இந்தி எதிர்ப்பாளர்கள் சென்னைச் சட்டசபை முற்றுகை :

15.8.1938 அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக மாலை 4 மணிக்கு வடசென்னைத் தமிழர் கள் “தமிழ்த் தாயை இந்தி என்ற விஷப்பாம்பு, காலைப் பிடித்து விழுங்குவதுபோல்” எழுதப்பட்ட ஒரு பெரிய படத்தை எடுத்துக் கொண்டும், இந்திக் கண்ட னப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர்வலமாகப் பீப்பிள்ஸ் பார்க்கை வந்து சேர்ந்தார்கள்.

4.30 மணிக்குப் பார்க்கை விட்டு சுமார் 5000 பேர் கை யில் தமிழ்க் கொடிகளுடன் இந்திக் கண்டன முழக்கங்களை முழக் கிக் கொண்டு தோழர்கள் சாமி சண்முகானந்தா. டாக்டர் தருமாம் பாள். நாராயணி அம்மாள். மீனாம் பாள். பாவலர் பாலசுந்தரம். என்.வி. நடராசன் முதலியவர்கள் தலைமையில் புறப்பட்டனர்.

ஊர்வலம் பெரியமேடு. சிந்தாதிரிப்பேட்டை, மவுண்ட் ரோடு, சேப்பாக்கம் முதலிய வீதிகளைக் கடந்து மாலை 5.30 மணிக்கு பீச் வழியில் உள்ள சட்ட சபைக் கட்டடத்திற்குள் புக எத்தனித்தது. ஆனால் இதற்குமுன் பல இடங்களுக்கும் டெலி போன் மூலமாக அறிவிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் சட்டசபையைச் சுற்றிலும் சுவர் வைத்தாற்போல நின்று ஊர்வலத்தை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டனர்.

அதன்பேரில் ஊர்வலம் சட்டசபைக்கு எதிர்ப் புறத்தில் நின்றுகொண்டு சுமார் அரை மணிநேரம் வரை சலியாமல் இந்தி எதிர்ப்புக் கோஷங்களை முழக்கிற்று. ஊர்வலம் சட்டசபைக் கட்டடத்தை வந்து சேர்ந்ததும் சட்டசபை கலைந்துவிட்டது. பிரதமர் மந்திரியும், இதர மந்திரிகளும் பல மெம்பர்களும் பின் வழியே சென்றுவிட்டனர்.

பிறகு ஊர்வலம் அப்படியே சென்னைச் சட்ட சபைக் கட்டடத்தின் முன்னால் கடற்கரைக்குச் சென் றது. அங்குப் பொதுக்கூட்டம் கூடும் என்று தெரிவிக் காமலிருந்தும், மேடையோ, விளக்கோ, ஒலிபெருக் கியோ ஒன்றுமில்லாதிருந்தும் சுமார் 8000 மக்கள் வரை கூடிவிட்டனர்.

பொதுக்கூட்டம் :

டாக்டர் தருமாம்பாள் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் கூடியது.

மந்திரிகளின் இந்தி ஆதரிப்புக் கூட்ட நடவடிக்கை களைக் கண்டித்தும், சிறை சென்ற தொண்டர்களைப் போற்றியும், ராகிக்களி கொடுப்பதையும், மொட்டையடிப்பதையும் கண்டித்தும், கட்டாய இந்தியைக் கண்டித்தும் தோழர்கள் பண்டித நாராயணி அம்மை யார், மீனாம் பாள், சுவாமி சண்முகானந்தா, பாவலர் பாலசுந்தரம், என்.வி. நடராசன், எஸ்.கே.சாமி முதலி யவர்கள் பேசினார்கள். கூட்டம் முடிந்தவு டன் கூட்டத்திலிருந்த பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாவரும் அப்படியே ஊர்வலமாகப் புறப்பட்டுச் சட்ட சபையை நோக்கி வந்தனர். ஊர்வலம் சுமார் 1ஙூ பர்லாங் தூரம் இருந்தது. 20 நிமிஷங்கள் வரை வண்டிகள் அப்படியே நின்றுவிட்டன, போலீசாரால் சமாளிக்க முடியவில்லை.

