அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையின் புரவலர் - தலைவர் வே.ஆனைமுத்து 2015 பிப்ரவரி 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தி லிருந்து தமிழ்நாடு விரைவு இரயிலில் புதுதில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் கவிஞர் கு.சீத்தா சென்றுள்ளார்.

புதுதில்லியில் அவர் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் விகிதாசார அளவுக்கு இடப்பங்கீடு அளிக்க வேண்டும் என்னும் தங்களுடைய பேரவையின் கோரிக்கையின் நியாயத்தையும் தேவையையும் விளக்குகிறார். இதன் பொருட்டு மார்ச்சு 21 சனிக்கிழமை புது தில்லியில் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டினையும் நடத்துகிறார். மார்ச்சு இறுதியில் சென்னை திரும்புகிறார்.

வே.ஆனைமுத்துவின் தில்லிப் பணிகளுக்குத் துணை செய்யும் பொருட்டு ஒடுக்கப்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளர் கலசம் மார்ச்சு 14ஆம் நாள் சென்னையிலிருந்து இரயில் மூலம் தில்லி செல்கிறார். மாத இறுதியில் சென்னை திரும்புகிறார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்படா மலேயே இருந்தது. அது கொடுக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையுடன் வே.ஆனைமுத்து 1978 ஏப்பிரல் மாதம் முதலாவதாகத் தில்லிநோக்கிப் புறப்பட்டார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தில்லி மற்றும் வடஇந்திய மாநிலங்களுக்குச் சென்று மக்க ளையும் அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்துப் பாடுபட்டதன் விளைவுதான் 1990இல் பிரதமர் வி.பி.சிங் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வேலையில் மட்டும் அளித்தார்; கல்வியில் அளிக்கவில்லை.

எனவே தொடர்ந்து அவர் ஆண்டுதோறும் வட இந்தியப் பயணம் மேற்கொண்டார். மய்ய அரசின் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வடஇந்திய மக்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் சமுதாய அமைப்புகளிடமும் பரப்புரை செய்து வந்தார். அதன் விளைவுதான் 2008இல் மய்ய அரசு கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது.

இன்று இந்திய மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் மக்கள் தொகை விகிதாசார அளவான 57 விழுக்காடு அளவுக்கு உயர்த்தி அளிக்கப்பட வேண்டும் என்னும் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கோரிக் கையை முன்வைத்து தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான நாடாளுமன்றக் குழுத்தலைவரை வே.ஆனைமுத்து சந்தித்தார்


இந்திய நாடாளுமன்ற இரு அவைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக் கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவரும் அசாம் மாநில மக்களவை உறுப்பினருமான ஸ்ரீராஜன்கோயென் அவர்களை 24.2.2015 காலை 8.30 மணி முதல் 9 மணி வரை அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையின் புரவலர்-தலைவர் வே.ஆனைமுத்து, பேரவையின் உறுப்பினர் கு.சீத்தா, தில்லி பெரியார்-அம்பேத்கர் பேரவையின் அமைப்பாளர் ப.இராமமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு பற்றி விவாதித்தனர். வே.ஆனைமுத்துவின் வேண்டுகோளின் பேரில் 1.3.2015க்குப் பிறகு இந்தியத்தலைமை அமைச்சர் அவர்களை வே.ஆனைமுத்து சந்திப்பதற்கு ஆவண செய்வதாக அவர் உறுதி அளித்தார். தென்னாட்டில் உள்ள இடஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு போல வடநாட்டு மக்களிடம் விழிப்புணர்வு இல்லையே என்று அவர் ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.

தில்லியில் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள விகிதாசார வகுப்புரிமை மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அவரை வே.ஆனைமுத்து கேட்டுக் கொண்டார். வே.ஆனைத்து அவருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றார்.