‘மதம் மக்களுக்கு அபினி போன்றது’ என்றார் மாமேதை காரல் மார்க்சு. அடிநிலை உழைக்கும் மாந்தர் இயற்கை பற்றியும் சமூக ஒழுங்குமுறை குறித் தும் கொண்டிருந்த புரிதல்கள், நம்பிக்கைகள் அதிகார வகுப்பாரின் சுரண்டலுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் போது, அது ‘மதம்’ என்ற பெயரில் நிறுவனமாக் கப்படுகிறது. இதையே பேராசிரியர் தொ. பரமசிவன் குறிப்பிடும் போது,

“கடவுளுக்கு உருவம் கொடுப்பது என்பது மனித குல வரலாற்றின் பிற்காலத்தில் ஏற்பட்டது. புராதன சமூகத்தில் தனிமனித - கடவுள் உறவே கிடையாது. அரசு உருவாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் போதுதான் மனிதர்களுக்கு இடையேயான சமத் தன்மை குலைந்து, பொது என்பது மாறி வரிசைப் படுத்துதல் நடக்கிறது. எல்லா மனிதர்களும் சமமல்ல என்னும் போதுதான் அரசு உருவாக்கம் நடக்கிறது. இதுதான் அரசு உருவாக்கத்தின் அடிப்படை” என்பார். (சமயம் - தொ. பரமசிவன் - சுந்தர்காளி - தென்திசை, சென்னை-17).

அவரைப் பொறுத்தவரை ஆசீவகமோ, பவுத்த மோ, சமணமோ, சைவமோ, வைணவமோ, இவை போன்ற பிற சமயங்களோ, அனைத்துமே அதிகாரத் தை நோக்கிய நகர்வுகள். மொத்தத்தில் அவை மக்கள் நாயகத்திற்கு எதிரானவை.

தமிழர்க்குக் கிடைத்த மிக மூத்த வாழ்வியல் நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் தமிழர்க்கான தெய்வங்கள் சுட்டப் பட்டுள்ளன.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல்.பொருள்.5)

பொதுவில் ஐவகை நிலம் பற்றி இலக்கியங்கள் பாடினாலும் இங்கே பாலை தவிர்த்த மற்ற நால்வகை நிலத்திற்கும் தெய்வங்கள் சுட்டப்பட்டுள்ளன. பாவாணர் ‘தமிழர் மதம்’ என்னும் நூலில் நிலத் தெய்வங்கள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார் :

“குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு. முல்லை நிலத்தில் ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருணவிற்கு வானவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டியதாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் எனப் பெயரிட்டனர். மால்-மா-மாயோன்.

மருதநில மக்கள் வேளாண் மாந்தர். இல்லறத் தைச் சிறப்பாய் நடத்தும் பண்பால் அவர்கள் மறுமை யில் தேவர் ஆவர். தேவருக்கெல்லாம் கோன் தேவர் வேந்தன். இது கருதியே ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ என்றது தொல்காப்பியம்.

நெய்தல் நில மக்கள் கடலோடு வாழ்ந்ததால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர். வள்-வர்-வார், வார்தல் வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால் கடல் வாரணம். வாரணன்-கடலோன். தொல்காப்பி யர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவரா தலின், வருணன் என்று வடசொல் வடிவில் குறித்தார்.

பாலைத் தெய்வம் கொற்றவை. நீர்நிலைகளெல் லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக் கற்றுது பாலை நிலம். கொற்றம் - வெற்றி, அம்மை-அவ்வை=தாய். கொற்றம் + அவ்வை=கொற்றவ்வை-கொற்றவை.” (பாவணர் : தமிழர்மதம் - ஐந்திணைத் தெய்வம், பக்.23).

பாவாணர் குறிப்பிடுவது போலவே, மும்மொழிப் புலமை சான்ற மறைமலையடிகள் அவர்களும் பழந் தமிழர் வாழ்வின் மேன்மைகளைப் பட்டியலிடுவார். “முன்னாளிலிருந்த தமிழர் அனைவரும் இறை வனை ஒளியுருவில் வைத்து வழிபாடு செய்யும் ஒரே கொள்கையினராக இருந்தமையின், அவருள் எவ் வகையான மதப் பிரிவும் இருந்திலது. அதனால் மதம் என்னும் சொல்லே அவர்க்குள் வழங்கப்படவில்லை” என்பது அடிகளார் கருத்து. (மறைமலையடிகள் - தமிழர் மதம், பக்.151, பூம்புகார் வெளியீடு).

