்தளம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட செய்தி பரவிய உடனே, ஜம்மு-காஷ்மீர் பொதுமக்களும் இளைஞர்களும் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களைக் கலைந்து போகச் சொன்ன படைவீரர்கள், மற்றும் காவலர்களை நோக்கிக் கற்களை எடுத்து வீசித்தாக்கினர்.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில், குல்காம் மாவட் டத்தில் 12.7.2016 அன்று 3000, 4000 பேர் கொண்ட மக்கள் கும்பல், காவல்நிலையத்துக்குள் புகுந்து, 2 காவலர்களைக் கடத்திக் கொண்டு போனது; 70 தானி யங்கித் துப்பாக்கிகளைப் பறித்துக் கொண்டு போனது. கடத்திச் சென்ற இருகாவலர்களுக்கும் செமத்தியான அடி கொடுத்து, மக்கள் விடுவித்தனர்.

எப்போது ஜம்மு-காஷ்மீரில் வன்முறை வெடித் தாலும் 50, 60 காவலர்கள் மட்டுமே கலவர இடத்தில் இருக்கிறார்கள்; ஆனால் மக்களோ 3000, 4000 பேர் கூடி விடுகிறார்கள். காவலர்களைக் கல்லால் அடித்தே சந்திக்கிறார்கள்; அஞ்சி ஓடுவதில்லை.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி, 8.7.2016 வெள்ளி அன்று சுட்டுக்கொல்லப்பட்ட நாள் முதல், 30.9.2016 வெள்ளி முடிய கடந்த 85 நாள் களாக, ஜம்மு-காஷ்மீரில் அமைதி இல்லை.

78ஆம் நாள் தான் சற்று அமைதி திரும்பியது. கடை கள், உணவு விடுதிகள், பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆயினும் நிரந்தரமான அமைதி ஜம்மு-காஷ்மீரில் இப்போது வராது. ஏன்?

1. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் (LoC) கம்பி வேலி மட்டுமே உள்ளது. முக்கிய இடங்களில் இரவு-பகல் காவலாளி (Security) இருப்பார்.

18.9.2016 காலை 5.30 மணிக்கு ஊரி படைத் தளத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், கம்பிவேலி வலிவாக இல்லாத இடத்தில் கம்பிகளை அறுத்துவிட்டுத் தான் நுழைந்தனர்; அங்கு காவலாளியும் இல்லை.

2. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தொகை இன்று 70 இலக்கம், அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் (Cops), எல்லைப் பாதுகாப்புப் படையினர் (B.S.F), அதிரடிப் படையினர் (C.R.P.F) என, 2015 முதல் 7,50,981 பேர் உள்ளனர்.

3. ஆயினும் ஊரி பகுதியில், சர்வதேச எல்லை யில் (International Border-IB) பாக்கித்தானில் இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த இருவர் 21.9.2016 புதன் அன்று பிடிபட்டனர் என்ற செய்தி யை, 24.9.2016 சனி அன்று இந்திய இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

இப்படி இரண்டு எல்லைக்கோடுகள் வழியாகவும் பாக்கித்தான் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை எப்படித் தடுக்க முடியும்?

மேலும், “இந்த சர்வதேச எல்லைக்கோடு பிரச் சனையை, வேண்டுமென்றே நாங்கள் தீர்க்காமல் விட்டுவிட்டுச் சென்றோம்” என, 25 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீருக்கு வந்த ஓர் ஆங்கிலேயே அதிகாரி கூறியதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஜம்மு-காஷ்மீர் ஆட்சியிலிருக்கும் பி.டி.பி. -பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி, கட்டுப்பாட்டு எல்லைகளை ஒட்டி (LoC) 20,125 பதுங்கு குழிகளை (bunkers) அமைக்கப் போவதாகத் தொடக்கத்திலேயே கூறியது. அதுவும் நடைபெறவில்லை.

4. கள நிலைமை நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் மக்களில் 100க்கு 80 பேர் இஸ்லாமியர்கள்.

அரிசிங் ஆட்சியில், 1947 வரையில், இஸ்லாமியர் களுக்குப் படிக்க வசதி செய்யப்படவில்லை; அரசுப் பணிகளில்-காவலர், ஏவலர், எழுத்தர், ஆசிரியர் பணி களில் கூட இஸ்லாமியர்கள் அமர்த்தப்படவில்லை.

இன்று படித்துள்ள முஸ்லீம்களிடையே வேலையில் லாத் திண்டாட்டம் மிக அதிகம்.

இதைப் பயன்படுத்தி, இப்போது, 10,000 காவலர்களை, மாதம் தலைக்கு ரூ.6,000 ஊதியத்தில் அமர்த் தப் போவதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

அத்திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த நபீல் அகமது வானி (26) என்கிற, உதம்பூரைச் சேர்ந்த இளைஞர், எல்லைப் பாதுகாப்புப் படையில் (B.S.F.) துணை அதிகாரி (Assistant Commandant) வேலைக் கான தேர்வில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்றுப் பணி யில் சேர உள்ளார்.

அவரை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தில்லிக்கு வரவழைத்து, 11.9.2016இல் நேரில் பாராட்டியுள்ளார்.

இப்போது நபீல் அகமது வானிக்கு என்ன பணி?

“ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களும் இளம் பெண்களும் கல்லைத் தூக்காதீர்கள்; எவ்வளவு அதிகம் படிக்க முடியுமோ படியுங்கள்; அப்போது நல்ல வேலை கிடைக்கும்; கல்லை விடுங்கள்-கல்வியைக் கைக் கொள்ளுங்கள்” என்கிற செய்தியை தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் 11.9.2016 அன்றே தெரிவித்தார்.

இந்தப் புதிய வானி, இதைச் செய்வாரா? எல்லை யைக் காப்பாரா? நிற்க.

இப்படிப்பட்ட தற்காலித் திட்டங்கள் வழியாக, ஜம்மு-காஷ்மீர் மக்களையும், விடுதலை கோரும் உள்ளூர் போராளிகளையும், அங்கு இயங்கி வரும் கட்சிகளையும் இந்திய அரசு இனியும் ஏமாற்ற முடியாது.

அங்குள்ள போராளிகள் பாதி அளவில் வட வியட்நாம் போராளிகளையும், பொதுமக்களை யும் ஒத்தவர்கள்.

இந்திய அரசுக்குப் பொறுப்பும் அறிவும் இருந் தால், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு 17.11.1956 இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அரசமைப் பில் கண்டபடி, முழுத்தன்னுரிமை (Total Autonomy) வழங்கிவிட வேண்டும். இந்திய அரசின் கண்ணா மூச்சி விளையாட்டு இந்தியர்களை ஏமாற்றவே பயன்படும்.

தன்னுரிமை பெற்ற மாநிலங்களைக் கொண்ட உண்மையான கூட்டாட்சியாக இந்தியாவை மாற்றி விட வேண்டும். அமைதி வர, வேறு வழியே இல்லை.