மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்றான் வான்புகழ் வள்ளுவன். இதை வெறும் ஏட்டுப்பாடமாக மட்டுமே வைத்துக் கொண்டு, நீர் வளத்தைக் காக்க மறந்துவிட்டதன் விளைவால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைப் போன்ற, பூஜ்ஜிய குடிநீர் நகரங்கள் பெருகி வருகின்றன.

இந்த நிலைமை தமிழகத்துக்கும் விரைவில் வந்துவிடு மோ? என்ற அச்சம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. காரணம், மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. மாநிலத்தின் பிற மாவட்டங்களின் நிலைமை ஒருபுறம் மோசம் என்றால், சென்னை நகரின் நிலைமையோ இன்னும் மோசமாகி வருகிறது.

ஏனெனில். சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் பாறை களின் அடிவரை சென்றுவிட்டது. நகரின் ஏரிகளின் நீர்மட்டம் பூஜ்ஜிய அடியாக இருக்கும் நிலையில், சென்னைவாசிகள் பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்தே வாழ்கின்றனர்.

ஆனால் நகரின் நிலத்தடி நீர்மட்டமோ கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 5.4 மீட்டர் ஆழத்துக்குச் சென்று உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 3.4 மீட்டர் ஆழம் வரையே இருந்தது. இவ்வாறு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவிலேயே இருக்கிறது.

மாநிலம் முழுவதும் சுமார் 19 இலட்சம் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது இருக்கும் நிலையில், இவற்றில் 30 விழுக்காடு ஆழ்துளைக் கிணறுகள் ஏற்கெனவே வறண்டு விட்டன. 27 விழுக்காடு ஆழ்துளைக் கிணறுகளில் குடிநீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது. மீதமுள்ள கிணறுகளில் உள்ள நீரும் 4 முதல் 6 மணிநேரத்துக்குள் காலியாகும் நிலையிலேயே உள்ளது.

இத்தகைய ஆழ்துளைக் கிணறுகளின் வருகையால் குளத்துப் பாசன சாகுபடி நிலம் 10 இலட்சம் ஏக்கராகச் (2018-ஆம் ஆண்டு நிலவரப்படி) சுருங்கிவிட்டது. இது கடந்த 1960-ஆம் ஆண்டில் 22.50 இலட்சம் ஏக்கராகவும், 2000-ஆம் ஆண்டில் 15.75 ஏக்கராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலத்தடி நீரைச் சேமிப்பதற்காகத் தமிழக அரசு ஏற்கெனவே களத்தில் இறங்கியது. அதன்படி மழைநீர் சேமிப்புத் தொடர் பாகக் கடந்த 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டம் ஒன்றை இயற்றியது. பின்னர் மழைநீர் சேகரிப்பைக் கட்டாய மாக்கி 2003-ஆம் ஆண்டு சூன் மாதம் அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பித்தது.

இதன்மூலம் அனைத்துக் கட்டடங்களிலும் அந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டியது கட்டாயம் என ஆணையிடப்பட்டது. இந்தச் சட்டத்தை உருவாக்கியதில் நாட்டிலேயே முதல் மாநில மாகத் தமிழகம் உருவெடுத்தது.

மொத்த நீர்த் தேவையில் 60 விழுக்காடு அளவுக்கு நிலத்தடி நீரை நம்பி இருக்கும் சென்னையில், பழைய மற்றும் புதிய கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக் கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரில் உள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 8.20 இலட்சம் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் சென்னையில் உள்ளன.

இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையாமல் பாதுகாக்கப்பட்டது. அதாவது மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கிய காலகட்டத்தில் சென்னையில், 8 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், இந்தத் திட்டத்தின் காரணமாக இதுவரை 8 மீட்டருக்குக் கீழே செல்லாமல் பாதுகாக்கப்பட்டு உள்ள தாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அடையாறு, கூவம், நீலாங்கரை போன்ற மணற் பாங்கான பகுதிகளில் 100 விழுக்காட்டுச் செயல்திறனைக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் அண்ணாநகர் போன்ற களிமண் பகுதிகளில் 80 விழுக்காட்டுச் செயல்திறனைக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக மழையளவு குறைந் திருக்கும் நிலையில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந் திருப்பதாகக் கூறியுள்ள அதிகாரிகள், கடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அச்சம் வெளியிட்டு உள்ளனர். இது மிகப்பெரும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க இருப்பதற் கான அறிகுறி என எச்சரித்து இருக்கிறார்கள்.

சென்னை நகரக் குடிநீர் வினியோகம் குறித்துத் தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறி யாளர் ஏ. வீரப்பன் கூறுகையில், ‘கடல்நீரைக் குடிநீராக்கும்’ ஆலையில் இருந்து 200 மில்லியன் லிட்டர் மற்றும் விவசாயக் கிணறுகள், குவாரிகளில் இருந்து 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை நகருக்கு நாள்தோறும் வினி யோகிக்கப் படுகிறது. நகரில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே குறைந்துவிட்டது. மழையளவு குறைந் துள்ள நிலையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மூலம் நீர் மட்டத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது. நிலத்தடி நீர்மட்ட அளவு மிகவும் குறைந்து காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, மழைநீர் சேகரிப்புத் திட்டம் சரியாக அமைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்விக்கும் எதிர்மறை பதிலே கிடைத்து வருகிறது.

