7.1.2012 காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையில், கவிஞர் தமிழேந்தி தலைமையில் நடைபெற்ற “சிந்தனையாளன் 2012 பொங்கல் மலர் வெளியீட்டு விழா”வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.            30.12.2011 அன்று தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய நிலையிலும்; 1979 முதல் தமிழகத்தின் தென் மாவட் டங்களைச் சூழ்ந்துள்ள முல்லைப் பெரியாறு நீர்த் தகராறு போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் ஆகிய இடரான சூழ்நிலை களிலும் - வருந்தி முயன்று ‘2012 சிந்தனையாளன் மலருக்கு’ விளம்பரங்களும் நன்கொடைகளும் திரட்டித்தந்த மா.பெ.பொ.க. தோழர்கள், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத் (பு.க.இ.ம.) தோழர்கள், தோழமை அமைப்பினர் ஆகியோருக் கும்; விளம்பரங்கள், நன்கொடைகள் வழங்கி உதவிய வணிகர்கள், தமிழ்ப் பெருமக்கள் ஆகியோருக்கும், கட்டுரைகள், கவிதைகள் வழங்கி உதவிய பெருமக்களுக்கும், மலர் வெளியீட்டு விழாவைச் சிறப்புற நடத்தித் தந்த தோழர்களுக்கும் மலர் வெளியீட்டுக் குழுவின் சார்பில் நன்றியைத் தொவித்துக் கொள்கிறோம்.

2.            “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழரின் பட்டறிவு தந்த பழமொழி. வேளாண் நாடான தமிழகத்தில் வாழும் தமிழர்க்கு அதுவே புத் தாண்டுத் தொடக்க நாள்; புது வாழ்வு தொடங்கும் நாள். அதனால்தான், தமிழறிஞர்கள் அதை ஏற்றுத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என அறிவித்தனர். இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, அண்மையில் அரசு அறிவித்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.

7.1.2012 பிற்பகலில், ஆ. முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற “மாணவர் - இளைஞர் சுயமரியாதை - சமதர்ம மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கல்வி வணிகமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

                இந்திய அரசும், தமிழக அரசு உள்ளிட்ட எல்லா மாநில அரசுகளும் 1990 முதல் எல்லோருக்கும் எல்லா நிலைக் கல்வியையும் இலவசமாக அளிக் கும் கடமையிலிருந்து ஒதுங்கிக்கொண்டு, தனியார் கல்வி அறக்கட்டளைகளும் தனிப்பட்டவர்களும் கல்வித் தொண்டு என்கிற பேரால் - மழலைப் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரையில் கல்வியை ஒரு வணிகப் பொருளாக ஆக்கிக் கொள்ளையடிக்கும் கொடுமையை அகற்றிடப் போராடுவதற்குக் கல்வியாளர்களும், ஆசிரியர் உலகமும், மாணவர்களும், பொதுமக் களும் துணிவுடன் முன்வரவேண்டும் என அனை வரையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2. தமிழ் வழியிலேயே பாடங்களைக் கற்பிக்கக் கோரிப் போராடுவோம்

                உலகத்திலுள்ள சிறந்த மொழிகளுள் தலையானது தமிழ்மொழி. அத்துடன் இலக்கிய - இலக்கண வளம் நிறைந்த தனிச் செம்மொழி தமிழ். தமிழகத்தில் உள்ள அனைத்துத் தமிழரின் பேச்சு மொழி தமிழ். எனவே தமிழ் நாட்டு அரசினர் மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் ஆன பொதுக்கல்வி, தொழிற்கல்வி அனைத்தையும் தமிழ் வழியிலேயே அனைவர்க்கும் கற்பிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஏற்றுப், படிப்படியாக ஆங்கில வழியில் பாடங் களைக் கற்பிக்கும் தீய முறையைக் கைவிடத் தமிழக அரசினர் எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3. அனைத்திந்தியப் பொது தகுதித் தேர்வுகளைக் கைவிடக் கோரிக்கை

                இந்திய அரசமைப்பில் 1976 வரையில் பொதுக் கல்வி, தொழிற்கல்வி அனைத்தும் மாநில அரசு அதிகாரப் பட்டியலிலேயே இருந்தது, 1977இல் கல்வி பொது அதிகாரப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அது முதற்கொண்டு மாநில அரசுகளைத் துச்சமாக மதித்தும், கலந்து பேசாமலும் கல்வி பற்றிய பல உரிமைப் பறிப்புச் சட்டங்களை இந்திய அரசு இயற்றிக்கொண்டது. அதன் வெளிப்பாடாக, இப்போது, மருத்துவத்திலும், பொறியியலிலும், சட்டத்திலும் மற்ற துறைகளிலும் பட்டம் பெற்றவர் களும்; மருத்துவர்களாகவும், பொறியாளர்களாக வும், வழக்குரைஞர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும் உயர்நிலைப் பள்ளி முதல் தொடக்கப் பள்ளி வரையில் ஆசிரியர்களாகவும் பணியை ஏற்பதற்கு உரிய தகுதி பெற்ற எல்லோரும் - மய்ய அரசு நடத்தும் பொதுத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் வேலைக்குச் செல்ல முடியம் என இந்திய அரசின் கல்வித்துறை அறிவித் துள்ளது.

