ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் இந்தியா வருவ தற்குமுன், இந்தியா என்பது ஒரே நாடாக - ஒரே நிர்வாகத்தின்கீழ் வரலாற்றில் ஒருபோதும் இருந்த தில்லை, 1800இல்தான் இப்போது தனிநாடுகளாக உள்ள பாக்கித்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியத் துணைக் கண்டம் ஒரே நாடாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட் டுக்குள் வந்தது.

அதன்பின், மக்களை அடக்கி ஆள்வதற்கும், சுரண்டு வதற்கும் ஏற்றதான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உருவாக்கியது. இதில் பணியாற்றுவதற்கான ஊழியர்களை உருவாக்கு வதற்காக ஆங்கில மொழிவழிக் கல்வித் திட்டத்தை 1835இல் தொடங்கியது. அரசின் பல்துறைச் செய லாளர்கள், மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரப் பதவிகளில் ஆங்கிலேயர் மட்டுமே இருந்தனர்.

modi IAS 450இந்தியாவில் காலங்காலமாகக் கல்வி கற்கும் உரிமை பெற்றிருந்த பார்ப்பன - மேல் சாதியினர், “இந்தியாவில் அரசு உத்தியோகங்களை இந்தியர் மயமாக்கு” என்று குரல் எழுப்பினா. 1885இல் தொடங் கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் முதல் கோரிக்கை முழக்கமாக இதுவே இருந்தது. பிரித்தானிய அரசு இக்கோரிக்கையை ஏற்றது.

பார்ப்பன-மேல் சாதிக் குடும்பங்களின் பிள்ளைகள் இலண்டனில் இந்திய சிவில் சர்வீஸ் (ICS) படிப்பை முடித்து உயர் அதிகாரிகளாகப் பதவிகளில் அமர்ந்தனர். இந்த உயர் அதிகார வர்க்கம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் நடந்த அடக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் துணை நின்றது.

சுதந்தரம் பெற்றபின் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் இந்திய சிவில் சர்வீஸ் (ICS) பதவிகள், இனி இந்திய ஆட்சிப் பணி (IAS) என்று அழைக்கப்படும் என்று அறிவித் தார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் இந்திய ஆட்சிப்பணி நிலையிலான அதிகாரிகளை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமை வேண்டும் என்று, வல்லபாய் பட்டேல் கூட்டிய முதல மைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார். ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல்பணி (IPS), இந்திய அயலுறவுப் பணி (IFS) போன்ற உயர் அதிகாரப் பதவிகளுக்கான ஆட்களை இந்திய அரசே தேர்வு செய்து பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக முதல் தலைமுறையாகப் படித்தக் குடும்பங்களில் குழந்தை களிடம் மருத்துவராக வேண்டும்; ஐ.ஏ.எஸ்.ஆக வேண்டும் என்ற கனவு ஊட்டி வளர்க்கப்படுகிறது. நீட் தேர்வு முறை மூலம் கிராமப்புற - சிறுநகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைப்பட்டு விட்டன. அதேபோன்று பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் குடும்பங்களின் இளைஞர் களின் ஐ.ஏ.எஸ். கனவைத்தகர்க்கும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவச் சிந்தனை கொண்ட இளைஞர்களை இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) ஆகிய உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தும் நோக்கத்துடனும் நரேந்திரமோடி தலைமை யிலான இந்துத்துவ நடுவண் அரசு ஒரு புதிய நடைமுறையைப் புகுத்த முயல்கிறது.

நடுவண் அரசில் 24 வகையான முதல்நிலைப் பணிகள் (GROUP-A) உள்ளன. இந்த அரசுப் பணிகள், குடிமைப்பணிகள் (Civil Services) என்று அழைக்கப்படு கின்றன. இப்பணியிடங்கள் மத்திய அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் 600 முதல் 1000 வரையில் இப்பணிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. தொடக்க நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடைபெறு கிறது. ஆண்டுதோறும் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

தொடக்கநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வை எழுத முடியும். முதன்மைத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். என்கிற பணிப்பிரிவு ஒதுக்கப்படுகிறது. பணிப் பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் போது, தேர்வாளர் அவருடைய விண்ணப்பத்தில் பணிப்பிரிவு குறித்து தெரிவித்திருந்த விருப்பமும் கருத்தில் கொள்ளப்படு கிறது. குடிமைப் பணித்தேர்வில் அரசியல் தலை யீடோ, உயர் அதிகாரிகள் தலையீடோ இருப்ப தில்லை. முதன்மைத் தேர்வுத் தாளைத் திருத்து பவருக்கு அத்தேர்வாளர் யார் என்று தெரியாது. நேர்முகத் தேர்வை நடத்து பவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் தேர்வாளரின் பெயரே தெரியவரும். மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வு முறை குறித்து இதுவரையில் எந்தக் குற்றச் சாட்டும் எழுந்ததில்லை. இந்தியாவின் குடிமைப் பணித் தேர்வு, உலகின் மிகக் கடினமான தேர்வு களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

