எல்லாப் பெரியார் தொண்டர்களும், எல்லாத் தமிழுணர்வாளர்களும் இன்றேனும் கவலையுடன் சிந்தியுங்கள்!

பெரியார் ஈ.வெ.ரா 1919 ஆகத்து முதல் 1925 நவம்பர் வரையில் காங்கிரசில் இருந்தார் என்பதை நாம் அறிவோம்.

அவர் பண்டித மோதிலால் நேருவை ஈரோட்டுக்கு அழைத்து வந்து, தாம் நடத்திய பள்ளியில், இந்தி வகுப்பை 1922-இல் தொடங்கினார்.

ஆனால், 1925 மே 2-இல் ‘குடிஅரசு’ கிழமை இதழைத் தொடங்கிய அவர், 1926-இல் “இந்தியைத் தமிழர்கள் ஏன் கற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

1937-இல் இந்தியாவில் நடந்த மாகாணச் சட்டப் பேரவைத் தேர்தலில் 9 மாகாணங்களில் காங்கிரசு வென்றது. சென்னை மாகாணத்தில் காங்கிரசு தம் அமைச்சரவையை அமைத்தது. 1937-இல் நடைபெற்ற தேர்தலிலே போட்டியிடாத சி.இராச கோபாலாச்சாரியார் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் ஆனார்.

அவர் பதவியேற்றவுடன் எல்லா உயர்நிலைப் பள்ளி களிலும் 6-ஆம் வகுப்பு முதல் இந்தி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் என முதலில் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு இருந்தது. அதனால், மகாணத்தின் நான்கு பகுதிகளிலும் சேர்த்து 120 உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் - கட்டாயத் தேர்வுக்குரிய பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என, தானடித்த மூப்பாக, 21.4.1938-இல் ஆணை பிறப்பித்தார்.

காங்கிரசுக் கட்சி ஆட்சி அமைந்த மற்ற 8 மாகாணங் களில், வேறு எந்த மாகாணத்திலும் இந்தி ஒரு கட்டாயப் பாடமாகப் புகுத்தப்படவில்லை என்பது இங்கு நாம் அறியத் தக்கது. கட்டாய இந்தியை எதிர்த்த முதலாவது தமிழறிஞர் ஈழத்துச் சிவானந்த அடிகள். பின்னர் தஞ்சை - கரந்தை உமாமகேசுவரம் பிள்ளை, திருச்சி தி.பொ.வேதாசலம், கி.ஆ.பெ.விசுவநாதம், பன்மொழி அறிஞர் மறைமலை அடிகள் ஆகியோர் எதிர்த்தனர்.

திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஈ.வெ.ரா பங்குபெற்றார். தனிப்பட்ட தொண்டர்கள் சென்னையில், முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். முதலாவதாகப் போராட்டம் தொடங்கிய பல்லடம் பொன்னுசாமி 3.6.1938 அன்று கைது செய்யப்பட்டார். திருச்சி மாநாட்டின் முடிவுப்படி திருச்சியிலிருந்து சென்னை நோக்கி, பட்டுக் கோட்டை கே.வி.அழகிரிசாமி தலைமையில் இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பெரும்படை 1.8.1938-இல் புறப்பட்டது.

அப்படை சென்னை கடற்கரையை 11.9. 1938- இல் அடைந்தது. அப்படையை வரவேற்ற பெரியார், அன்றுதான், “தமிழ்நாடு தமிழருக்கே!” என முதன்முதலாக முழங்கினார்.

நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியார், ஈ.வெ.ரா, “தமிழ்நாடு தமிழருக்கே! என்றால், மற்ற திராவிட மொழிக்காரர்கள் எங்கே போவது?” என்று கேள்வி எழுப்பினர்.

உடனே 1939-இல், “திராவிட நாடு திராவிடருக்கே!” எனப் பெரியார் முழங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் சூடு பிடித்தது. பெண்கள் 14.11.1938-இல் டாக்டர் தருமாம்பாள் தலைமையில் சிறை புகுந்தனர்.

பெரியார் 5.12.1938-இல் சிறை புகுந்தார். சென்னை சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்; அங்கிருந்து கோவை சிறைக்கு மாற்றப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப் பட்டார். பெரியார் ஆச்சாரியாரின் ஆட்சிக்கு 19.2.1940-இல் எச்சரிக்கை விடுத்தார். 1938-1939 இந்தி எதிர்ப்புப் போராட்டம் 20 மாதங்கள் நடந்தது. அப்படி நீண்டநாள் மறியல் செய்ய ஒரு நாளைக்கு இரண்டுபேர் வீதம் வேண்டும்.

