வே.ஆனைமுத்து ஆகிய நான் 21.6.1925-இல் பிறந்தேன்.

புதுச்சேரி மணல்வெளியில், 4.6.1938 அன்று ஆனை. சுப்பிரமணியம் - தையல் நாயகி  இணையருக்கு மகளாகப் பிறந்தார், தனலட்சுமி என அவருக்குப் பெற்றோர் இட்ட பெயரை, உறவினர்கள் சுசீலா என மாற்றினர்.

சு.சுசீலா அவர்கள் 4.6.1938 முதல் 30.4.2019 வரை 80 ஆண்டுகள் 10 மாதங்கள் 26 நாள்கள் வாழ்ந்து, தம் 81ஆம் அகவையில் சென்னை அரசு இராசீவ் காந்தி மருத்துவ மனையில் 30.4.2019 இரவு 7.00 மணிக்கு மறைவுற்றார்.

அவர் புதுச்சேரித் தேங்காய்த் திட்டில் வாழ்ந்த பட்டாளத்தார் ஆனையப்ப நாயகர் - இளைய மனைவி மீனாட்சி அம்மாள் பேத்தியாவார். மேற்படி இணையருக்கு குப்புலட்சுமி, சுப்பிரமணியன், கோவிந்தசாமி என மூன்று மக்கள். ஆனையப்ப நாயகர் மூத்த மனைவிக்கு, குப்புசாமி என்று ஒரு மகன்.

சுப்பிரமணிய நாயகர் 1943இல் சுசீலாவுக்கு 5 அகவை ஆகும் போது மறைந்தார். 10 அகவை முதல் 14 அகவை வரை குப்புசாமி - பார்வதி பாது காப்பில் வளர்ந்தார்.

1952-இல் தம் 14-ஆம் அகவையில் பூப்பு அடைந்தார்.

1952-இல் ஆ. கோவிந்தசாமி தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

1952 முதல் 1954 ஆகத்து வரையில், கடலூர் வண்ணாரப்பாளையம் ஆ.கோவிந்தசாமி - கோ. பத்மாவதி இணையர் மற்றும் குப்புலட்சமி அம்மை யாரின் அரவணைப்பில், செல்வாக்கோடு வளர்ந்தார், சுசீலா.

முறைப்படி பெண் கேட்டு, 22.8.1954-இல் ஒகளூரில், தமிழ்மறவர் வை. பொன்னம்பலனார் தலைமையில் சு. சுசீலா அவர்களை நான் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றேன். அப்போது நான் திருக்கோவிலூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எழுத்தராக இருந்து மாதம் ரூபா 75/- ஊதியம் பெற்றேன்.

அங்கு 10.10.1955-இல் அரசு மருத்துவமனையில் ஆ. சுசீலா முதலாவது குழந்தையை ஈன்றார். அக்குழந்தைக்குத் தமிழ்ச்செல்வி எனப் பெயரிட்டோம்.

எவரோடும் கலந்து பேசாமல் திருக்கோவிலூரிலிருந்த வேலையை விட்டு விலகினேன்.

எந்தத் தொழிலும் இல்லாமல், கடன்பெற்று “குறள் முரசு” என்கிற கிழமை இதழை 1957 பிப்பிரவரியில் திருச்சியில் தொடங்கினேன். அது கிழமை இதழ் ஆனதால் நிறையப் பணம் செலவாயிற்று.

ஆ. சுசீலா இரண்டாவதாக 17.2.1957-இல் திருச்சியில் ஒரு ஆண் மகவை ஈன்றார். முதலில் என் துணைவியார் அணிந்திருந்த தங்க வளையலைக் கேட்டேன். ஆண் மகவைப் பெற்ற மகிழ்ச்சியில், கேட்ட உடனே தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

1957 மார்ச் மாதம் என் துணைவியாரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பெற்றேன். 4 மாதம் நகர்ந்தது. 1957 ஆகத்து மாதம் மற்ற நகைகளையும் கேட்டுப் பெற்றேன். கடைசியாக அவருடைய தாலியையும் பெற்று நசுக்கி அடகு வைத்துக் கடன் பெற்றுச் செலவு செய்துவிட்டு, என் மனைவி மக்களை வெறுங் கையாக விட்டுவிட்டு 26.11.1957-இல் அரச மைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டேன்.