எவ்வகை மதச்சார்பும் அற்று புராணப் புழுதி படராமல், இயற்கையோடு இயைந்த வாழ்வை ஏற்றிருந்த தொல் தமிழர் மரபு ஆரியர் வருகைக்குப் பின் அடியோடு மாற்றங்கண்டது என்பார் ஆய்வறிஞர் கே.கே. பிள்ளை அவர்கள்.

“குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகட்கும் ஐந்து கடவுளர் வழிபாட்டுக்குரியவர்களாய் இருந்தனர். சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய இக்கடவுளரைப் பற்றிய எண்ணற்ற புராணக் கதைகள், சிலப்பதிகாரக் காலத்துக்குள் தமிழகத்தில் நுழைந்துவிட்டன. தமிழகத்தில் குடியேறிய ஆரியர் சமயக் கதைகள் பலவற்றைப் புனைந்து பரப்பி விட்டனர். அவர்கள் வேள்விகள் வளர்க்கத் தொடங்கி னர். அதற்குத் தமிழ் மன்னரின் துணையை நாடிப் பெற்றனர்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மாமன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்த வன். அவன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலை களை அமைத்துக் கொடுத்தும் பல வேள்விகளை வேட்பித்தும் தன் பெயருக்கு முன்னால் ‘பல்யாக சாலை’ என்ற விருது ஒன்றைப் பெற்றுக் கொண்டான். இராசசூய வேள்வி வேட்டுச்-சோழ மன்னன் ஒருவன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பட்டம் பெற்றான். பல்யானை செல்கெழுகுட்டுவன் என்ற சேரமன்னன் பாலைக் கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகள் வேட்பித் தான்.” (டாக்டர் கே.கே. பிள்ளை - தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு).

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் கடைச்சங்க நூல்கள் யாவும் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு புலவர்களால் எழுதித் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் ஆகும். இவற்றில் காலத்தால் மூத்த இலக்கியங்களில் இனக்குழு வாழ்வின் பொதுமை அறம் சிறக்கப் பேசப் படுவதைக் காணலாம். இவற்றில் ஆரியச் சார்பையும், புராணப் பொய்மைகளையும் பார்க்க இயலாது. ஆனால் காலத்தால் பிந்தைய பரிபாடல் திருமுருகாற்றுப்படை போன்ற படைப்புகளில் பார்ப்பன வீக்கம் பெரிதாய்த் தெரியும்.

பேராசிரியர் வீ.அரசு தொகைநூற்களின் காலத்தைப் பின்வருமாறு நான்கு கூறுகளாகப் பிரிப்பார்.

தொகுதி ஒன்று : நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

தொகுதி இரண்டு : ‘திருமுருகாற்றுப்படை’ ஒழிந்த, பத்துப்பாட்டின் ஏனைய ஒன்பது நூல்கள்

தொகுதி மூன்று : கலித்தொகை

தொகுதி நான்கு : பரிபாடல், திருமுருகாற்றுப்படை

மேற்குறித்தவாறு நான்கு தொகுதிகளாக வகைப் படுத்தல் என்பது பாடல்களில் காணப்படும் பொருண் மைகளை அடிப்படையாகக் கொண்டது. சங்கப் பாடல்கள் வழி அறியலாகும் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் முதலியவற்றின் அடிப்படை யிலும் அவற்றின் காலத்தை வரிசைப்படுத்தலாம். இவ்வகையில் இயற்கையோடு இணைந்து கடவுளைப் பற்றிய கருத்துருவாக்கம் உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இவ்வகையான நம்பிக்கைகளை அடிப்படை யாகக் கொண்ட சமூகத்தில் பல்வேறு சடங்குகளும் நடைமுறைகளும் இருந்ததைச் சங்கப் பாடல்கள் வழி அறிகிறோம். (முனைவர் வீ. அரசு - சங்க நூல்களின் காலம், பக்.7, என்.சி.பி.எச். வெளியீடு).

