‘இந்தியா’ என்ற ஒரே ஆட்சிப் பரப்பு 1801இல் தான் ஏற்பட்டது.

அதுவரையில் அந்தந்தப் பகுதியில் மக்களால் பேசப்பட்ட மொழி கல்விதரும் மொழியாகவும் அரசின் ஆட்சிமொழியாகவும் இருந்தது.

இந்துக்கள் ஆட்சி செய்த பகுதியில் அரசின் - மதத்தின் சடங்குமொழியாக சமற்கிருதம் இருந் தது; அரசின் ஆட்சிமொழியாகப் பாரசீகம் இருந்தது. வடஇந்தியாவில் முகமதியர் ஆட்சிக்காலத்திலும் இது அப்படியே நீடித்தது.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தொடக்க நிலைக் கல்வி - 5ஆம் வகுப்பு வரை அந்தந்தப் பகுதி மக்களின் தாய்மொழி வழியிலேயே இருந்தது. 6ஆம் வகுப்புக்குமேல் 10ஆம் வகுப்புவரையிலும், பிறகு பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு எல்லாம் 1835 முதல் ஆங்கில மொழிவழியே கற்பிக்கப்பட்டன, அதாவது உயர்நிலைப் பாடங்கற்பிக்கும் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது.

எனவே மேல்சாதி இந்துக்கள் - மேல்தட்டு இசுலாமியர்கள், மேல்சாதி கிறித்துவர்கள் மட்டுமே 6ஆம் வகுப்புக்குமேல் படித்தார்கள். அதனால் அவரவர் தாய்மொழியில் மற்ற பாடங்கள் மொழிபெயர்க்கப்படும் தேவை இல்லாமற் போய்விட்டது. எனவே எல்லா இந்திய மொழிகளின் வளர்ச்சியும் பயன்பாடும் தடைப்பட்டன; குன்றின.

அதற்கும் மேலாக எல்லா மட்ட அரசு நிர்வாகமும், நீதி வழங்கும் துறை எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தன. ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழி, நீதிமன்ற மொழி ஆயிற்று. 1835 முதல் 1940 வரையில் ஏறக்குறைய 105 ஆண்டுகள் ஆங்கிலமே பயிற்று மொழி, நிருவாக மொழி, நீதிமன்ற மொழி என இருந்தது. ஆங்கிலம் படித்தவர்கள் உயர்ந்த சாதி-தனி வகுப்பு என்று ஆனார்கள். மற்றவர்கள் ஆளப்படும் மக்களாக-ஆண்டான், அடிமைப்புத்திப் படைத்தவர் களாக ஆனார்கள்.

சென்னை மாகாணத்தில் சி. இராசகோபாலாச்சாரியார் ஆட்சிக்காலத்தில், 1939இல் - 6ஆம் வகுப்பு முதல் 10, 11ஆம் வகுப்பு வரையில் அந்தந்த மொழிப் பகுதி யில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா என்னும் தாய்மொழி கள் பயிற்று மொழிகள் ஆயின. ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லை. எல்லா மொழிப் பகுதிகளிலும் இந்த ஏற்பாடு தங்கு தடையில்லாமல் அப்படியே இருந்தது.

தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளிகளில் ‘ஆங்கிலம் பயிற்று மொழி என்பது’ -6ஆம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவில் (ளுநஉவiடிn) முதல மைச்சர் எம். பக்தவத்சலம் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஆங்கில வழியில் பாடங்கற்பிக்கும், சில மெட்ரிகுலேஷன் பள்ளி கள் இருந்தன.

26-1-1965இல் தமிழகத்தில் எழுந்த “இந்திய அரசின் அலுவல் மொழி இந்தி மட்டுமே” என்பதை எதிர்த்த மாணவர் கிளர்ச்சி, ஆறு மாதம் கொழுந்து விட்டு எரிந்தது.

1967 மார்ச்சு 6இல் அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.

