நாகலம்மாள் ஆங்கிலேயர்கள் காலத் தில் ஐந்தாவது வரை படித்தவர். அவரால் ஆங்கிலத் தில் சரளமாகப் பேச முடியாவிட்டாலும் புரிந்துகொள் ளும் ஆற்றல் பெற்றவர். இயல்பிலேயே மனத் துணிச்சல் மிக்கவர். அவருடைய கணவர் மறைந்த பின் அவர் செய்து கொண்டு இருந்த நூல் வியாபாரத் தை, அவரைவிட நன்றாக நடத்துவதாகப் பெயர் பெற்றவர். சொல்லப் போனால் கணவரின் மறைவுக் குப் பின், நாகலம்மாளின் நிர்வாகத்தில்தான் வியாபாரம் செழித்து, அவரால் நிலபுலன்களையும், சொத்து சுகங்களையும் வாங்க முடிந்தது.

நாகலம்மாளுக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டு களில் அவருடைய கணவர் மறைந்துவிட்டார். அதற் குள் தாய்க்குத் தலைமகனாக ஒரு ஆண் குழந்தை யைப் பெற்ற பின் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று இருந்தனர். நான்காவது முறை கருவுற்று எட்டு மாதமாக இருந்த போது தான் அவருடைய கணவர் எதிர்பாராமல் இறந்து போனார். இவ்வளவு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இவள் எப்படி வாழப் போகிறாள் என்று நாகலம்மாளின் பெற்றோர் கள் கவலைப்பட்டனர். ஆனால் சுற்றத்தினரின் எதிர் பார்ப்புக்கு மாறாக, நான்காவதாக ஆண் குழந்தை யைப் பிரசவித்த மூன்று மாதங்களுக்குப் பின், தன் கணவர் செய்துகொண்டு இருந்த நூல் வியாபாரத் தைத் தன் கையில் எடுத்துக் கொண்ட நாகலம்மாள், அதைத் திறம்பட நடத்தினார். வியாபாரம் அவருடைய நிர்வாகத்தில் செழித்து வளர்ந்தது.

அப்போது பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்திருந்த இலவசக் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தி அனைத்துக் குழந்தைகளையும் படிக்க வைக்க முயன்றார். ஆனால் யாரும் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டவில்லை. பெண்கள் படிக்காததைப் பற்றிக் கவலைப்பட்டாலும், அவர்களைத் திருமணம் செய்து கொடுத்து, தன் கடமையை முடித்துக் கொண்டார். ஆனால் தன் மகன்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று கவலைப்பட்டு, தனிப்பயிற்சி (Tuition) எல்லாம் வைத்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. வேறு வழி இல்லாமல் அவர் கள் இருவரையும் தான் நடத்திக் கொண்டு இருந்த நூல் வியாபாரத்திலேயே ஈடுபடுத்தினார்.

மூத்தவன் சுப்புராமன் கல்லாப் பெட்டி அருகிலேயே அமர்ந்துகொண்டு வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான். இளையவன் சிவராமனோ ஊர் ஊராகச் சுற்றி வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டான். படிப்பு சரியாக வராவிட்டாலும் வியாபாரத்தை நன்றாகச் செய்கிறார்கள் என்று கண்ட நாகலம்மாள் கவலையை மறந்தார்.

நாள்கள் சென்றன. சுப்புராமனுக்குத் திருமணம் நடந்தது. திருமணமான சிறிது நாளில் அவனுடைய மனைவி நிர்மலா, சிவராமன் வேலை எதுவும் செய் யாமல் ஊர் சுற்றுவதாக வெளியில் பேச ஆரம்பித் தாள். தான் வெளியூர்களுக்குச் செல்லும் போது 24 மணிநேரமும் வேலை பார்ப்பதாகவும், ஆகவே வெளியூர் செல்லாத நேரங்களில் கடை வேலைகளைப் பார்க்காததைக் குறைசொல்லக் கூடாது என்றும் சிவராமன் மறுமொழி சொல்லி வைத்தான். இவ்வாறு நேருக்கு நேர் பேசாமல் மற்றவர்கள் மூலமாகவே பேசிய பேச்சுகளால் வீட்டில் புகைச்சல் உண்டாகி நாளுக்கு நாள் மிகுந்து வந்தது. ஒருமுறை நிர்மலா, சிவராமனுக்குத் திருமணம் ஆகாததைச் சுட்டிக்காட்டி, அவன் சிறு பிள்ளை என்றும், ஒரு சிறுவனுக்கு இவ்வளவு துடுக்குப் பேச்சு கூடாது என்றும் கூறினாள். இதைக் கேட்ட நாகலம்மாள் உடனே சிவராமனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதை நடத்தியும் விட்டார்.