இதுகுறித்து மழைநீர் சேகரிப்புச் சட்ட மசோதாவுக்கான உயர்மட்ட ஆலோசனைக்குழுவில் இடம்பெற்று இருந்தவரும், ‘மழை மையம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்கு நருமான சேகர் ராகவன் கூறுகையில், மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்து மக்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. வெறும் 40 முதல் 50 சதவீத மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் மட்டுமே சரியான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றிலும் பெரும்பாலானவை சரியான முறையில் மேற்பார்வை யிடவோ, பராமரிக்கவோ இல்லை. அப்படியிருந்தும் கூட நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்தத் திட்டம் பெரும் பங் காற்றி வருகிறது என்று கூறினார்.

சென்னையில் கடந்த 2005-ஆம் ஆண்டு பெய்த பெருமழைக்குப்பின் நிலத்தடி நீர்மட்டம் 6 மீட்டர் அளவுக்கு உயர்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகரில் உள்ள 39 கோவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்தது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால்தான் இது சாத்தியமாயிற்று.

எனவே நகரில் சரியான முறையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமைத்து அதை முறையாகப் பராமரித்து வந்தால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். சமீபத்திய காலத்தில் 2018-ஆம் ஆண்டு மட்டுமே வடகிழக்குப் பருவமழை பொய்த்தது. ஆனால் முறையான மழைநீர் சேகரிப்புத் திட்டத் தால் இத்தகைய பருவ மழை பற்றாக்குறையால் ஏற்படும் நீர்த் தேவையை சரிக்கட்ட முடியும்.

‘மழை மையம்’ அமைப்பினர் கடந்த மார்ச் மாதம் சென்னையின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் அண்ணா நகர், சூளைமேடு, பார்த்தசாரதி கோவில், வடபழனி, அசோக் நகர், மயிலாப்பூர், அடையாறு புற்றுநோய் மையம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் வறண்டு காணப்பட்டது.

மாநிலக் கல்லூரிப் பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் 11.75 மீட்டராகவும், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் 9 மீட்டராகவும் இருந்தது தெரிய வந்தது. சென்னை யில் ஏராளமான கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் அவை மூடப்பட்டு ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு உள்ளன.

பூமிக்கு அடியில் பாறைகளுக்கும் கீழ் மிக ஆழத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்ச ஆழ்துளைக் கிணறுகள் போடப் படுகின்றன. ஆனால் மிகவும் ஆழத்தை நோக்கி நாம் செல்லச் செல்ல தண்ணீரின் தரம் குறைந்துவிடுகிறது. தண்ணீரில் இரும்பு மற்றும் உப்பின் அளவு அதிகரித்துவிடுகிறது. நாளாக நாளாக அந்தத் தண்ணீரும் வற்றி விடுகிறது.

சென்னையில் இவ்வாறு அதிகரித்து வரும் தண்ணீர்த் தாகத்தைத் தணிப்பதற்கு மேலும் கடல்நீரைக் குடிநீராக் கும் 2 ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் ஒரு ஆலை, நாளொன்றுக்கு 450 மில்லியன் லிட்டரும், மற்றொன்று 100 மில்லியன் லிட்டரும் கடல்நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

இத்தகைய சுத்திகரிக்கும் மையங்களை, மத்திய - மாநில அரசுகளின் விதிமுறைகளின்படி அமைத்தாலும், அந்த மையங்கள் ஏற்படுத்தும் எதிர்வினைகள் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது இத்த கைய ஆலைகளால் கடலில் உப்புத் தன்மை அதிகரித்து கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடல் சூழலியலுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என ஐ.நா. ஆதரவு பெற்ற ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

மேற்படி சுத்திகரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் உப்புநீக்கும் நச்சு வேதிப் பொருட்களும் (செம்பு, குளோரின் போன்ற வேதிப்பொருட்களால் மிகவும் அச்சுறுத்தல்) கடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறுகின்றன. மேலும் இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் உப்புக் கழிவுகள் கடலில் கலப்பதால், அந்தப் பகுதிகளில் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிர்கள் வாழத் தகுதியற்ற மண்டலமாக மாறிவிடுகின்றன.

எனவே நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதால் மட்டுமே குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இதற்கு மழைநீர் சேகரிப்பு போன்ற தற்காப்பு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப் படையில் ஈடுபட வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த நீர் சேமிப்புக் குறித்து சேகர் ராகவன் மேலும் கூறும்போது, ‘நம்மிடம் தற்போது இருக்கும் நன்னீர் ஆதாரங்களை ஒரு வங்கியாக வைத்துக் கொள்வோம். இந்த நீர் வங்கியில் டெபாசிட் எதுவும் செய்யாமல் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருந்தால் ஒருநாள் நீரில்லா நிலைக்கு வந்து நிற்போம். நீருக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தைச் சார்ந்து நாம் இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கேப் டவுன் நிலைமை, சென்னைக்குத் தற்போது நேராமல் இருக்கலாம். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அது ஏற்படக்கூடும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் தண்ணீரைச் சேமிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அது சட்டக் கட்டாயத்தி னால் அல்ல. மாறாகத் தாங்களாகவே முன்வந்து நீரைச் சேமிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தண்ணீர் பிரச்சி னைகளில் இருந்து தப்ப முடியும்’ என்று தெரிவித்தார்.

சென்னை நகரின் தண்ணீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் முன், தற்போதே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவதுதான் அரசு மற்றும் மக்களின் கடமையாகும்.

(“தினத்தந்தி” 26.4.19)