மேடை தோறும் செந்தமிழில் பேசியவர்கள் - ஏடு தோறும் சங்கத் தமிழைப் போற்றி எழுதியவர்கள் - நாடக மேடை தோறும் சிலப்பதிகாரத் தமிழை - அக நானூறு, புறநானூறு தமிழைப் போற்றியவர்கள் - திரைப்படந்தோறும் பாவேந்தரின் தமிழைப் பாடிய வர்கள் 1971-1972க்குப் பிறகு வேகவேகமாக ஆங்கில வழியில் உயர்நிலைப்பள்ளிகளை - மெட்ரிக் பள்ளி களைத் தொடங்க உரிமை வழங்கி, பணத்தைக் குவித் துக் கொண்டார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முதலாம் வகுப்பு முதல் பல்கலை வகுப்பு வரையில் அவரவர் தாய்மொழி வழி யில் - தமிழ்நாட்டில் தமிழ் வழியில் எல்லாக் கல்வி யையும் தர எந்தத் தடையையும் போடவில்லை.

“இந்தியாவின் ஆட்சிமொழி 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே” என்கிற ஒரு மொழி ஏகாதிபத்தியக் கொள்கை மட்டுமே அரசமைப்பில் இருந்தது; இன்றும் இருக்கிறது.

இந்த ஏற்பாட்டை எதிர்க்க முனைப்போடு போராடிய வர்கள் - அவர்கள் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்கிற வரையில், ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக் கும் என்று, ஒரு ஆட்சி மொழிச் சட்டத்தை இந்திய அரசு செய்தவுடன், அதிலேயே நிறைவடைந்து, தன் தாய் மொழியான தமிழுக்கு இந்திய ஆட்சிமொழி உரிமை கிடைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வாயளவில் பேசுவதோடு நின்று கொண்டார்கள்.

மற்ற திராவிடக் குடும்ப மொழிகள் வடமொழிக் கலப்பு மிகுந்தவை. அவர்கள் வடமொழிக்கு மாற்றாகக் கருதி, இந்தியை ஒரு பாட மொழியாகக் கற்கத் தயங்க வில்லை.

தனித்தே இயங்கவல்ல மொழி தமிழ். எனவே 1967 வரை தமிழக உயர் பள்ளிகளில் இந்தி ஒரு விருப்பப் பாடமாக இருந்ததை நீக்கிவிட்டு, அதனால் இந்தி ஒழிந்து விட்டது என்ற மன நிறைவு அடைந்தார்கள்.

1971-1976 ஆட்சியில் தி.மு.க.வினர் இந்திராகாந்திக்கு அடிமைகள்போல் ஆனார்கள்.

1935 இந்திய அரசுச் சட்டப்படி - பொதுக்கல்வி, தொழிற்கல்வி உட்பட எல்லாம் முழுவதுமாக மாகாண அரசு அதிகாரப்பட்டியலில் இருந்தது. 1950இல் அம லுக்கு வந்த இந்திய அரசமைப்பிலும் அந்த உரிமை அப்படியே இருந்தது.

1976 இறுதியில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய 42ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, பொதுக் கல்வி, தொழிற்கல்வி எல்லாம் 3-1-1977 முதல் அரச மைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப்பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டுவிட்டது.

இந்த உரிமைப் பறிப்பை எதிர்த்து தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. வாக்கு வேட்டைக்கட்சிகள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் ஆட்சியை இழக்கிற போதெல் லாம் - “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயஆட்சி” என்று உரத்துப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டு, பெட்டிப் பாம்புகளாக அடங்கிவிட்டார்கள்.

உண்மையில், இவர்களுக்கு இக்கொள்கையில் நாட்டமிருந்தால், இவர்கள் அனைத்திந்தியக் கட்சி களாக இயங்கிட - இந்தியாவில் தத்தம் கட்சி ஆட்சியை அமைத்திட எல்லாம் செய்திருக்க வேண்டும்.

மாறி மாறி இந்தியாவில் ஆட்சி அமைக்கிற கட்சி களாக - காங்கிரசும், பாரதிய சனதாவும் மட்டுமே தக்க ஏற்பாடுகளுடன் செயல்படுகிறார்கள்.