குடிமைப் பணித்தேர்வின் மதிப்பெண் அடிப் படையில் மட்டுமே, பணிப்பிரிவு ஒதுக்கப்படும் போதே, எந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்கிற ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக் காடு, பட்டியல் குலத்தினருக்கு 15 விழுக்காடு, பழங்குடியினர்க்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்பின் இவர்களுக்கு மிசௌரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக இயல் பயிற்சி நிறுவனத்தில் 15 வாரங் கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஆதாரப் பயிற்சி (Foundation Course) எனப்படுகிறது. நீண்ட காலமாக இதுவே நடைமுறை. இது இப்போது மாற்றப்படுகிறது.

நடுவண் அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 17.5.2018 அன்று எல்லா அமைச்சகங் களுக்கும் ஒரு மடல் அனுப்பியது. அதில், “பிரதமர் அலுவலகம் குடிமைப் பணித் தேர்வின் மதிப்பெண் மற்றும் ஆதாரப் பயிற்சியின் மதிப்பெண் ஆகியவற் றின் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வாளர் களுக்குப் பணி ஒதுக்கீடும், மாநில ஒதுக்கீடும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது; இதுகுறித்து உங்கள் கருத்தை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்; இந்த ஆண்டு முதலே இப்புதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் முன்மொழிந்துள்ள இத்திட்டம் அரசியல் சட்டத்துக்கும் சனநாயக நெறிமுறைக்கும், உண்மையான திறமையுள்ளவர்களைக் கண்டறிவ தற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். இந்துத்துவச் சிந்தனை கொண்டவர்களை-ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தோடு தொடர்புடையவர்களை இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) போன்ற அதிகாரம் கொண்ட பணிப்பிரிவுகளில் அமர்த்தவும், பிற்படுத்தப் பட்ட, பட்டியல் குல, பழங்குடி வகுப்புகளின் இளைஞர் களுக்கு முதல்நிலைப் பணிகளில் (Group-A) அதிகாரம் இல்லாத அல்லது அதிகாரம் குறைவான பணிகளை ஒதுக்கவும் இத்திட்டத்தை நரேந்திர மோடியின் அலு வலகம் தீட்டியிருக்கிறது. 2019இல் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே சூதான இத்திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டுமென்று நரேந்திர மோடி ஆட்சி துடிக்கிறது.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 315 முதல் 323 வரை மத்திய மற்றும் மாநிலங்களுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றிக் கூறுகின்றன. “மத்திய மற்றும் மாநிலங்களுக் கான பணிகளுக்குத் தேர்வு நடத்துவது என்பது, சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநிலங்களுக் கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 320(1) திட்டவட்டமாகக் கூறுகிறது. எனவே குடிமைப்பணிக்கான தேர்வு நடத்தும் பொறுப்பு முற்றிலும் தேர்வாணையத்தைச் சார்ந்ததாகும். தற்போது பிரதமர் அலுவலக முன்மொழிவில் குடிமைப்பணித் தேர்ச்சிக்கு ஆதாராப் பயிற்சி நிறுவனத் தேர்வின் மதிப்பெண்ணையும் சேர்த் திருப்பது பிரிவு 320(1)க்கு எதிரானதாகும்.

தேர்வாணையத்தின் தலைவரும் உறுப்பினர் களும், அரசமைப்புச் சட்டப்படி (Constitutional Posts) நியமிக்கப்படுகின்றனர். சட்டப்பிரிவு 316 அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்குகிறது. பிரதமர் நினைத்தாலும் அவர்களின் பணிக்காலம் முடிவதற்கு முன்பாக அவர் களைப் பணியிலிருந்து நீக்க முடியாது. அவர்கள் பணிக்காலம் முடிந்தபின், எந்தவொரு அரசுப் பதவி யையும் வகிக்கக்கூடாது என்று 319ஆவது சட்டப்பிரிவு கூறுகிறது. இச்சட்டப் பிரிவுகளின் நோக்கம் தேர்வா ணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் எத்த கைய அரசியல் தலையீட்டையும் புறக்கணித்துவிட்டு, சுதந்தரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

முசௌரியில் உள்ள ஆதாரப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், பயிற்சி அளிப்பவர்களும் தேர்வாணை யத்தினரைப் போல் அரசமைப்புச் சட்டப்படி பணி நியமனம் பெற்றவர்கள் அல்லர், இவர்கள் அயல்பணி முறையில் (Deputation) அரசுப் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் ஆவர். ஆதாரப் பயிற்சி நிறுவனத்தில் அயல்பணி முறையில் பணியாற்றும் இவர்களை நடுவண் அரசு நினைத்த போதில் பணி மாற்றம் செய்ய முடியும். இவர்கள் ஆட்சி யாளர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பரிந் துரைக்கும் பயிற்சியாளர்களுக்குத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான வாய்ப்புண்டு. ஆதாரப் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய பின், பதவி உயர்வு, அதிகாரம் மிக்க பதவி அளிக்கப்படும் என்கிற உறுதிப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட பயிற்சி யாளர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் அளிப்பார்கள். பெருந்தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்குவார்கள்.

