பல மாவட்டங்களில் தன்னார்வமாக தமிழ்த் தொண்டர் படை அமைத்து இந்தி எதிர்ப்புப் பிரச்சா ரத்தை தமிழ் உணர்வாளர்கள் தீவிரப்படுத்தி வந்தனர்.

ஓமலூர் தமிழ்த் தொண்டர் படை

இந்தப் படை 25 பேர் கொண்டதாய் தே.வெ. கதிரி செட்டியார் தலைமையில் ஓமலூர் தாலுக்காவில் மாத்திரம் இரண்டு வாரம் பிரச்சாரம் செய்து திரும்பி விடும். இந்தப் படையை அன்புடன் தாலுக்கா வாசிகள் எதிர்பார்க்கிறார்கள். இப்படைக்கு வேண்டிய சகல வசதிகளையும் பல கணவான்கள் செய்து வருகிறார்கள்.

இப்படைக்கு சாப்பாட்டு வசதிகள் யாருக்கும் சிரமம் கொடுக்காமல், சொந்த சமையல் செய்து கொள்ள அரிசி, பருப்பு முதலிய உணவு சாமான் வண்டியும் பின்னால் தொடர்ந்து வரும்.

இந்தப் படையில் சேர விருப்பமுள்ள தோழர்கள் 1-9-1938ஆம் தேதிக்குள் தங்கள் முழு விலாசத்துடன் கடிதம் அனுப்புவது நலம்.

இஷ்டப்பட்டவர்களைத் தான் படையில் சேர்த்துக் கொள்வார்கள். படை புறப்படும் தேதி, ஊர்கள் பின்னால் தெரிவிக்கப்படும் (விடுதலை, 20-8-1938).

திருநெல்வேலி ஜில்லா தமிழர் பெரும்படை

திருநெல்வேலியிலிருந்து தமிழர்களின் பெரும்படையொன்று இம்மாதம் இறுதிவாக்கில் புறப் பட்டு ஜில்லா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்ய சகல ஏற் பாடும் செய்யப்பட்டு வருகிறது. இப்படைக்கு திருநெல்வேலி பிரபல டாக்டர் ஆர்.வி. சொக்கலிங்கம் எம்.பி.பி.எஸ். அவர்கள் முக்கியஸ்த ராய் இருந்து ஏற்பாடு செய்கிறார். விரைவில் அதன் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என ஒரு நிருபர் எழுதுகிறார் (விடுதலை, 20-8-1938).

மதுரை ஜில்லா இந்தி எதிர்ப்புப் படை

மதுரையிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் இம் மாதம் 25ஆம் தேதி புறப்படுவதாயிருந்த இந்தி எதிர்ப் புப் படை 28ஆம் தேதி சோழவந்தானில் சர். பி.டி. ராஜன் தலைமையின்கீழ் நடைபெறப் போகிற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டை முன்னிட்டும், தலைவர்கள், தொண் டர்களுடைய சௌகரியத்தை முன்னிட்டும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று மதுரையிலிருந்து புறப்படும். படை எங்கு செல்லும் என்பதைப் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் (விடுதலை 22-08-1938).

கூடலூரில் (கடலூர் தமிழர்) பெரும் படை

திருச்சியிலிருந்து புறப்பட்டு வந்த முதன்மையான தமிழர் பெரும்படை 17-8-1938 காலை 7.30 மணிக்கு கூடலூருக்கு வந்து சேர்ந்தது. கூடலூர் டோல்கேட்டிற் கருகில் கூடலூர் தோழர்கள் கே. தெய்வசிகாமணி முதலியார், வி. சுப்பிரமணியம், கே. தண்டபாணி செட்டியார், வி.ஏ.எஸ்.கோவிந்த நாடார், டி.தேவநாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 400 பேர் படையை ஆரவாரத்துடன் மாலையிட்டு வரவேற்று மேளவாத் தியத்துடன் மணிக்கூண்டு வீதி, சங்கர நாயுடு வீதி, பள்ளிவாசல் வீதி, கடைவீதி, கிளைவ் துரை வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக அழைத்துவந்து நாகரத்தினம் செட்டியார் மாடிக் கட்டடத்தில் இருக்க வைத்தனர்.

