“தினத்தந்தி” “தினத்தூது” நாளிதழ்களின் நிறுவனரும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உழைத்தவருமான மறைந்த சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் என்னும் சி.பா.ஆதித்தன் அவர்களின் மூத்தமக னாவார் பெருந்தகை பா.இராமச்சந்திர ஆதித்தன்.

தமிழகத்தில் தமிழர் நலனுக்கான தமிழ் நாளிதழ்களை நிறுவி அவற்றைத் தம் வாழ்நாளிலேயே வெற்றியாக நிலைநாட்டியவர் சி.பா.ஆதித்தன்.

தம் தந்தையார், 1960இல் தந்தை பெரியாரின் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்குப் பேராதரவு அளித்தவர் என்பதை நன்றாக அறிந்தவர் மறைந்த பா.இராமச்சந்திரன் அவர்களும், சில மாதங்களுக்கு முன்னர் மறைந்த அவருடைய தம்பி பா.சிவந்தி ஆதித்தன் அவர்களும் ஆவர்.

பா.இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் ஈழத்தமிழர் விடுதலையை ஆதரித்த தமிழக இயக்கங்களுக்கு, மனந்திறந்த பேராதரவை அளித்து ஊக்குவித்த பெருமகனார் ஆவார்.

நாடார் சமூகத்தினர் அரும்பாடுபட்டு 1920 இல் நிறுவிய “தி நாடார் பேங்க்” என்பதுதான், 1948க்குப் பிறகு “தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்” என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது 1980 களில் 130 கிளைகளுக்கு மேல் வளர்ந்த நிலையில், மற்றவர்களின் ஆதிக்கத்துக்கு ஆளாகியது. அதனை மீட்டு, மீண்டும் நாடார் சமூகத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வந்த சமூகப் போராளியாவார், பா.இராமச்சந்திர ஆதித்தன்.

தந்தை பெரியாரின் சிந்தனைகளை, உலகுக்கு அளித்திட, 2010 இல், “பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி அறக்கட்டளை”யினர் “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” நூலை வெளியிட முனைந்தபோது, அந்த முயற்சியைப் பற்றித் தம் “மாலை முரசு” நாளிதழில் விரிவாக எழுதச் செய்து, வே.ஆனைமுத்துவின் முயற்சிக்கு ஆக்கம் சேர்த்தவர். பா.இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள்.

இத்தகைய பெருந்தகையாளர் பா.இராமச்சந்திரன் அவர்கள், 16-10-2013 காலை 9 மணிக்கு மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்த போது, அவருடைய மறைவால் ஏற்பட்ட பேரிழப்பைக்கருதி மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், பெரியார்-நாகம்மை அறக்கட்டளை யினரும் துயருற்றோம்.

இவ்விரண்டு அமைப்புகளின் சார்பில், வே.ஆனைமுத்து, தாம்பரம் மா.சுப்பிரமணி, ஆர்.வி.நல்லதம்பி ஆகியோர் 17-10-13 காலை 9 மணிக்கு, அன்னாரின் இல்லம் சென்று, பா.இராமச் சந்திரன் அவர்களின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினோம்.

பெருமகனார் இராமச்சந்திரன் அவர்களின் மறைவால் ஏற்பட்ட பேரிழப்புக்கு உள்ளாகியுள்ள அவர்தம் துணைவியார் பங்கஜம் அம்மையார், மகன்கள் பா.இரா.கண்ணன் ஆதித்தன், பா.இரா.கதிரேசன் ஆதித்தன், மற்றும் குடும்பத் தார்க்கும்; “மாலை முரசு” நிறுவனத் தோழர்களுக்கும் மா.பெ.பொ.க. சார்பில் இரங்கலை உரித்தாக்குகிறோம். அப்பெருமகனாரின் உடல் 17-10-2013 அன்று அவருடைய சொந்த ஊரான காயா மொழிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

வளர்க பா.இராமச்சந்திர ஆதித்தன் புகழ்!

18-10-2013  வே. ஆனைமுத்து