2014இல் பா.ச.க. தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சியை அமைத்தது முதல் நடுவண் அரசில் அதிகாரங்களைக் குவிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசு நிறுவனங்களை, பல்கலைக்கழகங்களை இந்துத்துவமயமாக்கி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச - சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறார். உச்சநீதிமன்றத்திலும் நடுவண் அரசு தலையிடுகிறது என்றும், இதற்காக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பயன்படுத்துகிறது என்றும் 2018 சனவரி 12 அன்று உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினர். இத்த கைய பாசிச நரேந்திர மோடி, மத்திய அரசுப் பணி யாளர் தேர்வாணையம் அரசமைப்புச் சட்டப் பாது காப்புடன் சுதந்தரமாகச் செயல்படுவதைக் குலைக் கவும், இந்துத்துவச் சிந்தனை கொண்டவர்களை உயர் அதிகாரப் பணிகளில் அமர்த்தவும் இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளார்.

15 வார ஆதாரப் பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பே, தேர்வாணையம் நடத்திய தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்படு கிறது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கான மொத்த இடஒதுக்கீடு 49.5 விழுக்காடு போக மீதியுள்ள பொதுப் பிரிவினர்க் கான 50.5. விழுக்காடு இடங்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. அந்நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட - பட்டியல் குல - பழங்குடி இளைஞர்களுக்குப் பொதுப் பிரிவில் (Open Competition) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிப்பிரிவுகள் கிடைக்கும். ஆனால், ஆதாரப் பயிற்சித் தேர்வின் மதிப்பெண்ணையும் சேர்த்த பின்னரே பணிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற பிரதமர் அலுவலக முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல - பழங்குடி இளைஞர் கள், பொதுப்பிரிவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிப் பிரிவுகளைப் பெற முடியாதவாறு, பயிற்சித் தேர்வில் அவர்களுக்குக் குறைந்த மதிப்பெண் வழங் கப்படும். மேலும் பார்ப்பன - மேல்சாதி பயிற்சியாளர் களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்குவதன் மூலம் பொதுப்பிரிவில் உள்ள 50.5 விழுக்காடு இடங்களை யும் இவர்களே கைப்பற்றிக் கொள்ளும் நிலை ஏற்படும். பொதுப் பிரிவில் உரிமை மறுக்கப்பட்டு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்குள் மட்டுமே முடக்கப்படும் நிலை உண்டாகும்.

இது பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுக்குப் பேரிடியாக அமையும். பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடியினருக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்களின் விகிதாசாரப்படி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தொகையில் 57 விழுக்காட்டினராக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் பரிந்துரைப்படி 27 விழுக்காடு தான் ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அரச மைப்புச் சட்டத்தில் பிரிவு 16(4)இல் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காகா கலேல்கர் என்பவர் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. 1955இல் கலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. பார்ப்பன நேரு அதை நடைமுறைப்படுத்தாமல் 1961 மே மாதம் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி யின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து 1978இல் நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற்றே தீருவது என்ற குறிக்கோளுடன் தில்லிக்குச் சென்றார். பீகார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராம் அவதேஷ் சிங் அவர்களுடன் இணைந்து, தில்லியிலும் வடஇந்திய மாநிலங்களிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள், போராட்டங்களின் விளைவாக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் வி.பி. சிங் 1990 ஆகத்து மாதம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினார். இது 1994இல் தான் நடப்புக்கு வந்தது. ஆயினும் 2008இல் நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தபடி, பிற்படுத்தப் பட்டோர் முதல்நிலைப் பணிகளில் 5.4 விழுக்காடும் இரண்டாம் நிலைப் பதவிகளில் 4 விழுக்காடும் மட்டுமே உள்ளனர். எனவே பிரதமர் அலுவலகத்தின் புதுத் திட்டம் பிற்படுத்தப்பட்டவர்கள் உயர் அதிகாரம் கொண்ட பதவிகளைப் பெறவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியே ஆகும். நிர்வாக அதிகாரப் பதவிகளைக் கைப்பற்று வதில் பார்ப்பன - மேல்சாதியினர், பிற்படுத்தப்பட்டவர் களையே தங்கள் போட்டியாளர்களாகக் கருதுகின்றனர்.