இவற்றில் முனைவர் வீ.அரசு அவர்களும், பாவாணர் உள்ளிட்ட இன்னபிற தமிழறிஞர்களும் பண்டைத் தமிழ் மக்களிடம் மிக அதிக அளவில் இடம்பெற்ற வெறியாட்டு, நடுகல், பலியிடல் என்னும் மூன்று சடங்குகளைப் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.

காமத்தால் தாக்கப் பெற்ற பெண்மீது அணங்கு குடியேறிவிடுகிறது. அணங்கை வெளியேற்ற வேண்டும். இந்த அணங்கை வெளியேற்றும் சடங்கை ‘வெறி யாடல்’ என்று சங்க இலக்கியம் பேசும். இன்னொரு சடங்கு கல்நட்டு வழிபடும் ‘நடுகல்’ சடங்கைச் சொல்ல லாம்.

என்ஐமுன நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ

முன்நின்று கல்நின் றவர் - குறள் 771

(பொருள் : பகைவரே! என் தலைவன் முன் எதிர்த்து நிற்காதீர். என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலராவர்).

இக்குறட்பா பழந்தமிழ் மக்களின் ‘நடுகல்’ வழிபாட்டு முறைக்கு நல்லதொரு சான்றாகும்.

வெறியாட்டு, நடுகல் போலவே பலிகொடுத்தல் பற்றிய பாடல்களையும் சங்க இலக்கியங்களில் காண லாம். வள்ளுவர் கொல்லாமை அறம் பற்றி நிறைய பேசுகிறார். ஆனால் அந்தக் காலங்களில் தமிழர் அந்த அறத்தைப் போற்றினார் இல்லை. பாரியும் அவ்வை யும் கள்ளையும் புலாலையும் மாறி மாறி உண்ட காட்சியினை மறக்க முடியுமா?

இன்றைய இந்துமத வெறியர்கள் பசுவைக் கொல் வதற்கு எதிராக நாடு முழுவதும் கலவரங்கள் நிகழ்த்தி வருகின்றனர். மகாராட்டிரம், அரியானா போன்ற மாநி லங்களை ஆளும் பா.ச.க. அரசு மக்களை அச்சுறுத் தும் தன்மையில் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 309ஆம் பாடல் என்ன சொல்கிறது?

பசுக்கூட்டத்தைக் கவர்ந்து வந்த வீரர்கள் வழி யிலுள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து தம் வழிபடு தெய்வத்திற்குப் பலிகொடுத்துள்ளனர். தாம் கவர்ந்து கொண்டு வந்த பசுக்களில் நன்கு கொழுத்த பசு ஒன்றைக் கொன்று அதன் குருதியை மரத்தின் மீது தெளித்துள்ளனர். பின்னர் வயிறு புடைக்கப் பசுமாட்டுக் கறியைச் சமைத்து உண்டனர். இவை யெல்லாம் உணர்த்தும் பொருள் என்ன? பழந்தமிழ் மரபு என்பதே தொல்குடிச் சமூக அமைப்பின் அடை யாளத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஆரியப் பார்ப்பனியம் தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்த தற்குப் பிறகு எல்லாமே வேதப் பண்பாடாக வீழ்ச்சி யுற்றன.

இதுபற்றி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.ப. அறவாணன் எழுதுவதாவது :

“திராவிடர் சிறுதெய்வ வழிபாட்டினராக இருந்தது டன் வடக்கே, மகாவீர வர்த்தமானரும், புத்தரும் தோன்றிய பிறகு தழைத்த சைன சமயத்தையும், புத்த சமயத்தையும் பின்பற்றத் தொடங்கி இருந்தனர். இவ்விரண்டு சமயங்களும் பகுத்தறிவு சமயங்கள்; தனிக்கடவுள் மறுப்புச் சமயங்கள்; புரோகித எதிர்ப்புச் சமயங்கள், வேத எரிப்புச் சமயங்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக இங்கே உள்நுழைந்த ஆரியர்கள், திராவிடர் தம் நாட்டுப்புற (Native Worship) வழிபாடுகளையும் அவரிடம் பரவியிருந்த பகுத்தறிவுச் சமயங்களையும் மெல்ல மெல்ல வீழ்த்தித் தம் வேத சமயத்தைப் பரப்பினர்.