கூட்டத்தினர் திடீரெனச் சட்டசபைக் கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

உடனே சட்டசபைக்குள்ளிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. கதவுகள் சாத்தப்பட்டன. போலீசார் மீண்டும் வந்து அடக்கி அனுப்பினார்கள். கூட்டம் வெகு ஆவேசத்துடன் திரும்பி, பைகிராப்ட்ஸ் ரோடு வழியாக வந்துகொண்டிருக்கையில் போலீஸ் கமிஷனர் மேற்படி ஊர்வலத் தலைவரைக் கண்டு ஊர்வலத்தைக் கலைத்துவிட்டால் நலமென்று கூறவே அதன்படி ஊர்வலம் இராயப்பேட்டையில் கலைந்து விட்டது. பிறகு அந்தந்த டிவிஷன் வாசிகள் அப்படி அப்படியே பிரிந்து அவரவரர்கள் டிவிஷனுக்கு ஊர்வல மாகச் சென்றனர் (விடுதலை 16.8.1938).

தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வருவதைப் போலவே மற்ற மாவட்டங்களிலிருந்தும் தமிழர் படை புறப்பட்டு, சென்னையில் ஒன்றாக இணையும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வடஆர்க்காடு மாவட்ட தமிழ்க் காப்புப் படையை அமைப்பதற்குச் சித்தக்காடு ராமையா அவர்களைப் பொறுப்பாளராகப் பெரியார் நியமித்திருந்தார். அப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராமையா அவர்கள் வடஆர்க்காடு மாவட்டத்தில் படை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

வடஆர்க்காடு மாவட்ட தமிழ்ப் பாதுகாப்புப் படை :

வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படை என்ற தலைப்பில் விடுதலையில் அவருடைய அறிக்கை வெளிவந்தது. இப்படை செப்டம்பர் முதல் வாரத்தில் திருப்பத்தூரிலிருந்து புறப்படும். படையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தோழர்கள் 24.8.1938 புதன் கிழமைக்குள் விண்ணப்பம் அனுப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தில் வயது, படிப்பு போன்றவை குறிப்பிடுவது நல்லது. பொதுவாகப் படையில் கலந்து கொள்ளும் தோழர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந் திருந்தால் போதுமானது.

க. ராமையா (சித்தக்காடு)

வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படை திருப்பத்தூர், வடஆர்க்காடு மாவட்டம்

என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப் பைப் பார்த்து படையில் சேர பலர் முன்வந்தனர். ஆம்பூர் பெரியார் வே.ஆ. கோதண்டபாணி முதலியார் அவர்கள் படைத் தலைவராக இருக்க ஒப்புக்கொண் டார். அதுகுறித்துச் சித்தக்காடு க. ராமையா தெரிவிப்பதாவது :

நமது வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படைக்குப் பெரியார் கோதண்டபாணி முதலியார் அவர் கள் தலைமை வகித்து நடத்தி வர ஒப்புக்கொண்டு இன்று கடிதம் எழுதிவிட்டார். தோழர் முதலியார் அவர்களை வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு வயது 70 ஆகிறது.

ஜஸ்டிஸ் கட்சி சென்னை மாகாணத்தில் ஆரம்பித்த தினத்திலிருந்து இன்றுவரை பெரியார் அக்கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டியிருக்கிறது. சர். பிட்டி. தியாகராயர், டி.எம். நாயர் போன்ற ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபகர்களுக்கு இந்த பக்கத்துக்கு வலது கை போன்றவர் இப்பெரியார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். படையைத் திரட்டி நடத் தப்படுவதனால் சென்னை கொண்டு சேர்க்கும் வரை ஜாக்கிரதையாகவும், பொறுப்புடனும் போக வேண்டு மென்றும் இதனால் இயக்கத்துக்குக் கெட்ட பேர் உண்டாகும்படி நடத்தப்படக்கூடாதென்றும் எச்சரிக்கை செய்து எமது தமிழ் நாட்டுத் தனிப்பெரும் தலைவர் ஈ.வெ.ரா. கடிதம் எழுதி இருந்தார்கள். அவர்களு டைய கடிதத்தினால் நான் அடைந்த பொறுப்பின் பயம் ஆம்பூர் பெரியார் ஒப்புக்கொண்ட நிமிஷமே நீங்கி விட்டது (விடுதலை 16.8.1938) என்று சித்தக்காடு ராமையா எழுதியதிலிருந்தே தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தினரும் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும்தான் இந்த இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை முழுவீச்சில் நடத்தி சென்றார்கள் என்பது விளங்கும்,

(தொடரும்)