வழிநெடுக வரவேற்பு வளைவுகளும், தோரணங் களும் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. இடையிடையே சில காங்கிரஸ் காலிகள் செய்த விஷமத்தனம் எடுபடாமல் போயிற்று. பகல் 1 மணிக்கு உணவும், மாலை 5 மணிக்கு சிற்றுண்டிக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காந்தி பார்க்கிற்குப் படை புறப்பட்டது. படை பல முக்கியத் தெருக்களின் வழியாக ஊர்வலமாகச் செல்லும் போது, ஜின்னா சார்பாக முத்து துரை மரைக்காயர், ஒய். முகமது அமீது, ஒய். இப்ராஹீம், கே. கஜ்ஜாலி, வி. சையத் அகமது, சி. இப்ராகீம் உள்ளிட்டோர் படையை வரவேற்று மாலையிட்டு, தொண்டர்களுக்கு குளிர்பானம் வழங்கி னர். தோழர் எஸ்.வி. லிங்கம் உபசாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மாலை 6 மணிக்கு படை காந்தி பார்க்கை அடைந் ததும் ஜனாப் இஸ்மாயில் மரைக்காயர் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்திற்கு 3000 பேர்களுக்குமேல் வந்திருந்தனர். தலைவர் முன்னு ரைக்குப் பிறகு சேனாதிபதி கே.வி அழகர்சாமி (பட்டுக் கோட்டை அழகிரி) படையின் நோக்கத்தைப் பற்றிப் பேசினார். இடையே சில காங்கிரஸ் தொண்டர்கள் கேள்விகளைக் கேட்டனர். சேனாதிபதி தக்க பதிலளித் தார். அவர்கள் கூச்சல்போட ஆரம்பிக்கவே, பொது மக்களே அவர்களை அப்புறப்படுத்தினர்.

சேனாதிபதி இந்திக் கட்டாயப் பாடத்தினால் ஏற் படும் தீமை, பார்ப்பன சூழ்ச்சி, சி.ஆர். நிலைமையும் காங்கிரசும் ஆகியவைகளைப் பற்றி மிக விளக்கமாக 2 மணிநேரம் பேசினார்.

பின்னர் தோழர்கள் எஸ்.வி. லிங்கம், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் பேசினர். கூட்டம் இரவு 9.15 மணிக்கு முடிவுற்றது (விடுதலை, 20.8.1938).

திருச்சியில் புறப்பட்டுவந்த முதன்மையான தமிழர் பெரும்படை கடலூரை முடித்துவிட்டு, அருகில் உள்ள மஞ்சக்குப்பத்திற்கு வருகை தந்தது.

மஞ்சக்குப்பத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஆகஸ்ட் 18 : நேற்று காலை 6 மணிக்கு நமது தமிழர் பெரும்படை கூடலூரை விட்டுப் புறப்பட்டு வண்டிப் பாளையத்திற்கு 7 மணிக்கு வந்து சேர்ந்தது. வண்டிப்பாளையம் பொதுமக்கள், முனிசிபல் கவுன் சிலர் வை. கந்தசாமி முதலியார் தலைமையில் படையை வரவேற்று மாலையிட்டு அவ்வூரின் நான்கு தெருக்களின் வழியாக மேளவாத்தியத்துடன் வை. ஆறுமுக முதலியார் இல்லத்திற்கு அழைத்து வந்து காலை சிற்றுண்டி அளித்தனர்.

அங்கிருந்து படை புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் வரும்போது வழக்குரைஞர் சுவாமி தலைவருக்கு மாலையிட்டு மேளவாத்தியம் முழங்க புலிகையின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலம் அழைத்துவந்து சிறப்பித்ததுடன் கெடிலம் நதியைக் கடந்து புதுப்பாளை யம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்.

புதுப்பாளையத்தில் தோழர் வித்துவான் பா. ஆதிமூலம் அவர்கள் படையை வரவேற்று மாலை யிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ புதுப்பாளை யத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக மஞ்சக்குப்பத்திற்கு அழைத்து வந்தனர்.

மஞ்சக்குப்பம்

மஞ்சக்குப்பத்திலும் வழக்கறிஞர் திருவாரூர் தோழர் விஜயராகவலு நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல். தலைமையில் ஏராளமான தமிழர்கள் படையை வர வேற்று மாலையிட்டு முக்கிய தெருக்களில் ஊர்வல மாகக் கூட்டி வந்தனர்.

