மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரும், கட்சியின் களப்பணியில் முன்னணியில் நின்ற ஆ.செ.தங்கவேலு அவர்களின் அன்புத் துணைவியார் மாரிமுத்தம்மாள் அவர்கள், தம் 89ஆம் அகவையில், 21-1-2012 சனி நண்பகல் 12 மணி அளவில் அரியலூர் தம் இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க மிகவும் வருந்துகிறோம்.

அப்பெருமாட்டி அவர்களை 1948 முதல் அறிந்தவன் நான், அவரும், அவர் தம் ஆருயிர்க் கணவரும் அன்றில் பறவைகள் போல் ஒன்றிணைந்து வாழ்ந்த-எடுத்துக்காட்டான குடும்பத் தலைவர்கள்; வாழ்விலும் தாழ்விலும் நிலை குலையாது நின்று, தம் மக்களை வளர்த்தெடுத்தவர்கள்.

தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கைகளை முழுவதுமாக ஏற்று, அதன்படியே மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, ஊராருக்கு உதவுதல் இவற்றில் முனைப்போடு செயல்பட்ட செம்மல்கள். தம் இளைய மகனையும், இரண்டாம் மகளையும் இளமையில் பறிகொடுக்க நேர்ந்த போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, தம் கணவரும், மகனும் மா.பெ.பெ.க. பணிகளிலும் கிளர்ச்சி களிலும் பங்கேற்றிட முந்திக் கொண்டு வழியனுப்பினார்.

marimuthammal_250மாரிமுத்தம்மாள் அவர்கள் தம்மக்களும் பெயரர்களும் பெயர்த்திகளும் நல்ல கல்வி பெற்றவர்களாகவும், உழைப்பில் நம்பிக்கை கொண்டவர் களாகவும் உருவாவதற்கு அம்மையார் தன் வாழ்வை ஈகம் செய்து கொண்டார்.

தமக்கு எப்போதேனும் மனக்குறை ஏற்பட்டால் வே.ஆனைமுத்து, அல்லிநகரம் மோ.இரா.சீநிவாசன், தம் மகன் அறிவுடைநம்பி ஆகி யோரிடம் மட்டுமே கூறி ஆறுதல் பெற்றுக்கொண்ட பெருந்தன்மையின் இருப்பிடம் நம் மாரிமுத்தம்மாள் ஆவார். அன்னார் தனிமையில் இருக்கும்போது முடிவெய்தினார் என்ப தை அறிந்த என் நெஞ்சம் பதைத்தது. நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த இயலாத இடர்ப்பாடான சூழ்நிலை எனக்கு.

இயக்கத் தோழர்களை வரவேற்று உணவளித்து மகிழ்விப்பதை இறுதிவரையில் ஏற்றிருந்த வள்ளல் நம் அம்மையார்.

அன்னாரை இழந்து துன்பத்துக்கு ஆளாகியுள்ள அவர் தம் மகன் த.அறிவுடைநம்பி-குணசுந்தரி, மகள்கள் தைரியம்-கோவிந்தசாமி, அவ்வை, பெயர்த்திகள் இரஷ்யா-இளங்கோ, கலைமுகில்-மணிவர்மா, பெயரன் மருத்துவர் ஸ்டாலின்-மைதிலி ஞானமங்கை ஆகி யோர்க்கும் உறவினர்க்கும் என் சார்பிலும், மா.பெ.பொ. கவின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கு கிறேன். வாழ்க மாரிமுத்தம்மாள் புகழ்!

- வே.ஆனைமுத்து