வியப்பு என்னவெனில், வேத சமயமே தம் சமயம் என்று திராவிடரே கருதுமளவிற்கு, வேத ஆரியக் கடவுளரைத் திராவிட நாட்டுப்புறத் தெய்வங்களுடன் இணைத்தனர்; பிணைத்தனர். திராவிடமுருகன் ‘கார்த்திகேயன்’ ஆனான். வடபுலத்துக் கயிலைமலை சிவபெருமானின் ‘சேய்’ ஆனான். திராவிடத்து அம்மன் ‘அம்பாள்’ ஆகி, வடபுலத்து இமயமலை சிவபெரு மானின் மனைக்கிழத்தி ஆனாள். கொற்றவை துர்க்கை ஆனாள். வள்ளி மணவாளன், தெய்வானை என்ற ஆரியப் பெண்ணை இரண்டாந்தாரமாக்கிக் கொண்டான். விநாயகன் என்ற புதுக்கடவுள் தோன்றி முருகனுக்கு மூத்தோன் ஆனான். கண்ணகியைப் பெற்றெடுத்த நாட்டார் திரௌபதி கதையைக் கண் விழித்து நாட்கணக்கில் கேட்கலாயினர். இப்படி இன் னும் பல. பற்பல!

மதவழி மாபெரும் அரசையே அமைக்க இயலும்; கவிழ்க்க இயலும் என்பதில் கரைகண்டவர் ஆரியர். பிற்காலத்து ஐரோப்பிய ஆரியர், ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் மதத்துறவியர் வழியேதான், தம் ஆதிக்க அரசை அமைத்தனர். பண்டைத் திராவிடத்திலும் ஆரியர் தம் மதவழியே, திராவிடத்தைத் தம் காலடிக்கீழ் கொணர்ந்தனர்.” (க.ப. அறவாணன் - தமிழ்ச் சமுதாய வரலாறு - கலப்பி யக் காலம், பக்.104 - தமிழ்க்கோட்டம் முதற்பதிப்பு, திசம்பர் 1994).

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்த ராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் ‘தமிழர் சால்பு’ எனும் தலைப்பில் சிறந்ததோர் நூலை யாத்துள்ளார். சங்க கால வாழ்க்கை முறையை அவர் அந்நூலில் விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். அவருடைய கருத்துகளுடன் க.ப. அறவாணன் கருத்துகள் பல நிலைகளில் ஒத்தி சைகின்றன.

“தென்னாட்டில் நிலவிய சமய வாழ்க்கை பழங் காலத்தில் ஒரு தனிமையான பண்போடு இருந்ததாகத் தெரிகிறது. பிற்காலத்தில் ஆரியர் சமயக் கொள்கை களும், வழிபாட்டு முறைகளும் அவர் சமய வாழ்விற் புகத் தொடங்கின. எனினும் பல காலமாகத் தமிழர் சமயம் தனக்குரிய சிறப்பியல்புகளை உடையதாகவே இருந்து வந்தது. வரலாற்றுக்கு எட்டாத பழைய காலத்தில் வெறியாட்டு முதலிய விழாக்களினால் தெய்வங்களை வழுத்தி மகிழ்விக்கும் அளவிலேயே தமிழர் சமயம் அமைந்திருத்தல் கூடும்...

சங்க நூல்களில் விட்டுணு, இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள் ளது உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களையே சிறப்புடன் வழிபட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிகாட்டு முறை களையும் அந்நூல்களிற் காண்கின்றோம். காலப் போக்கில் ஆரியத் தெய்வங்களுடன் தமிழ்த் தெய் வங்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. இப்போது அவற்றைப் பிரித்து வெவ்வேறாகக் காணுதல் அரிதாகி விட்டது. சில தெய்வங்களை மட்டும் அவ்வாறு பிரித்துக் காண முடியும். காலஞ்செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியருக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப் பட்டு ஒழிந்தன.” (பேராசிரியர் வித்தியானந்தன் - தமிழர் சால்பு, பக்.118, பாரி புத்தகப் பண்ணை, சென்னை-5).

