இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்னும் கருத்து வரலாற்றில் மிக அண்மையில் உருவாக் கப்பட்ட ஒன்றாகும். மேலை நாட்டவர் எழுதியவற்றில் தான் இக்கருத்து முதன்முதலாக இடம்பெற்றுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரான்காய்ஸ் பெர்னியர் (1620-1688) இந்தியாவில் பரந்த அளவில் பயணம் செய்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தொடக்க கால அய்ரோப்பியர்களுள் இவரும் ஒருவர். பிரான்காய்ஸ் பெர்னியர் தான் முதன்முதலாக இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்ட மக்கள் என்று பதிவு செய்துள்ளார்.

babri masjid 60018ஆம் நூற்றாண்டில் செருமானிய தத்துவ இயலாளரான ஜோகன் காட்பிரைடு வான் ஹெர்டர் (1744-1803) என்பவர் தான் முதன்முதலாக இந்தியா வைப் பெருமை மிகுந்த நாடாகப் புகழ்ந்து எழுதியவர். அவர், இந்துக்கள், ‘மனித குலத்திலேயே மென்மை யான இயல்புடைய பிரிவினர்’ என்றும், சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்றும் எழுதினார். புகழ் பெற்ற தத்துவ மேதையான இம்மானுவேல் காண்ட் (1724-1804) இந்துக்கள், “மற்ற மதத்தவரை வெறுப்ப தில்லை; அதே சமயம் தங்கள் நம்பிக்கைகள் சரி என்று கருதுபவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கீழை இயலாளர்கள் (Orientalists) பலரும் இதேபோன்ற கருத்துக்கு முதன்மை தந்துள்ளனர். சர்.வில்லியம் ஜோன்ஸ், “இந்துக்கள் விவிலியத்தில் (பைபிள்) உள்ள கருத்துகளை உண்மை என்று ஏற்பார்கள்; ஆனால் அவை அவர்களுடைய சாத்திரங்களில் உள்ள கருத்து களுடன் ஒத்திருப்பதாகக் கூறுவார்கள்” என்று எழுதியுள்ளார்.

19ஆம் நூற்றாண்டில் சில இந்தியர்களும் இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்று பேசத் தொடங்கினர். அதனால் அவர்கள் மற்ற மதங்களை விட இந்துமதமே உயர்ந்தது என்று கூறினர்.

தயானந்த சரசுவதி (1824-1883) 1875ஆம் ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவினார். ஆரிய சமாஜத்தின் கொள்கை அனைவருக்கும் பொதுவான விழுமியங்களைக் கொண்ட மதத்தை அடிப்படையாகக் கொண்டது; அத்துடன் மற்ற சமயக் கோட்பாடுகள்மீது வெறுப்பு உணர்ச்சி கொண்டிராதது என்று தயானந்த சரசுவதி கூறினார். ஆனால் மற்ற எல்லா மதங் களையும் கடுமையாக எதிர்த்தார். முகமது நபியை, “மக்களைத் தன்வயப்படுத்துவதற்காகத் தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக் கொண்ட ஒரு ஏமாற்றுக்காரர்” என்று கூறினார். ஏசுவை, “அறியாமை கொண்ட ஒரு சாதாரணமான ஆள்; ஏசு கற்றறிந்த வரோ ஒரு யோகியோ அல்லர்” என்று தயானந்த சரசுவதி கூறியிருக்கிறார்.

தயானந்த சரசுவதியின் சமகாலத்தவரான இராம கிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) எல்லா மதங்களும் சமம் என்று பேசியிருந்தாலும், இந்து மதம் மட்டுமே சனாதன தர்மத்தைக் கொண்டிருக்கிறது என்று சொன் னார். இராமகிருட்டிணரின் சீடரான விவேகானந்தர் (1863-1904) இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்பதை வலியுறுத்தினார். “ஞானி ஒன்றைப் பற்றிப் பல வழிகளில் பேசுவான்” (The wise speak of what is one in many ways) என்கிற ரிக் வேதத்தின் வரியை மேற்கோள் காட்டி, “இந்தியா மட்டுமே சகிப்புத் தன்மை கொண்ட நாடு” என்று கூறினார், விவேகானந்தர்.