பொதுவுடைமைக் கட்சியினர் “இந்தியராக” - “இந்தியச் சூழலை ஒட்டி”ச் செயல்பட மறுத்து, ‘சோவி யத்து’, ‘செஞ்சீன’ச் சிந்தனையிலேயே இன்றளவும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலில், 1991-1996இல் இந்தியா வை ஆண்ட பாரதிய சனதாக் கட்சி ஆட்சி - ஒரு அய்ந்தே ஆண்டுகளில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கல்வி வரையில் - இந்து மதக் கொள்கைகளைப் பாடத்திட்டத் தில் ஏற்றிட எல்லாம் செய்தது. சோதிடம், கருமாதிப் புரோகிதம், திருமணப் புரோகிதம், திவசம் செய்கிற புரோகிதம் பற்றிய பாடத்திட்டங்களையும், சமற்கிருதம் கற்றுத் தரும் பாடங்களையும் - தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் பல்கலைப் பாடத்திட்டங்களில் புகுத்தி விட்டது. கல்வித்துறை அதிகாரத்தின் மேலாண்மை இந்திய அரசிடம் இருக்கிறது. அதைத்தடுத்து நிறுத்திடத் தமிழக அரசுக்கு உண்மையில் அதிகாரம் இல்லை.

அதேபோல், இந்தி மட்டுமே இனி இந்தியா வின் ஆட்சிமொழி என்பதைத் தடுத்து நிறுத் திடத் தமிழக அரசுக்கோ, வேறு எந்த ஒரு மாநில அரசுக்குமோ அதிகாரம் இல்லை.

ஏற்கெனவே தி.மு.க.வுடன் கூட்டு, அ.தி.மு.க.வுடன் கூட்டு, ம.தி.மு.க.வுடன் கூட்டு என்ற நிலைமை மாறி, 2014இல் பாரதிய சனதாக் கட்சி தனிப் பெரும்பான் மையுடன் மக்கள் அவையை 282 உறுப்பினர்களு டன் கைப்பற்றி, இந்திய ஆட்சியை அமைத்துவிட்டது.

இன்றையத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இளமைக்காலம் முதல் இராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத் தொண்டர், பாரத மாதா, இராமராஜ்யம், கீதைக் கொள்கை, சமற்கிருதம், இந்துத்துவம் இவற்றை ஆட்சியின் வழியாக நிலைநாட்ட வேண்டும் என்று உறுதிபூண்டவர்.

இதற்கு ஏற்ற முதலாவது ஊடகம் கல்வி.

இரண்டாவது ஊடகம் இணையதளம், முகநூல் மற்றும் நாளேடுகள்.

இந்த இரண்டு ஊடகங்கள் வழியாகவும் எந்தக் கொள்கை திணிக்கப்படுகிறதோ - பரப்பப்படுகிறதோ, அது 126 கோடி மக்களையும் நாளடைவில் சென்று அடையும்.

இதை மனதில் கொண்டு, இப்போது, (1) தேசிய ஆசிரியர் பயிற்சி ஆணையம் (National Council of Teacher Education - NCTE);

(2) 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு களுக்கான பாடத்திட்ட ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் ஆணையம் (National Council of Educational Research and Training - NCERT);

(3) பதின்ம வகுப்புப் பள்ளிகளுக்கான அங்கீகாரம், கண்காணிப்பு, நிருவாகம் இவற்றை நடத்தும் ஆணை யம் (Central Board of Secondary Education - CBSE)

என்கிற கல்வி ஆணையங்களின் - நியமிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தவர்களை உடனே பதவியிலி ருந்து நீக்கிவிட்டார், மோடி.

வி.டி. சாவர்க்கரின் இந்துத்துவக் கொள்கைகளை 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வித் திட்டங் களிலும், அவற்றைக் கற்பித்திட ஏற்ற ஆசிரியப் பயிற்சி பெறுகிற நிறுவனங்களின் பாடத்திட்டங்களிலும் திணித் திடத் திட்டம் தீட்டி, அதற்கு உரிய ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்டவர்களை இவ் ஆணையங்களின் தலைவர் களாக அமர்த்த எல்லா ஏற்பாடுகளையும் சந்தடி இன்றிக் கமுக்கமாகவே செய்துவிட்டார், மோடி!

இத்துடன் மட்டுமா?