சிவராமனுக்குத் திருமணம் ஆன பின் வெளியூர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான். அவ்வேலை களைச் செய்ய, தன் தாயார் செய்தது போல் முகவர் களை நியமித்தான். அவனும் கல்லாப் பெட்டி அருகே அமர ஆரம்பித்தான். அப்படி அமர்ந்து கணக்கு வழக்கு பார்த்த போது, தானும் தன் அண்ணனும் சேர்ந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தாலும், அதில் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை அண்ணன் சுருட்டிக் கொண்ட விவரம் தெரிய வந்தது. உடனே அண்ணனுடன் நேராக மோதி, தனக்குச் சேர வேண்டிய பணத்தைத் தருமாறு கேட்டான். உடனே சுப்புராமன் அதற்கு மறுத்து வேறு வியாபாரம் செய்து கொள்வ தாகக் கூறிவிட்டுப் போய்விட்டான்.

ஆத்திரம் தாங்காத சிவராமன் தாயிடம் கூறி நியாயம் கேட்டான். நாகலம்மாள் சுப்புராமனைக் கண்டித்த போது, இது தான் சாக்கு என்று கூறி, தனிக் குடித்தனம் போய்விட்டான். தாயைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இரு மகன்களுக்கும் இருந்தாலும், குடும்பத் தில் ஏற்பட்ட சச்சரவைப் பயன்படுத்தி, அப்பொறுப் பைத் தன் தம்பியிடமே விட்டுவிட்டான்.

சிவராமனுக்குத் தன் அண்ணன் மீது இருந்த கோபமும், தாயைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தன் மீது மட்டும் விழுந்துவிட்டதே என்ற ஆத்திரமும் சேர, ஒரு காரணமும் இல்லாமல் தன் தாயிடம் மீது கடுமையாக நடந்து கொள்ளலானான். இது நாகலம் மாளின் மனதையும் உடலையும் பாதித்தது. அவர் அடிக்கடி நோய்வாய்ப்படலானார். நோய்வாய்ப்பட்ட தாயை மூத்த மகன் சுப்புராமன் அடிக்கடி வந்து பார்க்கலானான். வீட்டில் சிவராமன் இல்லாத நேரங் களில் தாயுடன் நீண்ட நேரம் பேசினான்.

அப்படிப் பேசிக் கொண்டு இருக்கும் போது பாகப் பிரிவினையைப் பற்றிப் பேசினான். நாகலம்மாளோ சுப்புராமனும் வசிக்கும் வீடுகள் அவரவருக்குச் சேரும் என்றும், பட்டிக்காட்டில் உள்ள விவசாய நிலங்களை இரண்டு பெண்களுக்கும் பிரித்துக் கொடுக்க இருப்ப தாகவும் தெரிவித்தார். ஆனால் சுப்புராமனோ அந்நிலங் களை எல்லாம் தன் பெயருக்கே எழுதித் தருமாறு கேட்டான். அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்தில் உரிமை இல்லாத நிலையில் தன் சகோதரிகளுக்கு எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை என்று வாதாடி னான். ஆனால் நாகலம்மாளோ அவை எல்லாம் தான் சொந்தமாகச் சம்பாதித்த சொத்து என்றும், அவற் றைத் தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார். இதனால் ஏமாற் றம் அடைந்த சுப்புராமன் வேகமாக வெளியே போய் விட்டான். சிறிது நாள் கழித்து, சிவராமன் வீட்டில் இல்லாத போது வந்த சுப்புராமன், தன் தாயிடம், தான் மூத்த மகன் என்றும், தனக்கு மூத்த மகனுக்கான பங்கு (ஜேஷ்ட பாகம்) வேண்டும் என்றும் கேட்டான். மூத்த மகன் பங்கு என்பது எல்லாம், தம்பிகளையும் தங்கைகளையும் தன் பிள்ளைகள் போல் பாதுகாக்கும் அண்ணன்களுக்குத் தான் பொருந்துமே ஒழிய, அவர் களுக்குத் துரோகம் செய்ய நினைப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் நாகலம்மாள் சூடாகவே விடை அளித்துவிட்டாள். இதைக் கேட்ட சுப்புராமன் ஆத்திரத் துடன் வெளியே போய்விட்டான்.