                இது, கல்வி முழுவதையும் மற்றும் அரசு வேலைகள் எல்லாவற்றையும் மேல் சாதி ஆளும் வர்க்கமும் - பணக்கார வகுப்பினரும் மட்டுமே பறித்துக் கொள்ள வேண்டி இந்தியப் பார்ப்பன - பனியா அரசு செய்யும் பெரிய சூழ்ச்சியாகும்.

                மக்கள் நாயகத்திலும், ஒடுக்கப்பட்டட 85ரூ மக்களின் விடுதலையிலும் அக்கறை உள்ள எல்லோரும் - குறிப்பாகத் தமிழக அரசினர் இச் சூழ்ச்சியை நன்கு புரிந்துகொண்டு. இதை எதிர்த்துப் போராடி முறியடித்திட முன்வர வேண்டும் என, இம்மாநாடு அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

4. சில்லறை வணிகத்தில் அயல் நாட்டினர் முதலீடு வேண்டாம்

                இந்திய அரசு 1997இல் டெஸ்கோ, வால்மார்ட் போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் மொத்த வணிகத்தில் 100% முதலீடு செய்ய அநுமதித்தது. இப்போது சில்லறை வணிகத்தில் 51% முதலீடு செய்ய அனுமதி அளிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசு முயற்சித்தது. இதனை எல்லாத் தரப்பாரும் எதிர்த்தனர். அதனால் இப்போதைக்கு அரசு பின்வாங்கியது.

                சில்லறை வணிகத்தில் அந்நியர் முதலீட்டை அனுமதித்தால் கோடிக்கான இந்தியச் சில்லறை வணிகர்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும். மொத்தக் கொள்முதலிலும் அந்நியர் முதலீடு - சில்லறை வணிகத்திலும் அந்நியர் முதலீடு என்பது இந்திய வணிகர்களே அந்நியரின் தரகர்களாகவும், சிறுவேளாண்மைக்காரர்களை அழிவுக்கு ஆளா னவர்களாகவும் ஆக்கிவிடும் என்பதால் - எல்லாத் தரப்பு மக்களும் அரசின் இந்த முயற்சியை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

8.1.2012 முற்பகலில், க. முகிலன் தலைமையில் நடைபெற்ற “அனைத்திந்திய விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

                அரசுக்கல்வி, வேலை முதலானவற்றில் 100 விழுக்காடு இடங்களையும் வகுப்புவாரியாகப் பங்கிட்டுத்தரக் கோரிக்கை

                இந்தியச் சமூகம் பல மதங்களையும். பல ஆயிரம் இந்து உள் சாதிகளையும் அடக்கியுள்ளதாகும். இங்கு 85ரூ பேராக உள்ள இந்து - மற்றும் மதச் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் வகுப்பினரும், பழங்குடியினரும் 1947 வரையில் கல்வி மறுக்கப்பட்ட வகுப்பினர் ஆவர்.

                எனவே, இந்திய அரசினர் இந்திய மய்ய அரசிலும், மாநில அரசுகளிலும் உள்ள எல்லாத் துறைக் கல்வியிலும்; எல்லாத்துறை வேலைகளிலும் மொத்தம் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் - இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), (15(5), 16(4), 338 (10) இவற்றில் கண்டுள்ள வகுப்பு களுக்கும், முற்பட்ட வகுப்பினருக்கும் விகிதாசாரப் பங்கு கிடைப்பதற்கான - துறைவாரியான நிர்வாக ஆணைகளைப், பின் கண்டவாறு 31.12.2011க்குள் பிறப்பிக்க வேண்டும் என - இந்தியத் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 9.9.2011இல் பின்கண்ட வடிவிலான கோரிக்கையை முன்வைத்தது.

1. இந்து மற்றும் சிறுபான்மை

மதங்களைச் சார்ந்த முற்பட்ட வகுப்பினர்க்கு                                17.50%

2. பட்டியல் வகுப்பினர்க்கு                                                                      17.00%

3. பட்டியல் பழங்குடியினர்க்கு                                                                 7.50%

4. இந்து மற்றும் சிறுபான்மை,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு                                                          58.00%

                                                                                                                              100.00

                இக்கோரிக்கை விண்ணப்பத்தை, உரிய மடலுடன் இந்திய மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் 790 பேருக்கும் 14.12.2011 அன்று, மா.பெ.பொ.க. அனுப்பியுள்ளது.

