உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், உதய் உமேஷ் லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு 20.3.18 அன்று 1989ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்தையே சிதைக்கும்படியான ஒரு தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை அம்பேத்கரிய-பெரியாரிய இயக்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் சில ஊடகங்களும் கண்டித்தன.

dalit merina 600யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தலித் மக்கள் வடஇந்தியா முழுவதும் 2.4.2018 அன்று முழுஅடைப்பும், போராட்டங்களும் நடத்தினர். பல இடங்களில் வன்முறை நிகழ்வுகள் நடந்தன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டத்தில் மத்தியப் பிரதேசத்தில் ஆறு தலித்துகளும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேரும், இராஜஸ் தானில் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஒரேநாளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, திடீரென தீப்பற்றியது போல் இந்தியா முழுவதும் முதன்மையான செய்தியானது. இத்தீர்ப்புக்குக் கடும் கண்டங்கள் எழுந்தன.

இத்தீர்ப்பை உள்ளூர வரவேற்கும் மனநிலையில் இருந்த இந்துத்துவ மோடி அரசு, இந்திய அளவில் தலித் துகள் வெகுண்டெழுந்து வீதிகளில் போராடியதால், வாக்கு வங்கி அரசியலால் உந்தப்பட்டு அடுத்த நாளே 3-4-18 அன்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு விண்ணப்பம் அளித்தது. நீதிபதிகள் கோயலும் லலித்தும் உடனடியாக இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை யின்போது நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்கு ரைஞர் மணிந்தர்சிங், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நடுவண் அரசும் ஏற்றுக் கொள்கிறது; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் முன்பிணை வழங்குவற்குத் தடையாக உள்ள 18ஆவது பிரிவை நீக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நடுவண் அரசு இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பத்து நாள்கள் கழித்துதான் இந்தச் சீராய்வு விண்ணப்பத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் “தீண்டாமையை” எந்த வடிவத்தில் கடைப்பிடிப்பதும் தண் டனைக்குரிய குற்றம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆயினும் சமூக நடைமுறை வாழ்வில் தீண்டாமை நீடிக்கிறது.

தீண்டாமையை ஒழிப்பதற்காக 1955இல் தீண்டாமைக் குற்றச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு 1976இல் “குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்” (Protection of Civil Rights Act) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இச்சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, ஆதிக்கச் சாதியினர் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீது இழைத்தக் கொடுமைகளுக் கான தண்டையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். செல் வாக்கும் பணமும் கொண்ட மேல்சாதி இந்துக்கள் தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தினர் என்பதே உண்மையாகும்.

இந்த முறைகேடுகளுக்கு முடிவுகட்டும் தன்மையில் 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர் மற்றும் பழங் குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் (Scheduled(ScheduledCastes and Scheduled Tribes (Prevention of Atrocities Act) இயற்றப்பட்டது. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 438ஆவது விதி முன்பிணை பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது. மேலும் அரசு ஊழியராக இருப்பவரைக் கைது செய்வதற்கு மேல் அதிகாரியின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்று உள்ளது. ஆனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18ஆவது பிரிவு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438ஆவது விதி இதற்குப் பொருந்தாது என்று கூறுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18ஆவது பிரிவு பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் வழங்கி யுள்ள பாதுகாப்பைத்தான் இப்போது உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இல் இயற்றப்பட்ட போதிலும் பார்ப்பன-மேல்சாதி உயர் அதிகார வர்க்கம் அச்சட்டத்திற்கான நெறிமுறைகளை உருவாக்காமல் ஆறு ஆண்டுகள் இழுத்தடித்தது. 1995 ஆம் ஆண்டில்தான் நெறி முறைகள் வகுக்கப்பட்டு இச்சட்டம் நடப்புக்கு வந்தது. 2015இல் இச்சட்டம் மேலும் வலிமையாக்கப்பட்டது. வன் கொடுமைகள் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட்டது. இதன்படி, இறந்த விலங்குகளை அகற்றுதல், பிணத்தைப் புதைக்க குழிவெட்டுதல், மனிதக் கழிவை அகற்றுதல் ஆகிய  பணி களைத் தலித்துகளோ, பழங்குடியினரோ செய்யுமாறு பணிப்பதும் வன்கொடுமையே என்று இச்சட்டம் சொல்கிறது.