குடிமைப் பணித் தேர்வைத் தமிழில் எழுதி தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் கிராமப்புறங்களின் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல குடும்பங்களின் பிள்ளைகளாவர். இரண்டு, மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து - ஒன்றிரண்டு முறை தோல்வியுற்றபின் தேர்வில் வெற்றி பெறு கின்றனர். இவர்களைப் போல் இந்தி அல்லாத மற்ற தாய்மொழிகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வர்கள் முசௌரியில், பயிற்சிக் காலத்தில் இந்தி தெரியாத காரணத்தாலும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் இயலாததாலும் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நடத்தப்படும் தேர்வில் இவர்களால் நல்ல மதிப்பெண் பெற முடியாது; அல்லது இவர்களுக்குக் குறைந்த மதிப்பெண் வேண்டு மென்றே வழங்கப்படும். தேர்வாணையத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் பயிற்சி நிறுவனத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறு வதால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரப் பணிப்பிரிவுகள் இவர்களுக்குக் கிடைக்காமல் போகும். இது இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

நாடாளுமன்ற சனநாயக ஆட்சி முறையில் அமைச்சரவை தான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திராகாந்தி காலம் முதல் பிரதமர் அலுவலகம் அமைச்சரவையை விட அதிக அதிகாரம் கொண்டதாகச் செயல்பட்டு வருகிறது. இப்போக்கு நரேந்திரமோடி ஆட்சியில் உச்சநிலையை எட்டியுள்ளது. அதனால்தான் குடிமைப்பணித் தேர்வு முறையை அரசமைப்புச் சட்ட நெறிமுறைக்கு எதிராக மாற்றிட பிரதமர் அலுவலகம் முனைந்துள்ளது. பிரதமர் அலு வலகத்தின் இந்த முன்மொழிவைத் திரும்பப் பெறவேண்டும் என்று மக்களாட்சி நெறி முறை யில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தின் முன்மொழிவுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நடுவண் அரசு 10.6.2018 அன்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், நடுவண் அரசின் பத்து அமைச்சகங்களில் இணைச் செயலாளர் நிலையிலான பத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இம் கூறப்பட் டுள்ளது. தனியார் நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறு வனங்கள், சர்வதேச மற்றும் பன்னாட்டு நிறுவனங் கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் போன்ற வற்றில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் 3 ஆண்டுமுதல் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இணைச் செயலாளராக நியமனம் பெறுவதற்காக விண் ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். ஒதுக்கீடு பெற்று சார்பு செயலாளர் (துணை ஆட்சியர்) துணைச் செயலாளர் பதவிகளில் 15 ஆண்டுகள் பணிசெய்த அனுபவம் பெற்ற பிறகே இணைச் செய லாளர் என்ற நிலையை அடைகின்றனர். இந்தியாவில் இருக்கின்ற 5000 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 500 பேர் இணைச் செயலாளர் நிலையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மோடி அரசு விரும்புகின்ற கல்வித்தகுதியும் அனுபவமும் கொண்ட பத்து பேர் இல்லையா? வெளியிலிருந்து பத்துப் பேரை இணைச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்று மோடி அரசு விரும்புவதன் நோக்கம், தனக்கு நெருக்கமான இந்துத்துவ-ஆர்.எஸ்.எஸ். ஆட்களை உயர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே ஆகும்.

நடுவண் அரசிலும் மாநில அரசுகளிலும் குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரதமராகவோ, முதலமைச்சர்களாகவோ, அமைச் சர்களாகவோ ஆட்சியில் இருந்தாலும் அவர் களின் பதவிக்காலம் அய்ந்தாண்டுகள் மட்டுமே ஆகும். ஆனால் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை இயக்குபவர்களாக இருக்கின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி களின் பணிக்காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டு களாகும். எனவே உண்மையான செயல்படு அதிகாரம் இவர்களிடம்தான் இருக்கிறது. இவர் களில் 77 விழுக்காட்டினர் பார்ப்பனர்களாகவும் பிற மேல்சாதியினராகவும் இன்று உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கம் பல வகையிலும் சீரழிந்துவிட்டது. இந் நிலையை மாற்றியமைக்க முனையாமல், குடிமைப் பணித் தேர்வு முறையை மாற்றியமைப்பதன் மூலம் இந்துத்துவ விசுவாசிகளை உயர் அதிகார பீடத்தில் அமர்த்த முயல்கிறது, மோடி அரசு இது இந்திய குடிமைப் பணித் திறமைக்கே இழுக்கு சேர்பதாகும்.

சனநாயக நெறிமுறைக்கும், சமூக நீதிக்கும், மதச் சார்பின்மைக்கும், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் எதிரான பிரதமர் அலுவலகத்தின் முன்மொழி நடுவண் அரசு கைவிடும் வரையில் இவற்றை எதிர்த்துப் பல தளங்களிலும் போராடுவோம்.