Ambedkar

மதப் பிரச்சினை மீதான இடர்ப்பாடுகளுக்கு முக்கிய காரணம், பெரும்பான்மை ஆட்சி புனிதமானது என்றும் எப்படியாவது அது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்துக்கள் வலியுறுத்துவதுதான். வேறு ஒரு ஆட்சிமுறை இருப்பதை இந்துக்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. தனி நபர்கள் மற்றும் தேசங்களுக்கிடையே எழும் முக்கிய தகராறுகள் அந்த முறையால் தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருமித்து முடிவு செய்வது என்பதுதான் அந்த முறை. இதனைப் பரிசீலிக்கும் சிரமத்தை இந்து ஒருவர் எடுத்துக் கொண்டால், இது ஒரு கற்பனையல்ல, உண்மையானதே என்பதைத் தெரிந்து கொள்வார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை வகுப்பினருக்குப் பாதுகாப்பை வழங்கத் தயாரில்லை என்றால், ஒருமனதான முடிவு என்ற விதியை ஏற்றுக் கொள்வீரா என்று ஒரு இந்துவைக் கேளுங்கள். கெட்டவாய்ப்பாக, இவ்விரண்டில் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதே தெரியவரும்.

பெரும்பான்மை ஆட்சி என்பதைப் பொறுத்தவரை, எவ்விதக் கட்டுப்பாட்டையும் இந்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அவர்கள் விரும்பும் பெரும்பான்மை, வரம்பற்ற பெரும்பான்மை; ஓரளவு இணைந்த பெரும்பான்மையுடன் அவர்கள் நிறைவடைய மாட்டார்கள். வரம்பற்ற பெரும்பான்மை ஆட்சியை வற்புறுத்துவது, அரசியல் சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயமான யோசனையா? வரையறையற்ற பெரும்பான்மை ஆட்சி என்று இந்துக்கள் வலியுறுத்திக் கொண்டிருப்பதற்கு, அமெரிக்க அய்க்கிய நாடுகளின் அரசியல் அரசமைப்புச் சட்டம்கூட ஆதரவாக இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

பெரும்பான்மை ஆட்சி என்பது ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை; ஒரு விதியாகப் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. ஏன் அவ்வாறு பொறுத்துக் கொள்ளப்படுகிறது என்பதையும் கூறி விடுகிறேன். அதற்கு இரு காரணங்கள் உண்டு : (1) பெரும்பான்மை என்பது எப்பொழுதும் அரசியல் பெரும்பான்மை என்பதாலும், (2) சிறுபான்மையின் கருத்தை அரசியல் பெரும்பான்மையின் முடிவு பெருமளவு ஏற்று உட்கொள்வதாலும், அந்த முடிவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதில் சிறுபான்மையினர் அக்கறை கொள்வதில்லை.

இந்தியாவிலோ பெரும்பான்மை என்பது, அரசியல் ரீதியாக உருவாகும் பெரும்பான்மை அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை பிறவியிலேயே அமைவது; உருவாக்கப்பட்டதல்ல. வகுப்புவாத வாரியான பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. அரசியல் பெரும்பான்மை என்பது, ஒரே நிலையானதோ நிரந்தரமானதோ அல்ல. அப்பெரும்பான்மை எப்பொழுதும் உருவாக்கப்படுகிறது, மாற்றம் பெறுகிறது, மீண்டும் உருவாகிறது. ஆனால், ஒரு வகுப்புவாதப் பெரும்பான்மை நிரந்தரமானது. இதை அழிக்கத்தான் முடியுமே தவிர அதனைத் திருத்த முடியாது. அரசியல் பெரும்பான்மையே ஆட்சேபனைக்குரியதாக இருக்கையில், வகுப்புவாரிப் பெரும்பான்மைக்கான ஆட்சேபணைகள் எப்படித் தவிர்க்க முடியாதவையாகும்?

அரசியலில், பெரும்பான்மை ஆட்சி என்ற கோட்பாட்டைக் கைவிடுவதால், வாழ்க்கையின் மற்ற துறைகளில் இந்துக்களை அது அதிகம் பாதிக்காது. சமூக வாழ்வில் அவர்கள் பெரும்பான்மையினராகவே இருப்பர். வியாபாரத்திலும் தொழிலிலும் அவர்களுக்கு இப்போதுள்ள ஏகபோக உரிமைகள் இருந்து வரும். சொத்துரிமையிலும் அவர்களது ஏகபோகம் தொடரும். ஒருமித்த தீர்மானம் என்கிற கோட்பாட்டை இந்துக்கள் ஏற்க வேண்டும் என்பது அல்ல. பெரும்பான்மைக் கோட்பாட்டைக் கைவிடும்படியும் அவர்களைக் கேட்டுக் கொள்வதும் என் நோக்கம் அன்று. அவர்களை நான் கேட்பதெல்லாம் ஒரு ஏறத்தாழ பெரும்பான்மையோடு திருப்தியடையுங்கள் என்பதுதான். இதை அவர்கள் ஏற்பது அவ்வளவு கடினமா?

இத்தகைய தியாகம் எதுவும் செய்யாமல், இந்திய சுதந்திரத்திற்குச் சிறுபான்மையினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ள இந்துப் பெரும்பான்மைக்கு எவ்வித நியாயமும் கிடையாது. இந்தப் பொய்ப் பிரசாரம் பயனளிக்காது. ஏனெனில், சிறுபான்மையினர் அப்படி ஏதும் செய்யவில்லை. அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அள ிக்கப்பட்டால், சுதந்திரத்தையும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய இடர்களையும் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். சிறுபான்மையினரின் இந்த நல்லெண்ணத்தை நன்றியுடன் பார்க்க வேண்டும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 1 பக்கம் : 376 - 378)

Pin It