1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவர் எளிதில் பிணையில் வெளிவராமல் சிறைக் காவலில் இருக்குமாறு செய்வதால், வன்கொடு மையால் பாதிக்கப்பட்டவர் அவரால் அச்சுறுத்தப்படுவதற் கான வாய்ப்பு குறைகிறது. ஆயினும் இந்துமத சாத்திரங் களால் கட்டமைக்கப்பட்ட சாதியப்படி நிலையில் கடைநிலை யில், வறியவர்களாக, வலிமையற்றவர்களாக, உடைமை யற்றவர்களாக, எந்த வகையான செல்வாக்கும் அதிகாரமும் இல்லாதவர்களாக இருக்கும் பட்டியல் சாதியினரும் பழங் குடியினரும் தங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமை களில் 25 விழுக்காடு அளவிற்கே காவல்நிலையத்திலோ மற்ற அமைப்புகளிடமோ புகார் தெரிவிக்கின்றனர் என்று களஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதிலும் அதிகாரவர்க்கம் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகக் கருதும் மனப்போக்கினால், ஆதிக்கச் சாதியினர் இழைக்கும் குற்றங்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மறுத்துவருகிறது. 2002ஆம் ஆண்டில் அரியானாவில் ஜஜ்ஜார் என்ற இடத்தில் மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த அய்ந்து தலித் இளைஞர்களைச் சாதிவெறி பிடித்த கும்பல் அடித்துக் கொலை செய்தது. இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. தலித்துகளை அடித்தபோது அவர்கள் எந்தச் சாதி என்று தெரியாது என்று நீதிமன்றம் இதற்கு விளக்கமளித்தது. செத்தமாட்டின் தோலைத் தலித்துகள் தவிர வேறு எந்தச் சாதியினரும் உரிப்பதில்லை என்பது இந்துக்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும். 2006ஆம் ஆண்டு மகாராட்டி மாநிலத்தில் கயர்லாஞ் ஊரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பய்யாலால் போட்மாங்கேவின் மனைவி, மகள், இரண்டு மகன்கள் ஆகியோரை நிர்வாணமாக வீதியில் நடக்கச் செய்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் குற்றமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. தலித்துக்களுக்கு எதிராகவே அரசு நிர்வாகம் செயல்படுகிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டு கள் இவை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

மகாராட்டிர மாநிலத்தில் ‘காரத்’ மருந்தியல் கல்லூரியில் பணியாற்றிய பாஸ் கர் கெய்க்வாட் என்ற தலித் ஊழியர் பற்றி அவருக்கான இரகசியக் குறிப்பேட்டில் கல்லூரி முதல்வரும் பேராசிரியரும் அவரைப்பற்றி அவரின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் குறிப்புகளை எழுதினர். இவர்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இருந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்பவரிடம் பாஸ் கர் கெய்க்வாட் அனுமதி கேட்டார். மகாஜன் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். அதனால் பாஸ் கர் கெய்க்வாட் மகாஜன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர்ந் தார். தன்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி மகாஜன் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மும்பை உயர்நீதிமன்றம் மகாஜன் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதன்பின் மகாஜன் உச்சநீதி மன்றத்தை நாடினர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயலும் யு.யு.லலித்தும் 20.3.2018 அன்று தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பின் முதன்மையான மூன்று கூறுகள்;

  1. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு முன்பிணை வழங்கலாம்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால் அவருக்குப் பணி நியமன ஆணை வழங்கிய அதி காரியின் முன் அனுமதி பெற்ற பிறகே அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
  3. அரசு அலுவலர் அல்லாத பொதுமனிதராக இருந்தால், மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் (DSP) முன் அனுமதி பெற்ற பிறகே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதால், பொய்யான வழக்குகள் தொடுப்பதால், அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே புதிய நெறிமுறைகளை-நிபந்தனைகளை வகுத்திருப்பதாக நீதி பதிகள் கோயலும் லலித்தும் விளக்கமளித்துள்ளனர். நாடாளு மன்றத்தால் இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் முன்பிணை பெறுவதை மறுக்கும் 18ஆவது பிரிவு செல்லாத தாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்துக்கு இல்லை.