சில நாள்கள் கழித்து மீண்டும், சிவராமன் இல்லாத நேரத்தில் சுப்புராமன் வந்தான். இம்முறை அவனு டைய முகத்தில் தான் நினைத்த செயலில் வெற்றி பெறும் நம்பிக்கை மிளிர்ந்து கொண்டு இருந்தது. நாகலம்மாளோ அவன் எதைச் சொன்னாலும் மயங்கப் போவது இல்லை என்ற மன உறுதியுடனேயே இருந் தார். இம்முறை சுப்புராமன் சொத்து வேண்டும் என்று பேச்சைத் தொடங்கவில்லை. பாவம், புண்ணியம், கர்ம வினைகள் என்று பேச்சைத் தொடங்கினான். அப்படிப் பேசிக்கொண்டே, செத்தவர்களுக்கு ஒவ் வொரு ஆண்டும் சிரார்த்தம் செய்து எள்ளும் தண் ணீரும் விடவில்லை என்றால் என்ன ஆகும் என்று கேட்டான். அதற்கு அவனுடைய தாய் தந்தையர், பாட்டன் பாட்டிமார்கள் நரகத்தில் நெருப்புக் குழியில் விழுந்து வெந்துகொண்டு இருப்பார்கள் என்று நாகலம் மாள் விடை அளித்தார். உடனே சுப்புராமன், இதுபோல் முன்னோர்கள் நரகத்தில் நெருப்புக் குழியில் விழுந்து வேகாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு ஆண்டும் சிரார்த் தம் செய்யும் பொறுப்பு மூத்த மகனுக்குத் தான் இருக்கிறது என்றும், இப்பொறுப்பை நிறைவேற்று வதற்குத்தான் மூத்தவன் பங்கு என்ற உரிமை இருப்பதாகவும் கூறி நிறுத்தினான்.

நாகலம்மாளுக்கு சுப்புராமன் என்ன சொல்ல வருகிறான் என்று பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது. உடனே “நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டார். சுப்புராமன் தன் பழைய வேண்டு கோளை, அதாவது விவசாய நிலங்களை தன் பெய ருக்கு மாற்றித் தரும் வேண்டுகோளை முன்வைத் தான். அது தன் மகள்களுக்கு என்று நாகலம்மாள் கூறவும், “அப்படி என்றால் நீ நரகத்தில் நெருப்புக் குழியில் வேகிறாயா?” என்று கேட்டான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தன் தாயிடம், தனக்கு அந்த நிலங்களைத் தராவிட்டால், தான் சிரார்த்தம் செய்யப் போவதில்லை என்று மிரட்டினான். இதனால் மிரண்டு போன நாகலம்மாள் அழ ஆரம்பித்துவிட்டார். உடனே சுப்புராமன் தன் பெயருக்கு அந்த விவசாய நிலங்களை மாற்றித் தந்துவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தத்தின் போது தம்பி தங்கைகளின் குடும்பத்தி னரை அழைத்து விருந்து வைப்பதாகவும், புதுத் துணிகள் வாங்கித் தருவதாகவும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதாகவும் வாக்களித்தான், இந்த வாக்குறுதிகளை நம்ப முடியாது என்று தெரிந்தாலும், தன் கணவர் நரகத்தில் நெருப்புக் குழியில் விழக் கூடாது; தான் மாண்ட பிறகு தனக்கு அப்படிப்பட்ட கதி நேரக்கூடாது என்ற அச்சத்தில், சுப்புராமனுக்கு அந்நிலங் களை அளிக்க ஒப்புக் கொண்டார். உடனே சுப்புராமன் அனைத்து வேலைகளையும் கமுக்கமாகச் செய்து முடித்தான்.

