கேரள அரசின் அறநிலையத் துறையின் தேவசம் பணிநியமன வாரியம் இந்துக் கோயில்களில் அர்ச்சகர் களாகப் பணிசெய்வதற்காகப் பார்ப்பனரல்லா தாரில் 36 பேரையும், பார்ப்பனர்களில் 26 பேரையும் தேர்வு செய்தது. பார்ப்பனரல்லாதாரில் ஆறு தாழ்த்தப்பட்டவர் களும் இடம்பெற்றுள்ளனர். கேரளாவில் கடந்த இருபது ஆண்டுகளாகப் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் கோயில்களில் அர்ச்ச கர்களாக அமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால் இப்போதுதான் முதன்முதலாக தாழ்த் தப்பட்ட வகுப்பினர் ஆறு பேர் அர்ச்ச கர்களாக அமர்த்தப் பட்டிருக்கின்றனர். உண்மையில் இது வரவேற்கத்தக்க புரட்சிகரமான நடவடிக்கையே ஆகும்.

கேரள தேவசம் பணிநியமன வாரியம் தாழ்த்தப் பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 30 பேர், பார்ப்பனர் 26 பேர் என மொத்தம் 62 பேர் கொண்ட பட்டியலை 6.10.2017 அன்று திருவாங்கூர் தேவசம் வாரியத்துக்கு அனுப்பியது. பணிநியமன ஆணையை வழங்கும் உரிமை திருவாங்கூர் தேவசம் வாரியத்துக்குத்தான் உண்டு. அதன்படி 62 பேருக்கும் அர்ச்சகர் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 62 பேரின் சாதி வாரி விவரம் :

பார்ப்பனர்  26

ஈழவர்              21

நாடார்             1

விசுவகர்மா               1

தீவாரா           2

தாண்டர்        1

வேட்டுவா    1

பட்டியல் இனத்தவர்           1

புலையர்        4

பிற பிற்படுத்தப்பட்டோர்            4

மொத்தம்  62

உச்சநீதிமன்றத் தீர்ப்பில், அர்ச்சகர் பணியை அரசமைப்புச் சட்டத்தின் விதி 16(4)இல் வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வகைமையில் சேர்க்க முடியாது என்று கூறியுள்ளதைப் பொருட்படுத்தாமல், கேரள அரசு, அரசுப் பணியில் வழங்கிவரும் இடஒதுக் கீட்டின்படி சாதிவாரியாக அர்ச்சகர்களையும் தேர்வு செய்திருப்பது மிகவும் போற்றத்தக்க ஒரு செயலாகும்.

கேரள அறநிலையத்துறையின் நிருவாக வசதிக்காக, திருவாங்கூர் தேவசம் வாரியம், கொச்சின் தேவசம் வாரியம், மலபார் தேவசம் வாரியம் என்று பிரிக்கப் பட்டுள்ளது. இப்போது திருவாங்கூர் தேவசம் வாரியத் தின்கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் இடங்களுக்கு அனைத்துச் சாதியினரையும் நியமித்தது போலவே, மற்ற வாரியங்களின்கீழ் உள்ள கோயில் களில் காலியாகும் இடங்களுக்கும் அர்ச்சகர்கள் நியமிக் கப்படுவார்கள் என்று கேரள அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