ஆனால் விவேகானந்தர் இதற்கு நேர் எதிரான தன்மையிலும் நிறைய பேசியிருக்கிறார். “பசிபிக் முதல் அட்லாண்டிக் வரையிலான நாடுகளில் அய்நூறு ஆண்டுகள் குருதி ஆறாகப் பாய்ந்தது; இதற்குக் காரணம் இசுலாமிய மதமே ஆகும்” என்று விவே கானந்தர் சொன்னார். ஆனால் விவேகானந்தர் ரிக் வேதத்திலிருந்து எடுத்துக்கூறிய வரியை மட்டும் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அடிக்கடி மேற்கோளாகச் சுட்டிக்காட்டுகின்றனர் - அந்த வரிக்கான உண்மையான பொருளை நம் சமூகம் இழந்துவிட்டுள்ள போதிலும்! பாலகங்காதர திலகரும் (1856-1920) விவேகானந்தர் எடுத்தாண்ட ரிக் வேத வரியைத் தன்னுடைய உரைகளில் பயன்படுத்தினார்; இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் தீவிரமான இந்துமத உணர்ச்சியை வளர்த்தெடுத்தார்.

முசுலீம்களை வெறுப்பவரான எம்.எஸ். கோல்வால்கர் கூட (1906-1973), உலகிலேயே இந்துக்கள் தான் மிகுதியான சகிப்புத்தன்மை உடைய மக்கள் என்று பேசினார். இது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும். ஏனெனில், முசுலீம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் இந்திய நாட்டுக்குப் பேராபத்தான வர்கள் என்று கூறியவர் கோல்வால்கர். தயானந்தர் முதல் கோல்வால்கர் வரை, அவர்கள் கூறிய சகிப்புத் தன்மை என்பது, இந்துக்களின் வஞ்சகத்தையும், மற்ற மதங்களுக்குரிய உரிமையை மறுக்கும் ஆதிக்கச் சிந்தனையையும் மூடி மறைப்பதற்கான ஒரு மூடு திரையாகவே பயன்படுத்தப்பட்டது. இவர்களைப் போல் அல்லாமல், இந்துக்கள்-முசுலீம்கள் ஒற்றுமைக் காகவே வாழ்ந்து மடிந்த மகாத்மா காந்தி, இருக்கின்ற மதங்களிலேயே இந்து மதம் அதிக சகிப்புத்தன்மை உடையது என்று உளமார உணர்ந்தார். ஆயினும் அனைத்துச் சிந்தனைகளுக்கும் இடமளிப்பது இந்து மதம் என்கிற பெருமித உணர்ச்சிக்குக் காந்தி அதிக அழுத்தமும் முதன்மையும் தந்ததால், இந்துமதம் மற்றவர்களை விலக்குவதாக இருந்தது.