அப்போது, ஈரோட்டில் வாழ்ந்த லூர்துசாமி என்கிற இளைஞர் - பெரியார் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மகிழுந்து களைப் பயன்படுத்தி, ஈரோடு சுற்று வட்டாரத்தி லிருந்து இளைஞர்களைத் திரட்டி, ஈரோட்டில் பெரியார் வீட்டில் தங்க வைத்திருப்பார். பெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு, “2 பண்டல் போர்வை அனுப்புங்கள்” என்று லூர்துசாமிக்குத் தந்தி அனுப்புவார். “2 பண்டல் போர்வை அனுப்பவும்” என்றால், “சிறைக்குப் போக 2 ஆள்களை அனுப்புங்கள்” என்று பொருள். இச் செய்தியை 1992-இல் லூர்துசாமி அவர்களே பதிவு செய்திருக்கிறார். அப்படியெல் லாம் செய்துதான், 20 மாதங்களில், 1271 பேர் சிறை புகுந்தனர்.

எனினும் ஆச்சாரியார் கட்டாய இந்தி ஆணையை நீக்காமலேயே முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். சென்னை மாகாண ஆளுநர்தான், 21.2.1940-இல் கட்டாய இந்தி கற்பிக்கும் ஆணையை விலக்கினார்.

கல்வியில் வடவரின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழன் தொடுத்த முதலாவது போர் இது. இது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. வெள்ளையர் 15.8.1947-இல் வெளியேறி விட்டனர். வெள்ளையர் காலத்தில் 1946 தேர்த லில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டப்பேரவை, ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரை மாகாணப் பிரதமராகத் (Premier) தேர்ந்தெடுத்தது. அவர் சென்னை மாகாணத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணித்தார்.

1944-இல் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றம் செய்யப் பட்டது.

திராவிடர் கழகத் தலைவர்கள் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், எண் 1, மீரான் சாயபு தெருவில் உள்ள பெரியார் இல்லத்தில் கூடி, கட்டாய இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடுவது என்று தீர்மானித்தனர். உடனே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

குடந்தையில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்து, அறிஞர் சி.என்.அண்ணா துரை சர்வாதிகாரியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

2.11.1948-இல் குடந்தையில் போராட்டம் நடத்த மாகாண அரசு தடை விதித்தது.

தடையை மீறி, பெரியார் 18.12.1948-இல் மறியல் செய்தார். உடனே கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்.

காவல் துறையினர் போராட்டத் தொண்டர்களை காட்டுத் தனமாகத் தாக்கினர்.

எஸ்.டி.ஆதித்தன் என்கிற உயர் காவல் துறை அதிகாரி, போராட்டத் தொண்டர் களைக் கீழே தள்ளி, காவலர் உறை அணிந்த காலால் உதைத்து உருட்டிவிட்டார்.

ஒருநாள் இரவு நேரத்தில், போராட்டத் தொண்டர்களை - நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர் உள்பட காவல் உந்துவில் ஏற்றி, சில மைல் தொலைவிலிருந்த சவுக்குக் காட்டுக்குள் கொண்டுபோய் இறக்கி விட்டு விட்டுச் சென்று விட்டனர். தொண்டர்கள் உயிர் பிழைத்து வந்து சேர்ந்தனர்.

இடையில், அறிஞர் சி.என்.அண்ணாதுரை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, எண் 2, பாலகிருஷ்ணப் பிள்ளைத் தெருவில் ‘விடுதலை’ அலுவலகத்தில் இருந்த பெரியாரை நேரில் கண்டு, “அய்யா! காவல் துறையினர் போராட்டத் தொண்டர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர்” என்று முறையிட்டார். அந்த முறையீட்டைக் கேட்ட பெரியார் பொறுமையாக, “போராட்டம் என்றால் தாக்கத்தான் செய் வார்கள்; முத்தமா கொடுப்பார்கள்; திரும்பிப் போங்கள்” என்று கூறிவிட்டு உடனே எண் 1, மீரான் சாயபு தெரு வீட்டுக்குப் போய்விட்டார்.

மேற்கொண்டு பெரியார் என்ன செய்தார்?

சேலம் அ.சித்தய்யனை வரச்செய்து, முன்னாள் அமைச்சர் எஸ்.முத்தய்ய முதலியாரை நேரில் பார்த்து, அவரைத் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பேசச் செய்தார்.

எஸ்.முத்தய்ய முதலியார் ஆட்சியரை நேரில் பார்த்து, “இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பேரில், காவலர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்தச் சொல்லுங்கள்” என்று பரிந்துரை செய்தார். அதன்பின்னர் குடந்தை இந்தி எதிர்ப்பு அறப்போரை, பெரியார் தற்காலிகமாகத் தள்ளிவைத்தார்.

இறுதியில், பெரியாரே பிரதமர் ஓமந்தூ ராரை நேரில் கண்டு வேண்டுகோள் வைத்தார்.

ஓமந்தூரார் அரசு, கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்ட இந்தியை விருப்பப் பாடமாக மாற்றியது. எல்லோருக்கும் இந்தி விருப்பப் பாடம். இந்திப் பாடத்தில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் அது மாணவனின் தேர்ச்சியைப் பாதிக்காது.

நான் அறிந்தவரையில், 1967 வரை அதே நிலைதான் சென்னை மாகாணத்திலும், தமிழ் மாநிலத்திலும் நீடித்தது. இது பழைய போராட்ட வரலாறு.

இப்போது நம் முன் உள்ள கேள்வி இதைப் பற்றியது அன்று. வேறு என்ன?