அதேபோல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப் படையான நோக்கத்தையே சிதைக்கும் தன்மையில் புதிய நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத் துக்கு இல்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மட்டுமின்றி, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டமாக இருந்தாலும், அச்சட்டத்தில் குறைபாடுகள், போதாமைகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கருதினால், அதுகுறித்த தன் கருத்தை நாடாளுமன்றத்துக்குப் (இந்திய அரசுக்கு) பரிந் துரையாகத் தெரிவிக்கலாம். ஒரு சட்டத்தை மாற்றவும் திருத்தவும் மக்களால் அதிகாரம் வழங்கப்பட்ட நாடாளு மன்றத்துக்கு மட்டுமே உண்டு. இந்த அதிகாரம் உச்சநீதி மன்றத்துக்கு இல்லை. எனவே மகாஜன் வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்பை மீறி இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையே! இதைக் காரணம் காட்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யக் கூடிய நிபந்தனைகளை விதித்திருப்பதை ஏற்க முடியாது. வரதட்சணைத் தடுப்புச் சட்டம், பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்களும் சிலரால் முறைகேடாகப் பயன்படுத்தப்படு கின்றன. ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தைக் கூறி அந்தச் சட்டத்தையே இரத்து செய்ய வேண்டும் என்று கோருவது ஆதிக்கவாதிகளின் குரலாக இருக்கிறது.

பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் பொய்யான வழக்குகளைத் தொடுப்பதை முளையிலேயே கிள்ளி எறிவதற்காகவே புதிய நிபந்தனையை விதித்திருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயலும் லலித்தும் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பட்டியல் சாதியினரையும் பழங்குடியின ரையும் நம்பத்தக்கவர் அல்லர்-பொய்யர் என்று முத்திரை குத்துவதுபோல் இந்த நிபந்தனை இருக்கிறது. தலித்துகளை இழிந்த பிறப்பினராகக் கருதும் சாதி இந்துக்களின் மன நிலையில் இத்தீர்ப்பு மேலும் தலித்துகள் மீதான வெறுப்பை வளர்க்காதா? இதுபற்றியெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிந்திக்கவில்லை. ஏனெனில் அவர்கள் பார்ப்பனர்கள். உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பாதிப்பேர் பார்ப் பனர்கள். இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினராக உள்ள பார்ப்பனர்கள் இந்தியா சுதந்தரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் உச்சநீதிமன்றத்தில் பாதிப்பேராக இருப்பது பார்ப்பன மேலாதிக்கம் இன்னும் குலையாமல் இருப்பதையே காட்டுகிறது.

மேதை அம்பேத்கர் 1937இல் பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் பேசியபோது, “நீதிபதிகள் சாதியச் சார்புடன் தீர்ப்புகளை வழங்குகின்றனர். அதனால்தான் பெரும்பாலான தீர்ப்புகள் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் எதிராகவே இருக்கின்றன. எனவே நீதித் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்” என்று கூறினார்.

முன்அனுமதி-தலித்துகளுக்கு எதிரான ஆயுதம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பாக, அக்குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருக்கிறதா என்று மூத்த மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆய்வு செய்யவேண்டும்; ஆதாரம் இருப்பதாக உறுதி செய்தால் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். துணைக் கண்காணிப் பாளர் எழுத்து வடிவில் அறிக்கை அளிக்கவேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குமுன் துணைக் கண் காணிப்பாளரின் அறிக்கையைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தரவேண்டும். முன் அனுமதி குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவ்வாறு சொல்கிறது.

ஒரு குற்றச்சாட்டின் மீது விசாரணை செய்து அது உண்மையா? பொய்யா? என்று தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உரியதாகும். ஆனால் இந்த அதிகாரத்தை முன் அனுமதி என்ற பெயரால் காவல்துறையிடம் அளிப்பது சட்டத்திற்கு எதிரானதல்லவா? சாதிஆதிக்க உணர்வு மேலோங்கியிருக்கும் காவல்துறையிடம் முன்அனுமதி வழங்கும் பொறுப்பை ஒப்படைப்பது நண்டுகளுக்கு நரியைக் காவலாக வைப்பது போன்றதே ஆகும். குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக அறிக்கை அளிக்குமாறு அழுத்தம் கொடுப்பார்கள். இந்த நெருக்குதலைத்தாண்டி உண்மை யான அறிக்கையை அளிக்கக்கூடிய நேர்மையான, துணி வான அதிகாரிகள் காவல்துறையில் ஒருசிலரே இருக்கக் கூடும்.