திருவாங்கூர் தேவசம் வாரியத்தின்கீழ் 1,252 கோயில்கள் உள்ளன. இவற்றுள் 70 பெரிய கோயில்கள் இருக்கின்றன. சற்றொப்ப 2500 அர்ச்சகர்கள் இக்கோயில் களில் பணிசெய்கின்றனர். ஆயினும் சபரிமலை அய் யப்பன் கோயில், திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேசுவரர் கோயில் போன்ற முதன்மையான கோயில்களில் பார்ப் பனர் அல்லாதார் எவரும் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட வில்லை. தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாகப் பணியில் அமர்த்தும் திருவாங்கூர் தேவசம் வாரியம், சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10-50 அகவையில் உள்ள பெண்கள் வழிபடுவதற்குத் தடைவிதிக்கிறது. 1991இல் கேரள உயர்நீதிமன்றமும் சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கான உரிமையை மறுத்தது. பெண்கள் சபரிமலை கோயிலுக்கு வந்தால், அய்யப்பனின் பிரம்மச்சரியம் ஆட்டங்கண்டுவிடுமாம்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களை அனுமதிப்பதில்லை என்கிற பழக்கவழக்க நடைமுறை நீண்டகாலமாக இருந்து வருகிறது; இது மதம் சார்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலான உரிமை; இந்த உரிமை அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட் டுள்ளது என்று பழைமைவாதிகள் வாதிடுகின்றனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 13.10.2017 அன்று அரசமைப்பு அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

கேரளத்தில் இப்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகியுள்ளனர். ஆனால் இந்த நோக்கத்திற்கான முதல் நடவடிக்கை தமிழகத்தில்தான் மேற்கொள்ளப் பட்டது. பெரியார் 1970 சனவரி 26 அன்று அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதற் கான போராட்டத்தை அறிவித்தார். அப்போது முதல மைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அளித்த வாக்குறுதியை ஏற்று, பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார், 1970 திசம்பர் 2 அன்று பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரும் அர்ச்சகராவதற்கான சட்டம் தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 1972இல் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், கோயில்களின் அர்ச்சகர் பணி பரம்பரை வாரிசு உரிமை கொண்டது அல்ல என்று கூறியது. இதன்மூலம் தமிழக இந்து அறநிலை யத்துறை 1959இல் அர்ச்சகர் பணி வாரிசு உரிமை உடையது என்று இயற்றிய சட்டம் செல்லாததாகி விட்டது. அதேசமயம் ஆகம விதிகள், பழக்கவழக்கம், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அர்ச்சகர்கள் அமர்த் தப்பட வேண்டும் என்று கூறி, தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தைச் செயல்படுத்த முடியாதவாறு முடக்கியது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களா வதற்குத் தடையாக உள்ள அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் 15.4.1974 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதன்பின் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது குறித்த சிக்கலை ஆராய 1979இல் நீதிபதி மகாராசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை 1982இல் அரசிடம் அளிக்கப்பட்டது. ஆகமக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று சாத்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக்காட்டி நீதிபதி மகாராசன் குழு பரிந்துரைத்தது. 1991இல் செயலலிதா ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்காக திருச்சி அருகே வேதாகமக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெரியார் இயக்கத்தினரும், புரட்சிகர அமைப்பினரும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்திக் கோயில் கருவறை நுழைவுப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதன்பின், 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அர்ச்சகர் பணிநியமனம் குறித்து ஒரு முற்போக்கான தீர்ப்பை வழங்கியது. இது கேரளாவில் ஆதித்யன் என்னும் நம்பூதிரிப் பார்ப்பான் தொடர்ந்த வழக்காகும். நம்பூதிரிப் பார்ப்பனர் மட்டுமே வழமையாக அர்ச்சகராக இருந்த ஒரு கோயிலில் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் 1993இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதி பதிகள் எ. இராசேந்திரபாபு, துரைராஜு ஆகியோர் சிறப் பான ஒரு தீர்ப்பை அளித்தனர்.

KERALA 600“இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரே அர்ச்சகராக வரமுடியும் என்ற ஒரு பழக்கம் இருந்திருக்கிறது என் பதற்கு ஆதாரம் இருந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பழைய பழக்க வழக்கம் (Custom and Usage) என்று காட்டி அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையைக் கோர முடியாது. அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்; அந்தச் சாதியின் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதன்மையான கூறாக இருக்க முடியாது. அப்படிச் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை” என்று கூறி, ஆதித்யன் தொடுத்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடிச் செய்தனர்.

ஆதித்யன் வழக்கு என்று கூறப்படும் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தான் கேரள அறநிலையத்துறை 2017 அக்டோபர் மாதம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது.