இந்துமதம் சகிப்புத்தன்மை கொண்டது என்கிற கருத்துக்குக் கற்றறிந்த அறிஞர்களிடையே இரு வேறுபட்ட எதிர்வினைகள் எழுந்தன. நிரத் சி. சவுத்திரி போன்ற அறிஞர்கள் இந்தியாவில் மதசகிப்புத் தன்மை என்கிற சிந்தனை அடியோடு இல்லை என்றனர். “இந்தியாவில் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற மனப்போக்கும் சகிப்புத் தன்மையும் இருப்பது உண்மையானால், மக்களிடையே ஆழமான அய்யுறவும் பகையும் இருப்பது ஏன்?” என்று சவுத்திரி வினவினார். அதேசமயம் சில வரலாற்றியலாளர் களும் சமூக ஆய்வாளர்களும்-குறிப்பாக அமர்த்தியா சென் போன்றவர்கள் பண்டைய இந்தியாவில் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் மத சகிப்புத் தன்மையும் நிலவியதாகப் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்தியாவில் இருந்த பல்வேறு சமயப் பிரிவுகள் தமக்கிடையே ஒத்திசைவாக இயங்கியதற்கும், ஒன்றன் கருத்தை மற்றது ஏற்றுக் கொண்டதற்கும் அறிஞர்கள் பல சான்றுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். பிராமணி யத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மதத்தை நிறுவிய புத்தர், ஆறாம் நூற்றாண்டில் விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். 11ஆம் நூற்றாண்டில் கிஷ்மேந்தரா எழுதிய “தசவதச்சத்திரா”விலும், 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவா எழுதிய “கீதாகோவிந்தா” விலும், மற்றும் பல புராணங்களிலும், கல்வெட்டு களிலும் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்பதற் கான சான்றுகள் உள்ளன. 11ஆம் நூற்றாண்டில் அல்பெருனியும் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் புத்தரைப் பற்றி, புராணங்களில் திருடன் என்றும் நாத்திகன் என்றும் தூற்றப்பட்டிருக் கிறார். புத்த அவதாரத்தை எதிர்ப்பதற்காகவே சிவன் (ஆதி) சங்கரன் வடிவத்தில் இப்புவியில் தோன்றி னான் என்று நம்பப்படுகிறது. ஆனால் 14ஆம் நூற்றாண் டில் வைணவ நூலில் சங்கரன் முறைதவறிப் பிறந்த பிள்ளை என்று இகழப்பட்டுள்ளது. பாகவத புராணத்தில் சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான அதிநாதாவை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கிறது. ஏசு கிறிஸ்துவும், இஸ்லாம் மதத்தில் ஒரு பிரிவை ஏற்படுத்திய இமாம் ஷாகியும், அக்பரும்கூட விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்பட்டுள்ளனர். குர்-ஆன் அதர்வ வேதத்தின் ஒரு பகுதியே என்று கூட எழுதப்பட்டது.

பிராமணியம் மற்ற மதப் பிரிவுகளுக்கும் இட மளித்தது என்பதற்கான சான்றுகளாக மேலே குறிப் பிட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்வதாயினும், இந்தியா மதச்சகிப்புத் தன்மை கொண்டதாக இருந்தது என்னும் கருத்தை மறுப்பதற்கும் எண்ணற்ற சான்று கள் உள்ளன. பிராமணியத்துக்குள் இருந்த பிரிவு கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்ட போதிலும், பவுத்த சமண மதங்களின்பால் கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருந்தன.

சமண மதத்தில் அதிகாரபூர்வமானதாகவும் புனித மானதாகவும் கருதப்படும் “அச்சரங்க சூத்தம்” என்ற நூலில் தாங்கள் ஒற்றர்கள் என்ற அய்யத்திற்கு ஆளாகி விடுவோமோ என்கிற அச்சத்தால் சமணத் துறவிகள் பகல் பொழுதில் மறைந்து வாழ்ந்து இரவில் பயணம் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. சாணக்கியன் எழுதிய அர்த்தசாத்திரத்தில் வேத மரபைப் பின்பற்றாத சாக்கியர், அஜ்விக்கர் போன்றவர்களைக் கடுமையாக வெறுத்துள்ளார். அவர்கள் சுடுகாட்டு அருகில்தான் வாழவேண்டும் என்று விதித்துள்ளார். பிராமணியத் துக்கு எதிரான பவுத்தமும் சமணமும் “சிராமணிய” மதங்கள் என்று பண்டைக் காலத்தில் குறிக்கப்பட்டன. அவற்றைப் பின்பற்றுவோர் “சிராமணியர்” என்று குறிப்பிடப்பட்டனர். மவுரியர் ஆட்சிக்குப்பின் சிராமணிய மதங்கள் மீதான வெறுப்பும் பகையும் அதிகமாயின

பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யத்தில், பிராமணர்களும் சிராமணர்களும் பாம்பும் கீரியும் போல் பகை கொண்டவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவ்யவதனா எனும் பவுத்தத் துறவி, புஷ்யமித்திர சுங்கன் பவுத்தர்களைக் கொடு மையாக ஒடுக்கியவன் என்றும், பவுத்தரைக் கொன்று கொண்டு வரப்படும் ஒவ்வொரு தலைக்கும் நூறு வராகன் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தவன் என்றும் கூறியிருக்கிறார். சிராமணிய சமயங்களை ஒடுக்குதல் என்பது மத்திய காலத்தில் மேலும் அதிகமா யிற்று. குமரிலப் பட்டரும், ஆதிசங்கரரும் பவுத்த சமண மதங்களைக் கடுமையாக எதிர்த்தனர். பவுத்தர்களும் சமணர்களும் தாக்கப்பட்டனர்.