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அழிக்கப்பட்ட நலாந்தா பல்கலைக்கழக வேந்தராக (Chancellor) அமர்த்தியாசென் என்பவரே மீண்டும் இரண்டாவது தடவையாக, 5 ஆண்டுகளுக்கு அமர்த்தப்பட வேண் டும் என, 2015 சனவரி 13-14இல் அதற்கான ஆட்சிக் குழுவினர் (Governing Body)) செய்த பரிந்துரையை ஏற்கவும் முன்வராமல், நீக்கவும் செய்யாமல், அப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவை அடியோடு மாற்றி அமைத்திட எல்லாம் செய்துவிட்டார், மோடி!

அமெர்த்தியா சென் பதவி ஏற்க மறுத்துவிட்டவுடன், “நலாந்தா பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பரிந்துரை அரசுக்கு வந்து சேரவில்லை” என்று அறிவித்தனர். அரசின் அந்த அறிவிப்பு பொய்யானது என்றும், 13-14 சனவரி கூட்டத்தில் எடுத்த முடிவை 15 சனவரி அன்றே அரசுக்கு அறிவித்துவிட்டார்கள் என்றும், சென் மறுப்பு அறிக்கை வெளியிட்டுவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்.

இதற்கான குழுவில் (Board) சீனா, சப்பான், சிங்கப் பூர் மற்றும் சில ஆசிய நாட்டினர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு நாடாளுமன்றச் சட்டம் வழியாக உருவாக் கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை ஏற்பவராக (Visitor) இந்தியக் குடிஅரசுத் தலைவர் உள்ளார்.

இவ்வளவு ஏற்பாடுகளையும் புறந்தள்ளிவிட்டு, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் உருவாக் கப்படும் நலாந்தா பல்கலைக்கழகத்தை இந்துத்துவக் கல்விக்கான பல்கலைக்கழகமாக உருவாக்கிட எல் லாம் செய்துவிட்டார், மோடி!

மேலே முன்னர் கண்ட மூன்று வகையான இந்திய அரசின் கல்வி ஆணையங்களின் பாடத்திட்டங்களை யும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களையும் தமிழ்நாட்டு அரசும், மற்ற மாநில அரசுகளும் பின்பற்றித் தீர வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

இது தமிழ்ப் பண்பாட்டை - தமிழரின் வரலாற்றுப் பெருமையை - தமிழின் தனித்தன்மையை உருத் தெரியாமல் அழித்துவிடும்.

1967 முதல் 48 ஆண்டுகளாக மாறி மாறித் தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் இரண்டும் தமிழ்வழிக் கல்வியை எல்லா நிலை களிலும் கொண்டுவர-வேண்டுமென்றே மறுத்து விட்டன.

தாம் கொண்ட கொள்கையில் - தமிழுக்காக - தமிழ்ப் பண்பாட்டுக் காப்புக்காக வாழ்வோம் என்கிற உறுதிப் பாடும் உண்மையும் எந்தத் திராவிடக் கட்சி ஆட்சியா ளருக்கும் இல்லாமற்போனது பெரும் பேருண்மை. இதில் கிஞ்சிற்றும் அய்யம் இல்லை.

அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் - வீட்டு மொழி, படிப்பு மொழி, ஆட்சி மொழி, ஏட்டு மொழி, ஊடக மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என ஒவ்வொரு துறையிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய தமிழ் - எங்கும், எதிலும் 2015இல் இல்லை. இது உண்மை. இனி 2050இல், எதில் தமிழ் இருக்கும்? எப்படி அது முடியும்?

2014-2015இல் 1 முதல் 9 வகுப்பு வரையில் 60 இலக்கம் குழந்தைகள் படிக்கிறார்கள். 10, 12ஆம் வகுப் புத் தேர்வுகளை 20 இலக்கம் மாணவ-மாணாக்கியர் எழுதுகின்றனர்; 11ஆம் வகுப்பில் 15 இலக்கம் மாண வர் உள்ளனர்.

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளி களிலும் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்களில் 80 விழுக்காட்டுப் பேர் தமிழ் வழியிலேயே படிக்கிறார்கள். ஆனால் தரமான கல்வி தரப்படவில்லை. அப்பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் பிள்ளைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக் கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் 2013-2014 முதல் ஒன்றாவது வகுப்பிலேயே ஆங்கில வழியில் கற்பிப்பது மாபெரும் கொடுமையானது.