1972ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அர்ச்சகர் பணி வாரிசு உரிமை உடையது அல்ல என்று கூறியது. 2002இல் ஆதித்யன் வழக்கில் அர்ச்சகர் பணி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உரிமை உடையது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் 23.5.2006 அன்று, உரிய கல்விப் பயிற்சி பெற்ற எந்த ‘இந்து’வையும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்கலாம் என்ற அரசாணை யைப் பிறப்பித்தது. இதற்கான சட்டம் 29.8.2006 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஆதிசைவ சிவாச்சாரிகள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிருவாக சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தனர்.

கேரளத்தில் அண்மையில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட்டவர்கள் கேரள இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாவர். ஆனால் தமிழ் நாட்டில் அறநிலையத்துறை நடத்திய ஆறு ஆகமப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த 206 பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இன்றுவரை அர்ச்சகர் பணி நிய மனம் வழங்கவில்லை. இம்மாணவர்கள் தங்களை அர்ச்கராகராக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

2006ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அனைத் துச் சாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராக லாம் என்ற ஆணையையும். ஆகமப் பயிற்சி பெற்ற மாணவர்களின் கோரிக்கையையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய். என்.வி. இரமணா ஆகியோர் 2015 திசம்பரில் ஒரு நயவஞ்சக மான தீர்ப்பை வழங்கினர்.

வழக்கைத் தொடுத்த பார்ப்பன அர்ச்சகர்கள் கோரி யிருந்தபடி, 2006ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப் பித்த ஆணையை இரத்து செய்வதாக இத்தீர்ப்பு கூற வில்லை. அதேபோல் ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகராகப் பணியில் அமர்த்தக் கூடாது என்றும் சொல்லவில்லை. ஏதோ முற்போக்காகக் கூறுவதுபோல், ஆகம முறைப்படி அர்ச்சகரை அமர்த்துவதில் சாதியோ, பிறப்போ பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டு, ஒரு குறிப்பிட்ட கேயிலின் ஆகம விதிப்படி எந்தப் பிரிவினர் - கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் (denominations) காலங்காலமாக அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனரோ அவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று இத்தீர்ப்பு கூறுகிறது.

ஆகமங்களின்படி அர்ச்சகராக அமர்த்துவதற்கு நீண்டகாலமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் இத்தகைய கட்டுப்பாடுகளைச் சமத்துவத்துக்கான உரிமையை மீறியதாகக் கருதமுடியாது (The restrictions prescribed by the age old Agamas is not a violation of the right to equality) என்றுகூறி, என்றென்றும் பார்ப்பனர்களே அர்ச்சகர்களாக நீடிப்பதை இத்தீர்ப்பு உறுதி செய்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட கோயிலின் அர்ச்சகர் நியமனம் அக்கோயிலின் ஆகம முறைப்படி அமைந்துள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகே நீதிமன்றம் அதன் மீதான தீர்ப்பை வழங்கும் என்று இத்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதன் மூலம் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராவதற்கான எல்லா வாயில்களையும் அடைத்துவிட்டனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோரின் வாதம் என்னவெனில், பிறவி அடிப்படையிலான சாதி-அதாவது ‘பிராமணன்’ என்பது மட்டுமே அர்ச்சகராக இருப்பதற்கான தகுதி இல்லை சைவக் கோயில்களில் வைணவப் பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது; அதுபோல் சைவப் பார்ப்பனர் எல்லோரும் சைவக் கோயிலில் அர்ச்சகராக முடியாது; சைவப் பார்ப்பனரில் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தில் பிறந்தவர் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட கோயிலின் ஆகம முறைப்படி அர்ச்சகராக முடியும்; எனவே கோத்திரம் என்பதை ஒரு சாதியாகக் கருத முடியாது என்பதாகும். இதைவிட வஞ்சகமான விளக்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது.