தெருக்களின் முக்கிய இடங்களில் வரவேற்பு வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. படை விஜயராகவலு நாயுடு இல்லத்தினருகில் வந்தவுடன் அவரும், அவரு டைய திருமகளாரும் படையை அன்புடன் வரவேற்று உபசரித்துத் தொண்டர்களுக்கு சூடான பானம் வழங்கி சோர்வையகற்றினர். பின்னர் படை காலை 11 மணிக்கு புதுவை சின்னையா முதலியார் பங்களாவில் தங்கி யது. டி.எம். ஜம்புலிங்க முதலியார் அவர்களால் 1 மணிக்கு பகல் உணவும், மாலை 5 மணிக்கு சிற் றுண்டியும் அளிக்கப்பெற்றபின் தொண்டர்கள் அணி வகுத்து முரசொலியுடன் பொதுக் கூட்டத்திற்குப் புறப் பட்டனர்.

பொதுக் கூட்டம்

மாலை 6 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத் தில் தோழர் விஜயராகவலு நாயுடு பி.ஏ.பி.எல். தலைமையில் பொதுக்கூட்டம் கூடியது. பொதுக் கூட்டத்திற்கு சுமார் 3000 பேர் வந்திருந்தனர். புதுவையிலிருந்து தோழர்கள் பாரதிதாசன், எஸ். சிவப்பிரகாசம், எல். துரைராஜன், லகரஷ் நம்பிக்கைமரி, எம்.சுப்புராயன், என்.தங்கவேலு, லெனின் சித்தானந்தம், ரோஷ் உள்ளிட்ட சுமார் 25 பேர்களுக்கு அதிகமாக வந்து பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

தலைவர் முன்னுரைக்குப் பின்னர், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் எழுந்து தமிழின் தொன்மை, பண்டைத் தமிழரின் கலை, நாகரிகம், வீரம், கற்பின் மாண்பு முதலி யவைகளைப் பற்றியும் இந்தி கட்டாயப் பாடத்தி னால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விளக்க மாக சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். இடையிடையே சில காங்கிரஸ்காரர்கள் கூச்சல் போட்டுக் குழப்பம் செய்தாலும் மக்கள் மிக்க அமைதியாக இருந்து சொற்பொழிவைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர், மெஸ்காப்டன் மூவலூர் இராமாமிர்தத் தம்மாள் எழுந்து, தான் முன்பு காங்கிரசிற்குச் செய்த சேவைகளைப் பற்றியும், இன்று காங்கிரசிலுள்ள தமிழர்களின் மோசமான நிலையைப் பற்றியும் விளக்கிப் பேசினார். மேலும் சில காலிகள் செய்த விஷமத்தனங்களுக்கும் கேள்விகட்கும், ஆணித்தர மான பதிலளித்ததுடன், இந்தி கட்டாயப் பாடத்தால் ஏற்படும் தீமை, ஆச்சாரியாரின் சர்வாதிகாரம், காங்கிரஸ் காரர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் மர்மம் ஆகியவைகளைப் பற்றி விரிவாக சுமார் ஒரு மணிநேரம் பேசினார். படையின் வழிசெலவிற்கு மஞ்சக்குப்பம் தமிழர்களின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப் பெற்றது.

தலைவர் முடிவுரைக்குப் பிறகு நன்றிகூறலுடன் இரவு 9 மணிக்குக் கூட்டம் இனிது முடிவுற்றது. படை இரவு மஞ்சக்குப்பத்திலேயே தங்கியது (விடுதலை 22.8.1938).

சூலூரில் இந்தி எதிர்ப்புக் கூட்டம்

இவ்வூர் பஞ்சாயத்து போர்டு ஆபீசுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் தோழர் சி. சிதம்பரசாமிக் கவுண்டர் அவர்கள் தலைமையில் 13.8.1938ஆம் தேதி ஒரு இந்தி எதிர்ப்புக் கூட்டம் கூடிற்று. தலைவர் முகவுரை யாக தமிழர் நாகரிகம், ஒற்றுமை ஆகியவைகளைப் பற்றிப் பேசினார். பிறகு கோவை ஜனாப் சி.எம். முகமது யூசுபு அவர்கள் தற்கால அரசியல் நிலைமை என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். கடைசியில் பல தோழர்கள் கட்டாய இந்தி நுழைப்பும், தமிழர் எதிர்ப்பும் என்னும் விஷயத்தைப் பற்றி வெகு விமரிசையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தனர். தலைவர் முடிவுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது (விடுதலை 22.8.1938).

(தொடரும்)