இந்நூலின் ஆறாம் இயலில் தெய்வங்கள் என்ற தலைப்பில் அவர் விரிவான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளார். அவற்றுள் ‘சிவன்’ பற்றிய ஆய்வு முதன்மையானது.

“சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களின் காலத்திற்குப் பின்னர் வருணனும், இந்திரனும் அறவே மறைந்துவிடுகின்றனர். சிவன் ஒரு நிலத்துக்கேனும் உரிய தெய்வமாகக் கருதப்படாதது கவனிக்கத்தக்கது. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் ஓரிடத்திலேனும் ஒரு நிலத்திற்குரிய தெய்வமாகக் கூறப்படவில்லை. ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற் சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வாரும் தொடக்கிய சமய மறுமலர்ச் சியின் பயனாகவே சிவன் சிறப்புற்ற தெய்வமாகத் திகழ்ந்தான். பத்துப்பாட்டில் நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.

இந்த நான்கு இடங்களிற்கூட ‘சிவன்’ என்ற பெயர் வழங்கப்படவில்லை. எட்டுத்தொகை நூல்களிலேயும் சிவனைப் பற்றிய செய்தியை இடையிடையே காண் கின்றோம். நற்றிணையிலே நானூறு பாக்களைப் பாடிய நூற்றைம்பது புலவரும் சிவனைப் பற்றித் தாம் அறிந்திருந்தமைக்குச் சான்றாக ஒரு செய்தியையும் தரவில்லை. இவ்வேதுக்களாற் சங்க காலத்திலே சிவ வழிபாடு அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில் லை எனக் கொள்ளலாம்.” (மேற்காண் நூல், பக்.40).

மேலும் இக்கால இந்துமதத்தார் சொல்லும் முருகன், கொற்றவை, இந்திரன், வருணன், விட்டுணு, கண்ணன், இலக்குமி உள்ளிட்ட கடவுளர்க்கும் சங்ககால மக்கள் வாழ்வுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என் கிறார்கள்.

‘தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்’ என்னும் தமது ஆய்வு நூலில் உள்ள தமிழறிஞர் மா. இராச மாணிக்கனார் கருத்தும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது :

வடமொழியாளர் தமிழகம் புகுந்த காலம் ஏறத் தாழ கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அறைகின்றனர். அவர்கள் தமிழகத் தில் தங்கள் வேதங்களின் கருத்துக்களைப் பரப்பினர். வேத வேள்விகளைச் செய்தனர். அவர்களது தெய்வ பக்தியைக் கண்டு பாராட்டிய தமிழரசர்கள் அவர்களுக் கென்று புதிய ஊர்களை அமைத்தனர். அவர்கள் குறைவின்றி வாழ வசதி செய்தனர். அவருட் சிலரைத் தம் புரோகிதராகவும் பிற உயர் அலுவலராகவும் அமர்த்தினர்.

இங்ஙனம் தமிழர் சமுதாயத்தில் வேதியர் செல் வாக்குப் பெற்றமையால், தமிழ்நாட்டுச் சமயத் துறை யில் புதிய வழிபாடுகள் நுழைந்தன. வடநாட்டுத் தெய்வங்கள் சில இந்நாட்டில் வழிபாடு பெறலாயின. முல்லைநிலக் கடவுளாகிய மாயோனுக்கு விஷ்ணு வின் அம்சங்களாக ஏற்றப்பட்டன. சிவன் உருத்திரன் ஆக்கப்பட்டான். இந்திர வணக்கம் தோன்றியது. பாலை நிலத் தேவதையான கொற்றவை துர்க்கையாக மாற்றப்பட்டாள். குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமான் ஆறு தலைகளைக் கொண்ட கடவுளாக மாற்றப்பட்டான். இங்ஙனம் சமயத் துறை யில் உண்டான மாறுதல்கள் பலவாகும். (டாக்டர் பா. இராசமாணிக்கம், தமிழக வரலாறும் தமிழர் பண் பாடும், பக்.235, தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5).