67 அரசுக் கல்லூரிகளிலும் 125 அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், 10 அரசுப் பொறியியல் + 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், 18 அண்ணா பல்கலைப் பொறியியல் கல்லூரிகளிலும், 546 தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் 5 இலக்கம் பேர் படிக் கிறார்கள்.

மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துப் படிப்புகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் இவற்றில் 2 இலக்கம் பேர் படிக்கிறார்கள். இவர்கள் ஆங்கில வழியில் படிக் கிறார்கள்.

இத்துணைத் துறைகளிலும் சேர்த்து ஒரு கோடிப் பேருக்கு மேல் 6 அகவை முதல் 23 அகவை வரை உள்ளவர்கள் படிக்கிறார்கள்.

இவர்களில் எத்தனைப் பேர் சிறந்த அறிவியல், மருத்துவ, வேளாண், பொறியியல் கண்டுபிடிப்பு களைக் காணும் தகுதிபெற்றிருக்கிறார்கள்? ஏன் அப்படி இல்லை?

இவர்களுள் 100க்கு 80 பேர் ஆங்கில வழியில் கற்றவர்கள். அரிய திறமை பெற்றவர்கள். அந்தத் திறமையைக் கொண்டு அமெரிக்கா, கனடா, இரஷ்யா, சப்பான், செர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் படை யெடுத்துப் போய் - மாடாக உழைத்துக் கைநிறையச் சம்பாதிக்கப் போகிறவர்கள்.

ஆனால் இவர்கள் அங்கங்கே - எந்த நாட்டிலும் ஆங்கில வழியில் உயர்கல்வி, ஆய்வுக் கல்வி கற்க முடியாது; பணி ஆற்றமுடியாது. அந்தந்த நாட்டு மொழி யைக் கற்றுக்கொள்ளுவதே இவர்களுக்கு முதலாவது வேலை.

மேலேகண்ட எல்லா நாடுகளிலும் மழலை வகுப்பு முதல் எல்லா நிலைக் கல்வியையும் அவரவர் தாய் மொழியில் கற்றார்கள்; கற்கிறார்கள். எனவே கல்வி யை நன்றாக மாந்தியவர்கள்; தாமாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள்; புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யவல்லவர்கள்.

தாய்மொழி வழியில் கல்வி தராததால் தான் - இந்தியாவிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள், தனி யார் பல்கலைக்கழகங்களுள் ஒன்று, இரண்டைத் தவிர - மற்ற எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் - உலக முதல்தரப் பல்கலைக்கழகங்களில் 300இல் - ஒன்று, இரண்டுக்கு மேல் இடம்பெற முடியவில்லை.

தனியார் பல்கலைக்கழகங்களில் சில தனித்திறமை பெற்ற மாணவர்களை உருவாக்கி, அதைக்காட்டிக் காட்டி மேலும் மேலும் பணக்கொள்ளை அடிப்பதற் குத்தான், ஆங்கில வழிக் கல்வி பயன்படுகிறது.

எனவே இன்றைய தேவை என்ன?

இந்தியா முழுவதிலும் உள்ள 15 கோடி மாணவர் களுக்கும் அவரவர் தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியையும் தர அந்தந்த மாநில அரசும் ஆவன செய்வதுதான்.

இந்தியா முழுவதிலும் உள்ள மாநில அரசுகள் பொதுக்கல்வி, தொழிற்கல்வித் துறையை மீண்டும் மாநில அதிகாரப்பட்டியலுக்கு (State List) மாற்றிடப் போராடுவதுதான்.

அரசினால் வகுக்கப்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகப் பாடத்திட்டங்கள் மதச்சார்பு அற்றவையாக இருக்கச் செய்வதுதான்.

இவை அனைத்தையும் ஒரு சேர அடைய ஏற்றதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உண்மையான மதச்சார்பற்ற கூட்டாட்சிச் சட்டமாக மாற்றிட நம்மாலான எல்லாம் செய்வதே இறுதித் தீர்வு ஆகும்.