சாஸ்ஹந்தா என்னும் மன்னன் கயாவில் போதி மரத்தை வெட்டினான்; கோயிலிலிருந்து புத்தர் சிலையை அகற்றினான் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். தீவிர சிவபக்தனான மிதிரகுலன் எனும் அரசன் 1600 பவுத்த தூண்களையும் மடங் களையும் இடித்தான்; ஆயிரக்கணக்கான பவுத்த துறவிகளைக் கொன்றான்.

வடஇந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பவுத்தர்களும் சமணர்களும் தாக்குதலுக்கு இலக் காயினர். தமிழ்நாட்டில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பவுத்தர்களையும் சமணர் களையும் தாக்குவதில் முன்னணியில் நின்றனர். 7ஆம் நூற்றாண்டினரான அப்பரும் திருஞானசம்பந் தரும் சமணர்களை இழிமொழிகளால் பழித்தனர். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிய புராணத்தில் சமயம் சார்ந்த விவாதங்களில் சமணர்கள் தோற் கடிக்கப்பட்டது பற்றியும், சமணராக இருந்த பாண்டிய மன்னனைச் சைவனாக மாற்றியது பற்றியும் கூறப் பட்டுள்ளது. அதன்பின் மதுரையில் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான உறுதியான சான்று இல்லை.

13ஆம் நூற்றாண்டில் வைணவத் துறவியான திருமங்கை ஆழ்வார் நாகைப்பட்டினத்தில் புத்த மடத்தில் இருந்த பொன்னாலான புத்தர் சிலையைத் திருடினார். அச்சிலையை உருக்கி வைணவக் கோயில் கட்டப் பயன்படுத்தினார். காஞ்சிபுரம், திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் எண்ணற்ற சமணக் கோயில்கள் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டன. காஞ்சியில் கைலாசநாதர் கோயில் சுவர் சிற்பங்களும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் மண்டபத்தில் உள்ள சிற்பங்களும் சமணர் கள் மீது சைவர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடுமை களுக்குச் சான்றாக விளங்குகின்றன. இதேபோன்று கர்நாடகப் பகுதியில் 12ஆம் நூற்றாண்டில் பசவர் தொடங்கிய வீரசைவ - லிங்காயத் பிரிவினர் சமணர் களைக் கொன்றனர்; அவர்களின் கோயில்களைக் கைப்பற்றினர்.

பவுத்தர்களும் சமணர்களும் தங்கள் மீது ஏவப் பட்ட ஒடுக்குமுறைகளை அமைதியாக ஏற்காமல் திருப்பித் தாக்கினர். பிராமணியக் கருத்துகளையும் சடங்குகளையும் பழித்தனர். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த சமண அறிஞரான அகலந்தாவும், 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சமண அறிஞரான ஹேமச்சந்திராவும் வேதங்களில் கூறப் பட்டுள்ள வேள்விகளில் உயிர்களைப் பலியிடுதலையும் மநுஸ்மிருதியையும் கண்டித்தனர். சமணர்களைப் போலவே பவுத்தர்களும் பிராமணியத்தை எதிர்த்தனர்.

புத்தர் வேதங்களை “முட்டாள்தனமான பேச்சு” என்றும், “நீர் இல்லாத பாலைவனம்” என்றும் சாடினார். வேத அறிவு என்பது “பாதையே இல்லாத ஒரு காடு”, “இறப்புக்குப் பின்னும் தண்டனை உண்டு என்று அச்சுறுத்தும் நெறி” என்று புத்தர் சொன்னார். புத்தரைப் பின்பற்றிய பவுத்தர்கள் பிற்காலத்தில் பிராமணியத்தைக் கடுமையாகச் சாடினர். ‘கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலையும்’ என்கிற பார்ப் பனியக் கருத்தைக் கண்டித்தனர். பிராமணியக் கடவுள் களை இகழ்ந்தனர். பவுத்தக் கடவுள்களைவிட பிராமணியக் கடவுள்களைத் தாழ்ந்தவர்களாக இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரித்தனர்.