தேசியக் குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி 2006 முதல் 2016 வரையிலான காலத்தில் தலித்துகள் மீதான தாக்குதல் 51 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 2006இல் 27,070 ஆக இருந்த தாக்குதல் 2016இல் 40,801 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பழங்குடியினர் மீதான குற்றங்களின் எண்ணிக்கை இதே காலத்தில் 5,790 என்பதிலிருந்து 6,568 ஆக உயர்ந்துள்ளது. இது 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25 விழுக்காடாக உள்ள-உடலுழைப்பாளர்களாகவே வாழுகின்ற இந்தப் பெரும்மக்கள் திரள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை உச்சநிதிமன்ற நீதிபதிகள் கருத்தில் கொள்ளாமல், பொய்வழக்கால் “அப்பாவிகள்” தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கு முதன்மை தந்திருப்பது அவர்களின் வர்க்க-சாதியச் சார்பையே காட்டுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 94 விழுக்காடு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நடைமுறையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், குற்ற வாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படாமல் காவல்துறையினரும் அரசு வழக்குரைஞர்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதால் இவ்வழக்குகளில் தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவாக இருக்கிறது. தேசியக் குற்றப்பதிவு ஆணைய அறிக்கையில் 2016ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினர் தொடர்பான வழக்குகளில் 1.4 விழுக்காடு, பழங்குடியினர் தொடர்பான வழக்குகளில் 0.8 விழுக்காடு அளவுக்கு மட்டுமே தண்டனை வழங்கப் பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில் முன்பிணை வழங்கலாம் என்பதும் மாவட்டக் காவல்துறை கண்காணிப் பாளரின் முன்அனுமதி தேவை என்பதும் பட்டியல் சாதியி னரும் பழங்குடியினரும் தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடு மைக்கு நீதிகேட்டு காவல்துறையையோ, நீதித்துறையையே, அரசு நிர்வாகத்தையோ அணுகவிடாமல் அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளேயாகும். 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மறைமுகமாகச் செல்லாததாக்குகிறது இத்தீர்ப்பு.

மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுனத்தின் ஆய்வாளர் ஸ் தபிர் கோரா என்பவர் மும்பையிலிருந்து வெளிவரும் அரசியல், பொருளாதார வாரஏட்டில் (நுஉடிnடிஅiஉ யனே ஞடிடவைiஉயட றுநநமடல) 2018 ஏப்பிரல் 18 நாளிட்ட இதழில், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்கிற பிழையான புரிதல்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். குசராத்தில் 6 மாவட்டங் களில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங் கப்பட்ட 461 வழக்குகளைக் கள ஆய்வு செய்திருக்கிறார். இவற்றுள் 142 வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 156(3)இன்படி 70.6 விழுக்காடு வழக்குகள் நீதிமன்றம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 34.39 விழுக்காடு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.3 விழுக்காடு வழக்குகள் மட்டுமே காவல்துறை கண் காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

எனவே காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து அறிக்கை அளித்த பிறகுதான் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்பது பட்டியல் சாதியினரையும் பழங்குடியினரையும் அலைக்கழிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்குவதுடன் வரம்பற்ற கால நீட்டிப்புக்கு வழிவகுக்கும். தற்போதுள்ள வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கான சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் இருக்கிற காலஅளவுகள் பின் பற்றப்பட முடியாதனவாகிவிடும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஏட்டளவில் மட்டுமே இருக்கும்படி செய்துவிடும்.

ahmedabad highcourt 600உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகிய இருவரும் இதே தன்மையில் 2017 சூலை 27 அன்று வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அத்தீர்ப்பில் மனைவியர் தங்கள் கணவன், மாமனார்-மாமியார் மீது பொய்யான புகார்களை அளிக்கின்றனர் என்று கூறி உள்ளனர். இத்தகைய பொய்யான புகார்களைத் தடுப்பதற்கான வழி முறைகளைக் கூறியுள்ளனர். உள்ளூர் குடும்ப நலக்குழு அந்தப் புகார் குறித்து விசாரித்து அறிக்கை தரும்வரையில் குற்றம் சாட்டப்பட்ட கணவனைக் கைது செய்யக்கூடாது என்று ஆணையிட்டுள்ளனர். உள்ளூர் குடும்பநலக்குழு வானது சமூக செயற்பாட்டாளர்கள், குடும்பத் தலைவிகள், ஓய்வு பெற்றவர்கள் முதலியோரைக் கொண்டதாக இருக்கும். இக்குழுவைத் தேசிய சட்ட ஆணையம் அமைக்கும் என்று இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவு உச்சநீதிமன்றத் துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கியுள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர். அர்னேஷ்குமார் எதிர் பீகார் அரசு வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் 498(ஏ) பிரிவின் கீழ் வழக்குகளை “எந்திரத்தனமாகப் பதிவு செய்யக்கூடாது; இச்சட்டம் முறைகேடாகப் பயன்படுத் தப்படுகிறது” என்று நீதிபதிகள் கூறினர்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடுத்துள்ளனர். நடுவண் அரசின் சார்பில் இவ்வழக்கில் கருத்துரைத்த கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மா “குடும்பநலக் குழுக்களை அமைப்பதும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் நடைமுறையில் இயலாது என்று மாநில அரசுகள் மடல் எழுதியிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

இந்த இரண்டு நீதிபதிகளுமே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வாழ்நிலையில் இருக்கும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் கொடிய நிலையைக் கருத்தில் கொள்ளாமல் குற்றம்சாட்டப்பட்ட-ஆதிக்க நிலையில் இருக்கும் தனி நபருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டு, நடை முறைப்படுத்த முடியாத தீர்வுகளைக் கூறுகின்றனர். இத்தீர்வு கள் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை, உரிமையை, நியாயம் கேட்டுப் போராடும் வாய்ப்பை மறுப்பதாக இருக்கின்றன என்பதால்தான் இவர்களின் இரு தீர்ப்புகளுக்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த இரண்டு நீதிபதிகளுமே பாரதிய சனதாகக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள். மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்க ‘கொலிஜியம்’ வழங்கிய பரிந் துரையை நிராகரித்து, இந்த இரண்டு நீதிபதிகளையும் மோடி ஆட்சி பரிந்துரைத்தது. நீதிபதி லலித் பா.ச.க. தலைவர் அமித்ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷா வுக்காக வாதாடியவர்.

நீதிபதிகள் கோயல், லலித் ஆகியோரின் தீர்ப்பில் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது என்கிற வாதம் தவிர வேறு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. பொய்யான புகாரின் பேரில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், பொய்ப்புகார் அளித்தவர்களைத் தண்டிப்பதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. எனவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், கொடுமை இழைத்தவர்களுக்கு அஞ்சாமல், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு, பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் சட்டவழியில் போராடுவதற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்கு வது இம்மக்கள் மீது நிகழ்த்தும் வன்கொடுமைக்கு ஒப்பானதே ஆகும்.

தலித்துகள் 2.4.18 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வடஇந்திய மாநிலங்களில் தீவிரமான போராட்டத்தை நடத்தினார்கள். இதற்கு எதிர்வினையாக ஆதிக்கச் சாதியினர் 10.4.18 அன்று வடஇந்திய மாநிலங்களில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது பட்டியல் சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் அரசு வேலைகளிலும் கல்வியிலும் தரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியும் அதிகாரம் மறுக்கப்பட்டு வந்தது. அந்தநிலையை மீண்டும் நிலை நாட்டவேண்டும் என்பதே ஆதிக்கச் சாதியினரின் நோக்கமாகும்.

இத்தீர்ப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சாதி அமைப்பை நிலைநிறுத்துவதற்காகப் பயன்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இடஒதுக்கீடு தருவதால் தான் சாதி வளர்கிறது என்று கூறுவது போன்றதே இது! மேலும் இந்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங் களான சகோதரத்துவம், சமூக ஒற்றுமையை வளர்ப்பதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கருத்துரைத்துள்ளனர்.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் விழுமி யங்களாக இருக்கவேண்டும் என்று கூறினார். 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் ஆற்றிய தன் இறுதி உரையில், “இந்த அரசமைப்புச் சட்டம் அரசியலில் மட்டுமே சமத்துவத்தை வழங்கியுள்ளது; காலங்காலமாக சமுதாய, பொருளாதாரத் தளங்களில் சமத்துவமின்மை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை விரைவில் களைய வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சமத்துவமின்மையால் பாதக்கப்பட்டவர்கள் இந்தச் சனநாயக் கட்டமைப்பையே தகர்த்தெறிவார்கள்” என்று எச்சரித்தார். அதன் ஒரு முன் னோட்டமாகத்தான் 2.4.18 அன்று தலித்துகளின் மபொரும் கிளர்ச்சி நடந்தது.

உச்சநீதிமன்றம் 20.3.18 அன்று அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெறவேண்டும். இல்லாவிடில் நடுவண் அரசு வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அவசரச் சட்டமாகப் பிறப்பிக்க வேண்டும். இது அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் வைக்கப்பட்டு, பட்டியல் சாதியினர் பழங் குடியினரைப் பாதுகாக்கவேண்டும்.