26.11.1957-இல் கைது செய்யப்பட்ட நான் 18 மாதங்கள் தண்டனை பெற்று திருச்சியிலும் வேலூரிலும் சிறையில் அடைக்கப்பட்டேன்.

என் மக்கள் பசி பட்டினி தாங்க முடியாமல் முதலில் நான் பிறந்த முருக்கன்குடிக்குச் சென்றனர். அங்குச் சில மாதங்கள் இருந்துவிட்டு, பின்னர் புதுச்சேரிக்குச் சென்றனர். அங்கு என் சிறிய மாமியார் சின்னப்பொண்ணு வீட்டில் சுசீலாவும் குழந்தைகளும் சிறிது காலம் தங்கினார்கள். நான் சிறையிலிருந்து விடுதலையாகும்போது என் மனைவியும் இரண்டு மக்களும் முருக்கன்குடிக்கு வந்து விட்டனர். 1958 திசம்பர் கடைசியில்தான் என் மனைவி மக்களைப் பார்த்தேன்.

பின்னர் நான் மட்டும் 1960-இல் திருச்சிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதலீட்டில் விறகு மண்டி தொடங்கினேன். அதில் இருந்து கொண்டே இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1963 சூனில் திருச்சியில் தெப்பக்குளம் அருகில் தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரி நிறுவனத்தைத் தொடங்கினேன். தனிப்பயிற்சிக் கல்லூரியை மிகத் திறமையாக நடத்தினேன். ஆனால் பெரும்பொருள் இழப்புக்கு ஆளானேன்.

1964 மார்ச்சு-ஏப்பிரலில் கொடிய வறுமையில் குடும்பம் அல்லாடியது. அப்போது மேலும் மூன்று மக்கள் - ஆ.வெற்றி, ஆ.வீரமணி, ஆ.அருட்செல்வி. அருட்செல்வி 2 அகவை குழந்தை; பசிக்கொடுமை தாங்காமல் ஈர மண்ணை எடுத்துத் தின்றார். நோய்வாய்ப்பட்டார்; அவளை 30.4.1964 பகல் திருச்சி தலைமை மருத்துவமனை யில் சேர்த்தோம். என் துணைவியார் சுசீசலா மட்டும் உடனிருந்தார்.

நான், 1.5.1964 காலை தொட்டியத்தில் நடைபெற இருந்த தி.க.தோழர் வீட்டுத் திருமண ஏற்பாட்டைச் செய்வதற்காகவும், அன்று மாலை அங்கு நடைபெற இருந்த பொதுக்கூட்ட ஏற்பாட்டைச் செய்வதற்காகவும் 30.4.1964 இரவே தொட்டியம் சென்றுவிட்டேன்.

என் மகள் அருட்செல்வி 30.4.1964 இரவு 8 மணிக்கு இறந்துவிட்டார். என் மனைவியும் மக்களும் உறையூரில் வீட்டில் கண்ணீரும் கம்பலையாகவும் இருந்தனர்.

1.5.1964 காலை 8 மணிக்குத் தொட்டியம் திருமண வீட்டை அடைந்த தந்தை பெரியார் என் மகள் இறந்து விட்ட செய்தியைச் சொல்லி, உடனே என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் 1.5.64 காலை 10.30 மணிக்கு என் மகளின் உடலைப் பார்த்தேன்; என் ஜென்னி சுசீலா அலறித் துடித்தார்.

இப்படிப்பட்ட இழப்புகள் பலவற்றை எதிர்கொண்டவர்-என் ஜென்னி! அவர் இன்று இல்லை, அய்யகோ!

1967 இல் ஒரு பெண்மகவு பிறந்தார். 30.4.64இல் மறைந்த அருட்செல்வியின் நினைவாக, அம்மகவுக்கு, அருள்மொழி எனப் பெயர் சூட்டினோம்.