பிராமணிய ஒடுக்குமுறையைச் சிராமணிய மதங்கள் எதிர்த்தன என்பது உண்மை. ஆனால் பிராமணியம் பிற மதங்கள்பால் சகிப்புத்தன்மையுடன் பண்டைக் காலம் முதலே நடந்து வந்துள்ளது என்று கூறப் படுவது உண்மை அல்ல. மாறாக, பண்டைக்காலத் திலும், மத்திய காலத்திலும் பிராமணிய மதம் சிராமணிய மதங்களான பவுத்தம், சமணம் மீது கொடிய வன் முறைகளை ஏவியது. அதனால் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெருனி இந்துக்களைப் பற்றி, “முரட்டுத் தனமான பகை உணர்வு கொண்டவர்கள், முட்டாள்தன மான தற்பெருமை பேசுபவர்கள், தங்களுடைய மதத்தைப் போல் உயர்ந்த மதம் வேறொன்றும் இல்லை என்று நம்புபவர்கள்” என்று எழுதியிருக்கிறார்.

அரசர்களிடமும் ஆளும் வர்க்கத்தினரிடமும் பொருளாதார ஆதாயங்களைப் பெறுவது, கோயில் சொத்துகளைப் பற்றுவது ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டி மற்றும் பல்வேறு காரணிகளால் பார்ப்பனர் களுக்குச் சிராமணிய மதத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. பார்ப்பனர்கள் வன்னெஞ்சினராக இருந் ததற்கு அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்த தும் ஒரு முதன்மையான காரணியாகும். பார்ப்பனர் களும் துறவிகளும் ஆயுதமேந்தியிருந்தனர் என்பதற் குச் சமற்கிருத நூல்களில் பல சான்றுகள் உள்ளன.

8ஆம் நூற்றாண்டில் உத்யோதனசூரி என்பவர் பிராகிருதத மொழியில் எழுதிய சமண நூலான குவலயமாலாவில், பார்ப்பனர்கள் முறையான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றது பற்றி விளக்கப்பட்டுள்ளது. விஜயா என்ற இடத்தில் இருந்த மடத்தில் இந்தியா வின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பார்ப்பன மாணவர்களுக்கு வில்வித்தை, வாள், ஈட்டி முதலான பலவகையான ஆயுதங்களுடனும் போரிடும் பயிற்சி அளிக்கப்பட்டதை அந்நூல் விளக்குகிறது. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “சந்ரோத்ஸ்வம்”, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “கேரலோலப்பட்டி”யிலும் பார்ப்பனர்கள் ஆயுதங்களுடன் போர்ப்பயிற்சி பெற்றனர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. கோயில்களிலும் மடங் களிலும் வேதம் பயின்ற பார்ப்பன மாணவர்கள் ஆயுதப் பயிற்சியும் பெற்றனர் என்பதைப் பல கல் வெட்டுகள் கூறுகின்றன.

இவ்வாறாகக் கோயில்களில் பார்ப்பனர் ஆயுதப் பயிற்சி பெற்ற சூழ்நிலையால் பிராமணியம் அல்லாத மதப்பிரிவுகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாயிற்று.

“இந்து மதம் மாற்றுக்கருத்துகளை வெறுத்து ஒதுக்காமல் தன்வயப்படுத்திக் கொள்ளும் இயல்புடையது” என்றும் “இந்து மதத்தின் சாரமே அதன் சகிப்புத்தன்மை” என்றும் கூறப்படுவதை மேலே கூறப் பட்டுள்ள உண்மைகள் மறுதலிக்கின்றன.

(‘Social Scientist’எனும் இதழில் (2016 மே-சூன்) சிறந்த வரலாற்று ஆசிரியரான டி.என். ஜா, “Brahmanical Intolerance in Eary India”என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். தமிழாக்கம் : க. முகிலன்.

டி.என். ஜா எழுதிய “பசுவின் புனிதம்”, “பண்டைக் கால இந்தியா” எனும் இரண்டு நூல்கள் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளன).