அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை மாபெரும் அளவில் மற்றவர்கள் கொண்டாடவிருந்த நேரத்தில், மனிதக்கழிவை அகற்றும் வேலை செய் யும் தாழ்த்தப்பட்டவர்களில் ஒருபகுதியினர் தில்லியில் திரண்டனர். அசாம் மாநிலத்தில் திப்ருகர் எனும் இடத்திலிருந்து நான்கு மாதங்களுக்குமுன் புறப்பட்ட இவர்கள் 3500 கிலோ மீட்டர் நடந்து, தில்லியை அடைந்தனர். இந்த நடைப்பயணம் “பீம் யாத்திரா” என்று அழைக்கப்பட்டது. மனிதக்கழிவை அகற்றும் பணி செய்யும் இத்தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் 30 மாநிலங்களில் 500 மாவட்டங்களில் 3500 கிலோ மீட்டர் தொலைவு நடந்து, 2016 ஏப்பிரல் 13 அன்று தில்லி ஜந்தர் மந்தரை அடைந் தனர்.

தலித் மக்களின் இப்பேரணியை “சபய் கர்மச்சாரி அன்டோலன்” (Safai Karmachari Andolan - SKA) அமைப்பு நடத்தியது. இந்தியாவில் துப்புரவுப் பணியில் ஈடுபடும்போது ஆண்டுதோறும் 22,000 பேர் மாண்டு போகின்றனர். எனவே இப்பேரணியில் “எங்களைக் கொல்லாதீர்” என்று முழக்கமிட்டனர். 2016 மார்ச்சு மாதத்தில் மாநிலங்கள் அவையில் தருண்விஜய் என்கிற பா.ச.க. உறுப்பினர் ஆண்டு தோறும் 22,000 துப்புரவுப் பணியாளர்கள் இறப்ப தாகக் கூறினார். பல சிறுவர்கள் தங்கள் கண்களில் நீர்மல்க, துக்கம் தொண்டையை அடைக்க, தங்கள் தந்தையரும் உறவினர்களும் துப்புரவுப் பணியின் போது நச்சு வாயுவால் தாக்குண்டு மடிந்த கொடிய நிகழ்ச்சிகளைக் கூறினர் என்று தருண்விஜய் தன் உரையில் குறிப் பிட்டார். இவ்வாறு அவர் பேசுவது கொடிய முரண் கூற்றாக இருக்கிறது. ஆளும் வர்க்கத்தினரால் இப்போது அம்பேத்கர் வானளாவிய உயர்ந்த தலைவர் என்று போற்றப்படுகிறார். ஆனால் அம்பேத்கர் எந்த மக்களுக் காக வாழ்ந்தாரோ - போராடினாரோ அம்மக்கள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான அடிப்படைத் தேவைகளை வழங்குமாறு மன்றாடும் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பரவி வரும் போலித்தனம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமையை ஒழித்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் தீண்டா மைக்கு ஊற்றுக்கண்ணாக உள்ள காரணிகள் மாற்றப்படவில்லை. தில்லிக்குப் பேரணியாகச் சென்ற மனிதக் கழிவை அகற்றும் பணி செய்வோர் தீண்டப் படாதவர்களுள், கொடிய தீண்டாமைக்கு இலாக்காகும் பிரிவினராக இருக்கின்றனர். அவர்கள் சாதி இந்துக் களுக்கு மட்டும் தீண்டப்படாதவர்களாக இல்லை; மற்ற தீண்டப்படாதவர்களுக்கும் தீண்டப்படா தவர்களாக இருக்கின்றனர்.

தீண்டாமை குறித்து காந்தியின் கருத்து பிற்போக் குத்தனமாக இருந்தபோதிலும், மனிதக் கழிவை அகற்றும் தலித்துகளின் உள்சாதியான ‘பங்கி’(Bhangi) தான் தலித்துகளின் பிரதிநிதி என்று கூறினார். மேலும் தன்னை ஒரு ‘பங்கி’ என்றும் கூறிக்கொண்டார். மனிதக்கழிவை அகற்றுவோர் குடியிருந்த பகுதியில் தங்கியதன் மூலம் அவர்கள்பால் தான் கொண்டுள்ள உண்மையான ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

மனிதனின் மாண்பை இழிவுபடுத்துகின்ற மனிதக் கழிவை அகற்றும் பணியைச் சட்டப்படி ஒழித்து, இப்பணியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது, காந்தி பெயரால் ஆட்சி நடத்தும் அரசின் முதன்மையான கடமையாகும். ஆனால் அரசு களோ இதற்காகக் குழுக்களையும் ஆணையங் களையும் அமைப்பதுடன் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகின்றன. இந்தக் குழுக்களும் ஆணை யங்களும் மனிதக்கழிவை அகற்றுவோரின் கொடிய அவலங்கள் குறித்துப் பக்கம் பக்கமாக அறிக்கைகளை அளிக்கின்றன. ஆனால் கடந்த 46 ஆண்டுகளில் இந்த இழிநிலையை ஒழித்திட உருப்படியாக ஏதும் செய்யவில்லை.ஞு

மனிதக்கழிவை மனிதர் அகற்றும் நிலையை ஒழிப்பது என்பதற்கான குரல் 1949 முதல் இன்று வரை ஒலித்து வருகிறது. 1949இல் பம்பாய் மாகாண அரசு, மனிதக்கழிவை அகற்றுவோரின் வாழ்நிலை யை ஆராய்வதற்கும், அந்நிலை அகற்றுவதற்குமான வழிமுறைகளைக் கூறுவதற்கும் என, வி.என்.பார்பே தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு அதன் அறிக்கையை 1952இல் அளித்தது. 1955இல் நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் அக்குழு வின் பரிந்துரைகளை எல்லா மாநில அரசுகளுக்கும் அனுப்பி, அவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது.

1957ஆம் ஆண்டு நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் மனிதக்கழிவை மனிதர் அகற்றும் இழி நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்தை வகுத்தளிப்பதற்காக என்.ஆர். மல்கானி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 1960இல் அறிக்கையை அளித்தது. நடுவண் அரசும் மாநில அரசுகளும் இணைந்து, படிப்படியான முறையில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை யை ஒழித்திட, ஒரு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டும் என்று மல்கானி குழு பரிந்துரைத்திருந் தது. இப்பரிந்துரைகள் மீதும் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

இச்சிக்கல் குறித்து ஆராய நடுவண் அரசு 1965 இல் மற்றொரு குழுவை அமைத்தது. வீடுகளில் உலர் கழிவறைகள் (Dry-latrine) இருப்பதால். அவற்றி லிருந்து மனிதக் கழிவுகளை அன்றாடம் அகற்றும் பணியைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வரு கின்றனர்; எனவே வீடுகளில் உலர் கழிவறைகளை ஒழிக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்தது. இப்பரிந்துரையும் குப்பைக் கூடையில் போடப்பட்டது. 1968-69இல் தேசியத் தொழிலாளர் ஆணையம், மனிதக்கழிவை மனிதர் அகற்றுவோர். அவர்களது பணிநிலைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகிவற்றை நெறிப்படுத்தும் வகையில் ஓர் ஒருங்கிணைந்த சட் டத்தை இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1969இல் காந்தியாரின் நூற்றாண்டின் போது உலர் கழிவறைகளைத் தண்ணீர் பீய்ச்சியடித்து மனிதக் கழிவை அகற்றும் கழிப்பறைகளாக மாற்றுவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தோல்வியுற்றது.

1980இல் நடுவண் அரசின் உள்துறை அமைச்ச கம், உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றவும், கையால் மலம் அகற்றுவோரையும் அவர் களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் வேறு நல்ல பணி களில் அமர்த்திடவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத் தியது. 1985இல் இத்திட்டம் உள்துறை அமைச்சகப் பொறுப்பிலிருந்து நலவாழ்வுத் துறைக்கு மாற்றப் பட்டது. 1991இல் திட்டக்குழு இத்திட்டத்தை இரண்டாகப் பிரித்தது. அதன்படி ஊரக மேம்பாடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்கள் உலர்கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும். நல்வாழ்வுத்துறையிடம் (1999 மே மாதம் இத்துறையின் பெயர் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது). மலம் அகற்றுவோரின் மறுவாழ்வு பொறுப்பு வழங்கப்பட்டது. 1992இல் நல்வாழ்வு அமைச்சகம் மலம் அகற்றுவோரை அப்பணியிலிருந்து விடுதலை செய்து மறுவாழ்வு அளிப்பதற்கென ஒரு தேசியத் திட்டத்தை அறிவித்தது. அதனால் ஒரு பயனும் உண்டாகவில்லை.

கொடிய புறக்கணிப்பு

அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 17, 21 மற்றும் 23 ஆகியவற்றின் அடிப்படையில் மனிதக்கழிவை மனிதர் அகற்றும் நிலையை ஒழித்திட முடியும். எடுத்துக்காட் டாக 1955இல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் (இதற்குமுன் இது 1955ஆம் ஆண்டைய தீண்டா மைக் குற்றங்கள் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப் பட்டது) பிரிவுகள் 7A மற்றும் 15A ஆகியவற்றுக்கு அரசமைப்புச் சட்டத்தின் விதி 17இன்படி செயல்படுத் தும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்படி மனிதக்கழி வை அகற்றுவோரை அப்பணியிலிருந்து விடுதலை செய்வதற்கும், மனிதக்கழிவை அகற்றுவோரைத் தொடர்ந்து அப்பணியில் ஈடுபடுத்துவோரைத் தண்டிப் பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

எனவே, இதன் பின்னணியில் மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மாற்று வேலைகளில் அமர்த் தல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் தடைச் சட்டம் என்பதை 1993இல் தனியாக இயற்றியிருக்கத் தேவையில்லை எனக் கருத இடமுண்டு. இச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் 1993 சூன் 5 அன்று ஒப்புதல் வழங்கினார். ஆனால் 1997 வரை இந்திய அரசிதழில் (Gazette) இச்சட்டம் வெளியிடப்படவில்லை. 2000 ஆண்டு வரையில் எந்தவொரு மாநில அரசும் இதை ஒரு சட்டமாக அறிவிக்கவில்லை.

மனிதக்கழிவை மனிதர் அகற்றும் நிலையை ஒழிப்பதில் தொடர்ந்து அக்கறை காட்டாமல் புறக்கணித்துவரும் அரசுகளின் போக்கால் எரிச் சலுற்ற மனிதக்கழிவை அகற்றும் வேலையைச் செய்வோரின் பிள்ளைகள், மனிதக்கழிவை மனிதர் அகற்றுவதை ஒழிக்கும் சங்கம் (SKA) என்பதை ஏற்படுத்தினர். 1994ஆம் ஆண்டு இச்சங்கமும், குடியுரிமைச் சங்கங்களாலும், மனிதக்கழிவை அகற்றுவோர் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரும் சேர்ந்து 2003 திசம்பரில் இதுகுறித்து ஒரு பொதுநல வழக்கை உச்சநீதி மன்றத்தில் தொடுத்தனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால் அரசுகள்மீது கண்டன நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பொதுநல வழக்கில் கோரியிருந்தனர். 12 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது மாநில அரசு கள் தெரிவித்த மறுப்புகளை இச்சங்கத்தினர் விரிவான புள்ளிவிவரங்களை நீதிமன்றத் தில் அளித்து அரசுகளின் பொய்யைத் தோலுரித் துக் காட்டினர். இறுதியில் 2014 மார்ச்சு 27 அன்று மனிதக்கழிவை அகற்றுவோர் சங்கத் தின் கோரிக்கைக்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது.