என் துணைவியாரின் சிற்றப்பா கடலூர் ஆ.கோவிந்த சாமி 18.5.1969 அன்று மறைந்தார். அவருடைய நினைவைப் போற்றும் வண்ணம், 1968இல் பிறந்த ஆண் மகவுக்கு, கோவேந்தன் எனப் பெயரிட்டோம். நிற்க.

திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் நாங்கள் ரூபாய் அறுபதாயிரம் வட்டிக்கும், இருபதாயிரம் கை மாற்றாகவும் பெற்று, 1.7.1974-இல் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” மூன்று தொகுதிகளை வெளியிட்டோம்,

இவ்வளவு பணிகளிலும் ஈடுபட்ட நான் என் மக்க ளுக்கு நல்ல கல்வி தருவது பற்றியும் என் குடும்பத்தை வறுமை இல்லாமல் நடத்தக் கூடிய வருவாயைத் தேட வழி செய்யாமலும் என் துணைவியாரை அனலிடை யிட்ட புழுவாகத் துடிக்க விட்டேன், அவருடைய உடல் நலமும், என் உடல் நலமும் கெட்டது.

இந்த நிலையில் 16.11.1975 அன்று நான் திராவிடர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டேன்; இன்னும் சிலரும் நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்ட அனைவரும் 8.8.1976-இல் திருச்சியில் சீர்காழியில் கூடி “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பைத் தொடங்கினோம்.

இந்தச் சூழலில் 17.8.1974-இல் “சிந்தனையாளன்” இதழைத் தொடங்கினேன். 1981 வரை கிழமை இதழா கவும் மாதம் இருமுறை இதழாகவும் நடத்தினோம்.

என் மூத்த மகள் தமிழ்ச்செல்வியின் திருமணம் முடிந்த பிறகு, பாவேந்தர் அச்சகத்தை நிருவகிக்க வசதி யில்லை. உடனே சென்னைக்கு அச்சகத்தை ஒரு குழுமத்திற்கு விலைக்கு விற்றுவிட்டேன். அக்குழுமம் ஆறு மாத காலத்திற்கு சிந்தனையாளன் இதழைக் கிழமை இதழாக நடத்தியது. பெரிய இழப்பு ஏற்பட்டது. இதழை நிறுத்திவிட்டு, பிறகு 1986-இல் மாத இதழாகத் தொடங்கினோம்.

இடையில் எங்களுக்குள் சிறிது வருத்தம் ஏற்பட்டு நான் 1986-இல் வாலிகண்டபுரத்தில் குடியேறினேன். என் குடும்பம் சிதறுண்டது. என் மக்களின் கல்வி பாழாயிற்று.

அதனால் என் மக்களில் இருவரான மூத்த மகன் ஆ.பன்னீர்செல்வம், மூன்றாவது மகன் ஆ.வீரமணி ஆகியோர் சவுதி அரேபியா நாட்டிற்குச் சென்று எட்டு ஆண்டுகள் அங்குத் தங்கி 1995-இல் இருவரும் திரும்பினர்.

26.2.1995-இல் ஆனை. பன்னீர்செல்வம் - சேலம் மல்லூர் செ.போதம்மாள், அருள்மொழி-க.ராமச்சந்திரன் திருமணங்கள் நடைபெற்றன.

13.9.1998-இல் ஆனை. வெற்றி-இரா. விசயலட்சுமி, ஆனை. வீரமணி-க.மலர்க்கொடி ஆகியோரின் திருமணங் கள் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் தலை மையில் நடைபெற்றன.

எங்களின் நான்கு குடும்பங்கள் புதுச்சேரியிலும், இரண்டு குடும்பங்கள் சென்னை மேற்குத் தாம்பரத் திலும் தனித்தனியாக வாழும்படி நேரிட்டது.