மேற்சொன்ன செய்திகளையெல்லாம் தொகுத்து நோக்குங்கால் பழந்தமிழ்ப் பண்பாடு என்பதை இனக்குழு வரைவியலுக்கு இசைந்த ஒன்றாகவே கொள்ளலாம். ஐவகைத் திணைக் கோட்பாட்டில் முதற் பொருளாய்ச் சுட்டப்படுவன நிலமும் பொழுதும்தான். மக்கள், தொழில், உணவு, விலங்கு, பறவை, பூ,யாழ் உள்ளிட்ட பதினாறு வகையான கருப்பொருள்களில் ஒன் றாகத்தான் தெய்வம் சேர்க்கப்பட்டுள்ளது. மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்கிற நிலத்தலைமைப் பெயர்களுக்கும், இக்கால இந்து மதம் முன்நிறுத்தும் பெருந் தெய்வப் பெயர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆயின் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியப் பார்ப்பனியம் தமிழர் வாழ்வியலில் தன் நச்சு விதைகளை ஊன்றிவிட்டது. நிறுவனப்படுத்தப் பட்ட வேதமதமாக இது இறுகியபின் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான கருத்தியல் கருவி யாக இன்றுவரை ஆட்சியாளர்களுக்குத் தொண்டூ ழியம் செய்து வருகிறது.

சிவனியம், மாலியம், முருகன் தமிழ்க்கடவுள், அய்யனார் எம் குலதெய்வம், நாங்கள் பொன்னியம் மாளின் புதல்வர்கள் என்று தூய தமிழ் அன்பர்கள் சொல்லிக் கொண்டாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் சூத்திரனையும் பஞ்சமனையும் கோயிலுக்கு வெளியே தான் தூக்கி எரிகிறது.

‘தமிழர் மதம்’ என்னும் நூலில் மறைமலை யடிகள் “பண்டைத் தமிழர் தங் கொள்கை ‘சைவம்’, ‘வைணவம்’ என இருவேறு தெய்வக் கொள்கையாகப் பிரியினும், அவற்றைக் கைக்கொண்டோர் நமக்குள் பகைமையும் மாறுபாடுமிலராய்ச் சிவபிரானையும் திருமாலையும் வேற்றுமையின்றியே வைத்து நெடுங் காலம் வரையில் வழிபாடு செய்துவந்தனர் என எழுது கிறார் (பக்.154). ஆனால் தில்லையம்பல நடவரச னைப் போற்றிய அரவது திருவாயே நாராயணன் நாமத்தை உள்ளன்போடு ஒலித்திருக்குமா என்பது அய்யமே. தமிழ்நாட்டுச் சைவ மடங்கள் இன்றுவரை தமிழ் வழிபாட்டுக்கும் சாதியொழிப்புக்கும் செய்த பங்களிப்பு என்ன?

சைவக் குரவர்களில் இரு கண்களெனப் போற்றப் பட்ட அப்பரும் சம்பந்தருமே தனித்தனி அணியாய் நின்றனர். ‘விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியர் சிவனே’ எனச் செப்புவார் அப்பர். வேதம் வேறு, கடவுள் வேறு என விளம்புவார் சம்பந்தர். சூத்திரராம் அப்பர் பாடல்களுக்குத் தாள்திறவா ஆலயக் கதவு, பார்ப்பன சம்பந்தரின் ஒரு பாட்டுக்கே திறந்து கொண்டது விந்தையல்லவா?

அன்பே சிவம் என்ற முழக்கத்தை முன்வைத்த சைவம் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய கொலைச்செயல் எதைக் காட்டுகிறது? ‘மாற்று மதத்தி னரின் மனைவியரைக் கதறக் கதறக் கற்பழிப்போம்’ எனச் செந்தமிழ்ச் சிவனடியார்கள் செய்யுள்கள் இயற்றியது எதனால்? காஞ்சிபுரத்தில் வைகுந்தப் பெருமாள் கண்முன்னாலேயே சங்கரராமன் என்கிற பார்ப்பனர் சங்கராச்சாரி கும்பலால் கொலை செய்யப் பட்டது எதைக் காட்டுகிறது? வைணவத்திலேயே இரண்டு பிளவுகள். கோயில் யானைக்கு ‘U’ நாமம் போடுவதா ‘‘Y’ நாமம் போடுவதா என்ற போட்டி நீதி மன்றம் வரை சென்று சிரிப்பாய்ச் சிரித்தது.