‘இருந்தாலும் இவ்விஷயம் ஒரு நாள் வெளியே தெரியத்தான் செய்யும்; அப்பொழுது தம்பி தங்கைகள் சீறி எழத்தான் செய்வார்கள்; எதிர்பாராத நேரத்தில் பிரச்சினை வெடிப்பதைவிட, எதையும் சந்திக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தெரிவித்தால் நிலைமையை எளிதில் சமாளிக்கலாம்’ என்று சுப்புராமன் நினைத்தான். அதன்படியே திட்டமிட்டு, ஒரு நாள் தன் தாயையும், தம்பி தங்கைகளையும் விருந்துக்கு அழைத்தான். அவன் விருந்துக்கு அழைத்ததைக் கண்டு அனை வரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். விருந்து தடபுட லாக நடந்தது. இதுவும் அவர்களுக்குக் கூடுதலான ஆச்சரியத்தை அளித்தது. அன்று இரவு உணவு முடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்குச் சற்று முன்னால் விவசாய நிலங்கள் தன் பெயருக்கு, மூத்தவன் பங்குக் கணக் கில் மாற்றப்பட்டதைத் தெரிவித்தான்.

அதுவரையிலும் மகிழ்ச்சிகரமாகத் தெரிந்த அவ் வீடு உடனே போர்க்களம் போல மாறியது. சிவராம னும் அவனுடைய தங்கைகளும் சுப்புராமனைத் திட்டித் தீர்த்தனர். சுப்புராமனோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு என சிரிப்பில் எத்தனை வகை கள் உண்டோ அத்தனையையும் ஒன்றாகக் கலந்து சிரிப்பது போல் சிரித்துக் கொண்டே இருந்தான்.

இதைக் கண்ட சிவராமனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. தன் தாயைப் பார்த்துக் கடுமையாகப் பேசினான். நாகலம்மாளால் விடை ஏதும் சொல்ல முடியவில்லை. பொறுக்க முடியாத ஆத்திரத்தில் “யாருக் குச் சொத்து எழுதிக் கொடுத்தாயோ அவன் வீட்டி லேயே இனிமேல் இரு” என்று கூறிவிட்டு, நாகலம் மாளின் துணிமணிகளை எல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவரைச் சுப்புராமன் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டான். சுப்புராமனின் மனைவி நிர்மலாவோ, தன்னால் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொள்ள முடியாது என்றும் எப்படியாவது சிவராமனின் வீட்டிற்கே அனுப்பி விடும் படியும் கணவனிடம் கிசு கிசுத்து விட்டாள். சுப்புராமன் என்னென்னவோ தந்திரங் கள் செய்தும், மயக்கு மொழியில் பேசியும் சிவராம னை ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.

இறுதியில் மனைவியிடம் சில நாள்கள் பொறுத் துக் கொள்ளும் படியும், அப்புறம் தன் தாயை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவதாகவும் கூறினான். நிர்மலாவோ நாகலம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிறகு வீட்டிற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுத் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். சுப்புராமன் அவசர அவசரமாக முதியோர் இல்லத்தைத் தேடினான். கட்டணம் அதிகமாக இருக்கக் கூடாது என்று பார்த்துக் கொண்டு இருந்த அவனுக்கு ஒரு அனாதை முதியோர் இல்லம் தென்பட்டது. உடனே அவரை அனாதை என்று கூறி அங்கே கொண்டு போய் விட்டுவிட்டான்.

செத்த பிறகு எள்ளும் தண்ணீரும் கிடைக்காமல், கற்பனையான நெருப்புக் குழியில் வேக நேரிடமோ என அஞ்சிய அவர், இப்பொழுது உயிருள்ள போதே அனாதை என்ற உண்மையான நெருப்புக் குழியில் வெந்து கொண்டு இருந்தார். தன் கணவனை விடச் சாமர்த்தியமாக வியாபாரம் செய்த கூர்ந்த மதியின ளான அவர், மதங்கள் கூறும் பொய்யான, மூடத்தன மான நம்பிக்கையில் விழுந்து இருந்ததால் அவரு டைய கூர்ந்த அறிவு பயன்படாமலேயே போயிற்று. இதைப் போல் சமூகத்தில் பலருடைய அறிவுத் திறன், மூடநம்பிக்கைகளால் பயனற்றுப் போய்க்கொண்டு தான் இருக்கிறது.