                இதற்கு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து மட்டும் மழுப்பலான விடை மடல் வந்துள்ளது.

                இந்தக் கோரிக்கையில் அடங்கிய வடிவத்தில்தான், கல்வியிலும், வேலையிலும் உள்ள 100 விழுக்காடு இடங்களும் 1928 முதல் 1954 வரையில் சென்னை மாகாண அரசிலும், தமிழக அரசிலும் பங்கீடு செய்யப்பட்டன என்பதை உணர்ந்து - தமிழகப் பெருமக்களும், இந்தியாவிலுள்ள எல்லோரும் இக்கோரிக்கைக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2.            இந்தியத் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, 9.9.2011இல் மா.பெ.பொ.க. முன்வைத்த மேற்கண்ட கோரிக்கையை இந்திய அரசு 31.12.2011க்குள் றிறைவேற்றத் தவறினால், இந்திய அரசின் உரிமை மறுப்புப் போக்கைக் கண்டனம் செய்வதன் அறிகுறியாக, அடுத்துவரும் 2012 சனவரி 26 குடிஅரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாடும் விதத்தில், மா.பெ.கொ.க.வினரும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையினரும் அவரவர் இல்லத்தில் 26.1.2012இல் கறுப்புக்கொடி ஏற்றித் துக்கத்தைக் கடைப்பிடிப்பர் என அறிவித் திருந்தது. இந்திய அரசு நம் கோரிக்கை பற்றி இன்றுவரை மூச்சுவிடவில்லை.

                எனவே, மா.பெ.பொ.க.வினரும், பேரவையினரும் அவரவர் இல்லத்தில் 26.1.2012 அன்று கறுப்புக் கொடியை உயர்த்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. இக்கிளர்ச்சியின் நேர்மையை உணர்ந்து தமிழ்ப் பெருமக்கள் மனமுவந்து இதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமாய் இம்மாநாடு கோருகிறது.

8.1.2012 பிற்பகலில், வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்ற, “இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.            இந்தியாவிலுள்ள ஆறுகள், அவை பாய்ந்தோடும் வழியிலுள்ள எல்லா மாநிலங்களின் மக்களுக்கும் சொந்தமானவை.

                முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநில அரசுக்குச் சொந்தமான இடத்தைத் தமிழக அரசு 999 ஆண்டுக்குக் குத்தகைக்குப் பெற்று அதில் தமிழக அரசின் செலவில் கட்டப்பட்டதாகும். அணையின் நீர் தேக்க உயரம் 152 அடி ஆகும். இவ் அணையின் நீர் மட்டுமே தேனி, மதுரை, சிவ கங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங் களுக்கு வேளாண்மைக்கு உள்ள ஒரே ஆதாரம். இதனைத் தடுக்கும் நோக்கத்துடன், கேரள அரசினர் 1979 முதல் மேற்கொண்டுள்ள அடா வடியான போக்கை, இந்திய நீர்வள அமைச்சகம் வளர விட்டு விட்டது கண்டனத்துக்கு உரியது.

                எனவே இந்திய அரசினர் உடனடியாக, இந்திய உச்ச நீதி மன்றம் 27.2.2006இல் அளித்த தீர்ப்பின்படி, 142 அடிவரையில் அணையில் நீரைத் தேக்கிக் கொள்ள உதவும் வகையில், தீர்ப்பின் முடிவை இந்திய அரசிதழில் (Govt of India Gagette) 2012 பிப்ரவரியில் வெளியிட வேண்டும் என்றும்; கேரள அரசு புதிதாக அணை கட்டுவதைத் தடுத்திட வேண்டும் என்றும் இந்திய அரசினரை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

1 (அ)    முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சிக்கல் பற்றித் தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 15.12.2011இல் நிறைவேற்றிய தீர்மானத்தை இம்மாநாடு மனமார வரவேற்றுப் பாராட்டுகிறது.

                அதே நேரத்தில், 15.12.11இல் நிறைவேற்றப்பட்ட சட்ட மன்றத் தீர்மானத்தை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அதில் நிறை வேற்ற வேண்டும் என்றும்; தமிழக முதல்வர் அவர்களே தமிழநாட்டைச் சார்ந்த 59 நாடாளு மன்ற உறுப்பினர்களையும் ஒரு சேர அழைத்துக் கொண்டும்; அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டும் தில்லிக்குச் சென்று தலைமை அமைச்சர், மத்திய நீர்வள அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோரைக் கண்டுபேசி அழுத்தம் தரவேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2.            கூடங்குளம் அணை உலையை எதிர்த்து, 1988 முதலே அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டங் களைத் தமிழக அரசே அப்போது அடக்கி ஒடுக்கி விட்டது.