இப்படியெல்லாம் மக்கள் மனங்களில் மதவெறி யைத் தலைக்கேறச் செய்தது இந்துச் சனாதன ‘பார்ப்பன தருமம்’. இந்தத் தருமத்தை அரச நெறியாக வளர்த்தெடுத்தவர்கள் அக்காலத் தமிழ் மன்னர்கள். இக்கேடு கெட்ட நிலைக்கெல்லாம் தீர்வுதான் என்ன? தோழர் வே. ஆனைமுத்து பின்வருமாறு எழுதுவார் :

1.            சனாதன, பார்ப்பன, வேத மத நெறியே குடும்ப வாழ்க்கையிலும் தமிழரிடை நிலை பெற்று நின்றிட அரசர்களே - தமிழ் அரசர் களே வழிவகுத்தனர். இதன் விளைவாக இந்து தருமம் என்கிற பேரால் சனாதன தருமமே தமிழரின் வாழ்க்கை நெறியாக இன்றுவரை இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

2.            மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுக்காலமாக ஆரியப் பார்ப் பனர்கள் உள்ளனர். ஆயினும் அரசுகளின் அல்லது அரசர்களின் துணைகொண்டும் மற்றும் சொந்த முயற்சியாலும் வேதங் களில் சிறந்த பயிற்சி உள்ளவர்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அவர்கள் தங் களுக்குள்ளேயே உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலைமை அடியற்றுப் போக வேண்டும் என்று கருதுகிறவர்கள் எத்தகையதொரு வாழ்க் கை முறையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறார்களோ அத்தகைய வாழ்க்கை நெறிகளை உரிய சான்றாதாரங்களின் அடிப் படையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது முதலாவது தேவை.” (வே. ஆனைமுத்து - தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பக்.284, பெரியார் நூல் வெளியீட்டகம், சென்னை-45).

வரலாற்றியல் அறிஞர் பேராசிரியர் கே.ஏ. நீல கண்ட சாஸ்திரி அவர்களும் தமிழர் மதம் தொடர்பாகக் கீழ்க்காணும் கருத்தைப் பதிவு செய்கிறார்: “வரலாற் றின் ஆரம்ப காலத்தில் பண்பாட்டுடன் கலந்த ஆரியர் கருத்துகள், தமிழர் மதத்திலும், நீதி நெறிகளிலுமே - ஏனைய துறைகளைவிட - பெரிய அளவில் காணப் படுகின்றன. இக்கருத்துகள் எண்ணற்ற புராணக் கதைகளிலும், வழிவழியாக நிலவும் மரபுக் கதைகளி லும் நம்பிக்கைகளிலும் பழக்கவழக்கங்களிலும் இரண் டறக் கலந்து, இந்தியாவெங்கும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. மேலும் வடமொழியிலிருந்த வேத இதிகாசப் புராணக் கதைகளையும், தர்ம சாஸ்திரங்களின் நீதிநெறிகளையும் தமிழ்ப் புலவர்கள் அய்யந்திரிபறக் கற்றிருந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் எண்ணற்ற உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன” (பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி - சங்க கால ஆட்சி முறையும் சமூக வாழ்வும், பக்.34, என்.சி.பி.எச். வெளியீடு).

ஆக, இவை யாவற்றையும் தொகுத்து நோக்குங் கால் இனக்குழுச் சமுதாயமாக வாழ்ந்த தொல் தமிழர் இயற்கை அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளுடன் தனித்த பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனமாக வாழ்ந்துள்ளனர். ஆனால் அடுத்து வாழ்ந்த அனைத்துப் பிரிவு மக்களிடமும் ஏதோ ஒருவகையில் ஆரியச் சார்பும், பார்ப்பனியப் பண்பாட்டுத் தாக்கமும் இருந்துள்ளதை உணரமுடி கிறது. ‘தமிழர் மதம்’ இது எனத் தலைநிமிர்த்திச் சொல்ல ஏதுமில்லை. இன்றைய தேவை சாதியும். சனாதனமும் மறுத்த தமிழராய் வாழ்வதே. பின்னர்ப் படிப்படியாய் எல்லாம் சாலும்.