தென்னாட்டில்தான் பெரிய கோயில்கள் அதிகம். இதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்கள் பல நுற்றாண்டுகளாக இருந்துவருபவை. தொடக்கக் காலங்களில் இவற்றில் அர்ச்சகர்களாக இருந்த பார்ப்பனர்கள் அர்ச்சகர் பதவி யைத் தங்கள் பாரம்பரிய உரிமையாகப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆகமங்களை உருவாக்கிக் கொண்டு, அவற்றைக் கடவுள் அருளியவை என்று கூறிக்கொண்டனர். அரசர்களின் துணையுடன் இவற்றைக் கல்வெட்டுகள். செப்பேடுகளில் பதியச் செய்தனர். அர்ச்சகர் நியமனத்தில் குறிப்பிட்ட கோத்திரத்திற்கு முதன்மை தரும் உச்சநீதிமன்றமே, ஒருவர் எந்தக் கோத்தரம் என்பதை உறுதி செய்வதற்கான சமய வல்லுநர்கள் இப்போது இல்லை என்று கூறியுள்ளது. எனவே கோத்திரம் எனும் அளவுகோல் பித்தலாட்ட மானது; அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிப்பதற்கு இது வழி வகுப்பதாகும்.

1972இல் தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அர்ச்சகரை வாரிசு உரிமை அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பெருங்கோயில்களில் இருக்கும் 1174 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசு உரி மையாகப் பதவி பெற்றவர்கள் தான். மேலும் 411  பேர் அவர்களின் பரிந் துரை மூலம் அர்ச்சகர்களானவர்கள். முறையாக ஆகமப் பயிற்சி பெறாத வர்கள் அதிக அளவில் அர்ச்சகராக உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர் களில் 28 பேர், சென்னை கபாலீசுவரர் கோயிலில் 41 பேரில் 4 பேர் மட்டுமே ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நீதிபதி ஏ.கே. இராசன் குழு அறிக்கையில் ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. இவர்கள் பார்ப்பனர் என்ற அடிப்படையில் மட்டுமே அர்ச்சகராகியிருக்கின்றனர். ஆனால் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற பார்ப்பன ரல்லாத 206 பேருக்கு அர்ச்சகர் உரிமை மறுக்கப்படு கிறது.

தந்தை பெரியாரும் மேதை அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராக வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனர். 1927இல் மகத்குளப் போராட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் அம்பேத்கர் தலைமையில் நிறைவேற்றப் பட்டது. பெரியார் 1973இல் தான் தன் 95ஆவது அகவையில் இதற்கான போராட்டத்தை அறிவித்தார். நீண்டகாலமாக இருந்துவரும் பழக்கம், வழக்கம் ( Custom and Usage ) என்ற பெயரால் இருந்துவரும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டஅவையில் இந்துச் சட்டத்திருத்த மசோதாவை அம்பேத்கர் கொண்டு வந்தார். சனாதனவாதிகளின் எதிர்ப்பால் அதை நிறைவேற்ற முடியாதபோது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகளின் ஒரு பகுதியாக இப்போது கேரளத்தில் ஆறு தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாதவர் 36 பேர் அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்பது ஒரு சனநாயக உரிமை. சுதந் தரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் “கருவறையில் தீண்டாமையை” நீடிக்கச் செய்வது 97 விழுக் காடு மக்களாக இருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்களின் சுயமரியாதையை இழிவுபடுத்துவதாகும்.

தேவதாசி முறை, தலித்துக்களுக்குக் கோயில் நுழைவு உரிமை மறுப்பு போன்றவைகளும் ஆகம விதிகளாக இருந்தன. அவற்றை ஒழித்திட சட்டம் செய்தது போல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகரா வதற்கு எதிராக உள்ள சட்டத்தின் தடைகளை நீக்கிட வேண்டும்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கொள்கையை முதலில் தூக்கிப் பிடித்த தமிழ் நாட்டில் கேரளத்தைப் போன்று அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகராகிட தமிழர்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்.