“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்தி ஏன் இருக்க வேண்டும்?” என்பது தான், நம் முன் 26.1.1950 முதல் உள்ள சிக்கல்.

இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி ஒவ்வொரு குடிமகனுக் கும் தெரியுமோ, தெரியாதோ - அச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் கட்டுப்படுத்துகிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளை அளிப்பது அச் சட்டம்; உரிமைகளைப் பறிப்பதும் அச்சட்டமே.

நாம் தமிழர்கள். நம் ஊரில் இந்திய ஒன்றிய அரசின் ஆளுகையின்கீழ்,

                1)            அஞ்சல் துறை - தொலைபேசித் துறை,

                2)            தொடர் வண்டித் துறை,

                3)            நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கித் துறை,

                4)            வருமான வரித் துறை

முதலான துறைகளின் அலுவலகங்கள்  இயங்குகின்றன.

இவை நம் மாநில எல்லைக்குள் இயங்குகின்றன.

இவ் வெல்லாத் துறைகளிலும் தமிழ்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ, அல்லது இவ்விரண்டு அயல்மொழிகளுமோ அன்றாட அலுவல் மொழியாக இருக்கக் கூடாது.

இப்படியே, இந்தியா முழுவதிலுமுள்ள 29 மாநிலங் களிலும், 7 ஒன்றியப் பகுதிகளிலும் அந்த அந்த மாநில மொழியே - இந்திய ஒன்றிய ஆளுகைக்கு உள்பட்ட எல்லா நிறுவனங்களிலும் அலுவல் மொழியாக இருக்கவேண்டும். இது நம் கோரிக்கை. இதற்கான உரிமை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி அளிக்கப்பட வில்லை. எதனால்? ஏன்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 22 பகுதிகளும் (22 Parts), 395 விதிகளும் (395 Artiles) உள்ளன.

இவற்றுள் 17-ஆம் பகுதியிலுள்ள 343-ஆம் விதி முதல் 349-ஆம் விதி முடிய 7 விதிகளிலுள்ள விவரங்களில் - இது பற்றிப் பேசப்படுகிறது.

காட்டாக, 343(1)-ஆம் விதி, என்ன கூறு கிறது?

“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக தேவநாகரி வரி வடிவிலான இந்தி இருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.”

(343(1) The Official Language of the Union shall be Hindi in Devanagari Script)

இதன்படி மிக விரைவில் - தமிழ்நாட்டிலுள்ள மேலே சொல்லப்பட்ட எல்லா இந்திய ஒன்றிய நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும்.

ஏன் இந்தவிதி இப்படி எழுதப்பட்டது?

இந்தி, இந்தியாவில் அதிக எண்ணிக்கை யுள்ள மக்களால் பேசப்படுகிறது என்று கூறித்தான், இப்படி எழுதப்பட்டது.

ஆனால், இது உண்மை அன்று; கடைந்தெடுத்த பொய்.

எப்படியெனில், 2001-இல் இந்திய அரசு எடுத்த இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி மொத்த இந்திய மக்கள் தொகை 102.86 கோடி.

இதில் இந்தி பேசுவோர் - இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டோரின் தொகை வெறும் 25.79 கோடி. இத்துடன் இந்தி கலப்படமுள்ள 49 வெவ்வேறு தாய்மொழிகளையும் மற்றும் சில தாய்மொழிகளையும் வேண்டுமென்றே சேர்த்து, இந்தி என்கிற தலைப்பில் 42.20 கோடிப் பேர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரம் எப்படிச் சரியாகும்? இது பொருத்த மற்றது; பொய்யானது.

இன்றுவரை இதை எதிர்த்துத் திராவிடர் இயக்கங்கள் - தமிழர் இயக்கங்கள் என்ன செய்தன?

திராவிட முன்னேற்றக் கழகத்தினர், 1986 நவம்பர் 9 முதல் திசம்பர் 15 வரை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் புதுவையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பகுதி முழுவதும் அச்சுப் போட்டு அவற்றை எரித்து நூற்றுக்கணக் கில் கைதாயினர்.

பெரியார், 1960-இல் தமிழகம் தவிர்த்த இந்திய தேசப் படத்தை எரித்தார். தனித் தமிழ் நாட்டுப் பிரிவினையைக் கோரினார்.

தி.மு.க தலைவர் அறிஞர் சி.என். அண்ணா துரை தில்லி நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 1963-இல் பேசும்போது, “திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க கைவிடு கிறது” என்று அறிவித்தார்.

இவற்றில் 1960-இல் பெரியார் நடத்திய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டமும், இந்தி எதிர்ப்புக்காகத் தி.மு.க 1986-இல் நடத்திய போராட்டமும் தவிர இந்தி ஒழிப்புக்காக எதுவும் நடைபெறவில்லை.

எனவே, நம் தாய்மொழி தமிழ் தமக்கு உயிர் போன்றது என்று கருதும் எல்லாத் தமிழ் உணர்வாளர்களும், எல்லாப் பெரியார் தொண்டர்களும் இந்த இழிநிலையை மாற்ற ஒற்றுமையாக முயற்சிப்போம், வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.