நம்நாட்டில் மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களின் பதவிக்காலத்தை நிரந்தரமாக காப்பாற்றி கொள்ள எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். பொதுப் பாதிப்புகளை மறக்க புதுப்பிரச்சனைகளைக் கிளப்பி திசை திருப்புகின்றன. கோடி கோடியாக ஊழல் செய்த அரசியல்வாதிகள் முழு தண்டனையைப் பெறவில்லை. பத்திரப்பதிவு ஊழல், முத்திரைத்தாள் ஊழல், பாலில் தண்ணீர் கலப்பட ஊழல், நீர்நிலைகளைக் கட்சிக்காரர்களே ஆக்கிரமித்து அழித்தது, சாதாரண அரசு ஊழியன் முதல் தலைமைச் செயலாளர் வரை லஞ்சம், ஊழல் வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் கொடுக்காமலே கொடுத்தாகக் கணக்குக் காட்டும் ஊழல் போன்றவை, தூங்கிக் கிடக்கும் மொழிப் பிரச்சனைகளைத் தூசிதட்டிக் கிளப்பிவிட்டாலே அனைத்து ஊழலும் மறைக்கப் படும், போபர்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல் பெட்ரோல் துறை ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவை, உயர் அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் ஊழல் பெருச்சாளிகளாக இருப்பதைக் காட்டுகின்றன.

ஊழல் அரசியல்வாதிகளால் மட்டுமே ஓட்டு வாங்க வாக்காளர்களுக்கு இலவசமாக பணம், பொருள்கள், ஆடு, மாடு போன்றவற்றை கொடுக்கமுடியும். நல்ல அரசால்தான் இலவசமாகச் சமச்சீர் கல்வி, சரியான மருத்துவம், சுத்தமான குடிநீர் கொடுக்க முடியும். கல்வி வியாபாரம் தமிழகத்தில் பெரும்பான்மையான நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனமாகத்தான் உள்ளது. கல்வி வியாபாரம் ஒழிய அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.

குடிநீர் 1 லிட்டர் ரு.10 முதல் ரூ.20 வரை விற்கின்றனர். குடிநீர் சுத்தம் செய்ய 100 லிட்டருக்கு ரூ.20/- மட்டுமே செலவு ஆகிறது. இதை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும். நல்ல மருத்துவம் அனைத்தும் அரசே இலவசமாகக் கொடுக்க வேண்டும். மக்கள் இப்பொழுதெல்லாம் பல வழிகளில் வரி கட்டுகின்றனர். வருவாயும் போதுமானதாக உள்ளது. ஊழல் செய்யாமல் வரிப் பணத்தைச் செலவு செய்தால் பச்சைத் தமிழன் காமராசர் ஆட்சியைவிட நல்ல பெயர் எடுக்கலாம்.

வேண்டாத வியாபாரம் மது வியாபாரம். இப்பொழுது அனைத்து மக்களும் விரும்பாத மது வியாபாரத்தை மக்கள் மீது வருவாய்க்கு நடத்துகின்றோம் என்று கூறி மதுக் கடைகளை மூடாத அரசு வேண்டவே வேண்டாம். சமச்சீர் கல்வி கொடுக்காத அரசு வேண்டவே வேண்டாம். நல்ல மருத்துவம் கொடுக்காத அரசு வேண்டவே வேண்டாம். நல்ல குடிநீர் வழங்காத அரசு வேண்டவே வேண்டாம். ஊழல் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் வேண்டவே வேண்டாம்.  உழவரைக் காப்பாற்றாத அரசு  வேண்டவே வேண்டாம்.