நான்காவது மகன் ஆ.கோவேந்தன் அரசு வேலை யில் உள்ளார். அவருக்குக் குடும்பம் இல்லை. எனவே அவர் தன்னுடைய உடல்நலத்தையும், தாயார் ஆ. சுசீலா அவர்களின் உடல் நலத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

புதுவையில் உள்ளவர்கள் அவ்வப்போது தாம்பரத் திற்கு வந்து அம்மா சுசீலா அவர்களைப் பார்த்துக் கொண்டார்கள்.

என்னுடையவும், எங்கள் இயக்கத்தினுடையவும் அரிய சாதனைகள் மூன்று.

  1. வடநாட்டில், மாநில அரசுகளில், பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 1978-இல் இடஒதுக்கீடு பெற்றது.
  2. தமிழ்நாட்டு மாநில அரசில் 1979-இல் 31 விழுக் காடு பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்ததை 50 விழுக்காடாக 1.2.1980-இல் பெற்றுத் தந்தது.
  3. இந்திய மத்திய அரசில், முதன்முதலாக 1990-இல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது. இது 1994-இல் முதன்முதல் நடப்புக்கு வந்தது.

நானும் என் தோழர்களும் 1978 முதல் 2017 வரையில் இந்தியா முழுவதும் சென்று இவற்றுக்கு முயற்சித்தோம். நான் தனியாக என் மனைவி, மக்களை விட்டுவிட்டு அதிக நாள் வடநாட்டில் பணி செய்தேன். அது என் உடல்நலத்தை மட்டும் அல்லாமல், என் துணைவியா ருடைய உடல்நலத்தையும் நான் கவனிக்க முடியாமல் செய்துவிட்டது. இந்த வகையில் என் அரிய செயல்கள் எல்லாவற்றிற்கும் மறைந்த என் ஜென்னி ஆ. சுசீலா அவர்கள் பின்புலமாக விளங்கினார் என்பதை மன நிறைவோடும், அதே நேரத்தில் நீங்காத் துன்பத்தோடும் கூறுகிறேன். என் குடும்பத்தார் அனைவருக்கும் உறவினர்களுக்கும், மா.பெ.பொ.கட்சித் தோழர்களுக்கும், சிந்தனையாளன் ஆசிரியர் குழுவினருக்கும், பெரியார் நாகம்மை அறக்கட்டளையினருக்கும், தமிழக மக்களுக்கும், நேரில் வருகை தந்து எங்கள் குடும்பத் துயரத்தில் பங்குபெற்ற தலைவர்களுக்கும், தோழர் களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், என் சார் பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

28.4.2019 ஞாயிறு இரவு 9 மணிமுதல் தன் பெற்ற தாயாரை எப்படியும் காப்பாற்றித் தீரவேண்டும் என்று இரவும் பகலுமாகக் கண்விழித்து மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்த என் மூத்த மகன் ஆனை. பன்னீர் செல்வம், அவருடைய துணைவியார் போதம்மாள், என் பெயர்த்தி ஆசுபள்; புதுவை ஆ. வெற்றி மனைவி விசயலட்சுமி, ஆ.வீரமணி மனைவி மலர்க்கொடி, இளைய மகன் ஆ. கோவேந்தன், தாம்பரம் மா. சுப்பிரமணி, சென்னை கல்வி அலுவலர் ஆ. மதிவாணன் மற்றும் தோழர்களுக்கும், என் மைத்துனர்கள் ஆ.கோ. சம்பத், மருத்துவர் ஆ.கோ. இளங்கோவன், சகலர் ஆதிமூலம், இ.ஆ.ப. (I.A.S.) அவருடைய துணைவியார் மல்லிகா ஆகியோருக்கும் மைத்துனர்கள், மைத்துனிகள், சீனு. அரிமாப் பாண்டியன்-தமிழ்ச்செல்வி, க. இராமச்சந்திரன்- அருள்மொழி, வடக்கு மாங்குடி சம்பந்திகள், ம. புடையூர் சம்பந்திகள், முருக்கன்குடி உறவினர்கள், வடக்கலூர் அகரம் உறவினர்கள், வாலிகண்டபுரம் உறவினர்கள் அனைவருக்கும் மனங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.