மனிதக்கழிவை அகற்றும் பணியின்போது (சாக் கடைக் கால்வாய் உள்ளிட்ட) இறக்கும் துப்புரவுப் பணி யாளர்களின் வாரிசுக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். 1993 முதல் துப்புரவுப் பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் ரூ.10 இலட்சம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ‘பீம் யாத்ரா’ வெளியிட்ட ஆவண அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள-துப்புர வுப் பணியின்போது இறந்த 1268 பேரில் 18 பேருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில், கழிவுகளைத் துப்புரவு செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடுப்பதற்கான மற்றொரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஆனால் நடப்பில் எதுவும் செயல்படுத் தப்படவில்லை. 1993ஆம் ஆண்டின் சட்டத்திற்குப் பின் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் நிலை இல்லை என்று அடாவடித்தனமாக மறுத்து வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப் பின் அறிக்கையின்படி, இந்திய அளவில் 7,94,000 பேர் மனிதக்கழிவை அகற்றும் பணியில் இருக்கின்ற னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மீறுவதில் அரசுத் துறைகளே முதலிடம் வகிக்கின்றன. தொடர் வண்டிகளில் உள்ள கழிப்ப றைகள் நவீனப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் பயணிகள் தொடர் வண்டி ஏற்பட்ட போது இருந்த நிலை யிலேயே அவை இன்றும் இருக்கின்றன (தொடர் வண்டி ஓட்டுநருக்குக்கூட கழிப்பறை வசதி இல்லை என்பது கூடுதலான செய்தி). எனவே தொடர் வண்டி யில் உள்ள கழிப்பறைகளிலிருந்து மனிதர்களின் மலம் தண்டவாளப் பகுதியில் கீழே விழுகிறது. இம் மலத்தைத் துப்புரவுப் பணியாளர்கள் அகற்றுகின்ற னர்.

தலைமை அமைச்சர் நரேந்திரமோடி “தூய்மை இந்தியா திட்டத்தின்” கீழ் 2019ஆம் ஆண்டிற்குள் மனிதக்கழிவை மனிதர் அகற்றும் நிலை ஒழிக்கப் படும் என்று ஆரவாரத்துடன் முழங்கினார். இந்தியா வில் ‘புல்லட்’ இரயில்கள் பறக்கும் என்று கூறுகிறார். ஆனால் தொடர் வண்டிகளில் தற்போதுள்ள கழிப் பறைகளை உயிரிக்கழிப்பறைகளாக (Bio-Toilets) மாற்றப்படுவதற்கான காலக்கெடு குறித்துக் கோடிட்டுக் கூடக் காட்டவில்லை.

ஈடுபாடு இல்லாமை ஏன்?

பீம் யாத்ராவின் முடிவில் மனிதக்கழிவை மனிதர் அகற்றல் ஒழிப்புச் சங்கம் எழுப்பிய வினாவுக்கு, நடுவண் அரசு 19.4.2016 அன்று அளித்த பதிலில், மனிதக்கழிவை அகற்றுவோர் எண்ணிக்கை குறித்து மாநில அரசுகளிடமிருந்து விவரங்களைப் பெற முடியாததால், நடுவண் அரசே இந்தக் கணக்கெடுப்பை நடத்த எண்ணி யிருப்பதாக கூறியுள்ளது. இவ்வாறு நடுவண் அரசு கூறுவதன் நோக்கம், இன்னும் ஒரு பத் தாண்டுகளுக்கு மனிதக்கழிவை அகற்றுவோர் நடத்தும் போராட்டத்தைத் தள்ளி வைக்கச் செய்வதற்கான முயற்சியே ஆகும். உலக அரங்கில் முதன்மையான ஆற்றலாக விளங்கிட விரும்பு கின்ற இந்த அரசு, மனிதக்கழிவை மனிதர் அகற்றும் களங்கத்துடன் இருக்க விரும்புவது ஏன்?