                2011 மார்ச்சில் சப்பானில் புகுஷிமாவில் அணு உலை வெடித்ததனால் ஏற்பட்ட பேரழிவுகளை அறிந்த தமிழக மக்கள் எல்லோரும் இன்று கூடங்குளத்தில் ஒன்றுதிரண்டும், ஆங்காங்கேயும் அணுஉலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

                அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற செர்மனி நாடு அங்குள்ள அணுஉலைகளை 2022க்குள் மூடிவிடுவது என முடிவெடுத்துள்ளது. பல மேற்கு நாடுகளும் அப்படியே முடிவு செய்துள்ளன. உலக நாடுகள் கதிர்ஒளி மின் உற்பத்தி (Solar Energy Production) யில் நாட்டம் கொண்டுவிட்டன. இந்தச் சூழலில் இந்தியத் தலைமை அமைச்சரும், காங்கிரசுக் கட்சியும் கூடங்குளம் அணுஉலையை இயக்கியே தீருவோம் என்று தன் மூப்பாகக் கூறிவிட்டு, தமிழகத்தின் வருங்காலத் தலைமுறை யினருக்குப் புற்று நோயையும், உறுப்புக் குறையுடன் குழந்தை பிறக்கும் குறையையும் அளிக்கக் கூடியதும்; விலங்குகளுக்கும் மரம் செடி கொடிகளுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியதுமான கூடங்குளம் அணு உலையை இயக்கப் போவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகக் கட்சிகளும், தமிழ்ப் பெருமக்களும் கூடங்குளம் அணு உலை தடுப்புப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வேண்டும் என இம்மாநாடு பணிவுடன் வேண்டிக் கொள்கிறது. மா.பெ.பொ.க. இறுதிவரையில் இப்போராட்டத் துக்குத் துணை நிற்கும் என உறுதி கூறுகிறது.

3.            இந்திய அரசினர் பொதுக்கல்வி, தொழிற்கல்வி, அய்.அய்.டி. முதலான தொழில் நுட்பக்கல்வி அனைத்தையும் மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்கு (State List) உடனடியாக மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் எனக் கோருகிறது. மொழி வழித் தன்னுரிமையில் பற்றுக் கோடுள்ள தமிழகத்தி லுள்ள எல்லாக் கட்சிகளும், அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராட முன்வர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

4.            மொழி வாரியாக அமைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைக்குள்ளும் இயங்குகிற எல்லா இந்திய மய்ய அரசு அலுவலகங்களிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியே அன்றாட நிருவாகத் திற்கான மொழியாக ஆக்கப்பட ஏற்ற வகையில், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பாகத்தில் (Part VIII) 343 முதல் 351 வரையில் உள்ள விதிகளை இந்திய அரசினர் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட எல்லா மொழிகளையும் இந்திய ஆட்சி மொழிகளாக ஆக்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இந்திய அரசினரை இம்மாநாடு கோருவதுடன், இக்கோரிக் கையைத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரிக்க வேண்டு மாய்க் கேட்டுக் கொள்ளுகிறது.

5.            இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி வருவதற்கு இன்றியமையாது வேண்டப்படுகிற அதிகாரங்கள் பகிர்வில் - இந்திய அரசு பாதுகாப்பு (Defence), பணம் அச்சடிப்பு (Currency), தொலைத் தொடர்பு (Communication) ஆகிய மூன்று அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றெல்லா அதிகாரங் களையும் முழுவதுமாக மாநிலங்களுக்கு வழங்கும் விதத்தில் புதியதான - உண்மையான கூட்டாட்சி அமைவதற்கான ஓர் அரசமைப்புச் சட்டத்தை இயற்ற முன்வர வேண்டும் என இந்திய அரசின ரையும், எல்லாக் கட்சிகளின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

6.            தலைசிறந்த சுயமரியாதை வீரமும், தந்தை பெரியார் அவர்களின் பாராட்டைப் பெற்றவரும் உலக சாரண இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் நளம்புத்தூர் வை.இராமசாமி அவர்கள் தம் 103 அகவை நிறைவில் புத்தேரியில் தம்மகன் இரா.இளங்கோ இல்லத்தில் 8-1-2012 காலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். மா.பெ.பொ.க. சார்பில் வே.ஆனைமுத்து கவிஞர் தமிழேந்தி நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அன் னாரை இழந்து துயருரும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் மரு.பூ.பழனியப்பன் குடும்பத்தினர், மற்றும் பெரியார் தொண்டர்கள் ஆகியோருக்கு இம் மாநாட்டின் மனம்கசிந்த இரங்கலை உரித் தாக்குகிறோம்.