டுபாய்க்கு நான் வேலைக்காக வந்து இறங்கிய முதல் நாள் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

மத்திய கிழக்கில் வேலை பார்ப்பதற்காக நான் இலங்கையிலிருந்து புறப்பட்டு கட்டார் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் டுபாய் சென்றடைந்தேன். அங்கு நான் வேலைபார்க்கும் கம்பெனிக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக ஒருவர் வந்திருந்தார். விமான நிலையத்தில் நான் டுபாயில் தங்கி வேலை செய்வதற்கான சகல விடயங்களையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்திருந்தவர் இலங்கையின் நிலைமைகள் பற்றிக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் எமது நாட்டு நிலைமைகளை கூறிக்கொணடே வந்தேன். திடீரென அவர் என்னிடம் கேட்டார் “என்ன பன்னி” என்று. எனக்கு கோபம் வந்து விட்டது. என்னைப் பார்த்து பன்றி என்று கூறி விட்டாரென்று நான் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துவிட்டு மௌனமாக இருந்தேன் எமது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரம் கழித்து மீண்டும் அவர் என்னிடம் “என்ன பன்னி” என்று கேட்டார். எனக்குக் கோபம் எல்லையைக் கடந்து விடவே, அழகான யாழ்ப்பாண தமிழில் நன்றாக பேசிவிட்டேன். கம்பெனிக்குச் செல்லும் வரை அவர் ஒன்றும் பேசவில்லை.

கம்பெனிக்குச் சென்று முதல் வேலையாக எனது இலங்கை நண்பன் நிமலனிடம் நடந்த விடயத்தைக் கூறினேன். நான் கூறியவற்றைக் கேட்ட எனது நண்பன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். எனக்கு இன்னும் கோபம் வரவே அவனையும் பேச ஆரம்பித்தேன். நீயும் என்னைப் பன்றி என்று சொல்லும் அர்த்தத்தோடா சிரிக்கிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவன் “நீ இலங்கை என்ன வேலை செய்தாய்?” என்பதைத் தான் அவர் உன்னிடம் “என்ன பன்னி” எனக் கேட்டார். நீ அவர் உன்னை “பன்றி” என்று சொல்லுகின்றார் என நினைத்து அவசரப்பட்டு திட்டி விட்டாயே என்றான்.

- க.தே. தாசன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It