இது ஒன்றும் எளிதில் விடைகாண முடியாத வினா அன்று! இந்தியாவில் தேர்தல் களத்தின் அடிப்படையில் தான் அரசியல் முனைப்புகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையினராக உள்ள மனிதக்கழிவை அகற்று வோர், ஒவ்வொரு நகரத்திலும் பெரும்பான்மை யினராக உள்ள சமூகத்திடமிருந்து மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இழிந்த வாழ்நிலையில் தனியாக வாழ்கின்றனர். எனவே இவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் வாக்கு வங்கித் திட்டத்திலும் புறக்கணிக்கத்தக்க நிலையின ராகவே உள்ளனர். முன்பு தீண்டாமை தேசிய அளவில் ஒரு களங்கமாகக் கருதப்பட்டது போல, மனிதக் கழிவை அகற்றல் என்பது குறித்த விவாதம் எழும்போ தெல்லாம், அரசுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற் படுகிறது.

தீண்டாமையைப் போலவே மனிதக்கழிவை மனிதர் அகற்றுவது என்பதும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இவற்றை நீக்கிட முயன்றால், பெரும்பான்மை சமூகத்தின் மனக்கசப்பை எதிர்கொள்ள நேரிடும். மனிதக்கழிவை மனிதர் அகற்றும் நிலையை ஒழிப்பதில் ஆளும் வர்க்கம் ஆர்வம் காட்டாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதில் தலித்துகள் நாட்டமின்றி இருப்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. முன்னணியில் உள்ள தலித் இயக்கங்கள் மனிதக் கழிவை அகற்றும் இழிநிலையை ஒழித்திட வேண்டுமென்று தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

தலித் இயக்கத்தின் முதன்மையான உத்தி பிரதி நிதித்துவ அரசியல் என்பதாகவே இருந்துவருகிறது. தலித்துகள் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற வேண் டும் என்பதற்காக டாக்டர் அம்பேத்கர் போராடினார். அதில் வெற்றி பெற்ற பின், அரசு வேலைகளிலும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார், தலித் அரசியல்வாதிகள் தங்கள் சமூகத்தினரின் அரசியல் உரிமைகளைப் பேணிக் காப்பார்கள் என்றும், அரசு வேலைகளில் அமர்வோர் உழைக்கும் தலித் மக்களின் நலன்களுக்குக் காவல் அரணாகத் திகழ்வார் கள் என்றும் அம்பேத்கர் எதிர்பார்த்தார், உழைக்கும் தலித் வெகுமக்களின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் இடஒதுக்கீட்டு முறைக்கும் நேரடியான தொடர்பு இல்லை.

எனவே இடஒதுக்கீடு என்பது மட்டுமே தலித் இயக்கத்தின் ஒரே குறிக்கோளானது. எனவே உழைக்கும் தலித் மக்களின் பிரச்சனைகளி லிருந்து இது விலகி நிற்கிறது. கடந்த எழுபது ஆண்டுகளில் நடுத்தர வர்க்கமாக உயர்ந்த தலித்துகள் வெகுமக்களாக - உழைப்பாளிகளாக உள்ள தலித் மக்களிடமிருந்து தங்களை முற்றிலுமாக அந்நியப்படுத்திக் கொண்டனர்.

ஆகவேதான், பீம் யாத்ராவில் அம்பேத்கர் எழுச்சியூட்டும் மாபெரும் தலைவராக முன்னிறுத் தப்பட்ட போதிலும், பீம் யாத்ராவில் “அம்பேத்கரியவாதிகள்” பங்கேற்கவில்லை. முற்போக்குச் சிந்தனை கொண்ட சிலர் தனிப்பட்ட முறையில் மனிதக்கழிவை மனிதர் அகற்றுவதை ஒழிப்பதற்கான பீம் யாத்ராவில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால் தங்களை அம்பேத்கரிய வாதிகள் என்று பறை சாற்றிக் கொள்வோர் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

(நன்றி: Economic and Political Weekly, 2016 மே 7. தமிழாக்கம் : க. முகிலன்)